privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்மாருதி சுசுகி: போராட்டத் தீ பரவட்டும்!

மாருதி சுசுகி: போராட்டத் தீ பரவட்டும்!

-

மாருதி-சுசுகி
மாருதி சுசுகி தொழிற்சாலை லாக்-அவுட்

தலைநகருக்கு அருகில் உள்ள மானேசர் மாருதி சுசுகி தொழிற்சாலையில் நடந்திருக்கும் தொழிலாளர்களின் எழுச்சி பல முதலாளிகளையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களையும், அரசையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இனி ‘இந்தியாவை முழுவதுமாக தனியார் மயமாக்கி விற்று விட முடியாதோ’ என்ற பயம் அவர்களின் முதுகெலும்பில் சிலீரென்று இறங்கியிருக்கும்.

ஜியாலால் என்கிற தொழிலாளர், ராம்கிஷோர் என்கிற மேனஜரை தாக்கியதாகவும், ஜியாலால் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக நிர்வாகம் அறிவித்ததாகவும், அதனால் கோபமான தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதாகவும், அலுவலகங்களையும் கணினிகளையும் எரித்ததாகவும் சொல்கிறது நிர்வாகம்.

உயர் அதிகாரிகள் உட்காரும் முதல் மாடியில் நுழைந்த தொழிலாளர்கள் மேனேஜர்களை தாக்கி சில இடங்களுக்கு தீ வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இரு கால்களும் உடைந்த நிலையில் அவனிஷ் குமார் தேவ் என்கிற மேனேஜர் தீயில் சிக்கி இறந்து விட்டார். இதுவும் நிர்வாகத் தரப்பு தெரிவித்ததுதான்.

ஒரு மேலாளர் தலித் தொழிலாளரை சாதி பெயர் சொல்லி திட்டியதாகவும், அந்தத் தொழிலாளர் அதை எதிர்த்து கேட்டதாகவும், மேலாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிர்வாகம் தொழிலாளரை தற்காலிக வேலை நீக்கம் செய்ததாகவும் தொழிலாளர்கள் தரப்பில் சொல்கிறார்கள்.

மேலும் யூனியன் பிரதிநிதிகள் மனிதவளத் துறை அதிகாரிகளுடன் இதைப் பற்றி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது, நிர்வாகம் சம்பளத்துக்கு வைத்திருந்த குண்டர்களை தொழிற்சாலைக்கு வெளியிலிருந்து உள்ளே அழைத்து, செக்யூரிட்டிகளிடம் கதவுகளை மூட உத்தரவிட்டிருக்கிறது.

அந்த குண்டர்கள் ஆயுதங்களால் தொழிலாளர்களை தாக்க பல தொழிலாளர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளே நுழைந்த குண்டர்கள் நிறுவனத்தின் பொருட்களை அடித்து உடைத்ததுடன் தொழிற்சாலையின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர் என்றும் மாருதி சுசுகி தொழிலாளர் சங்கம் கூறுகிறது.

நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன, 96பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தொழிற்சாலை காலவரையறை இன்றி லாக்-அவுட் செய்யப்பட்டிருக்கிறது.

மாருதி-சுசுகி
தொழிலாளர்களை கிரிமினல்களாக சித்தரிக்கும் ஊடகங்கள்

மாருதி சுசுகி நிர்வாகமும், முதலாளித்துவ ஊடகங்களும், அரசும் தொழிலாளர்களை கிரிமினல்களாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். போராடி பெற்ற யூனியனின் அங்கீகாரம் ‘ரத்து செய்யப்பட வேண்டியதுதான்’ என்று தீர்ப்பு எழுதுகிறார்கள். ‘வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இனிமேல் இந்தியாவுக்கு வர பயப்படுவார்கள், அவர்களை சமாதானப்படுத்த தொழிலாளர் சட்டங்களை மாற்றி எழுத வேண்டும், விருப்பம் போல வேலையை விட்டு நீக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

மாருதி சுசுகியின் முதல் தொழிற்சாலை குர்கானில் 1980களில் தொடங்கப்பட்டது. மானேசரில் தொடங்கப்பட்ட இரண்டாவது தொழிற்சாலையிலும் நிர்வாகத்தின் எடுபிடியான ‘மாருதி உத்யோக் தொழிலாளர் சங்க’த்தையே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தொழிலாளர்களை கட்டாயப்படுத்தியது நிர்வாகம். தொழிலாளர்கள் தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகு, சென்ற ஆண்டுதான் தமது புதிய யூனியனுக்கான அங்கீகாரத்தை பெற்றார்கள். 7 அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒன்றாகச் சேர்ந்தாலே சங்கம் கட்டும் உரிமையும், அவர்களின் குறைகளைப் பேசித் தீர்வு காணும் உரிமையும் 1926-ம் ஆண்டு தொழிற்சங்க சட்டத்தின்படி தரப்பட்டுள்ளது. அதை செயல்படுத்தவே கடும் போராட்டம் தேவைப்பட்டிருக்கிறது.

மானேசர் ஆலையை பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமானால் அது 50 விநாடிகளில் ஒரு கார் உற்பத்தியாகும் இடம். மாருதி சுசுகி காரின் மூன்று அடிப்படை மாடல்களுடைய 180 வேறுபட்ட வடிவங்கள் இந்த ஆலையில் உற்பத்தி ஆகின்றன. கன்வேயர் பெல்ட்டில் நகர்ந்து வரும் ஒரு கார் எந்த வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம்.

அதன் ஸ்டியரிங் வலது புறமா, இடது புறமா, அதன் எரிபொருள் பெட்ரோலா, டீசலா, எரிவாயுவா, ஏ.சி உள்ளதா இல்லாததா, இருக்கைகளில் என்ன ரகம், டயர்கள் மற்றும் வீல் அசெம்பிளிகளில் எந்த வகை, கதவுகள், பூட்டுகள், கியர் பாக்ஸ்கள், டாஷ் போர்டுகள் போன்ற காரின் அனைத்து அங்க அவயங்களின் பட்டியலையும் தாங்கி அந்தக் கார் கன்வேயர் பெல்ட்டில் நகர்ந்து வரும்.

அந்தப் பட்டியலைப் பார்த்து, காரின் இனத்தை புரிந்து கொண்டு, தொழிலாளி அதன் மீது வினையாற்ற வேண்டும். ஒரு நொடி அதிகமானாலும் விளக்கு எரியும். எந்த தொழிலாளியினால் உற்பத்தி இழப்பு என்று பதிவாகும். நரம்புகள் முறுக்கேறித் தெறிக்கும் பதட்டத்துடனும், கை நடுக்கம் இல்லாத நிதானத்துடனும் ஐம்புலன்களையும் குவித்து தொழிலாளி தனது பணியை செய்து முடிக்க வேண்டும். முடித்ததும் அடுத்த கார் வந்து நிற்கும்.

தொழிலாளியின் இயற்கைத் தேவைகளான தண்ணீர் குடிப்பது, சிறுநீர் கழிப்பது, பணி இடையில் சிறிது ஓய்வு போன்றவையெல்லாம் வீணாகும் நேரம், நேரடியாக உற்பத்தியையும், லாபத்தையும் பாதிக்கும் விசயங்கள். தொழிலாளி ஒருவர் ஆலையினுள் நுழைந்து, எந்திரங்களுடன் வேலையை தொடங்கி அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்து, எந்திரத்துடன் ஒரு எந்திரமாகவே அவர்கள் மாறி விட வேண்டும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

மாருதி-சுசுகி
மாருதி சுசுகியின் தொழிலாளி

எந்திரங்கள் சம்பள உயர்வு கேட்காதல்லவா! ஆனால் தொழிலாளர்கள் தமக்குரிய நியாயமான ஊதியத்தை கேட்கும் போது நிர்வாகத்தால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.

மானேசர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அதிக பட்ச சம்பளம் ரூ 17,000. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ 7,000 மாதச் சம்பளம். அதற்கு மேல் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 2007க்கும் 2011க்கும் இடையே ஹரியானா மாநிலத்தின் நுகர்வோர் விலை குறியீட்டு எண் 50 சதவீதம் உயர்ந்திருக்க தொழிலாளர்களின் ஊதியம் சராசரியாக 5.5 சதவீதம்தான் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது 4 ஆண்டுகளில் தொழிலாளர் பெறும் வருமானத்தின் உண்மையான மதிப்பு சுமார் 45% குறைந்திருக்கிறது. அதே கால கட்டத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைமை அதிகாரியின் சம்பளம் நான்கு மடங்கு (419 சதவீதம்) அதிகமாயிருக்கிறது.

நிர்வாகத்துக்கு ஒவ்வாத புதிய தொழிலாளர் யூனியன், அதிகரித்துக் கொண்டே போகும் வேலைப் பளு, நான்கு ஆண்டுகளாக வருமான வீழ்ச்சி என்ற சூழலில் சம்பள உயர்வு குறித்து யூனியனுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே பேச்சு நடந்திருக்கிறது. நிர்வாகம் அந்த பேச்சு வார்த்தையை இழுத்து அடித்து கால தாமதம் செய்திருக்கிறது.

தொழிலாளர்கள் கேட்கும் அதிக பட்ச ஊதிய உயர்வான ரூ 18,000ஐ எல்லா தொழிலாளர்களுக்கும் (சுமார் 2,500 பேர்) கொடுத்தாலும் நிறுவனத்துக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ 54 கோடிதான் செலவாகியிருக்கும். 2010-11-ம் ஆண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ரூ 2,289 கோடி நிகர லாபம் ரூ 2,235 கோடியாக குறைய வேண்டியிருக்கும்.

தமது லாபத்தில் சுமார் 2% பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடிய ஊதிய உயர்வுக்கான பேச்சு வார்த்தையை இழுத்து அடித்து தனக்குப் பிடிக்காத யூனியனை தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவு இழக்கச் செய்ய முயற்சித்தது நிர்வாகம்.

‘கடந்த ஆண்டை விட லாபம் அதிகம் ஈட்ட வேண்டும் அப்பொழுது தான் லாப வளர்ச்சியைக் காட்டி பங்கின் விலையை பங்குச் சந்தையில் ஏற்ற முடியும், அதிகாரிகள் சம்பள உயர்வு பார்க்க முடியும். ‘உற்பத்தியை அதிகமாக்கி லாபம் காட்டலாம். அதிக உற்பத்தியை குறைந்த செலவில் செய்யும் போது இன்னும் லாபம் காட்டலாம்’ என்பது நிறுவனத்தின் அடிப்படை நோக்கம்.

திங்கள் கிழமை ‘முதல் ஆண்டுக்கு ரூ 6,000தான் சம்பள உயர்வு’ என்று நிர்வாகம் அறிவித்ததைத் தொடர்ந்து செவ்வாய் கிழமை, காலையில் வழக்கமாக நடக்கும் ஒருங்கிணைப்பு கூட்டத்தை தொழிலாளர்கள் புறக்கணித்திருக்கிறார்கள்.

புதன் கிழமை காலையில் தேநீர் இடைவேளைக்குப் பிறகு பணிக்கு வந்து கொண்டிருந்து சில தொழிலாளர்களிடம் ராம் கிஷோர் என்ற மேலாளர் ‘ஒருங்கிணைப்பு கூட்டத்தை புறக்கணிக்கக் கூடாது’ என்று உத்தரவிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து வாக்குவாதம் பலத்து தொழிலாளர் ஜியா லாலை சாதி பெயர் சொல்லி திட்டியிருக்கிறார் மேலாளர். பல நாட்கள் தொழிலாளர் மத்தியில் புழுங்கிக் கிடந்த கோபம் பெருவெடிப்பாக வெடித்திருக்கிறது.

இப்பொழுது நடந்திருக்கும் தொழிலாளர் போராட்டம் ஒரு அவச் சொல், பணிநீக்கம் என்பதின் வெளிப்பாடு என்று சுருக்கிவிட முடியாது.

சந்தையில் நல்ல லாபத்தில் மாருதி காரை விற்றுவிட்டு, அந்த லாபத்திற்கு சம்பந்தம் இல்லாத சொற்ப சம்பளத்தை கொடுப்பது, தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்கள் ஆக்காமல் தற்காலிக தொழிலாளர்களாகவே வைப்பது, அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் இருப்பது, அவர்களின் யூனியனை வேவு பார்ப்பது, ‘யூனியன் நடவடிக்கைகள் சட்டம் விரோதம் அதில் பங்கெடுக்கமாட்டேன்’ என உறுதி பத்திரத்தில் கையெழுத்திட நிர்ப்பந்திப்பது என இந்தியாவின் தொழிலாளர் சட்டம் என்பது தாங்கள் மலம் துடைக்க உதவும் காகிதம் என வெளிப்படையாக செயல்படுகின்றன வெளிநாட்டு நிறுவனங்கள். இதை எதிர்த்து போராடும் தொழிலாளர்களை சட்ட விரோதிகள், வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

தங்கள் கோரிக்கைகளை முன் வைப்பது தொழிலாளர்களின் உரிமை.  அதை முதலாளிகளால் ஏற்க முடியவில்லையென்றால், முதலாளிகளுக்கு புரியும் மொழியில் தங்கள் கோரிக்கைகளை ஏற்கச் செய்வதுதான் தொழிலாளர்களிடம் உள்ள ஒரே வழி. ஆனால் தொழிலாளிகளின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை அதிகாரத்தின் துணை கொண்டு நசுக்க நினைக்கிறார்கள் முதலாளிகள்.

மாருதி-சுசுகி
கடந்த ஆண்டு போராட்டதின் போது.

மாருதி தொழிலாளர்களும் சரி மானேசரில் செயல்படும் வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களும் சரி இந்த போராட்த்தின் பாதையை திடுமென வந்து அடைந்து விடவில்லை. தொடர்ந்து பல மாதங்கள் பல அநீதிகளை ஏற்க முடியாமல்தான் அவர்கள் போராடி வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் நடந்திருக்கும் பல்வேறு போராட்டங்களில் தொழிலாளர்கள் தங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அடக்குமுறையை எதிர்த்து போர்க்குணத்துடன் போராடியுள்ளனர்.

தொழிற்சாலையில் வன்முறையை அவிழ்த்து விட்டு சொத்துக்களை நாசம் செய்து உயிரிழப்புக்கும் காயங்களும் பிரச்சினை என்றால் அந்தப் பிரச்சினையை திமிரோடு தருவித்துக் கொண்டது மாருதி சுசுகி நிர்வாகம்தான்.  ஒப்பந்தத் தொழிலாளரை நிரந்தரம் ஆக்க மறுப்பது, குறைந்த பட்ச ஊதிய உயர்வைக் கூட மறுப்பது என்று அதிகார ஆட்டம் போடும் மாருதி நிர்வாகத்தை தொழிலாளிகள் வேறு எப்படி வழிக்கு கொண்டு வர முடியும்?

புதிய பொருளாதாரக் கொள்கையின் படி முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிற்சங்க உரிமை இல்லை, நிரந்தரத் தொழிலாளர் தேவையில்லை, குறைந்த கூலி, நீதிமன்றம் தலையிட முடியாது, தொழிலாளர் ஆணையர் கேட்க முடியாது என்று இந்தியா முழுவதும் இத்தகைய கொள்கைகளே அமல்படுத்தப்படுகின்றன.  இத்தகைய அடக்குமுறையின் தர்க்க ரீதியான எதிர்வினைதான் மாருதி தொழிலாளர் போராட்டம்.

தங்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கி லாப வெறிக்காக தங்களின் மேல் போர் தொடுத்த முதலாளி வர்க்கத்தை மாருதி தொழிலாளர்கள் போர்க்குணத்துடன் எதிர்கொண்டுள்ளார்கள். அவர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதால் முதலாளி வர்க்கம் வெற்றி பெற்று விடாது. ஏனென்றால்  இழப்பதற்கு நிறைய முதலாளி வர்க்கத்திடம்தான் இருக்கிறதே ஒழிய தொழிலாளிகளிடம் இல்லை. மாருதி தொழிலாளர் போராட்டம் இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்கத்திற்கு முன்னுதாரமாண போராட்டம். இதை பன்னாட்டு மற்றும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு எதிரான போராட்டமாக ஒருங்கிணைக்கும் போது தொழிலாளி வர்க்கம் மட்டுமல்ல இந்திய மக்களும் தங்களது விடுதலைக்கான பாதையை கண்டடைவார்கள்.

____________________________________________

– அப்துல்.

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________