privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபுரட்சிகர தொழிற்சங்கத்தை அழிக்க முதலாளிகள் ஜெயாவிடம் சரண்!

புரட்சிகர தொழிற்சங்கத்தை அழிக்க முதலாளிகள் ஜெயாவிடம் சரண்!

-

பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையும், சுரண்டலுக்கு எதிரான அதன் கோபமும், முதலாளிகளின் முதுகுத் தண்டில் சிலீரென்று பயத்தை ஏற்படுத்தும் என்பது மானேசர் தொழிலாளர் போராட்டத்துக்கு பிறகு வெளிப்பட்டது. இப்போது தென்னிந்திய முதலாளிகளின் நெஞ்சங்களில் ஏற்பட்டிருக்கும் கலக்கம் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் படி தென்னிந்திய முதலாளிகள் கூட்டமைப்பு  ஜெயலலிதாவிடம் புகார் மனு கொடுத்துள்ளது.

“தமிழகத்தின் மிகப் பெரிய தொழிற்சாலை நகரங்களில் நிறுவனங்களின் (முதலாளிகளின் சுரண்டல் என்று பொருள்) வளர்ச்சியை பாதிக்கும் வகையில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி எனும் தொழிற்சங்கம் நடந்து கொள்கிறது. இதனால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்படலாம். புஜதொமுவால் பல வெளிநாட்டு நிறுவனங்களும் பாதிப்படைந்துள்ளன. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகள் மீதும் அரசு உடனே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பதுதான் கடிதத்தின் சாரம்.

1990களில் அறிமுகப்படுத்தப்பட்ட தனியார்மய- தாராளமய- உலகமய கொள்கைகளுக்குப் பிறகு  “விருப்பம் போல வேலையை விட்டு நீக்கும் உரிமை இந்தியாவில் இல்லாததால்தான் தொழில் வளர்ச்சி முடங்கிப் போயிருக்கிறது” என்று புலம்பிய முதலாளிகள் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்களை மாற்றவும் உடைக்கவும் முயற்சித்தனர். அரசு அமைப்புகளுடன் கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டு சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

“எங்கே ஒற்றுமையாக செயல்பட ஆரம்பித்து விடுவார்களோ” என தொழிலாளர்கள் கண்காணித்து அப்படி சிறு அறிகுறி எந்த தொழிலாளியிடமாவது தெரிந்தாலும் வேலையை விட்டே அந்த தொழிலாளியை நீக்கிவிடுகிறது. இதற்கு நல்ல உதாரணம் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள். பல நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதே வேலையை செய்யும் ஒப்பந்த தொழிலாளருக்கு நிரந்தர தொழிலாளரை விட பல மடங்கு குறைந்த கூலி, எந்த நேரத்திலும் வேலையிலிருந்து நீக்க நேரிடலாம் என்ற நிரந்தரமின்மை, வேலைக்கும் வாழ்க்கைக்கும் தேவையான அடிப்படை தேவைகள் கூட கிடைக்காத நிலைமை என்று அவர்கள் கொடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

பயிற்சி ஊழியர்கள் (trainees) என்ற பெயரிலும், பணி பழகுநர் (apprentice) என்ற பெயரிலும் நூற்றுக் கணக்கான தற்காலிக தொழிலாளர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் சட்ட விரோதமாக உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

லட்சக்கணக்கான படித்த இளைஞர்களும், திறமையான தொழிலாளர்களும் இத்தகைய அதி சுரண்டல் சூழலில் வேலை செய்கிறார்கள். “வெளி நாட்டு கம்பெனி, விவசாய கூலியை விட அதிக சம்பளம், வீட்டுக்கு அருகிலேயே பேருந்து வந்து ஏற்றிக் கொண்டு போய் விடுகிறது” என்ற கவர்ச்சிகளில் ஏராளமான இளைஞர்கள் இந்த வேலைகளில் சேர்ந்தார்கள்.

குறைந்த கூலி, பணி நிரந்தரமின்மை என்ற வகையில் மட்டுமின்றி கொடுமையான பணிச் சூழலும் தொழிலாளர்களை சுரண்டுகிறது. உற்பத்தி இலக்குகளை எட்டுவதற்காக தொழிலாளர்களை இயந்திரங்கள் போல வேலை வாங்குவதற்கு மேற்பார்வையாளர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். உற்பத்தி கன்வேயர் வேகத்தை அதிகரிப்பது, பணியின் வேகம் குறையாமல் இருக்க பாதுகாப்பு கருவிகளை செயலிழக்கச் செய்தல், தொழிலாளர்களை ஓய்வெடுக்க அனுமதிக்காது இடைவிடாமல் வேலை வாங்குவது என்று கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன நிர்வாகங்கள்.

உதாரணமாக, ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் அம்பிகா என்ற தொழிலாளி மெஷினில் சிக்கி போராடிக் கொண்டிருந்த நிலையிலும் உற்பத்தியை நிறுத்தி மெஷினை பிரித்து அவரை மீட்பதை மேலாளர் தடை செய்ததும், அதே பாக்ஸ்கான் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதை நிர்வாகமும் ஆளும் வர்க்கமும் சேர்ந்து மூடி மறைத்ததும் நினைவிருக்கலாம்.

இது போன்ற கொடூர சூழல்களின் விளைவாக வெடித்த போராட்டங்கள்தான் சென்ற மாதம் நடந்த மானேசர் தொழிற்சாலை போராட்டமும், ஜனவரி மாதம் புதுச்சேரி பிளெக்ஸ் நிறுவனத்தில் நடந்த தொழிலாளர் போராட்டமும், 2009-ல் கோயம்புத்தூரில் பிரைகால் நிறுவனத்தில் நடந்த போராட்டமும்.

ndlf-toi

மறுபுறம் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அவர்களை திரட்டி போராட வேண்டிய தொழிற்சங்கங்கள் செயலற்று போயிருந்தன. போலி கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிஐடியு, ஏஐசிடியு, காங்கிரசின் ஐஎன்டியூசி, பிஜேபியின் பாரதீய மஸ்தூர் சங், அதிமுகவின் சங்கம், திமுகவின் சங்கம், பாமகவின் சங்கம் போன்றவை நிர்வாகத்துடன் ஒத்துழைத்து சில சமரசங்களை செய்து கொள்வதை தாண்டி தொழிலாளர்களுக்காக போராடுவதில்லை. பல யூனியன் தலைவர்கள் ஊழல் முதலைகளாக மாறி தொழிலாளர்களுக்கு துரோகம் செய்து  லட்சக் கணக்கில் சம்பாதித்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

முதலாளிகளுக்கும் அத்தகைய யூனியன்கள்தான் தேவைப்படுகின்றன. தொழிலாளர்களை சுரண்டிக் கொழுக்கும் பணத்தில் ஒரு சிறு பகுதியை செலவழித்து யூனியன் தலைமையை விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். தமது லாப வேட்டையை தடையின்றி நடத்தி வருகிறார்கள்.

பல பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர்கள் சங்கம் கட்டும் அடிப்படை உரிமையே மறுக்கப்படுகிறது. ஹூயுண்டாய் நிறுவனம் யூனியன்களை அனுமதிக்க மறுத்து, ஒருங்கிணைப்பு கமிட்டி என்ற பெயரில் நிர்வாக தரப்பும் தொழிலாளர்களும் உறுப்பினர்களாக கொண்ட குழுவை அமைத்திருக்கிறது.

பல தொழிற்சாலைகளில் நிர்வாகத்தின் கைப்பாவையாக செயல்படும் யூனியன்கள் ஏற்படுத்தப்பட்டு தொழிலாளர்களை வஞ்சிக்கின்றன. ஒரே நிறுவனத்தினுள் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சி யூனியன்கள், சாதி யூனியன்கள், என்று நிறுவனமே பணம் கொடுத்து வளர்த்துவிடுகிறது. முதலாளிகள் புத்திசாலித்தனமாக தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருக்காதபடி பார்த்துக் கொள்கிறார்கள்.

இத்தகைய சூழலில் 90கள் முதலே தமிழகத்தில் செயல்படத் துவங்கியிருந்த புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி 2000ம் ஆண்டுகளில் வீச்சாக வளரத் துவங்கியிருந்தது. உடனடி பொருளாதார பிரச்சனைகளுக்காக மட்டும் போராடாமல் அரசியல் அதிகாரம் உழைக்கும் மக்களுக்கு வேண்டுமென்ற புரட்சிகர அரசியலுக்காகவும் தொழிலாளர்களை திரட்டுகிறது. தொழிலாளிகளின் விடுதலை என்பது ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் விடுதலையோடு இணைந்தது என்ற கல்வியை தொழிலாளிகளிடம் வேகமாக கற்பித்து வந்தது. ஏற்கனவே இருந்த போலி கம்யூனிஸ்டு உள்ளிட்ட சமரச யூனியன்களை அம்பலப்படுத்துவது, தொழிலாளர்களை வர்க்கமாக ஒன்றிணைப்பது, அவர்களுக்கு அரசியல் அறிவு அளிப்பது என திட்டமிட்டு தொழிலாளர் மத்தியில் வேலை செய்கிறது.

அத்தகைய பிரச்சாரத்தை கேட்கும் பல தொழிலாளர்கள் முதலில்  ‘நமக்கு ஏன் வம்பு’ என்று ஒதுங்கிப் போகவே விரும்புவார்கள். ஆனால் ‘ஓட்டுக் கட்சி தொழிற்சங்கங்கள் செய்து கொள்ளும் சமரசங்களும் சலுகைகளும் தமது வாழ்க்கையின் சரிவை எந்த வகையிலும் தடுக்கப் போவதில்லை என்பதையும் தம்மை கிள்ளுக் கீரையாக நடத்தும் முதலாளிகளின் இயல்புக்கு அடிப்படை வர்க்க முரண்பாடுதான்’ என்பதையும் தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்த தொழிலாளர்கள் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியில் இணைய ஆரம்பித்தார்கள்.

அதைப் பார்த்து போலி கம்யுனிஸ்டுகள், மற்ற கட்சிக் காரர்கள், சாதி வெறியர்கள், முதலாளிகள் பயப்படத் தொடங்கினார்கள். ‘யூனியன் தேர்தலில் எங்களுக்கு ஓட்டு போடவில்லையென்றாலும் பரவாயில்லை, புஜதொமுவிற்கு ஓட்டு போடாதீர்கள்’ என்று பிரச்சாரம் செய்வது, புஜதொமுவில் சேரும் தொழிலாளர்களை மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

இந்த தடைகளுக்கு மத்தியில் புஜதொமு வளர்ந்து தொழிலாளர் நலன்களுக்காக போராட்டங்களை முன்னெடுத்தது.   ஓசூர், ஸ்ரீபெரும்புதூர், கோவை, வேலூர், கும்முடிபூண்டி, செய்யாறு, புதுச்சேரி என தொழிலாளர்கள் மத்தியில் நன்மதிப்பும், சமரசமற்ற போராட்ட குணத்துக்கான மரியாதையும் பெறத் தொடங்கியது.

உதாரணமாக, ஜேப்பியாரின் நிர்வாகத்தில் இருக்கும் புனித ஜோசப் கல்லூரி ஊழியர்கள் புஜதொமு சங்கம் ஏற்படுத்தி நிர்வாகத்தின் அடக்குமுறையையும் எதிர் கொண்டு சளைக்காமல் போராடினார்கள். 2010-ம் ஆண்டு சங்கத் தலைவரையும் புதிய கலாச்சாரம் செய்தியாளரிடம் பேசிய ஓட்டுனர்களையும் பணி நீக்கம் செய்தது நிர்வாகம். “சங்கத் தலைவர் வெற்றிவேல் செழியனை பணி நீக்கம் செய்தது செல்லாது” என்று இப்போது தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

“ஆண்டுக்காண்டு விற்பனை அதிகமாக வேண்டும், உற்பத்தி அதிகமாக வேண்டும், லாபம் அதிகமாக வேண்டும். இதற்கு இடையூறாக எதுவும் வரக்கூடாது” என்று வேலை செய்யும் தொழிலாளர்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிப்பதை தட்டிக் கேட்க யாரும் இல்லாத நிலையில் தமது லாபத்தை அதிகரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார்கள் இந்திய முதலாளிகள்.

“ஒரு நிறுவனம் செய்யும் மதிப்பு கூட்டலில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலியின் பங்கு கடந்த 30 ஆண்டுகளில் 30.3 சதவீதத்திலிருந்து 11.6 சதவீதமாக குறைந்திருக்க அதே காலகட்டத்தில் லாபத்தின் பங்கு 23.4 சதவீதத்திலிருந்து 56.2 சதவீதமாக உயர்ந்திருக்கிறது’ என்கிறது இந்து நாளிதழில் வெளியான ஒரு ஆய்வு . பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது 30 ஆண்டுகளில் தொழிலாளர்களுக்கான கூலி சுமார் ரூ 8,000லிருந்து ரூ 10,000 ஆக மட்டும் உயர்ந்திருக்கிறது.

இப்படி தட்டிக் கேட்க ஆளில்லாமல் தொழிலாளர்களை பூச்சிகளாக மதித்து, எந்திரங்களின் உதிரி பாகங்களைப் போல தேய்ந்ததும் தூக்கி எறிந்து கொண்டிருந்த முதலாளிகள் தமது அராஜக நடைமுறைகளை தட்டிக் கேட்க ஒரு அமைப்பு ஏற்பட்டு, தொழிலாளர்கள் அதன் பின் ஒன்று திரளும் போது கண்ணைக் கசக்குகிறார்கள்.

nokia-cartoon

தென்னிந்திய முதலாளிகள் சங்கம் என்பது 1918-ம் ஆண்டு சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட மெட்ராஸ் தொழிலாளர் சங்கத்துக்கு எதிர் வினையாக முதலாளிகளால் 1920-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. காலனிய ஆட்சியிலும் சரி, 1947க்குப் பிறகான அரைக்காலனிய ஆட்சியிலும் சரி மாநில மத்திய அரசுகளிடம் லாபி செய்வது, தமக்கு சாதகமான கொள்கைகளையும் சட்டங்களையும் ஏற்படுத்திக் கொள்வது, தொழிலாளர்களை ஒடுக்குவதில் ஒருங்கிணைந்து செயல்படுவது என்று 85 ஆண்டுகளாக அரசியல் நடத்தி வருகிறது இந்த சங்கம்.

தென்னிந்திய முதலாளிகள் கூட்டமைப்பும், CII எனப்படும் இந்திய முதலாளிகளின் கூட்டமைப்பும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் நடவடிக்கைகளைப் பற்றி பல அறைக் கூட்டங்களில் விவாதித்தார்கள் என்று எகனாமிக் டைம்ஸ் செய்தி சொல்கிறது. இப்போது, குஜராத்தின் பாசிஸ்ட் மோடியை போல தமிழ்நாட்டில் நல்லாட்சியை நிறுவ வந்திருக்கும் பாசிஸ்ட் ஜெயலலிதாவை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியையும் அதன் தோழமை அமைப்புகளையும் ஒடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறார்கள்.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தொழிற்சங்க சட்டத்தின் கீழ் முறைப்படி பதிவு செய்யப்பட்ட யூனியன் என்பது அவர்களுக்குத் தெரியும். அதை ரத்து செய்து தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி ஒழிக்க விரும்புகிறது தென்னிந்திய முதலாளிகள் சபை. அதன் பொருட்டே ஜெயலலிதாவிடம் மனு கொடுத்து அடக்குமுறையை ஏவுமாறு கோருகிறார்கள்.

“சிபிஎம், சிபிஐ போன்ற போலி கம்யுனிஸ்டுகள் கூடத்தான் சங்கம் வைத்திருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அந்த சங்கத்து தொழிலாளர்கள் மத்தியில் புரட்சி, போராட்டம் என்று பேசுகிறார்களா? மார்க்ஸியம் பேசுகிறார்களா? ஆனால் இந்த புஜதொமு எல்லையை மீறுகிறது. புரட்சி என்கிறது, தொழிலாளர்களை அரசியல்படுத்துகிறது. சமரசமில்லாமல் போராடுகிறது. புஜதொமு தொழிலாளி மார்க்ஸியம் முதல் உலக அரசியல் வரை, தனியார் மயம் முதல் மறுகாலனியாக்கம் வரை என சகலமும் பேசுகிறார். அதனாலேயே புஜதொமு தடை செய்யப் பட வேண்டும்” என்று முதலாளிகள் தொலை நோக்காக யோசிக்கிறார்கள் போலும்.

இழப்பதற்கு என்று எதுவும் இல்லாத தொழிலாளர் வர்க்கம்  போராடுவது, தவறுகளில் இருந்து கற்று முன்னேறுவது, ஒற்றுமையாக செயல்படுவது மூலம் தனது எதிர்காலத்தை படைக்கும். அந்த அடிப்படையில் செயல்படும் புஜதொமு தோழர்கள் முதலாளிகளால் வெறுக்கப்படுவது எதிர்பார்த்ததுதான்.

பாசிஸ்டுகளும், பணத்திமிர் பிடித்த முதலாளிகளும் தம்மை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்ற இறுமாப்புடன் செயல்படுவது வாடிக்கைதான். ஆனால் அவர்களை எளிய தொழிலாளி வர்க்கம் பிடரியில் இரண்டு தட்டுத் தட்டி விழ வைப்பது வரலாறு. அந்த வரலாற்றின் இன்னொரு பக்கத்தை படைத்துக் கொண்டிருக்கிறது புஜதொமு. தென்னிந்திய முதலாளிகள் மட்டுமல்ல, இந்திய, பன்னாட்டு முதலாளிகள் அணிவகுத்து வந்தாலும் நக்சல்பாரி அரசியலால் போர்க்குணத்தோடு வழிநடத்தப்படும் இந்த தொழிற்சங்கத்தையும், தொழிலாளர்களையும் யாரும் வீழ்த்த முடியாது. ஒரு வேளை பாசிச ஜெயலலிதா அந்த புகார் மனுவை நெஞ்சிலேந்தி உடன் நடவடிக்கை எடுத்து புஜதொமுவை தடை செய்தார் என்றால் அது தமிழக வரலாற்றில் தொழிலாளர்களின் புதிய வரலாற்றை பொன்னெழுத்துக்களால் எழுதும்.

இன்று ஆங்கில ஊடகங்களின் தயவினால் இந்த் பூச்சாண்டி அரசியலை தென்னிந்திய முதலாளிகள் சபை ஆரம்பத்திருக்கிறது. ஆனால் பூச்சாண்டியை மட்டுமல்ல பாசிசத்தையும் வீழ்த்துவார்கள் இழப்பதற்கு ஏதுமற்ற எங்கள் தொழிலாளகள்!

__________________________________________________

– செழியன்.

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________