privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாஅணு உலை ஆதரவாளர்களுக்கு புகுஷிமா விடுக்கும் எச்சரிக்கை!

அணு உலை ஆதரவாளர்களுக்கு புகுஷிமா விடுக்கும் எச்சரிக்கை!

-

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் நிகழ்ந்த புகுஷிமா அணு உலை விபத்து அளிக்கும் படிப்பினைகள் என்ன? விபத்து நடந்து ஓராண்டாகியும் அதன் பாதிப்புகள் குறித்த முழு உண்மையும் வெளியிடப்படவில்லை. அணு உலையிலிருந்து வெளிப்பட்ட கதிர் வீச்சின் செறிவு, பாதிக்கப்பட்ட பரப்பளவு, உலை விபத்தில் மாண்டவர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்கள் குறித்து ஜப்பான் அரசு தொடர்ந்து பொய் சொல்லி வருகின்றது.

எனினும், ஜப்பானின் ஊடகங்களும் பல்வேறு அமைப்புகளும் தகவலறியும் உரிமையைப் பயன்படுத்திப் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளன. ஜப்பான் நாடாளுமன்றக் குழு இந்த விபத்து குறித்து நடத்திய விசாரணையும், பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளது.

கூடங்குளத்தில் கட்டப்படும் அணு உலை, புகுஷிமா அணு உலையைவிடத் தொழில்நுட்ப ரீதியில் முன்னேறியது, அதனால் இங்கே அதுபோன்றதொரு விபத்து ஏற்படாது என நம் நாட்டு அணுஉலை ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். புகுஷிமா விபத்திற்குக் காரணம் தொழில்நுட்பக் குறைபாடல்ல; முதலாளித்துவ இலாபவெறியும், நிர்வாகச் சீர்கேடுகளும், மனிதத் தவறுகளும்தான் காரணம் என்பதை மேற்கூறிய ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

சுனாமிப் பேரலைகள் புகுந்து அணு உலையின் குளிர்விப்பான் இயங்காமல் போனதால் விபத்து ஏற்பட்டதாகவே கூறப்படுகிறது. ஆனால், சுனாமியின் காரணமாக மின் வினியோகம் தடைப்பட்டு, குளிர்விப்பானின் இயக்கம் நின்றுபோனது ஊழியர்களுக்குத் தெரியவில்லை. உலைக்கு உள்ளே வெப்பம் அதிகரித்து. உலை மெல்ல உருக ஆரம்பித்த பிறகுதான் குளிர்விப்பான் செயலிழந்து விட்டதையே அவர்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர். இது மனிதத்தவறு.

விபத்துக் காலங்களில் அணு உலையை கையாள்வதற்கான கையேட்டில் குளிர்விப்பான் இயங்குகிறதா என்பதைச் சோதிக்கவேண்டும் என்றோ, இயங்காவிட்டால் செய்ய வேண்டியதென்னவென்றோ கூறப்படவில்லை. இது அலட்சியம்.

உப்புநீர் புகுந்தால் கருவிகள் பழுதாகி நட்டம் அதிகமாகும் என்று கூறி, உலையை கட்டிய ஜெனரல் எலெக்டிரிகல் நிறுவனம் கடல் நீரைப் பயன்படுத்தி உலையைக் குளிர்விக்க முயன்றதைத் தடுத்துள்ளது. இது மக்களைப் பற்றிக் கவலைப்படாத முதலாளித்துவத்தின் இலாபவெறி.

வரவிருக்கும் விபரீதம் கண்டு அஞ்சிய அரசு உலையை நிரந்தரமாக மூடுவது என்று முடிவு செய்ததால்தான்  கடல் நீரைப் பயன்படுத்தும்படி உத்தரவிட்டது.

மிகப்பெரிய விபத்தை எதிர்பார்த்த அணு உலை நிர்வாகம், விபத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியைக் கைவிட்டு, 800க்கும் அதிகமான ஊழியர்களில் 50 பேரைத் தவிர மற்ற அனைவரையும் வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. அணு உலை வட்டாரத்தில் வாழ்ந்த 80,000 பேரையும் உடனே வெளியேற்றியது.

புகுஷிமாவிலிருந்து 250 கி.மீ. தொலைவிலிருந்த டோக்கியோ நகரத்தையும் காலி செய்யும்படி அணு சக்தித் துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். டோக்கியோவின் மக்கள் தொகை 3 கோடி. இந்த விபரீத யோசனையை ஏற்க மறுத்த பிரதமர், அதிகமான ஊழியர்களை  ஈடுபடுத்தியாவது, உலையைச் சரி செய்ய உத்தரவிட்டிருக்கிறார். நிர்வாத்தின் பொறுப்பின்மைக்கும் முதலாளித்துவ இலாபவெறிக்கும் இது சான்று.

வெடிப்பைத் தொடர்ந்து, உலையில் ஏற்பட்ட பிரச்சினைகள், அவற்றைச் சரி செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்த விவரங்களை நாடாளுமன்ற ஆய்வுக்குழு தெரிந்து கொள்ளமுடியவில்லை. காரணம், அப்போது நடத்தப்பட்ட கூட்டங்கள் எதற்கும் குறிப்புப் பதிவுகள் (மினிட்ஸ்) இல்லை. இதனால் விபத்தையொட்டி கண்டுபிடிக்கப்பட்ட தவறுகள், குறைபாடுகள் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்களாக மறைக்கப்பட்டுள்ளன.

அணு உலையைச் சுற்றி 20 கி.மீ. மட்டுமே கதிர்வீச்சு அபாயம் இருப்பதாக ஜப்பான் அரசு கூறுகிறது. ஆனால், அணு உலை வெடிப்பினால் வெளிப்பட்ட அபாயகரமான ‘சீசியம்’ துகள்கள் 45  கி.மீ. தூரத்தில் உள்ள லிடேட் என்ற கிராமத்தில் கொட்டிக்கிடக்கின்றன. மரங்களில் படர்ந்துள்ள  சீசியம் துகள்கள் காற்று வேகமாக வீசும்போது, காற்றின் திசையில் இன்னும் அதிக தூரத்திற்கு பரவுகின்றன.

கதிர்வீச்சு அபாயம் 20 கி.மீ. மட்டுமே என்று ஜப்பான் அரசு தன் மக்களுக்கு கூறிக்கொண்டிருக்க, அணு உலையிலிருந்து 80 கி.மீ. தொலைவு வரை உள்ள பகுதிகளில் வாழும் அமெரிக்கர்களை உடனே வெளியேறும்படி அறிவுறுத்தியது அமெரிக்கத் தூதரகம். மக்களை அப்புறப்படுத்துவதிலும் ஜப்பான் அரசு முறையாகச் செயல்படவில்லை. பல இடங்களில் மக்கள் தாமாகவே வெளியேறியுள்ளனர். மினாமி என்ற பகுதியிலிருந்த மருத்துவமனையிலிருந்து நோயாளிகளை வெளியேற்ற எவ்வித வசதியும் இல்லாததால் இரண்டு நாட்களில் 12 நோயாளிகள் உயிரிழந்ததுடன், பல நோயாளிகளும், மருத்துவர்களும் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புகுஷிமாவிலிருந்து வெளியேறிய கதிர்வீச்சு முக்கியமாக நெற்பயிர்களையும், பசு மாடுகளையும் பாதித்துள்ளது. இதன் காரணமாக அரிசியும், பாலும் கதிர்வீச்சுத் தன்மை கொண்டதாக மாறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பால்பவுடர் தயாரிப்பதில் முன்னணியில் உள்ள ஜப்பான் நிறுவனமான ‘மெய்ஜி’, புகுஷிமா விபத்திற்குப் பிறகு உற்பத்தி செய்யப்பட்ட தங்களது பொருட்களில் கதிர்வீச்சுத் தன்மை உள்ளதைக் கண்டுபிடித்து, அவற்றை திரும்பப் பெற்றுக்கொண்டது.

புகுஷிமா அணு உலை சுனாமி தாக்குதலையும், திடீர் மின் தடையையும் சமாளிக்கும் வகையில் கட்டப்படவில்லை என ஜப்பானின் அணு சக்திப் பாதுகாப்புத் துறையின் தலைவர் ஹரூக்கி மடாரம் பாராளுமன்ற விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளார். மேலும் ஜப்பானின் அணு சக்தி விதிமுறைகள் தவறானவையாகவும், காலாவதியானவையாகவும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

புகுஷிமா அணு உலையைக் கட்டிய டோக்கியோ மின்சார நிறுவனம், அது பூகம்பம் மற்றும் சுனாமி பாதிப்பு ஏற்படக்கூடிய இடம் எனத் தெரிந்தேதான் அணு உலைகளைக் கட்டியுள்ளது.  அங்கே சுனாமி தடுப்புச் சுவரும் கட்டப்பட்டுள்ளது. ஆனால் மிகப்பெரிய சுனாமி அலைகள் இங்கே எழும்பும் என்று எச்சரித்து வெளிவந்த ஆய்வுகளை அறிவியல்பூர்வமற்றவை என்று கூறி நிராகரித்துள்ளது இந்த நிறுவனம். தற்போது தங்கள் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு சுனாமி அலை எழுந்துவிட்டதாக கூறித் தமது தவறை மறைக்கின்றனர் அதிகாரிகள்.

கடந்த பத்து வருடங்களாக புகுஷிமா அணு உலையின் பாதுகாப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படவே இல்லை.  விபத்து ஏற்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, புகுஷிமா உலையால் சுனாமியைச் சமாளிக்க முடியாது என்று கூறியிருக்கிறது. இவையெல்லாம் இப்போதுதான் தெரிய வருகின்றன.

புகுஷிமா-அணு-உலை

ஜப்பானிய மொழியில் “சொட்கேய்”  என்றொரு சொல் உண்டு. கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று அதற்குப் பொருள். அணு உலை அதிகாரிகள் வல்லுநர்களிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எந்தக் கேள்வி கேட்டாலும், இப்படிப்பட்டதொரு தவறு நடக்கும் என்றோ, இயற்கைப் பேரழிவு இவ்வளவு பெரிதாக இருக்குமென்றோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறுகிறார்கள். அதாவது சொட்கேய் என்ற சொல்லுக்குப்  பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்.

அதிகாரிகளின் இந்தக் கூற்றை ஏற்க மறுக்கும் ஜப்பான் நாடாளுமன்றத்தின் விசாரணை அறிக்கை, அதிகாரிகள் தங்களது தவறுகளை மறைத்துக் கொண்டு இயற்கையின் மீது பழிபோட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்ப்பதாக குற்றம் சாட்டுகிறது.

அணுசக்தித் துறையில் முன்னணியில் உள்ள, அணு உலைகளை ஏற்றுமதி செய்கின்ற நாடுகளில் ஒன்றான ஜப்பானின், கல்வி, மக்களின் விழிப்புணர்வு, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் பெரிதும் முன்னேறிய நாடான  ஜப்பானின் இலட்சணம் இது. மனிதத் தவறுகளும், அதிகாரவர்க்கச் சீர்கேடுகளும் மலிந்த இந்தியாவில் அத்தகைய காரணங்களால் விபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் பல நூறு மடங்கு அதிகம் என்பதே உண்மை.

அணு உலையைப் பாதுகாக்க எத்தனை முன்னேற்பாடுகளைச் செய்திருந்தாலும், நம் எதிர்பார்ப்புக்கு மேல் இடர் வந்தால் அதன் விலை எத்தனை ஆயிரம் உயிர்களாக இருக்கும் என்ற கேள்விதான் முக்கியமானது. சொட்கேய் என்ற சொல் இலட்சக்கணக்கான மனித உயிர்களைப் பகடைக்காய் ஆக்க நாம் அனுமதிக்க முடியாது.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: