Monday, April 6, 2020
முகப்பு தலைப்புச் செய்தி தூத்துக்குடி சதி வழக்கு : சிறை சென்ற போராளிகளின் உரை !

தூத்துக்குடி சதி வழக்கு : சிறை சென்ற போராளிகளின் உரை !

புது வெள்ளமாய் பிரவாகமெடுக்கும் மக்கள் போராட்டங்களை NSA, குண்டாஸ் எனும் அணைபோட்டு நிறுத்தமுடியாது என்பதை உணர்த்தியது இந்த அரங்கக் கூட்டம்

-

தூத்துக்குடி சதி வழக்கு: தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டாஸ், சிறை சென்ற போராளிகளுக்கு வரவேற்பு !  விடுவித்த வழக்கறிஞர்களுக்கு நன்றி ! என்ற தலைப்பின் கீழ் 26.08.2018 அன்று மாலை பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் அரங்கக் கூட்ட நிகழ்வு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சென்னை நிருபர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேசப்பாதுகாப்பு சட்டத்தில் மற்றும் குண்டாசில் கைதான தோழர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக தூத்துக்குடி படுகொலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப் பட்டது.

தூத்துக்குடி படுகொலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

அதை தொடர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தோழர். மருது அவர்கள் கூட்டத்தின் வரவேற்புரையாற்றினார். அவரது உரையில்;

“தூத்துக்குடி சதி வழக்கில் கைது செய்யப்பட்ட மக்கள், தோழர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கான வரவேற்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றுகொண்டிருக்கிறது.

தோழர் மருது

இங்கு நாம் எதை வரவேற்க வேண்டி உள்ளது..? தூத்துக்குடி போராட்டத்தில் போர்குணமாக நின்று போராடிய மக்களை வரவேற்க வேண்டி உள்ளது. உயிரே போனாலும் மக்களின் உயிரை குடிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல் ஓய்வதில்லை என்ற மக்களின் போர் குணத்தை வரவேற்க வேண்டும்.

இறுதிவரை போராடியும் துளியும் சலைக்காமல் நின்ற பெண்களின் வீரத்தை வரவேற்க வேண்டி உள்ளது. வழக்கில் கைதான தோழர்களின் குடும்பத்தை எதற்கும் சலைகாத இவர்களின் உறுதியை வரவேற்க்க வேண்டி உள்ளது. இவைதான் இங்கு வரவேற்க்க வேண்டியவை” என்று கூறி தனது வரவேற்பு உரையை கூறி முடித்தார்.

அதன் பின்னர் தலைமை உரையாற்றிய மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தனது உரையில்;

“மக்கள் அதிகாரத்தை எப்படியாவது ஒழித்து கட்டிவிட வேண்டும் என்பதில் மத்திய அரசு கங்கனம் கட்டி கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒழித்துகட்டியே தீர வேண்டும் என்பதில் தான் வேலை செய்து வருகிறது. தூத்துக்குடி போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் எல்லோருமே பெரிய பணக்காரர்களோ. பெரிய வேலையில் இருபவர்களோ அல்ல சாதாரண குடும்பத்தை சார்ந்தவர்கள் தான். குறிப்பாக பெண்கள் மிகவும் வீரமானவர்களாக இருந்தனர். துப்பாக்கி சூட்டின் போதும் துளியும் மணம் தளராமல் போராடினார்கள்.

ஒரு பெண்மணியிடம் போலீசு ஒருவர் சென்று “ஏம்மா உன் மகன் எங்க அவன் கொலை பண்ணிருக்கான் அவன் மேல கேசு” இருக்கு என்ற உடனே அந்த பெண்மணி துளியும் அஞ்சாமல் காவல் துறை என்ற அச்சம் இல்லாமல். என் பையனா கொலை பன்னினான். போங்க சார் எங்களுக்கு எல்லாம் தெரியும் யாரு கொலை பன்னினாங்கனு டி.வி ல தான் எல்லாத்தையும் பார்த்தோமே என்று துனிவாக கூறி உள்ளார். இங்கு அந்த தாயின் வீரத்தை பார்க்க முடிந்தது. இதை தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

தோழர் வெற்றிவேல் செழியன்

மக்களை பொருத்த வரையிலும் அரசின் மீதான கோபம் என்பது மிகவும் அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் தான் ஒரு பேராசிரியர் ஒருவர் நமக்கு தொடர்பு கொண்டு, “தொடர்ச்சியா செய்திகள்ள பாத்துட்டு இருக்குறேங்க… மக்களுக்காக நிக்குறிங்க போராடுறிங்க நிறைய வழக்குகள் போடுராங்க என்னால பெரிய அளவுல உதவி செய்ய முடியல அணில் மாதிரி என்னால முடிஞ்ச சிறிய உதவி” என்று கூறி ரூ.5000 நிதி அளித்தார்.

அதே போல் ஓய்வு பெற்ற  இராணுவ வீரர் ஒருவர் எனக்கு உடல் நிலை சரியில்லை அதனால உங்க கூட வந்து நிக்க முடியல என்னால் முடிந்த சிறிய உதவி என்று கூறி ரூ.10,000 நிதி அளித்தார். இது போல் உள்ள நபர்களின் ஆதரவினால் தான் வழக்கில் இருந்த தோழர்களின் குடும்பத்தை நம்மால் பராமரிக்க முடிந்தது.

வழக்கறிஞர்களும் இலவசமாக வழக்கு நடதியதும் தான் தோழர்களை விரைவில் வெளியில் கொண்டு வர காரணமாக இருந்தது.

மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். ஜனநாயக சக்திகள் நமக்காக குரல் கொடுக்கிறார்கள், இவைதான் நாம் மீண்டு வருவதற்கான காரணம் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்கிறேன். போராளிகளுக்கும்,அவர்களின் குடும்பத்தார்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.” என தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

தலைமை உரையை தொடர்ந்து ம.க.இ.க கவிஞர் தோழர் துரை.சண்முகம் அவர்களின் கவிதையை மக்கள் அதிகாரத்தின் மாநில தலைமை குழு தோழர் காளியப்பன்  வாசித்தார்.

அதை தொடர்ந்து நினைவு பரிசு வழங்கும் விதமாக சிறை சென்று வந்த தோழர்களுக்கும், பொய் வழக்குகளை தவிடுபொடியாக்கி விடுவித்த வழக்கறிஞர்களுக்கும் “தூக்குமேடை குறிப்பு” , “பகத்சிங்” புத்தகம் பேராசிரியர் கருணானந்தம் அவர்களால் வழங்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பேராசிரியர். ஐயா கருணானந்தன் உரையாற்றினார். அவரது உரையில் “போராடுவதற்க்காக வாழ்கிறோம். வாழ்வதற்க்காக போராடுகிறோம். இந்த கூட்டத்தில் பேச வாய்ப்பு அளித்தமைக்குக்கு நன்றி.

பத்திரிக்கைகளும் ஊடகங்களும் இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்கிறார்கள், அப்படி இருந்தால் நல்லது என்று தான் நாமும் நினைக்கிறோம். மன்னர் ஆட்சியில் மக்களுக்கு கடமை மட்டுமே இருக்கும் உரிமைகள் என்பது கிடையாது. உரிமை என்று கேட்டால் அது ராஜ துரோகம். ஆனால் இப்பொழுது நடப்பது மக்கள் ஆட்சி இங்கும் நமக்கு உரிமைகள் கிடையாது.

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இருந்த அடக்குமுறை சட்டங்கள் தான் இன்னும் நடைமுறையில் உள்ளது. உரிமைகள் இருந்தால் தான் நாம் மக்களாக இருப்போம். இல்லையென்றால் நாம் மாக்களாக தான் இருப்போம்.

இந்த அரசு பொறுப்பில் இருந்து விலகி முதலாளிகளின் அடியாள் படையாக மாறும் போது தான் நமக்கு எதிராக உள்ளனர்.  குண்டர்கள் ஆட்சி செய்யும் போது மற்ற அனைவருமே அவர்களுக்கு குண்டர்களாக தான் தெரிவார்கள். உரிமை என்பது கெஞ்சி பெறுவதல்ல ஜனநாயக உணர்வு தான் நம்மை காப்பாற்றும்,சிறு துளிகள் மீதும் நாம் அக்கறை காட்ட வேண்டும். காவலர்களையும் நமக்கானவர்களாக மாற்ற வேண்டும். இந்த நிலை மாறும். போராளிகளுக்கு வாழ்த்துக்கள். என தனது உரையை நிறைவு செய்தார்.

அவரைத் தொடர்ந்து சிறை சென்ற தோழர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தோழர் முகம்மது அனஸ்

தோழர் அனஸ்

“தோழர்களுக்கு வணக்கம். என் மீது NSA போட்ட காவலர்களுக்கு நன்றி. நான் பயந்து ஓடிவிடுவேன், படிப்பு கெட்டு போய்விடும் என்று நினைத்து நான் போராட்டங்களில் ஈடுபட மாட்டேன் என்று எண்ணி தான் காவல் துறையினர் என் மீது NSA போட்டனர். ஆனால் நேர் மாறாக மாறியது. எனக்கு இது புதிய உணர்வை ஏற்படுத்தி உள்ளது. என் பெயர் பின் கூட NSA என்று போட்டு தான் எழுதுகிறேன். இது எனக்கான அடையாளம் பட்டமாக கருதுகிறேன். அடுத்த போராட்டத்திற்கு தயாராக உள்ளேன்.”

தோழர் வேல்முருகன்

தோழர் வேல்முருகன்

“அனைத்து தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் வணக்கம். எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் 1 மெய் 17 பொய் தெரிந்தும் கையொப்பம் இட்டோம். ஏன் என்றால் அவை எல்லாமே படிக்கும் போதே பொய் என்று எல்லோருக்கும் தெரிந்து விடும் என்ற அடிப்படையில் தான். சொல்லுங்கள் இந்த ஜனநாயகத்தை தூக்கி நிறுத்த முடியுமா? நன்றி”.

தோழர் மகேஷ்

தோழர் மகேஷ்

“தொடர்ச்சியாக மக்கள் உரிமைக்காக போராடி வரும் தோழர்களுக்கு எங்கள் ஊர் சார்பாக புரட்சிகர வணக்கம். இந்த தூத்துக்குடி போராட்டம் என்பது முதலில் இளைஞர்களாக தொடங்கினோம். பிறகு இது ஒரு நாசகர ஆலை என்பதை உணர்ந்த வகையில் பெண்கள் குழந்தைகள், தாய்மார்கள் என குடும்பங்களாக சேர்ந்து போராடினோம்.

எங்கள் பெயரை ஒவ்வோரு முறை வாசிக்கும் போதும் தெரியும் பல வழக்குகள் போடுகின்றனர் என்று. தெரிந்து கொண்டோம். 3 நாட்களிலே குண்டர் சட்டத்தை உடைத்த பெருமை வழக்கறிஞர்களையே சாரும். நாங்கள் அதிகமாக போராடி உள்ளோம், பல உயிர்களை பலி கொடுத்து உள்ளோம். இந்த நாசகர ஸ்டெர்லைட் ஆலையால் பல பெண்களுக்கு கரு சிதைவு ஏற்பட்டு உள்ளது. இறுதிவரை போராட தயாராக உள்ளோம். இந்த ஆலையை முழுமையாக மூடும் வரை போராடுவோம்.” என்று உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.

தோழர் கெபஸ்டின்

“தோழர்களுக்கு புரட்சிகர வணக்கம். இந்த போராட்டம் என்பது பல ஆண்டுகளாக நடத்தப்பட்டது, அப்போதெல்லாம் எங்கள் போராட்டங்கள் பணம், சாதி ஆகியவற்றால் தோற்கடிக்கப்பட்டது.

ஆனால் இளைஞர்கள் நாங்கள் இப்போராட்டத்தை கையில் எடுத்தோம். ஜல்லிகட்டு போராட்டத்தைப் போல் செய்யவேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அந்த அடிப்படையில் தான் குடும்பமாக எல்லோரும் போராட்டத்தில் கலந்து கொண்டோம். நாங்கள் பேரணியாக செல்லும் போதே காவல் துறையினரால் தடுத்த நிறுத்தியிறுக்க முடியும். ஆனால் திட்டமிட்டு எங்களை உள்ளே விட்டு எந்த வித அறிவிப்பும் இல்லாமல் சுட ஆரம்பித்தனர்.

தோழர் கெபஸ்டின்

சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து விட்டனர் என்று சொல்கிறார்கள். ஆம் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்தனர். நான் என் கண்ணால் பார்த்தேன் அந்த சமூக விரோதிகளை இன்றும் என்னால் அடையாளம் காட்ட முடியும்.

அவர்கள் காக்கி சட்டை அணிந்து இருந்தார்கள், காலில் ஷூ அணிந்து இருந்தார்கள். இவர்கள் தான் அமைதியான பேரணியில் உள்ளே நுழைந்தார்கள். கலகம் செய்தார்கள்.

காலில் தான் சுடுவார்கள் என்று நினைத்தேன் ஆனால் எடுத்த உடனேயே தலையில் சுட்டனர். மார்பினில் சுட்டனர். என் அருகில் ஒருவர் ஐயோ நான் பொழைப்பேனா என்று கூறி தலையை பிடித்து கொண்டே கீழே சரிந்து விழுகிறார். எதற்காக இந்த கொலைவெறி ஆலையை எப்படியாவது திறக்க வேண்டும் என்பதுதான்.

ஏன் என்றால் இது போல பல தொழிற்சலைகள் அந்த பகுதியில் உள்ளது. அவற்றையும் நாங்கள் இது போல் போராட்டத்தை கையில் எடுத்து மூடிவிடுவோம் என்பதால் தான். கட்டாயமாக மூடும் வரை போராட்டம் ஓயாது. பல நபர்களுக்கு புற்று நோய் வாந்து உள்ளது. எத்தனை முறை வேண்டுமானாலும் சிறை செல்ல தயாராய் இருக்கிறேன். ஒன்று சேர்ந்து போராடுவோம்.” என்று கூறி மற்ற அனைத்து நபர்களின் உணர்வுகளையும் தட்டி எழுப்பினார்.

தோழர் கலீல் ரஹ்மான்

தோழர் கலீல் ரஹ்மான்

“வரலாற்றில் மீரட் சதி வழக்கு, லாகூர் சதி வழக்கு பற்றி படித்து உள்ளோம். ஆனால் இப்போழுது தூத்துக்குடி சதி வழக்கு புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நான் சொல்கிறேன்.

என்னிடம் பல நபர்கள் நண்பர்கள் சிறைக்கு சென்ற போது கேட்டனர், ஏன் நீங்கள் தான் இப்படி செய்றிங்க..? போராடுறிங்க என்றால் படிக்கிற பசங்கள எதுக்கு இதுல கொண்டுவரிங்க என்றனர்.

அவர்களிடம் கேட்டது ஒரே வார்த்தைதான் என் மகன் படித்து முடித்து வந்தால் வேலைக்கு உத்திரவாதம் இருக்கா? வேலைக்கு உங்களால் உத்திரவாதம் தர முடியுமா? யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

இருப்பது சமூகத்திற்கு சரியாக இருக்காது என்ற வகையில் பதில் சொன்னேன். சிறையில் உள்ளவர்கள் எங்களுக்கு கை கொடுத்து வரவேற்றனர். இது போன்ற போராட்டங்கள் இருந்தால் எங்களுக்கும் சொல்லவும் என்றனர்.

அந்த வகையில் இந்த NSA எங்களுக்கு கிடைத்த டிகிரி ஆகும். இது போல இன்னும் பல டிகிரிகளை வாங்க தயாராக உள்ளேன்.” என்று போராட்டமே ஒரு மகிழ்ச்சி என்று அனைவரும் உணரும் வகையில் பேசினார்.

நவனீதா- தோழர் கோட்டையன் மகள்

நவனீதா- தோழர் கோட்டையன் மகள்

“நான் 12ம் வகுப்பு படித்து வருகிறேன். என் அப்பா போல் போராட வேண்டும் என்பது தான் எனக்கு விருப்பமாக உள்ளது. என்னை கைது செய்யவில்லை என்பது கஷ்டமாகவும் உள்ளது. நான் ஏன் 12ம் வகுப்பு படிக்கிறேன் என்று கோபமாக வருகிறது. நான் போகும் இடங்களில் எல்லாம் என்னை திட்டுகிறார்கள் படிக்கிற பிள்ளைக்கு இதெல்லாம் தேவையா என்று. திட்டிற்க்கு பயந்தும் காவல் துறைக்கு பயந்து என் அம்மா என்னை பெரியம்மா வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்தார்.

நாம ஏன்..? பயப்பட வேண்டும் நாம தப்பு எதும் பன்னலயே, போராடினால் தப்பா என்று கேட்டாலே அதிகம் பேசுகிறென் என்கின்றனர். ஏன் பெண்கள் என்றால் போராடக் கூடாதா? நாங்களும் போராடுவோம்.” என்று இளைமைக்கான துடிப்புடன் உரையாற்றினார்.

வழக்கறிஞர் அரிராகவன்

வழக்கறிஞர் அரிராகவன்

“எங்கள் மீது போடப்பட்டு உள்ள இந்த NSA எங்களுக்கு கிடைத்த லாட்டரி மாதிரி தான் நினைக்கிறேன். ஏன் என்றால் அந்த இடத்தில் யார் இருந்தாலும் இதுதான் நிலை. பல வழக்கறிஞர்கள் நம்முடன் இணைந்து செயல் பட்டனர். நிதி வாங்கும் வழக்கறிஞர்கள் நமக்காக இலவசமாக வாதாடினார்கள்.

நம்முடைய நோக்கம் என்பது ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற ஒரு நோக்கம் மட்டும் தான். நான் சிறைக்கு சென்ற உடன் தோழர்கள் குடும்பத்தை நன்கு பராமரித்து உள்ளனர். சிறையில் மக்களிடம் நிறைய அனுபவங்களை கற்றுக் கொண்டோம். நாங்கள் அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராக உள்ளோம்.” என்று உணர்வூட்டி பேசினார்.

சிறை சென்ற தோழர்களின் அனுபவங்களைத் தொடர்ந்து வழக்கறிஞர் தோழர் மில்டன் பேசினார். அவரது உரையில்;

வழக்கறிஞர் தோழர் மில்டன்

“ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் லட்சக்கணக்கில் ஈடுபட்ட மக்களுக்கு வணக்கம். போராளிகளுக்கு வரவேற்பு கொடுப்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் வழக்கறிஞர்களுக்கு நன்றி சொல்வதில் எனக்கு உடன் பாடு இல்லை. ஏன் என்றால் இது எங்கள் கடமை.

போராட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்ல மக்கள் உயிரை பணயம் வைத்தார்கள், உடல்களை வாங்க மறுத்து உறுதியாக நின்றனர். நாம் கைது சிறை NSA போன்றவற்றை வரவேற்க வேண்டும். சாதாரண மக்கள் பெரிய பெரிய போராட்டங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

சமூக விரோதி என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எல்லாம் அதை பற்றி பேசுகிறார்கள் திருமுருகன் காந்தி மீது 27 வழக்குகள். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய நிதி திரட்டினால் தேச துரோகம். அப்படியானல் நமக்கான அரசை நாம் தான் உருவாக்க வேண்டும்.” என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு சிறப்புரையாற்றினார்.

தோழர் தியாகு

“சிறை சென்ற தோழர்கள் சிறைக்கு அஞ்சவில்லை இதுவே நமது போராட்டத்திற்க்கு கிடைத்த வெற்றி. வழக்கறிஞர்களுக்கு நன்றி சொல்வதல்ல செய் நன்றி, அதாவது இது போல் இன்னும் அதிகமான பணி இருக்கிறது என்பதை கூறுவதற்காகதான். அடக்கு முறை சட்டம் ஒரு புறம், சட்ட அடக்கு முறை ஒரு புறம்.

ஸ்டெர்லைட் மாடல் அடக்குமுறையை இப்பொழுது அரசு தொடர்ந்து செய்கிறது. சிறைகளை வெல்லவும் முடியும் மீறவும் முடியும், இதை நாம் ஜூலியஸ் பூசிக்கிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். சிறை பற்றிய அச்சம் முதலில் நீக்கப் பட வேண்டும்.. நமக்கு உலகெங்கும் தோழர்கள் உள்ளனர். எனவே நாம் தொடர்ந்து போராட வேண்டும்.” என பேசியமர்ந்தார்.

இறுதியாக மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் ராஜூ உரையாற்றினார்;

“மக்கள் அதிகாரம் என்பதே மக்கள் தலைவர்களாக வர வேண்டும் என்பதுதான். வீரம் என்றால் என்ன என்பதை நாம் தூத்துக்குடி பெண்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். காவல் துறையை நேரடியாக எதிர் கொள்கின்றனர்.

தோழர் ராஜூ

எந்த நெருக்கடியாக இருந்தாலும் நாம் அதை எதிர்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். போராட்டம் யார் நடத்தினார்கள் என்று மக்களே சொல்கிறார்கள், மக்களுக்கு அரசு என்பது நம் எதிரி என்பதை மட்டும் புரிய வைத்தால் போதும் மற்ற அனைத்தையும் மக்களே பார்த்துக் கொள்வார்கள்.

ஏனெனில் இன்று அனைத்து விவாதங்களிலும் நம்மை தவிர்க்க முடியாதவர்களாக மாற்றியது போலீசும், அரசும் தான். அதே வேலையில் நமக்கான தொண்டர்கள் அதிக அளவில் தேவை. நாம் நமது அரசியலை இன்னும் வேகமாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.”என தனது உரையை நிறைவு செய்தார்.

தகவல் :
மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு
தொடர்புக்கு : 99623 66321

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. இந்த பதிவில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் பொய்யை உண்மையாக்க பெரும் முயற்சி எடுத்துள்ளது. மக்கள் ஜனநாயகத்தை விரும்புகிறார்கள். இதனை ஒழிக்க வினவு போன்ற தற்குறி கூட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்களுக்கு என்ன தேவை என்பதை சொல்லாமல் அரசு கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தையும் செயல்படவிடாமல் தடுக்கிறார்கள். கூடங்குளத்தில் பல்வேறு கூத்துக்களை அரங்கேற்றினார்கள். ஆனால் மக்கள் வினவு மற்றும் அதன் தற்குறி கூட்டத்திற்கு முகத்தில் கறிபூசி அனுப்பிவிட்டார்கள். இலங்கையில் ஈழவிடுதலை என்றபெயரில் போராட்டத்தை அங்கு தூண்டிவிட்டார்கள். அதன்விளைவு ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இதுவரை யாரும் அங்கு செல்லவில்லை. சென்றால் இவர்களுக்கும் இதேகெதிதான் என்று உணர்ந்துள்ளார்கள். உயிர்மேல் அவ்வளவு பயம். ஆனால் சாதாரண மக்கள் எப்படிப்போனால் இவர்களுக்கு என்ன. எட்டு வழி சாலை எய்ம்ஸ் மருத்துவமனை நீடங்குலத்தில் பெட்ரோல் எடுத்தல் போன்ற வற்றிக்கும் எதிர்ப்பு!! ஸ்டெரிலைட் ஆலையில் ஏழைகள் தான் கல்ந்துகொண்டார்கலாம். கருணாநிதி இறந்தபோது அவருக்கு பெரிய அளவில் விளம்பரம் படுத்தியது வினவு. கருணாநிதியும் அவரது குடும்பமும் உலக கோடீஸ்வர குடும்பம் என்பது அனைவரும் அறிந்தது. கார்பரேட்டுகளுக்கு வக்காலத்து வாங்ககூடாது என்று எழுதி கருணாநிதி மற்றும் மாறன் கார்ப்ரேட்டு கோடீஸ்வரர்களுக்கு வெண்சாமரை வீசுவது வினவுவின் வேலை!! மனிதாபிமானம் இல்லாமல் மக்களை மூளைசலவை செய்து முட்டாளாக்க முயற்சிக்கிறார்கள். ஈழத்தைப்போல் தமிழகத்திலும் ஒரு பயங்கரவாதத்தை உருவாக்கி தமிழர்களை கொலைசெய்ய இந்த வினவு கூட்டம் முயற்சிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்!! இஸ்லாமிய மற்றும் கிருஸ்த்துவ மத வியாபாரிகளிடம் பெரிய அளவில் கூலியை பெற்றுக்கொண்டு இந்த ஆட்டம் போடுகிறார்கள். இதன் விளைவுகளை மக்கள் அறிவார்கள்.

  2. வாங்குன கூலிக்கு கக்கிட்டாயா நாட்ராயா !

    இல்லை, இன்னும் பாக்கி இருக்கா ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க