privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காமாருதி தொழிலாளர் போராட்டம் - கருத்தரங்கம்: செய்தித் தொகுப்பு!

மாருதி தொழிலாளர் போராட்டம் – கருத்தரங்கம்: செய்தித் தொகுப்பு!

-

மாருதி தொழிலாளர் போராட்டம் – கருத்தரங்கம்: செய்தித் தொகுப்பு!

மாருதி  தொழிலாளர்களின் போராட்டத்தை உயர்த்திப் பிடித்த கருத்தரங்கம் – நிகழ்ச்சி தொகுப்பு.

சோசலிசத்தின் தற்காலிக பின்னடைவுக்கு பின்னர் கம்யூனிசம் தோற்றுவிட்டதென்றும், முதலாளித்துவ அமைப்பே இறுதியானது என்றும் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த ஏகாதிபத்தியங்களின் கருவறையையே இன்று தாக்கத் துவங்கியிருக்கிறார்கள் மக்கள். முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கெதிரான  உழைக்கும் மக்களின் தாக்குதல்கள் அமெரிக்க ஐரோப்பிய வீதிகளில் நாள்தோறும் நடந்து கொண்டிருக்கிறது.

நமது நாட்டிலும், உலகமயமாக்கலுக்கு பின்னர் பெயரளவில் இருந்த தொழிலாளர் உரிமைகள், சட்டங்கள் அனைத்தும் திருத்தப்பட்டு பறிக்கப்பட்டு, தொழிலாளிகள் அனைவரும் சட்டப்பூர்வ கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு வருகின்றனர். கடந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்கள் புற்றீசல் போல இந்தியாவிற்குள் படையெடுத்து வந்திருக்கின்றன. சென்னையை சுற்றியுள்ள கும்மிடிப்பூண்டி, இருங்காட்டுக்கோட்டை, திருப்பெரும்புதூர், சுங்குவார் சத்திரம், ஒரகடம், மறைமலை நகர் போன்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன.

நோக்கியா, போர்ட், சாம்சங், ஹுண்டாய், டெல், கேட்டர்பில்லர், செயின்ட்கோபைய்ன், பாக்ஸ்கான், நிசான், ரெனால்ட் போன்ற உலகத்திலுள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களும் இங்கு இருக்கின்றன. ஏன் இவர்கள் இப்படி இந்தியாவிற்குள் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள் என்பதை பிறகு பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளிகளைப் பற்றிய சில விவரங்களை மட்டும் பார்ப்போம். இந்த ஆலைகளில் பணிபுரிபவர்களில் தொன்னூறு சதவிகிதம் பேர் ஒப்பந்தத் தொழிலாளிகள் (காண்ட்ராக்ட்) எந்திரங்களைப் போல ஈவிரக்கமின்றி சுரண்டப்படும் இந்த தொழிலாளிகளின் உழைப்பு இல்லை என்றால் இந்த உலகத்தில் நாம் நாகரீக மனிதர்களாக வாழ முடியாது. இந்த தொழிலாளிகள் தான் நமது உலகத்தை படைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஹுண்டாய் நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். ஹூண்டாய் ஒவ்வொரு ஆண்டும் சாண்ட்ரோ, ஐ10, ஐ20 என்று வித விதமான கார்களை வெளியிடுகிறது. இங்கே மொத்தம் பதினேழாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளிகள் வேலை செய்கிறார்கள். ஒரு ஷிப்டிற்கு, அதாவது எட்டு மணி நேரத்திற்கு நானூற்று ஐம்பது கார்களை உற்பத்தி செய்கிறார்கள். மூன்று ஷிப்டுகளும்,முப்பது நாட்களும் இப்படி ஓடாய் தேயும் ஒரு தொழிலாளிக்கு இந்த பன்னாட்டு நிறுவனம் எவ்வளவு ஊதியம் கொடுக்கும் என்று நினைக்கிறீர்கள் ? 4500 லிருந்து 6000 தான் இவர்களுடைய மாத ஊதியம்.

இதே நிலைமை தான் நோக்கியாவிலும். இதே நிலைமை தான் சி.பொ.ம முழுவதும். தொழிலாளிகளை இப்படி கொடூரமாக சுரண்டுவது மட்டுமின்றி இந்நிறுவனங்கள் பல்வேறு சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடுகின்றன. உதாரணத்திற்கு ட்ரைய்னி என்கிற பயிற்சி பெறும் தொழிலாளிகளை உற்பத்தியில் ஈடுபடுத்தக்கூடாது என்பது சட்டம். ஆனால் ஹுண்டாய் நிறுவனம் ட்ரைய்னிகளை கட்டாயமாக உற்பத்தியில் ஈடுபடுத்துகிறது. இதன் விளைவாக பல தொழிலாளிகள் இயந்திரங்களில் சிக்கி, இயந்திரங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பயிற்சித் தொழிலாளி இயந்திரத்தை தவறாக இயக்கியதால் கன்னிமைக்கும் நேரத்திற்குள் சீறிப்பாய்ந்த இரும்பு ராடு அவருடைய மண்டையை பிளந்து கொண்டு போனது. ஹுண்டாயில் மட்டும் இதுவரை 30 க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் இது போன்ற விபத்துகளால் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கில் காயமடைந்துள்ளனர். நோக்கியா உள்ளிட்ட அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் இவ்வாறு தான் இயங்குகின்றன.

அடுத்து இந்த தொழிலாளிகளில் பெரும்பான்மையானவர்களை ஒப்பந்தத் தொழிலாளிகளாகவே வைத்திருக்க என்ன காரணம் ? (காண்ட்ராக்டாக இருந்தாலும் 480 நாட்கள் வேலை செய்திருந்தால் நிரந்தரமாக்க (கன்பார்ம்) வேண்டும் என்பது இந்திய அரசு எழுதி வைத்திருக்கும் சட்டம். அதையெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாது என்பது பன்னாட்டு கம்பெனிகள் கடைபிடிக்கும் புதிய சட்டம்) தொன்னூறு சதவிகிதம் தொழிலாளிகளை காண்ட்ராக்டாக வைத்திருப்பது ஏன் என்றால் முப்பது வயதில் தூக்கி வீசத் தான்.

அதாவது இளமை துடிப்புள்ள 18, 20 வயதுகளில் வேலைக்குச் சேரும் தொழிலாளிகளிடம் பத்து, பன்னிரெண்டு ஆண்டுகள் அடிமாட்டு கூலிக்கு சக்கையாக உழைப்புச் சக்தியை பிழிந்து எடுத்துக் கொண்ட பிறகு முப்பது வயதில் கரும்புச் சக்கையை வீசியெறிவதை போல வீசி எறிந்து விடுவார்கள். அவர்களை நிரந்தரமாக்கினால் வெளியேற்ற முடியாது. வெளியேற்றப் போகிறவர்களை ஏன் நிரந்தரமாக்க வேண்டும். எனவே 90% பேரை எப்போதும் காண்ட்ராக்டிலேயே வைத்திருக்கிறார்கள். (காண்ட்ராக்ட் முறை சட்டவிரோதமானது என்று உச்சநீதி மன்றம் சில மாதங்களுக்கு முன்பு தான் தீர்ப்பளித்துள்ளது, எனினும் அது பன்னாட்டு கம்பெனிகளிடத்தில் செல்லாது)

ஆனாலும் இவர்கள் மறக்காமல் ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளிகளுக்கு அக்கறையோடு ஊதிய உயர்வும் கொடுத்துவிடுகிறார்கள் ! ஹுண்டாய் இருக்கும் அதே வளாகத்திலிருக்கும் சான்மினா என்கிற நிறுவனம் சென்ற ஆண்டு தனது தொழிலாளிகளுக்கு கொடுத்த இன்க்ரிமெண்ட் எவ்வளவு தெரியுமா ? சொன்னால் மிரண்டு போய்விடுவீர்கள், 95 ரூபாய் ! சான்மினா அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம்!! இந்த பன்னாட்டு கம்பெனிகள் இந்தியாவை நோக்கி வரிசையாக அணிவகுத்து வருவதற்கு காரணம் என்னவென்றால். இந்தியா ஏகாதிபத்தியங்களின் காலனியாக இருக்கிறது. தூக்கத்தில் கூட ஏகாதிபத்தியவாதிகளின் காலை நக்குவதற்கே பிறப்பெடுத்தவர்களான மன்மோகன், அத்வானி போன்ற கைக்கூலிகளின் ஆட்சி தான் மாறி மாறி வருகிறது.

மூன்றாவதாக ஜெர்மனியிலோ, பிரான்சிலோ அல்லது அமெரிக்காவிலோ நான்காயிரத்துக்கும் ஐயாயிரத்துக்கும் யாராவது வேலைக்கு கிடைப்பார்களா ?!

இந்தியாவின் பிற பகுதிகளான கல்கத்தா, குஜராத், குர்கான், நொய்டா போன்ற பகுதிகளிலும் இதே போல பல நூறு பன்னாட்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. அங்கேயும் தொழிலாளிகளுக்கு இதே நிலைமை தான். சொல்லப்போனால் அவர்கள் இதைவிட கொடூரமான கொத்தடிமை வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பன்னாட்டு கம்பெனிகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலை இது தான். உழைக்காத சோம்பேறி கூட்டமான முதலாளிகளுக்கு நமது அரசு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம், மலிவு விலையில் 365 நாட்களும் தடையற்ற மின்சாரம், லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர், கோடிக்கனக்கான ரூபாய் வரி விலக்கு என்று தலைமேல் தாங்கிக்கொண்டு நிற்கிறது. ஆனாலும் முதலாளிகள் இரண்டு மூன்று சங்கங்களை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சட்டத்தை மதிப்பதில்லை என்பதல்ல பிரச்சினை அதை செருப்பாலேயே அடிக்கிறார்கள்.

ஆனால் தொழிலாளிகள் சங்கம் சேரவோ, சட்டரீதியான உரிமைகளை பெறவோ உரிமை இல்லை. வேண்டுமானால் நிர்வாகமே கைக்கூலி சங்கங்களை ஏற்படுத்தி தரும். இப்படி எந்த உரிமைகளுமற்ற அடிமைகளாகத் தான் தொழிலாளிகள் நடத்தப்படுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் மிகப்பெரிய சங்கமான போலிக்கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யூ சங்கத்தின் சங்கப்பலகையை பிடுங்கி எறிந்தது ஹுண்டாய் நிர்வாகம். இரண்டு மாநிலங்களில் ஆட்சி செய்து கொண்டிருந்த, பல மாநிலங்களில் பல எம்.எல்.ஏக்கள், எம்.பி க்களை வைத்திருந்த போலிகளால் ஹுண்டாயை என்ன செய்ய முடிந்தது ?

பன்னாட்டு கம்பெனிகள் ஏவிவரும் இந்த முதலாளித்துவ பயங்கரவாதம் தொழிலாளர்கள் மத்தியில் கடும் கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள் மத்தியில் இயங்கும் தொழிற்சங்கங்களோ கோபத்தில் கொந்தளித்துக்கொண்டிருக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கு பாட்டாளி வர்க்க அரசியலை கற்றுக்கொடுத்து வர்க்க உணர்வையூட்டாமல், நிர்வாகத்திடம் பேசி சில சில்லறை சலுகைகளை பெற்றுத்தருவதும், கட்டைப்பஞ்சாயத்து செய்வதும், சமரசம் பேசுவதும், பின்னர் துரோகமிழைத்துவிட்டு ஓடிவிடுவதுமாகவே இருக்கின்றன. தொழிலாளி வர்க்கத்திற்கென்று சரியான அரசியல் தலைமையை கொண்ட சங்கங்கள் ஏதும் இல்லாத நிலையில் தொழிலாளிகள் ஓட்டுப்பொறுக்கி சங்கங்களாலும், அரசியல்லற்ற பிழைப்புவாத சங்கங்களாலும் ஏமாற்றப்பட்டும், துரோகமிழைக்கப்பட்டும், முதலாளித்துவ பயங்கரவாத தாக்குதலுக்கெதிரான போராட்டங்களில் தோல்வியடைகின்றனர். இந்தியாவெங்கும் உள்ள தொழில் வளையங்களிலும், சிறப்பு பெருளாதார மண்டலங்களிலும், இது தான் நிலைமை.

அவநம்பிக்கை நிரம்பிய இத்தகைய மந்த நிலையின் மீது முதல் உடைப்பை ஏற்படுத்தியவர்கள் மாருதி-சுசுகி தொழிலாளர்கள். இந்தியாவில் தொழிலாளிகளை கசக்கிப்பிழிந்து கொத்தடிமைகளாக நடத்திக் கொண்டிருக்கும் பன்னாட்டு கம்பெனிகளில் ஒன்றுக்கு முதல் முறையாக செருப்படி கொடுத்திருக்கிறார்கள் மாருதி தொழிலாளர்கள். பன்னாட்டு கம்பெனி ஆண்டைகளுக்கு எதிராகவும், அவர்களுக்கு ஊழியம் செய்யும் கைக்கூலி ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் எப்படி போராட வேண்டும் என்பதை தமது வர்க்க ஒற்றுமை நிறைந்த போராட்டத்தின் மூலம் இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு அனுபவமாக வழங்கியிருக்கிறார்கள் மாருதி தொழிலாளர்கள். தமது போராட்டத்தின் மூலம் ஒரு பன்னாட்டு கம்பெனியை தமது காலடியின் கீழ் மண்டியிட வைத்திருக்கிறார்கள் இந்திய தொழிலாளிகள். உலகமயமாக்கலுக்கு பின் இந்திய தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இது ஒரு மைல் கல் என்று சொன்னால் மிகையாகாது. இவர்களுடைய போராட்டத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஆனால் தமிழகத்திலிருக்கும் எந்த தொழிற்சங்கமும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தூக்கிப்பிடித்ததாக தெரியவில்லை. ஆனால் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி இதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது. எனவே தான்  மாருதி கார் தொழிலாளர்களிடம் பணிந்தது நிர்வாகம்! அனுபவம் கற்போம்! முதலாளித்துவத்திற்கு சவக்குழி வெட்டுவோம்!’ என்கிற தலைப்பில் பல்லாயிரக்கணக்கில் தொழிலாளர்கள் வசிக்கும் பூந்தமல்லி பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அக்கருத்தரங்கத்தில் பேசப்பட்டவை இங்கு சுருக்கமாக.

மாருதி தொழிலாளர் போராட்டம் – கருத்தரங்கம்: செய்தித் தொகுப்பு!

20.11.2011 அன்று காலை 10 மணிக்கு தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் துவங்கியது கருத்தரங்கம். துவங்கிய சில நிமிடங்கள் வரை முதல் மூன்று நான்கு வரிசை இருக்கைகள் மட்டுமே நிறைந்திருந்தன. பின்னர் படிப்படியாக தொழிலாளர்கள் வரத் துவங்கினர். சற்று நேரதிற்கொல்லாம் நூற்றுக்கணக்கான தொழிலாளிகளால் அரங்கம் நிரம்பி வழிந்தது. பு.ஜ.தொ.மு அமைப்பு செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அமர்விற்கு தலைமை தாங்கினார்.

தோழர் தனது தலைமை உரையில் சென்னையை சுற்றியுள்ள சிப்காட்டிலும், சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சட்டப்படியே உள்ள குறைந்தப்பட்ச உரிமைகள் கூட கிடைக்காததும், முதலாளிகள் சட்டத்தை மீறுவதும் தான் தொடர்ச்சியான நடைமுறையாக  இருந்து வருகிறது என்று குறிப்பிட்டார். தொழிலாளர்கள் ஒரே வர்க்கமாக திரண்டு விடாமல் தடுப்பதற்காகவே முதலாளிகள்  காண்ட்ராக்ட், CL, ட்ரெய்னி, அப்ரண்டீஸ், பெர்மனெண்ட் என்று தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தி வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

சிப்காட், சி.பொ.ம களில் நாள்தோறும் பல போராட்டங்கள் நடந்துவருவதை சுட்டிகாட்டிய தோழர், அப்போராட்டங்கள், தொழிலாளி வர்க்கத்திடமுள்ள பல்வேறு பிளவுகளாலும், பிழைப்புவாத, துரோக தலைமையாலும் தான் தோல்வியடைந்து வருவதாக கூறினார். உதாரணமாக ஹுண்டாய் ஆலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போது, மற்ற தொழிலாளர்கள் வேலைக்கு சென்றதால் போராட்டம் தோல்வியடைந்தது. மாறாக பு.ஜ.தொ.மு வழிகாட்டுதலின் கீழ் நடந்த ஹனில் டியூப் தொழிலாளர்களின் போராட்டம் அனைத்து தொழிலாளிகளையும் ஒரே வர்க்கமாக அணிதிரட்டியது.

அதன் விளைவாக சிப்காட் வரலாற்றிலேயே முதன் முறையாக வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களும் மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அந்த வகையில் தொழிலாளர்கள் மத்தியில் முதலாளிகள் ஏற்படுத்தி வைத்திருக்கும் வேறுப்பாடுகளை புறந்தள்ளிவிட்டு நாம் ஒரே வர்க்கமாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே  வெற்றி பெற முடியும் என்பது மாருதி தொழிலாளர்களுடைய போராட்டத்திலும் வெளிப்பட்டிருக்கிறது அவர்களிடமிருந்து நாம் இது போன்ற பல அனுபவங்களை கற்றுக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார்.

_________________________________________

அடுத்ததாக மாருதி தொழிலாளர்களின் போர்க்குணமிக்க போராட்டத்திலிருந்து சில காட்சிகள் திரையிடப்பட்டது. காட்சிகளை தொழிலாளர்கள் உணர்வுப்பூர்வமாக கவனித்தனர். இதையடுத்து  ’மாருதி கார் தொழிலாளர்களின் வெற்றி! அனுபவம் கற்போம்!’ என்கிற தலைப்பில் பு.ஜ.தொ.மு மாநில பொருளாளர், தோழர் விஜயகுமார் பேசினார்.

1926 ஆம் ஆண்டு இந்திய தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற  உரிமை தான் சங்கம் அமைக்கும் உரிமை. அந்த உரிமையை நிலைநாட்டியதற்காக தான் தொழிலாளிகளை ஒடுக்கியது மாருதி நிறுவனம். தொழிற்சங்கம் அமைப்பதற்காக துவங்கிய போராட்டம் தான் இன்று இப்படி வளர்ந்திருக்கிறது. அப்போராட்டம் பல்வேறு எல்லைகளையும், தடைகளையும் தகர்த்தெறிந்த போராட்டமாக அமைந்திருந்தது.

முதலாவதாக, மாருதி நிறுவனத்தின் மூன்று வெவ்வேறு ஆலைகளின் தொழிலாளர்களை ஒன்றுபடுத்திய வகையில் அது ஒரு முன்னுதாரணமிக்க போராட்டம். அடுத்து தொழிலாளி வர்க்கத்திடம் முதலாளிகள் ஏற்படுத்தி வைத்திருந்த பல வகையான பிரிவுகளை உடைத்து அனைவரையும் ஒரே அணியில் கொண்டு வந்து நிறுத்தியது இரண்டாவது முன்னேற்றம். மூன்றாவதாக,  தமது போராட்டத்திற்கு ஆதரவாக மாருதியின் வெண்டார்களில் பணிபுரியும் தொழிலாளர்களையும், குர்கானின் ஏனைய ஆலைத் தொழிலாளிகளையும் ஒன்று திரட்டியது. இவ்வாறு தொழிலாளி வர்க்கம் தனது முழு பலத்தையும் காட்டிய பிறகுதான் மாருதி நிர்வாகமும், அரசும் பணிந்தது.

சென்னையை சுற்றியும், இந்தியா முழுவதிலும் கூட கடந்த பத்தாண்டுகளில் தொழிலாளி வர்க்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறது. ஆனால் தமது கோரிக்கைகளில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் மாருதி தொழிலாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் எப்படி என்பதை நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றிருக்கும் நிறுவனம் ஒரு பன்னாட்டு நிறுவனம்.

மாருதி  நிறுவனம்  இந்திரா காந்தியிலிருந்து மன்மோகன் சிங் வரை பல பிரதமர்களை  ஆட்டுவித்த நிறுவனம். இது துவக்கத்தில் மாருதி உத்யோக் என்கிற பொதுத்துறை நிறுவனமாக தான் இருந்தது. பிறகு சுசுகி என்கிற பன்னாட்டு நிறுவனத்துடன் இணைந்து இயங்கியது. தற்போது சுசுகியே அதை முழுமையாக விழுங்கி பன்னாட்டு கம்பெனியாக்கி விட்டது.

இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் கார்களை விற்பனை செய்து வந்தாலும், இந்திய சாலைகளில் ஓடும் கார்களில் 50 சதவீத கார்கள் மாருதியுடையது தான். இது தவிர வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. இப்படி உலகளாவிய கார் சந்தையை தனது கைகளில் வைத்திருக்கும் நிறுவனத்தை தான் நமது தொழிலாளர்கள் பணியவைத்திருக்கிறார்கள். அந்த வகையில் பு.ஜ.தொ.மு இப்போராட்டத்தை உயர்த்திப்பிடிக்கிறது, அதிலிருந்து நாம் அனுபவத்தையும் பாடத்தையும் கற்றுக்கொள்ளவேண்டியதிருக்கிறது.

இந்த போராட்டம் தொழிலாளி வர்க்கத்திடம் மட்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை, அதிகார வர்க்கத்திடமும், முதலாளிகள் மத்தியிலும் கடுமையான அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. ஊடகங்கள் தவிர்க்க முடியாமல் இப்போராட்ட செய்திகளை தினமும் வெளியிட்டன. போராட்டச் செய்தி காட்டுத்தீயாக பரவியது. பீதியடைந்த முதலாளிகள் தொழிலாளிகளிடம் சுமுகமான உறவை மேற்கொள்வதாகவும், விட்டுக்கொடுத்து நடந்துகொள்வதாகவும் பேட்டிகளும் அறிக்கைகளும் விட்டார்கள்.

இந்தியா முழுவதும் தொழிலாளிகள் தான் மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் மாருதி நிர்வாகம் இனி குர்கானில் இருந்தால் தொழிலாளி வர்க்கம் தன்னை சவப்பெட்டிக்குள் அடைத்து ஆணி அடித்து விடும் என்றஞ்சி பாசிச மோடியின் குஜராத்திற்கு ஓடிப்போக உத்தேசித்துள்ளது. மோடியும் மாருதிக்கு டெல்லியிலிருந்து குஜராத்திற்கு பாதுகாப்பான பாலம் அமைத்துக்கொடுத்திருக்கிறான். நாமும் மாருதியிலிருந்து ஹுண்டாய்க்கு பாலத்தை ஏற்படுத்துவோம். மாருதி தொழிற்சாலையில் தெறித்த பொறி இந்தியாவெங்கும் பற்றிப்படர வேண்டும்.

இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால், சங்கம் கட்ட முயற்சித்தால் அரசு போலீசை வைத்து ஒடுக்கிகிறது. தொழிலாளர் துறை அதிகாரிகளோ, முதலாளிகளின் அடியாட்களாக, ஆட்காட்டிகளாக வேலை செய்கிறார்கள். இப்படி அரசு  எந்திரத்தின் அனைத்து உறுப்புகளும் முதலாளிகளுக்கு ஆதரவாக தான் இருக்கிறது. அதையும் எதிர்த்து நின்று முறியடித்திருக்கிறார்கள் மாருதி தொழிலாளர்கள்.

அந்த வகையிலும் நாம் இப்போராட்டத்தை உயர்த்திப் பிடிக்கவேண்டும். காங்கிரஸ், பி.ஜே.பி யிலிருந்து போலிகம்யூனிஸ்டுகள் வரை இந்தியாவிலிருக்கும் எந்த ஓட்டுக்கட்சியும் இந்த போராட்டத்தை ஆதரிக்கவில்லை. கட்சி தலைமை எதிராக இருந்த போதிலும்  அக்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் தவிர்க்கமுடியாமல் இப்போராட்டத்திற்கு ஆதரவளித்திருக்கின்றன. மாருதி தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிக்காவிட்டால் இனி சங்கம் வைத்து பிழைப்பு நடத்த முடியாது என்கிற நெருக்கடி நிலையை உணர்ந்து கொண்ட பிழைப்புவாத சங்கங்கள் கூட கட்சி தலைமையையும் மீறி இப்போராட்டத்திற்கு ஆதரவாக நின்றனர். அவர்களை இந்த நிபந்தத்திற்கு தள்ளிய வகையிலும் இப்போராட்டத்தை  நாம் உயர்த்திப்பிடிக்க வேண்டும். இவை அனைத்து இப்போரட்டத்திலிருந்து நாம் கற்க வெண்டிய நேர்மறை அனுபவங்கள்.

போராடிய தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் ஆனால் சங்க நிர்வாகிகள் முப்பது பேரை மட்டும் நிர்வாகம் ஆலைக்குள் அனுமதிக்கவில்லை. அவர்கள் மீது முறையான விசாரணை நடத்திய பிறகே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று அறிவித்தது. சில வாரங்களுக்கு பிறகு நிர்வாகிகள் அனைவரும் நிர்வாகத்துடன் இனி போராட முடியாது, அவர்கள் பலம் பெருந்தியவர்கள், பெரிய வழக்குகுரைஞர்களை வைத்திருக்கிறார்கள், அவர்களோடு போராடி வெற்றி பெற முடியாது என்று கூறினார்கள்.

காரணம், அனைவரையும் நிர்வாகம் விலைக்கு வாங்கிவிட்டது. தலைமையில் இருந்தவர்கள் அனைவரும் விலை போய்விட்டார்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் போராட்டம், அவர்களை ஆதரித்த பல்லாயிரக்கனக்கான தொழிலாளிகளின் நம்பிக்கை அனைத்தையும் இந்த துரோக கும்பல் விலை பேசி விட்டது. இது பின்னடைவு தான்.   இந்த நிலைக்கு காரணம் அவர்களுடைய சங்கத்திற்கு அரசியல் ரீதியான தலைமையும், வழிகாட்டுதலும் இல்லாமல் இருந்ததே.  எவ்வளவு பலம் பொருந்தியவனாக இருந்தால் என்ன, எப்படிப்பட்ட வழக்குரைஞர்களாக இருந்தால் என்ன எல்லோரையும் புஜ.தொ.மு தோழர்கள் கையாண்டிருக்கிறார்கள்.

சாராய வியாபாரி ஜேப்பியாருக்கு எதிராக சத்தியபாமா கல்லூரியின் சாதாரண துப்புரவுத்தொழிலாளிகளின் எதிர்வினை  ’ஊமைத்துரை’ என்ற தொழிலாளர் நல அதிகாரியை வாயைத்திறந்து பேசவைத்தது போன்ற சம்பவங்களை விளக்கிய தோழர் இது எவ்வாறு சாத்தியமானது என்றால், புஜதொமு கற்றுக்கொடுத்த அரசியலும், வர்க்க உணர்வும் தான் இதற்கு காரணம் என்றார். சரியான அரசியல் தலைமையும் வழிகாட்டுதல்களும் இல்லாததால் தான் மாருதி தொழிலாளர்கள் வெற்றி பெற்ற பிறகும் துரோகத்தால் தோற்றிருக்கிறார்கள். இது எதிர்மறை அனுபவம். இதிலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

சங்கம் என்றால், அது அரசியலை அடிப்படையாக கொண்ட சங்கமாக தான் துவங்கப்பட வேண்டும். அந்த அரசியல் என்பது மார்க்சிய-லெனினிய சித்தாந்தமாகத் தான் இருக்கவேண்டும். தமிழகத்தில் அவ்வாறு மார்க்சிய லெனினிய அரசியலை, தொழிலாளிவர்க்கத்தின் விடுதலையை தனது கொள்கையாக வரித்துக்கொண்ட ஒரே தொழிற்சங்கம் ’புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’ மட்டும் தான். எனவே தொழிலாளர்களை புரட்சிகர சங்கமான பு.ஜ.தொ.முவில் அணிதிரளுமாறு அறைகூவி அழைத்து தனது உரையை முடித்துக்கொண்டார்.

மாருதி தொழிலாளர் போராட்டம் – கருத்தரங்கம்: செய்தித் தொகுப்பு!

தோழருடைய உரையை தொடர்ந்து வால்ஸ்ட்ரீட் முற்றுகை போராட்ட காட்சிகள் திரையிடப்பட்டன. தொழிலாளர்கள் ஆர்வத்துடன் அமெரிக்க மக்களின் போராட்டங்களை பார்த்தனர். திரையிடலுக்கு பிறகு ’வால்ஸ்ட்ரீட் முற்றுகை,  திணறும் முதலாளித்துவ தலைமை பீடம்’  என்ற தலைப்பில் பு.ஜ.தொ.மு வின் மாநில பொதுச்செயலாளர் சு.ப.தங்கராசு பேசினார். வால்ஸ்ட்ரீட் என்பது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருக்கும் ஒரு தெரு. இந்த தெரு தான் உலகம் முழுமைக்கும் உள்ள பங்குசந்தைகளின் தலைமையகம். அங்கு தான் உலகம் முழுவதும் உள்ள மொத்த விற்பனை, இறக்குமதி, ஏற்றுமதி என அனைத்தும் தீர்மானிக்கப்படுகிறது. இது தான் முதலளித்துவத்தின் தலைமை பீடம் என்று போராட்டம் நடந்து வரும் வால்ஸ்ட்ரீட் பற்றி சுருக்கமாக விளக்கிய பிறகு, இந்த வால்ஸ்ட்ரீட் தான் தங்களது எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் என்றும், தங்களுடைய வாழ்வாதாரங்களை பறித்துக்கொண்டு நிற்கதியில் நிறுத்திவிட்டது என்றும், தங்களது வரிப்பணத்தில் இயங்கும் அமெரிக்க அரசு, முதலாளிகளுக்கு சேவை செய்கிறது என்றும், வால்ஸ்ட்ரீட்டை மூடக்கேரியும் போராடிவருகிறார்கள் அமெரிக்க மக்கள்.

இந்த போராட்டத்தை எந்த தொழிற்சங்கமும் நடத்தவில்லை, மாணவர்கள், தொழிலாளர்கள், வேலையில்லாதவர்கள் என பல்வேறு பிரிவு மக்கள் தான் இதை நடத்துகிறார்கள். இந்த போராட்டம் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெறுகிறது. இந்த போராட்டம் நியாமானது என்று உலகம் முழுவதும் மக்கள் ஆதரவு போராட்டங்களை நடத்துகின்றனர். அந்த நாடுகளிலும் பெரும்பான்மை மக்களுடைய நிலை இவர்களைப் போலவே தான் உள்ளது. உலகம் முழுவதும் முதலாளித்துவம் மக்களை மீளமுடியாத இக்கட்டுக்குள் தள்ளியிருக்கிறது.

அவர்களுடைய கோரிக்கை, நாங்கள் 99%  எங்களிடம் வரிகளை வாங்கிக்கொண்டு 1% முதலாளிகளை அமெரிக்க அரசாங்கம் ஊட்டி வளர்க்கிறது, இதற்கு நியாயம் வேண்டும் என்று, அகிம்சை முறையில், (Non-Violent) போராடுவதாக அறிவித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும், ஈராக்கில், ஆப்கானில், லிபியாவில், இன்னும் பிற நாடுகளில் எல்லாம் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக கூறிக்கொள்ளும் அமெரிக்க அரசு, முதலாளித்துவ ஊடகங்கள், அமெரிக்காவில் மக்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தினமும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன. அந்த அரசின் ஜனநாயக யோக்கியதை என்ன என்பதை இப்போது திரையில் பார்த்தோம். போராடும் மக்களுக்கு அமெரிக்க அரசு எப்படி கழுத்தை நெறித்து ஜனநாயகம் வழங்குகிறது என்பதை இப்போது பார்த்தோம்.

அம்மக்கள் இவ்வாறு வீதிகளில் இறங்க என்ன காரணம்  என்று விளக்கினார். கடன் அட்டைகள் மூலம் அமெரிக்க வங்கிகள் மக்களை ஒட்டச்சுரண்டியதையும், வீட்டுக்கடன்கள் (பிரைம் – சப் பிரைம் லோன்கள்) மூலமும், பங்குச்சந்தை சூதாடிகளாலும் மக்கள் வீடற்றவர்களாக்கப்பட்டு தெருவுக்கு அனுப்பப்பட்டடார்கள். மறுபுறம், பொருளாதார நெருக்கடியாலும், முதலாளித்துவ லாபவெறியாலும், தொழிலாளர்கள் வேலை இழந்து விரட்டப்பட்டார்கள். வேலையில்லை, வீடில்லை, விலைவாசி உயர்வை சமாளிக்க முடியவில்லை, வாழவே வழியில்லை என்ற நிலையில் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். அவர்களுக்கு போராடவேண்டும் என்ற உணர்விருக்கிறது, முதலாளித்துவம் கொல்கிறது என்றும் தெரிகிறது, ஆனால் முதலாளித்துவத்திற்கு மாற்று என்ன என்று தெரியவில்லை.

தாங்கள் முதலாளித்துவ ஆதரவாளர்களும் இல்லை, கம்யூனிஸ்டுகளும் இல்லை என்றே அவர்கள் கூறிக்கொள்கிறார்கள்.

பல்வேறு நாடுகளிலும் மக்கள் தெருவில் இறங்கி போராடியிருக்கிறார்கள் துனீசியா, எகிப்து போன்ற நாடுகளில் நடைபெற்ற போராட்டத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் மக்கள் பிரச்சனைகளுக்கு விடிவு வந்துவிட்டதா என்றால்  இல்லை! எனவே முதலாளித்துவ அமைப்புக்கு மாற்று என்பது சோசலிசம் மட்டும் தான். இன்று இந்த முதலாளித்துவ அரசுகள் விலைவாசியை ஏற்றி மக்களை பிச்சைக்காரர்களாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் ரசியாவில் 1917 ல் நடைபெற்ற சோசலிச புரட்சிக்கு பிறகு நாடு முழுவதும் அனைத்து பொருட்களுக்கும் ஒரே விலை தான் நிர்ணயிக்கப்பட்டது.

அத்துடன் அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஒரு அத்தியாவசிய பொருளின் விலை கூட உயரவில்லை என்பது விசயமல்ல மூன்று முறை விலைவாசியை குறைத்திருக்கிறது சோவியத் மக்களின் அரசு. எனவே முதலாளியத்திற்கு மாற்று சோசலிசம் மட்டுமே. அத்தகைய சோசலிச சமூக அமைப்பை உருவாக்க வேண்டுமானால் அது ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் உழைக்கும் மக்கள் அணிதிரளும் போது மட்டுமே முடியும். அங்கே போராடுகின்ற மக்கள் கம்யூனிசத்தை வரித்துக்கொண்டால் மட்டுமே விடுதலை.  கம்யூனிசம் மட்டும் தான் அவர்களை பாதுகாக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இதற்கு காரணம், முதலாளித்துவ பொய் பிரச்சாரங்கள் ஒரு புறம் என்றால் மறுபுறம் நம் நாட்டில் இருப்பதைப் போல போலி கம்யூனிஸ்ட் கட்சி கூட அங்கு இல்லை. ஏனென்றால் அமெரிக்காவில் கம்யூனிஸ்டு கட்சி தேர்தலில் நின்றாலும், வெற்றி பெற்றாலும் கூட பாராளுமன்றத்திற்கு செல்ல முடியாது, ஏனெனில் அமெரிக்க பாராளுமன்றத்தில் பதவி ஏற்க்கும் போது “நான் கம்யூனிஸ்டு இல்லை” என்றும் உறுதியளிக்க வேண்டும்.

இந்த மக்கள் போராட்டங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் அனுபவம், பாடம், கம்யூனிஸ்ட் கட்சியில் அணிதிரண்டால் மட்டுமே, அதுவும் இந்த முதலாளித்துவ சர்வாதிகாரத்தை அகற்றி உழைக்கும் மக்களின் சர்வாதிகாரத்தை நிறுவப் போராடும், போல்ஸ்விக் பாணி புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியில் அணிதிரண்டால் மட்டுமே முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்ட முடியும். நமது நாட்டில் நக்சல்பாரிகள் தான் அத்தகைய  புரட்சிகர சக்திகள் எனவே நகசல்பாரிகள் தலைமையில் ஒரு புதிய ஜனநாயக அரசை நிறுவுவதே விடுதலைக்கான வழி என்று கூறி தனது உரையை முடித்தார்.

மாருதி தொழிலாளர் போராட்டம் – கருத்தரங்கம்: செய்தித் தொகுப்பு!

கருத்தரங்கில் முதாலாளிகளுக்கு சாதகமாக தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தும்  மத்திய அரசின் முடிவுக்கு எதிராகவும், பன்னாட்டு நிறுவனங்களின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், பாசிச ஜெயா அரசின் பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசித்துள்ளதை கண்டித்தும், கூடங்குளத்தில் போராடும் மக்களை இழிவுபடுத்துவதை கண்டித்தும், அவர்களுடைய போராட்டத்திற்கு எப்போதும் ஆதரவாக நிற்போம் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரங்கில் கீழைக்காற்று பதிப்பகத்தின் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. உரைகளுக்கு இடையிடையே புரட்சிகர மாணவர்- இளைஞர் முண்ணனி கலைக்குழு தோழர்களின் புரட்சிகர கலை நிகழ்சி நடத்தப்பட்டது.

உலகை படைத்தலும், காத்தலும், தீயனவற்றை அழித்தலும் கடவுளின் செயல் என்றால் தொழிலாளியே அந்த கடவுள், தொழிலாளியே அந்த உலகம் என்பதை விளக்கும்  ‘நான் உலகம்’ இசை சித்திரம் நடத்தப்பட்டபோது அரங்கத்தில் எழுந்த கரகோசங்கள், மாருதி-சுசுகி போராட்டத்தை போன்று தமிழகத்திலுள்ள தொழிலாளிகளும், வால்ஸ்ட்ரீட் போராட்டங்களை போன்ற மாபெரும் போராட்டங்களை தமிழகமும் விரைவில் காணும் என்பதை உணர முடிந்தது. இறுதியாக பாட்டாளிவர்க்க சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.

_____________________________________________________

–       வினவு செய்தியாளர்.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

____________________________________________

____________________________________________

____________________________________________

 

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

  1. இந்தமுறை கருத்தரங்கிற்கான சுவரொட்டி பளிச்சென்று, நன்றாக அடித்திருந்தார்கள். இதே போல வருங்காலத்திலும் தொடரவேண்டும்.

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக இருந்தன. நல்ல உணர்வுடன் நிகழ்த்தினார்கள். வாழ்த்துக்கள்.

    பேசுவதற்கு முன்பாக, சின்னத்திரையில் சிறிய குறும்படமாக வெளியிட்டது அருமையாக இருந்தது.

    தலைமைஉரை, சிறப்புரை நிகழ்த்திய அனைத்து தோழர்களும் பல்வேறு வரலாற்று தகவல்களுடன், செய்திகளுடன், உணர்வூட்டும்படி பேசினார்கள்.

    மறுகாலனியாதிக்க தாக்குதலில், தொழிலாளர்களைத்தான் முதலாளித்துவம் வதைக்கிறது. புரட்சிகர தொழிற்சங்கம் சமகால தேவை. பு.ஜ.தொ.மு. வளர்ந்துகொண்டே வருகிறது. வளரும். வாழ்த்துக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க