மணல் கொள்ளையனைப் பாதுகாக்க திருப்பாற்கடல், அத்திபட்டு ஊர்களை சூறையாடிய ஆர்.டி.ஓ, தாசில்தார், போலீசு
மக்களின் வாழ்வாதாரங்களையும், உரிமைகளையும் பாதுகாக்கத்தான் அரசு என்ற கதையெல்லாம் காலாவதியாகிப் போய்விட்டது என்பதற்கு வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள திருப்பாற்கடல், அத்திப்பட்டு ஆகிய ஊர்களில் வேலூர் மாவட்ட அரசு நிர்வாகம் நடத்திய அட்டூழியம், அரசு நம்மை ஆளும் தகுதியை இழந்து விட்டதை சாட்சியாக நம்முன் நிறுத்தியுள்ளது.
பாலாற்று மணல் கடந்த பல ஆண்டுகளாக மணல் மாஃபியாக்களால் சூறையாடப்பட்டு வருகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அப்படி சூறையாடப்பட்ட இடங்களில் எல்லாம் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் மணல் கொள்ளையை தடுக்க போராடியுள்ளனர். அந்த போராட்டங்களை எல்லாம் ஒடுக்கி மணல் மாஃபியாக்களுக்கு துணை நின்றது மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ, தாசில்தார், வி.ஏ.ஓ, ஊர் பஞ்சாயத்து தலைவர் ஆகியோர்தான் என்பதும் வெட்ட வெளிச்சமான உண்மை. இதன் தொடர்ச்சியாக திருப்பாற்கடல், அத்திப்பட்டு ஆகிய இரண்டு கிராமங்களில் கடந்த மூன்று வருடங்களாக அனுமதியின்றி சட்டவிரோதமாக மணற்கொள்ளை நடைபெற்று வருகின்றது.
காவேரிப்பாக்கம் பேருராட்சி தலைவராக ஜெயா கட்சியின் குலக்கொழுந்து சாராய மணி. இவரின் குலத் தொழிலே சாராயம் காய்ச்சுவது. தற்போது இதை ஜெயா செய்து வருவதால் தனது தொழிலை விட்டுக் கொடுத்துவிட்டு அதைவிட அதிக வருவாய் வரும் மணலை கொள்ளையடித்து வருகின்றார். தி.மு.க.வைச் சேர்ந்த பாஸ்கரன், மணி, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட சாராய வியாபாரி முருகன், ஜெயா கட்சியின் கவுன்சிலர் குட்டா என்ற சுந்தர் ஆகிய இந்த கிரிமினல் கும்பல்தான் மணல் கொள்ளையை கடந்த மூன்று வருடங்களாக நடத்தி வருகின்றது. இதற்கு இடையூறு இல்லாமல் பாதுகாக்கும் முக்கியமான வேலையை , வேலூர் மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ, தாசில்தார், போலீசு என்ற மொத்த அரசு நிர்வாகமும் செய்து வருகின்றனர்.
இங்கு மணல் கொள்ளையடிக்கும் டிராக்டர்களை ஓட்டுபவர்கள் அனைவரும் லைசன்ஸ் இல்லாத சிறுவர்கள். இவர்கள் எப்போதும் குடிபோதையில்தான் டிராக்டர் ஓட்டுவார்கள். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு சம்பளம் போக 1 குவாட்டரும் பிரியாணி பொட்டலம் வழங்கப்படும். மணல் அள்ளிக் கொண்டு நிலை தடுமாறி ஊருக்குள் செல்லும் இந்த டிராக்டர்களால் ஒவ்வொரு நொடியும் விபத்தை எதிர்நோக்கி அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் திருப்பாற்கடல், அத்திப்பட்டு கிராம மக்கள்.

இந்நிலையில் 09.10.2015 அன்று நள்ளிரவு 1 மணிக்கு மணல் ஏற்றிக் கொண்டு தள்ளாடி வந்த டிராக்டர் மின்கம்பத்தில் மோதி மின்கம்பத்தை சாய்த்து டிராக்டர் குப்புற கவிழ்ந்தது. இதன் மூலம் 10 கிராமங்களில் மின்சாரம் தடைபட்டது.
திருப்பாற்கடல் முழுவதும் தறி ஓட்டும் தொழில் செய்து வரும் மக்கள் மற்றும் சுற்றுப்பட்ட கிராம மக்கள் சம்பவம் நடந்த இடத்தில் கூடிவிட்டனர். உடனே அங்கு வந்த காவேரிப்பாக்கம் போலீசு ஆய்வாளர் சந்திரசேகரன் உடனே ஜே.சி.பி-ஐ வரவழைத்து விடிவதற்குள் டிராக்டரை எடுத்து, சம்பவம் நடந்ததே தெரியாமல் செய்துவிட வேண்டும் என முயற்சி செய்தார்.
மக்கள் விடவில்லை. “தாசில்தார், ஆர்.டி.ஓ வராமல் டிராக்டரை எடுக்க அனுமதிக்க முடியாது” என்றனர்.
பொழுது விடிந்தது. காலை 8 மணிக்கு ஊருக்கு வந்த அரசு பேருந்தை மக்கள் சிறை பிடித்தனர். “ஆர்.டி.ஓ, தாசில்தார் வராமல் பேருந்து போகாது” என்றனர்.
உடனே 1 மணி நேரத்தில் தாசில்தார் குணசேகரன், ஆர்.டி.ஓ முருகேசன் வந்தனர். தாசில்தார் சேர் எடுத்துப் போட்டு உட்கார்ந்தார். 5 மணி நேரத்துக்கு மேல் கால் கடுக்க காத்து நின்ற மக்கள் தாசில்தாரை சேரில் உட்கார அனுமதிக்கவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகாளக நடந்துவரும் மணற் கொள்ளையை தடுக்க பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத தாசில்தாரை மக்கள் நாக்கை பிடுங்கும் அளவு கேள்விகளை கேட்டனர்.
ஒருவர் “மனசாட்சியை தொட்டு சொல் எவ்வளவு மாமூல் வாங்குற” என்று கேட்டார். உணர்ச்சிவசப்பட்ட தாசில்தார் “நான் மட்டுமா வாங்குறேன், எல்லாரும்தான் வாங்குறாங்க” என்றார்.
ஆர்.டி.ஓ, டி.எஸ்.பி, தாசில்தார் என அதிகார தாழ்வாரங்கள் அனைத்தும் அங்கு வந்துவிட்டன. பேருந்தை விடுவிக்க கோரினர்.
“ஸ்பீடு பிரேக் உடனே போட வேண்டும், மின்சாரம் வர உடனே ஏற்பாடு செய்ய வேண்டும், இனி மணல் கொள்ள நடக்க கூடாது” என்ற கோரிக்கைகளை முன் வைத்து எழுத்துபூர்வமாக எழுதி கேட்டனர், மக்கள்.
உடனே ஆர்.டி.ஓ, “நீங்கள் போலீசில் மணல் திருடியவர்கள் மீது புகார் கொடுத்துவிட்டு வாருங்கள் நான் எழுதி தருகிறேன்” என்றார்.
அருகில் இருந்த டி.எஸ்.பி, “இங்கு எத்தனை டிராக்டர் மணல் திருடப்படுகிறது, யார் திருடுகிறார்கள் என்று எங்க போலீசுக்கு தெரியும் நாங்க அரஸ்ட் பண்றோம். சிறை பிடித்த பஸ்ஸை விடுங்கள்” என்று கூறியதை நம்பிய மக்கள் சிறை பிடித்த பேருந்தை விடுவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சென்ற ஒரு சில நிமிடங்களில் அங்கு வந்து இறங்கிய 100-க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசு ஊருக்குள் புகுந்து வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள், கழனிக்கு சென்று கொண்டிருந்தவர்கள், கடையில் நின்று கொண்டு இருந்தவர்கள் என அனைவரையும் வெறித்தனமாக அடித்து உதைத்து ஊரையே சூறையாடியது.
டி.எஸ்.பி தலைமையில் 40 பேரை கைது செய்து அடித்து இழுத்து சென்ற போலீசு, காவேரிப்பாக்கம் போலீசு ஸ்டேசனில் வைத்து போலீசு புடைசூழ கைது செய்யப்பட்ட 40 பேரையும் தனித்தனியாக அழைத்து மிரட்டி இனி போராட மாட்டேன் என்று சொன்னவர்களை வெளியே விட்டுவிட்டு போராடியது சரிதான் என்று கூறிய 20 பேரை மட்டும் தனியாக பிரித்து வைத்து கொடூரமாக அடித்துள்ளனர்.

விவேகானந்தன் என்ற போராட்ட முன்னணியாளரை தனி அறையில் அடைத்து அரக்கோணம் ஆய்வாளர் துரைப்பாண்டியன் என்பவரை வரவழைத்து, துரைப்பாண்டி, டி.எஸ்.பி மற்றும் சில போலீசார் விவேகானந்தனை தரையில் கால் நீட்டி உட்கார வைத்து தடியால் பாதத்தில் தாக்கியுள்ளனர். பாதம் மரத்து போனவுடன் பாதம் முதல் கால் முட்டி வரை தடியால் கொடூரமாக தாக்கி ரத்தம் வழிய வழிய அடித்துள்ளனர்.
டி.எஸ்.பி மதிவாணன் “மணல் அள்ளுனா உனக்கு என்னடா? இங்கேயே கொன்னு மூடிடுவேன்” என்று மிரட்டியுள்ளார்.
இரவு 8 மணிக்கு அனைவரையும் நீதிபதியிடம் ஆஜர் படுத்தியுள்ளனர். நீதிபதியிடம் அடித்து வீங்கி போன கால்களை ரத்த காயத்துடன் விவேகானந்தன் காட்டியுள்ளார்.
உடனே போலீசைப் பார்த்து, “காவேரிப்பாக்கம் போலீசு எப்போதும் இப்படிதான் நடந்து கொள்கின்றார்கள்” என்று சின்ன குழந்தை தவறு செய்த மாதிரி செல்லமாக திட்டிய நீதிபதி அனைவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
“எந்தத் தவறும் செய்யாத எங்களை போலீசு பிடித்து வந்துள்ளது” என்று கைதானவர்கள் கூறியதை காதில் வாங்காத நீதிபதி அனைவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
வாலாஜாபாத் மருத்துவமனைக்கு அழைத்து சென்று எந்தவிதமான சிகிச்சையும் அளிக்காமல் பெயரளவில் வைத்தியம் பார்த்ததாக கணக்கு காட்டி, வேலூர் மத்திய சிறையில் 20 பேரையும் அடைத்துள்ளனர்.
சிறையில் அடைப்பதற்கு முன்பு வேனில் வைத்து விவேகானந்தனை, “அடித்ததை வெளியில் சொன்னால் உன்னை ரவுடி லிஸ்டில் கொண்டு வந்து விடுவேன்” என்று டி.எஸ்.பி மதிவாணன் மிரட்டியுள்ளார்.
மணற் கொள்ளையை தடுக்க வேண்டிய ஆர்.டி.ஓ, தாசில்தார், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டி போலீசு, மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டும், மணற்கொள்ளையன் கொடுக்கும் லஞ்சப் பணத்திற்கு வேலை செய்கின்றனர். கிரிமினல்களை பாதுகாக்கும் இந்த குற்ற கும்பல்தான் நம்மை ஆட்சி செய்கிறது என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. அரசு மக்களை ஆள்வதற்கான தகுதியை இழந்து விட்டதற்கு மேலும் ஒரு உதாரணமாக இந்த சம்பவம் உள்ளது.
மக்கள் அதிகாரம், சென்னை
தொடர்பான செய்திகள்