கொல்கத்தா என்னை கைவிட்டு விட்டது !

5

“கொல்கத்தா என்னை கை விட்டது, இப்போது கொல்கத்தாவின் நிலையை எண்ணி நான் வெட்கப்படுகிறேன்.” என்கிறார் பாலியல் தாக்குதலுக்குள்ளான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.

மும்பையில் வசிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், ஹவுரா நிலையத்துக்கு அருகில் “வேடிக்கையை ரசிக்க” கூடியிருந்த பெரும் கும்பலுக்கு மத்தியில் தன் மீது பாலியல் தாக்குதல் நடத்தியவர்களுடன் போராடிய அந்த நடுங்க வைக்கும் இரவைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் விவரித்தார். தாங்கள் எந்த தவறும் செய்யாத நிலையில் அவரும் அவரது நண்பரும் தமது அடையாளங்களை மறைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருந்தார்கள். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலின்படி அவர்களது பெயர்களை வெளியிடவில்லை.

பாலியல் தாக்குதல்

“நான் சில ஆண்டுகளாகவே மும்பையில் வசித்து வந்தாலும் கொல்கத்தா என் மனதில் எப்போதுமே ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருக்கிறது. “எங்க நகரத்தில் மக்கள் அவ்வளவு நட்பானவங்க” என்று எனது நண்பர்களிடம் பெருமை பேசிக் கொண்டிருப்பேன். ஆனால், திங்கள் கிழமை இரவு நடந்த சம்பவம் என்னை கொல்கத்தாவின் நிலையை எண்ணி வெட்கப்பட வைக்கிறது. கொல்கத்தா என்னை கை விட்டு விட்டது.

ஹவுரா ரயில் நிலையத்துக்கு ஓரிரு தெருக்கள் தாண்டிய பகுதியில் இரண்டு பெண்கள் ரவுடிகள் கும்பல் ஒன்றால் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போது கொல்கத்தாவின் நட்பான முகம் எல்லாம் எங்கே போயிருந்தது? மனிதர்களின் பெருந்திரள் எங்களை சூழ்ந்திருந்தது. ஆனால் எங்களுக்கு உதவி செய்ய ஒரு ஆண்மகன் கூட முன் வரவில்லை. எங்களை பாதுகாக்க முயற்சி செய்த 71 வயதான என் அப்பா தாக்கப்பட்டார். காலிகளை தட்டிக் கேட்ட எங்கள் நண்பர் சுப்ரதா கோஷை அவர்கள் கொடூரமாக அடித்து துவைத்தனர். கொல்கத்தா நகரம் எவ்வளவு இருதயமற்றதாக மாறி விட்டது என்பதை நினைத்து என் மனம் நடுங்குகிறது.

இது வரை மும்பையில் வசித்து வந்த என் அப்பா கொல்கத்தாவுக்கு திரும்பி விட விரும்பினார். அவர் இங்கு குடியேற உதவுவதற்காக நானும் அவருடன் வந்தேன். திங்கள் கிழமை காலை நாங்கள் இருவரும் ஹவுரா ரயில் நிலையத்தை வந்தடைந்தோம். சில பொருட்களை வாங்க வேண்டியிருந்ததால், நாங்கள் தெற்கு கொல்கத்தாவில் இருக்கும் எங்கள் வீட்டுக்கு உடனடியாக போகவில்லை. எங்கள் நண்பர்கள் ஹவுராவில் வசிப்பதால் நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் நாங்கள் அறை எடுத்து தங்கினோம்.

நாள் முழுதும் கடைத் தெருவில் அலைந்து பொருட்கள் வாங்கினோம். மாலையில் அப்பாவை சினிமாவிற்கு கூட்டிப் போவதற்காக சிட்டி சென்டர் II-வுக்குச் சென்றோம். அதன் பிறகு ஹோட்டலுக்கு அருகில் நாங்கள் வந்த போது இரவு 11.30 ஆகி விட்டிருந்தது. நாங்கள் மூன்று பேரும் காருக்கு அருகில் காத்திருக்க, சுப்ரதா சாப்பிட ஏதாவது வாங்கி வரப் போயிருந்தார்.

அந்த நேரம் இந்த ஆள் (அவன் பெயர் ரத்தன் சாஹூ என்று பின்னர் தெரிய வந்தது) அங்கு வந்தான். எங்களை கிண்டல் செய்ய ஆரம்பித்தான். அவனை தட்டிக் கேட்ட என் தோழி தாக்கப்பட்டாள். பிறகு அவன் கவனம் என் அப்பாவின் மீது திரும்பியது. நான் போட்டிருந்த உயர் குதிகால் செருப்பை எடுத்து அவனை அடித்தேன். இதற்குள் ஏழெட்டு பேர் சேர்ந்து விட்டார்கள். குடிபோதையில் இருந்த அவர்கள் பச்சையான கெட்ட வார்த்தைகளால் திட்டினார்கள். “யே தோனோ கோ ரேப் கர்கே பேக் பி தேகா தோ கிஸீ கோ பதா பீ நஹீ சலேகா” (இவங்க ரெண்டு பேரையும் ரேப் செஞ்சு தூக்கி எறிஞ்சா கூட யாருக்கும் தெரியப் போவதில்லை) என்று அவர்கள் சொல்வதை நான் கேட்டேன்.

நடப்பதைப் பார்த்து வேகமாக ஓடி வந்த சுப்ரதாவையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இன்னமும் கொல்கத்தாவை நான் நேசித்தாலும், கொல்கத்தா எவ்வளவு பாதுகாப்பான இடம் என்று எனது நண்பர்களிடம் இனிமேலும் பெருமைப் பட்டுக் கொள்ள முடியாது. கொல்கத்தாவில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதைப் பற்றி செய்திகள் வெளியாகும் போதெல்லாம், “நீங்க நெனைப்பது போல கொல்கத்தா அவ்வளவு மோசமில்லை” என்றுதான் என் நண்பர்களிடம் சொல்வேன். தன் பெண் குடிமக்களை பாதுகாக்கத் தவறி விட்டதாக தோன்றிய கொல்கத்தாவின் பிம்பத்தை நான் கவனமாக தூக்கிப் பிடித்திருக்கிறேன்.

பாலியல் தாக்குதல்மும்பையில் எனது பணி தொடர்பாக நான் தாமதமாக பல முறை பயணித்திருக்கிறேன். ஆனால், இரவில் எவ்வளவு தாமதமானாலும் எந்த பயமும் இல்லாமல் நான் நடமாடலாம். ஆனால், கொல்கத்தாவில் 11.30 மணிக்கே ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை. ஆண்கள் ஏன் பெண்களின் வாழ்க்கையை இவ்வளவு நெருக்கடியானதாக மாற்றி விடுகிறார்கள்? படிப்பறிவில்லாததும், ஒழுக்கம் இல்லாததும்தான் காரணம் என்று நினைக்கிறேன். (படித்தவர்கள் பாலியல் வன்முறை செய்வதில்லையா?வினவு)

ஆனால், இந்த மிருகங்களை நினைத்து வீட்டிலேயே முடங்கி விடுவது தீர்வாகாது. நாம் தைரியமாக திருப்பிப் போராட வேண்டும். அப்போதுதான் ஆண்கள் திருந்துவார்கள்.  கொல்கத்தா நிர்வாகம் நகரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். முதலமைச்சர் இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். ஒரு பெண் ஆன அவர், நாங்கள் தாக்கப்படும் போது பெண்கள் எப்படி அவதிப்படுவார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

நான் இன்னும் சில நாட்களில் இங்கிருந்து போய் விடுவேன். ஆனால் என் தோழியை நினைத்துதான் கவலையாக இருக்கிறது. என்னுடன் சேர்ந்து மொத்த சண்டையிலும் தைரியமாக எதிர் கொண்டாள். ஆனால், நான் போன பிறகு இதை எல்லாம் அவள் தனியாக சந்திக்க வேண்டியிருக்கும்.

கொல்கத்தா என்னை கை விட்டு விட்டது. மனம் நிறைய கசப்புடனும், வலியுடனும் நான் போவேன். இந்த நிகழ்வால் என் வாழ்க்கையை நான் விட்டுக் கொடுத்து விடப் போவதில்லை. ஆனால், இந்த கொடிய நிகழ்வைக் குறித்த முழுமையான புரிதலை அடைவதற்கு எனக்கு வெகு காலம் பிடிக்கும்.”

(சுமதி யெங்கோமுக்கு சொன்னது)

நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா

தமிழாக்கம்: அப்துல்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

5 மறுமொழிகள்

  1. பெண்கள் வெளியே செல்லும் போது ஏதாவது பொருள்(கத்தி) எடுத்து செல்வது நல்லது என்பது என் கருத்து. குற்றவாளிகளுக்கு ஏறும்பு கடிக்கும் வேதனை அளவு கூட தண்டனை தரப்படுவதில்லை. அவர்கள் அரசாங்கத்தைப் பார்த்து பயப்படுவதை விட பெண்களைப் பார்த்தாவது பயப்படட்டும்.

    அதே போல் நீங்களும் அவர்களின் பார்வையை கவராத வகையில் உங்கள் உடைகளை அமைத்துக் கொள்ளுங்கள் பெண்களே.(இதச் சொன்ன நம்மள பயித்தியக்காரன் என்பார்கள்!!)

    • Fantastic!

      Can you please give atleast one such suggestion to the new born/babies who gets molested every other day, so that we (women all over the world) can honour you with an award?

      Jeeva

  2. தீதியின் சிறப்பான ஆட்சியில் கம்யூனிஸ்டுகளைத் தவிர யாரும் இதைச் செய்திருக்க முடியாது..
    எந்தளவுக்கு என்றால், தீதி மற்றும் அமைச்சர்கள் தவறிழைத்தாலும் அதுவும் கம்யூனிஸ்டுகளின் தவறாகவே கருத்தப்படும்..

    ஜேவுக்கு கருணாநிதி போல.. தீதிக்கு கம்யூனிஸ்டு..

    வாழ்க RSS மற்றும் பீ ஜே பீயின் வருங்கால (!) கூட்டாளி தீதி.. வாழ்க இந்திய போலி ஜனநாயகம்..

  3. \\மும்பையில் எனது பணி தொடர்பாக நான் தாமதமாக பல முறை பயணித்திருக்கிறேன். ஆனால், இரவில் எவ்வளவு தாமதமானாலும் எந்த பயமும் இல்லாமல் நான் நடமாடலாம்.\\

    பட்டப்பகலில் பாம்பே-யில் பெண்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு உலக சந்தி சிரிக்கிறது…. போங்க தம்பி கட்டுரை செல்லாது….

  4. சகோ ஜீவா, வீதியில் உங்கள் எதிரில் இறுக்கமான ஆடையுடன் ஒரு பெண் நடந்து வந்தால் உங்களுக்கு அது கிளர்ச்சியை ஏற்படுத்துமா?
    ஆம்.
    எந்த ஆணுக்கும் இதில் விதி விலக்கு இல்லை. இதற்க்குக் காரணம், பார்ப்பதின் மூலமாக ஆண் கிளர்ச்சி அடைகிறான் என்ற உண்மை தான்.
    சமுதாயத்திற்கு பயந்து, இறைவனுக்கு அஞ்சி அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக பார்வையோடு மாட்டும் நிறுத்திக் கொள்கிறான்.
    ஆனால் கட்டுப்பாடு இழந்தவன், தான் எண்ணியதை வலுக்கட்டாயமாக அடைய நினைக்கிறான்.
    இவை எல்லாவற்றிற்கும் காரணமாக அமைந்தது கிளர்ச்சி! பார்வை!
    ஆடை சரியாக அமைந்து விட்டால் பார்வை சரியாக அமைந்து விடும். பார்வை சரியாக அமைந்துவிட்டால் விபரீதங்கள் இல்லை.
    இதை சொன்னவுடன் ஆண்களுக்கு வக்காலத்து வாங்குவதாகவும் பெண்களை குறை கூறுவதாகவும் சித்தரிப்பர்.
    ஆனால், இஸ்லாம் ஆண்களுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பார்வையை தாழ்த்திக்கோள்! பெண்ணுடன் தனித்திருக்காதே! அதை பாத்தால் கண் செய்யும் விபச்சாரம்! அதை கேட்டால் காது செய்யும் விபச்சாரம்! அதை நோக்கி நடந்தால் கால் செய்யும் விபச்சாரம்! அனுமதி கேட்காமல் வீட்டினுள் நுழையாதே! என்று பட்டியல் நீளுகிறது.
    ஆக, இஸ்லாம் பெண்களை மட்டும் கட்டுப்படுத்துவதாக சொல்லப்படுவது பொய்.
    குழந்தை கர்ப்பளிக்கப்படுவது ஏன்?
    பருவமடைந்த ஆண் பருவமடைந்த பெண்ணை விரும்புவது மனித இயல்பு. சிறு குழந்தையை ஒருவன் நாடுகிறான் என்றால் அது மனநோய்.
    அந்த மன நோய்க்கு முக்கிய காரணம் தொலைக் காட்சியும் பத்திரிக்கையும் இணையதளமும் இவற்றின் காட்சிகளும் தான். வேறு காரணங்களும் இருக்கலாம்.
    இத்தகைய மன நோய்க்கு ஆட்பட்டவன் கண்களுக்கு குழந்தையும் ஒன்று தான் கிழவியும் ஒன்று தான். பர்தாவுக்கும் ஜீன்சுக்கும் இவர்களை பொறுத்த வரையில் வித்தியாசம் இல்லை.
    ஆனால் அரைகுறை ஆடை உடுத்திய ஒரு பெண் தன்னை கற்ப்பழிக்குமாறு தன்னை அறியாமல் ஒரு ஆணை தூண்டுகிறாள் என்ற உண்மையை உங்களால் எப்படி மறுக்க முடியும்? (ஒரு ஆணாகிய உங்களுக்கு இன்னொரு ஆணைப் பற்றி தெரியும் தானே)
    புகையிலை பயன்படுத்தினால் கேன்சர் வரும் என்று உங்களிடம் சொன்னால் புகையிலை பயன்படுத்தவில்லை என்றால் கேன்சர் வராதா என்று எதிர் கேள்வி கேட்கிறீர்கள்.
    புகையிலை பிடிக்கவில்லை என்றாலும் கேன்சர் வரும் தான். ஆனால், கேன்சருக்கு முக்கிய காரணியாக விளங்கும் புகையிலை தவிர்த்துக் கொள்ளலாம் தானே!
    இந்த எடுத்துக் காட்டு உங்களின் முட்டாள்த்தனத்தை விளக்குகிறதா?

    //Can you please give atleast one such suggestion to the new born/babies who gets molested //
    தீர்வு மீடியாவை ஆட்சி செய்யும் ஆணாதிக்கவாதிகளின் கைகளில் தான் உள்ளது. ‘டாடி மம்மி வீட்டில் இல்ல’ பாட்டுக்கு ஜோடியாக ஆடும் குழந்தைகளை, அதை வரவேறப்பரையில் அமர்ந்து ரசிக்கும் குடும்பத்தினரை சொல்லி ஒன்றும் ஆகபோவதில்லை.
    PREVENTION IS ALWAYS BETTER THAN CURE

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க