Thursday, October 29, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி பிராய்லர் பள்ளி சிறையில் அருண்குமார் மரணம் !

பிராய்லர் பள்ளி சிறையில் அருண்குமார் மரணம் !

-

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த அருண்குமார் (17) என்கிற மாணவர் ஜூலை 5-ம் தேதி விடுதி ஜன்னலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அருண்குமாருக்கு சொந்த ஊர் கடலூர் மாவட்டம், பண்ருட்டிக்கு அருகில் உள்ள மேம்மாம்பட்டை என்கிற கிராமம். இவருடைய தந்தை ஆறுமுகம் ஒரு முந்திரி விவசாயி. அருண்குமார் முதலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்து வந்திருக்கிறார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 408 மதிப்பெண்கள் பெற்றதை அடுத்து பெற்றோர் அவரை ராசிபுரத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் சேர்த்தனர். இவ்வாண்டு பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

தற்கொலை
படம் : நன்றி தினகரன்

பள்ளியில் நடக்கும் மாதத் தேர்வுகளில் அருண்குமார் தொடர்ந்து குறைந்த மதிப்பெண்களையே பெற்று வந்திருக்கிறார். இந்த ஆண்டு நடந்த மாதத் தேர்வுகள் அனைத்திலும் குறைந்த மதிப்பெண்களே பெற்றிருக்கிறார். இதற்காக ஆசிரியர்கள் அவரை தொடர்ந்து திட்டியுள்ளனர். இதை அருண்குமார் அடிக்கடி பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார்.

இந்நிலையில், கடந்த மாதத் தேர்விலும் குறைந்த மதிப்பெண்களையே பெற்றதால் ஆசிரியர்கள் கடுமையாக திட்டியுள்ளனர். அவர்கள் ஊதியம் வாங்குவதே மாணவர்களை மிரட்டி மதிப்பெண் வாங்க வைப்பதுதான். அதனால் ஒரு கந்துவட்டிக்காரனுக்குரிய வன்மம் அவர்களிடம் எப்போதுமிருக்கும். குறைந்த மதிப்பெண் என்கிற குற்றத்திற்கு என்ன தண்டனை என்பதை அனைவருக்கும் முன்பாக அருண்குமாரே முடிவு செய்துவிட்டார். சனிக்கிழமை மாலை விடுதியில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஜன்னலில் துண்டைப் போட்டு தூக்கில் தொங்கிவிட்டார். மதிப்பெண்ணுக்கான இந்த ஓட்டத்தில் அவர் தோற்றுவிட்டார். ஆனால் அவருடன் படித்த மாணவர்கள் இப்போதும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

கடலூர் எங்கே, நாமக்கல் எங்கே? ஆறுமுகம் என்கிற முந்திரி விவசாயி தனது பிள்ளையை இரண்டு மாவட்டங்களைத் தாண்டி உள்ள ஒரு பள்ளியில் போய் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன? ஒன்று, பிராய்லர் கோழிகளை உற்பத்தி செய்யும் நாமக்கல் தான் பன்னாட்டு கம்பெனிகளுக்குத் தேவையான இயந்திரங்களை போல கேள்வி கேட்காமல் தலையாட்டி வேலை செய்யும் மாணவர்களையும் அதிகமாக உற்பத்தி செய்கிறது. தமது பிள்ளைகள் அதிக மார்க் எடுக்கும் இயந்திரங்களாக இருப்பதை தான் பெற்றோர்களும் விரும்புகின்றனர். எனவே நாமக்கல் மாவட்டம் ஏழு மாவட்டங்களைத் தாண்டி இருந்தாலும் கொண்டு போய் சேர்ப்பார்கள். இரண்டாவது, ‘பையனை வீட்டிலேயே வைத்துக்கொண்டு, உள்ளூர் பள்ளிக்கு அனுப்பினால் உள்ளூர் பசங்களோடு சேர்ந்து கெட்டுப்போய் விடுவான், பிறகு நாம் நினைப்பது போல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், டாக்டர் ஆவதற்கான மதிப்பெண்களை எடுக்கமாட்டான். எனவே கட்டுக்கோப்பான, கறாரான இது போன்ற ஏதாவது ஒரு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும்’ என்று கருதுவதால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிறைகளில் ஏதாவது ஒன்றில் தள்ளி விடுகின்றனர்.

இந்த ‘தற்கொலை’ செய்தியை பெட்டி செய்தி போல வெளியிட்டிருக்கும் அனைத்து பத்திரிகைகளும் மாணவனின் பெயர், வயது, மாவட்டம், தாலுக்கா, கிராமம், மற்றும் பெற்றோரின் பெயர் அனைத்தையும் விலாவாரியாக குறிப்பிட்டுள்ளன. ஆனால் பள்ளியின் பெயரை திட்டமிட்டு மூடி மறைத்துள்ளன. கல்விக் கொள்ளையர்களுக்கு உதவுவதுதான் நடுநிலை நாளேடுகளின் இலட்சணம் போல.

அருண்குமார் மரணத்திற்கு காரணமான அந்த பள்ளியின் பெயர் எஸ்.ஆர்.வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, SRV Boys Higher Secondary School. எஸ்.ஆர்.வி அகாடமி, SRV Academy என்கிற பெயரில் இயங்கும் இந்த நிறுவனம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலும் திருச்சி மாவட்டம் சமயபுரத்திலும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. இங்கு மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் பள்ளிகள் தனித்தனியே தான் உள்ளன. ராசிபுரம் பள்ளியில் அருண்குமார் தற்கொலை செய்துகொண்டதை போல கடந்த ஆண்டு பெண்கள் பள்ளியில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

சமச்சீர் கல்வி அரசாணை வந்த பிறகும் தனியார் பள்ளிகள் மோசடியாகவும், ஏமாற்றும் நோக்கத்துடனும் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்கிற பெயர்களை பயன்படுத்தி கொள்ளையடித்துக்கொண்டிருக்கின்றன. அந்த கட்டணம், இந்த கட்டணம், அதற்கு கட்டணம் இதற்கு கட்டணம் என்று பெற்றோர்களை கொள்ளையடிப்பதை தான் இவர்கள் முழு நேர தொழிலாகவே செய்கின்றனர். பெற்றோர்களும் எவ்வளவு அவமானப்பட்டாலும் மீண்டும் மீண்டும் அங்கே தான் போய் நிற்கின்றனர்.

இந்த பள்ளிகளில் படித்தால் அதிகமதிப்பெண் பெற்று உயர்கல்வி போட்டியில் வெல்லலாம் என்று மனப்பால் குடிக்கும் பெற்றோர்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ளட்டும். யாருக்கும் கிடைக்காத வேலைக்குரிய திறமை கூட இங்கே மதிப்பெண் கறக்கும் வித்தையாக இருப்பதோடு, வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியமும், போராட்டமும் இங்கே அழிக்கப்படுகிறதே, இதை விட என்ன இழப்பு வேண்டும்?

அருண்குமாருக்கு சொந்த ஊர் கடலூர் மாவட்டம் தான் தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு இப்போது ஆப்படித்துக்கொண்டிருக்கிறது. ‘மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும்’, ‘மனித உரிமைப் பாதுகாப்பு மையமும்’ இணைந்து கடலூர் மாவட்டத்தில் கல்விக்கொள்ளையர்களின் கொட்டத்தை எதிர்த்து போராடி வருகின்றன. அத்துடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆய்வு செய்து அதன் தரத்தை மேம்படுத்தி வருகின்றன. இந்த அமைப்புகளின் அதிரடி நடவடிக்கையால் கல்வித்தர வரிசையில் தருமபுரிக்கு முன்னால் இருந்த கடலூர் மாவட்டம் இந்த கல்வியாண்டில் 5 மாவட்டங்களுக்கு முன்னால் சென்றிருக்கிறது. தேர்ச்சி விகிதம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது.

எனவே பிள்ளைகளை மார்க் எடுக்கும் இயந்திரங்களாக்கி தற்கொலைக்குத் தள்ளும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும். தனியார் கல்விக்கொள்ளைக்கு எதிராகவும், அரசுப் பள்ளிகளில் தரமான கல்விக்காகவும் உங்கள் பிள்ளைக்காக நீங்கள் போராடாமல் வேறு யார் போராடுவார்கள்?

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. வினவு,
  அந்த பள்ளியின் பெயர் SRV என்பதை கட்டுரையின் தலைப்பிலேயே போட்டிருக்கலாம் அல்லது கட்டுரையின் தொடக்க வரிகளிலேயே போட்டிருக்கலாம்.

  நான் எனது பள்ளிக் கல்வியை ராசிபுரத்தில் தான் முடித்தேன் என்பதால் என்னுடைய அனுவம்(1997) ஒன்றை நினைவு கூறுகிறேன். அந்த சமயத்தில் அந்த SRV பள்ளியின் அமைப்பாளர்களில் ஒருவரான மனோகரன் என்பவரை நான் அறிவேன். எனது பள்ளி வகுப்பறை bench நண்பன்(சக்திவேல்) நன்றாக படிக்க கூடியவன் , ராசிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பில் 420 க்கு மேல் மதிப்பெண் பெற்றதால் அவனது அப்பா (ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் மேலாளர்),அவனை SRV பள்ளியில் சேர்த்தார். அவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் சிபாரிசு மூலமாக தான் சேர்க்க முடிந்தது. அரசு பள்ளியில் நன்றாக படிக்க கூடியவனாகவும், சுதந்திரமாகவும் இருந்ததால்(நல்ல ஆளுமைத் திறனும் அவனுக்கிருந்தது) எனது பெஞ்ச் லீடராக அவன் தான் இருந்தான். ஆனால் SRV பள்ளியில் சேர்ந்த 6 மாதங்களில் அவனது படிக்கும் திறன் குறைந்தது. யாரிடமும் பேசுவதற்கு பயந்து கொண்டிருந்தான். அவனது ஆளுமை சிறிது சிறிதாக உடைந்து சிதறியது. பிறகு நன்றாக படிக்கவில்லை என நிர்வாகத்தில் இருந்து ஏகப்பட்ட குடைச்சல். அதன் பிறகு பள்ளி நிர்வாகத்தினால் வெளியேற்றப்பட்டு , மனநிலை பாதிக்கப்பட்டு சென்னை கீழ்பாக்கத்தில் தான் சேர்த்தார்கள். 2 மாதத்திற்கு பிறகு வீட்டிற்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு சரியாக 1 மாதத்தில் யாருமில்லாத நேரத்தில் தூக்கு மாட்டி கொண்டான். ஒரு வார காலத்துக்கு பிறகே எனக்கு தகவல் கிடைத்தது. அவனது தம்பி மூலமாக இந்த தகவல்களை அறிந்தேன். அதே அரசுப் பள்ளியில் அவன் படித்திருந்தால், கண்டிப்பாக நல்ல மதிப்பெண் பெற்று இருப்பான். அநியாயமாக அந்த பள்ளி நிர்வாகம் தான் அவனைக் கொலை செய்தது. அவனது தந்தை என்ன தான் வங்கியில் மேலாளராக இருந்தாலும் இதன் பின்புலத்தை அறியவில்லை. அவன் சாவுக்கு காரணம் அவன் தான் என்று எண்ணி இருந்து விட்டனர். இப்போது நினைத்தாலும் எனக்கு கண் கலங்குகிறது..

  வெறும் லாப வெறியை மட்டும் நோக்கமாக கொண்ட இந்த தனியுடைமை சமுதாய அமைப்பில் இதன் வீரியம் இன்னும் அதிகரித்து கொண்டே இருக்கிறது என்பதற்கு அருண்குமார் இன்னுமொரு சான்று.

  நன்றி.

 2. செய்திகளை கேட்டாலே பதறுகிறது. இத்தனை எத்தனை எத்தனை குழந்தைகளை இந்த பிராய்லர் பள்ளிகளில் நாம் பலி கொடுக்கப் போகிறோம்?

  போராட்டங்களை இன்னும் விரைவாக முன்னெடுக்கவேண்டும் என்பது மட்டும் மனதில்படுகிறது.

 3. என் ஊரில் இதே போல் ஊரை விட்டு இன்னொரு ஊரில் படிக்கவைத்தார்கள். கடைசியில் அந்த +2 பையன் இரயில் தண்டவாளத்தில் தலையை கொடுத்துவிட்டான்.

  இப்பொழுது ஊருக்கு சென்று பார்த்தால் தெருவில் பசங்களே இல்லை. எல்லோரையும் தர்மபுரியில் ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டனர். 3 மாதம் ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்வார்கள். திரும்பி செல்ல்லும் பொழுது, பெற்றோர்கள் எல்லோரும் சேர்ந்து வேன் வைத்து அனுப்பி வைக்கின்றனர் என்றால் எத்தனை பசங்கள் அப்படி ஊர் விட்டு ஊர் அனுப்பி படிக்க வைக்கின்றனர் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

  சமச்சீர் வந்ததும் தனியார் பள்ளிகளில், தாங்கள் அரசாங்கப்பள்ளிகளை விட உயர்ந்தது என்று காட்ட, இன்னும் சில பாடங்களை சேர்த்தது கற்பிக்கிறார்கள்.

 4. ஆசிரிய கூலிகளும் கங்காணி எஜமானர்களும்

  ஆசிரிய கூலிகளும் கங்காணி எஜமானர்களும்
  யார் ஆசிரியன்? கல்வியில் சான்றிதழ் வைத்திருக்கும் அனைவரும் ஆசிரியனா? அப்படியானால் தகுதி தேர்வு எதற்கு? பள்ளிக்கல்வி துறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியங்களை கலைத்து விட்டு போனால் கூட தவறில்லை. சுய நலத்தில் ஊறிப்போன அரசு ஆசிரியர்களைப் பற்றி பேசாமல் தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களைப் பற்றி சற்று சிந்திப்போம்.

  அடிமைப்பட்டாளத்திற்கு ஆசிரிய பட்டம் சூட்டிவிட்டு கல்லா கட்டிக்கொண்டிருக்கிறது தனியார் கல்வி நிறுவனங்கள். பத்துக்கு ஒன்பது ஆசிரியர்களுக்கு சுய சிந்தனையோ, கொள்கைகளோ, நேர்மைத்திறனோ இல்லை என்பது தான் மிகப்பெரிய உண்மை. பல பட்டங்கள் பெற்ற ஆசிரிய பெருமக்கள் தனக்கென எந்த தனித்துவமும் இல்லாமல் கங்காணி எஜமானர்களின் சிந்தனைகளை செயல்படுத்தும் எந்திரமாக இருக்கின்றனர். இவர்களால் தான் பள்ளிகள் பாழ்பட்டு போகின்றன. தங்களைப் போலவே மாணவர்களும் சொந்த சிந்தனையற்றவர்களாக மாற்ற கடும் போராட்டம் நடைபெறுகிறது. குருவிகள் கூட கொஞ்சம் உயரே பரந்து பார்க்கும் ஆனால் இவர்களோ கல்வியின் கழுத்தை திருகும் கள்வர்களின் கனிவுப்பார்வைக்காக தன் சிந்தனை சிறகுகளை பாரம் என்று உதிர்த்து விட்டார்கள். ஒற்றை நெல்லுக்கு சீட்டெடுக்கும் கிளிப்பிள்ளையைப்போல் அடிமைவாழ்வில் சுகம் கான துவங்கிவிட்ட சக ஆசிரிய சமுதாயத்தை வருத்ததுடனும், கோபத்துடனும் பார்கிறேன். இவற்றையெல்லாம் முன் வைக்கும் ஆசிரியனை பயத்துடன் பார்கின்றனர். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என குழந்தைகளுக்கு சொல்லித்தரும் ஆசிரியர்கள் தங்கள் தொழிலில் ஒன்றுபடுவதில்லை.

  குழந்தைகள், இளைய மக்களை தொழில் நுட்பம், மேற்கத்திய கலாசாரத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள் என வருத்தப்படுவதில் அர்த்தமில்லை. தனியார் பள்ளிகளில் 90% ஆசிரியர்கள் அடிமை சாம்ராஜ்யங்களில் கூலிகளாக பொதி சுமக்கிறார்கள் அவர்களால் உருவாக்கப்படும் மாணவ சமுதாயம் திறன் மிகுந்தவர்களாக வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் சுதந்திரமானதாகவோ, சுய சிந்தனை உள்ளதாகவோ, நேர் மதி கொண்டதாகவோ கொள்கையுள்ளதாகவோ, இரக்கமுள்ளதாகவோ இருக்க வாய்பில்லை என்ற கணத்த உண்மை கணக்கிறது. ரெ.ஐயப்பன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க