குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 02
நவம்பர் 29. யாரை விருந்தினராக அனுப்புவது?
இடைவேளையின் போது மூன்றாம் வகுப்பிலிருந்து குழந்தைகள் வந்து மூன்று அழகிய அழைப்பிதழ்களைத் தந்து சென்றனர்.
“இன்று எங்கள் வகுப்பில் இசை விழா. உங்கள் வகுப்பிலிருந்து மூவரை அழைக்கின்றோம். எல்லோரையும் அழைக்க முடியாதது குறித்து மன்னியுங்கள்! இவ்விழா வகுப்பறையில் நடைபெறுவதால் எல்லோருக்கும் இடம் போதாது.”
இது தான் என் வகுப்புக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் முதல் அழைப்பு.
“நன்றி! எங்கள் சார்பாக மூவரை அனுப்பி வைப்போம்” என்றேன் நான்.
அவர்கள் போனதும் என் வகுப்புக் குழந்தைகள் கேள்விமாரி பொழிந்தனர்.
“என்ன விழா?”
“யாரை அனுப்புவீர்கள்?”
நானாக யாரையும் அனுப்பப்போவதில்லை. தம் பிரதிநிதிகளைத் தாமே தேர்ந்தெடுக்குமாறு குழந்தைகளிடம் சொல்வேன். பாடம் துவங்கியதும் நான் அந்த அழகிய அழைப்பிதழ்களைக் காட்டி, அவற்றில் எழுதியுள்ளதைப் படித்துக் காட்டினேன். இசை விழா இன்னும் 10 நிமிடங்களில் ஆரம்பமாகும்.
இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் சில சமயம் என்ன நடைபெறுமென எனக்குத் தெரியும். “யாரை அனுப்புவது” என்று ஆசிரியர் சுற்று முற்றும் பார்க்கிறார். சில குழந்தைகள் மௌனம் சாதிக்கின்றனர், ஆனால் “தயவு செய்து என்னைத் தேர்ந்தெடுங்களேன்! நான் நல்லவன்! பாருங்கள், நான் எப்படி நேராக உட்கார்ந்து உங்களைப் பார்க்கிறேன்!” என்று கண்களால் கெஞ்சியபடி அகக் கிளர்ச்சியோடு அவரைப் பார்க்கிறார்கள். கேட்பவர்களின் மீது ஆசிரியர் இரக்கம் காட்ட மாட்டார் என்று அவர்களுக்கு அனுபவத்திலிருந்து தெரியும். மற்றவர்களால் தம் ஆசையை அடக்க முடியாது. “என்னை! என்னை தயவு செய்து தேர்ந்தெடுங்கள்! நான் ஒரு தடவை கூட விருந்தினராகச் சென்றதில்லை! நீங்கள் ஒரு முறை கூட என்னைத் தேர்ந்தெடுத்ததில்லை!” என்று அவர்கள் கெஞ்சுகிறார்கள். “கத்தாதே! யாரை அனுப்புவது என்று எனக்குத் தெரியும். யார் நன்கு படிக்கிறார்களோ, குறும்பு செய்யாமல் சொன்ன பேச்சைக் கேட்கின்றார்களோ அவர்களை அனுப்புவேன்!” என்று ஆசிரியருக்குக் கோபம் வருகிறது. அவர் யாரை அனுப்புவதென முடிவு செய்து, எப்படி நடந்து கொள்ள வேண்டுமென அவர்களுக்குக் கட்டளைகள் தருகிறார்.
வகுப்புப் பிரதிநிதிகளாக இவர் தேர்ந்தெடுத்த அந்த மூவர் யார்? சாதாரணமாக, இவர்கள் அவருக்கு ஏதாவது ஒரு வகையில் சரிப்பட்டு வருபவர், அவருக்குப் பிடித்தமானவர்கள். அவர்களுக்கு இது தெரியும், இதைக் கண்டு அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர். ஏனெனில் இந்த வயதில் குழந்தைகள் மத்தியில் ஆசிரியரின் செல்வாக்கு தான் மிக முக்கியம். அவர்களுக்கு இந்த மனவியல் தன்மை தெரியாது தான். ஆனால் தன் செல்வாக்கால் குழந்தைகளின் விருப்பத்தை, நாட்டத்தை, குழந்தைகள் புரிந்து கொள்ளும் நியாயத்தை அடக்க முடியுமென ஆசிரியருக்குத் தெரியும். ஒருவேளை அவர் தன் செல்வாக்கை குழந்தைகளுடன் தான் கலந்து பழகுவதன் தன்மையாலும் குழந்தைகளுடன் தான் கொண்டுள்ள உறவின் தன்மையாலும் பெறாமல் தான் அவர்களின் முதல் ஆசிரியர் என்பதால் பெற்றிருக்கலாம். குழந்தைகள் தாம் பள்ளிக்கு வரும் முன்னரே இவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றனர். இவரைப் பற்றிக் குடும்பத்தில் என்ன பேசினர் என்பதைப் பொறுத்து இவர்கள் வெவ்வேறு விதமாக, கண்ணை மூடிக் கொண்டு இவரது செல்வாக்கை ஏற்றுக் கொள்கின்றனர்.
ஆனால் வேறுவிதமாகத் தீர்க்க வேண்டிய முக்கியப் பிரச்சினைகளைத் தன்னிச்சையாகத் தீர்க்கும் பொருட்டு ஆசிரியர் இச்செல்வாக்கைப் பயன்படுத்தலாமா? (துர்பிரயோகம் செய்யலாமா என்று நான் சொல்லவில்லை). குழந்தைகளின் பிரதிநிதிகளை ஏன் இவர் தேர்ந்தெடுக்க வேண்டும்? “யார் நன்றாகப் படிக்கவில்லையோ, யார் நான் சொல்வதைக் கேட்கப் போவதில்லையோ, யார் நன்றாக நடந்து கொள்ளவில்லையோ, யார் எனக்குக் கோபம் மூட்டுகின்றார்களோ அவர்களை நான் விழாவிற்கு அனுப்ப மாட்டேன்” என்பதை குழந்தைகளிடம் இப்படி மறைமுகமாகச் சொல்லுவதற்காகவா? தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள், ஆனால் பலரின் விருப்பங்கள் நிறைவேறாததால் நீதி மற்றும் அநீதி பற்றிக் குழந்தைகளிடம் ஒரு விசேஷக் கருத்து உருவாகும். “ஆசிரியர் யாரை விரும்புகிறாரோ அவரைத் தேர்ந்தெடுக்கிறார். அவருக்கு என் மீது விருப்பமில்லை!” தேர்ந்தெடுக்கப்பட்டவனுக்கோ எல்லாம் நியாயமாகப்படுகிறது -”இதிலென்ன தவறு?” தேர்ந்தெடுக்கப்படாதவனுக்கோ ஆசிரியரின் செயல் அநீதியானது – ”ஏன் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை?”
படிக்க:
♦ தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் ஏன் ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ வாட்சப் : உளவு பார்க்கப்பட்ட இந்திய பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் !
இப்படிப்பட்ட போதனை முறையால் என்ன லாபம்? ஒன்றுமேயில்லை. ஒருவேளை இதனால் குழந்தைகள் மத்தியில் ஆசிரியரின் அதிகாரம் பலப்படலாம். ஆனால் ஆசிரியரின் செல்வாக்கிற்குப் பதில் வகுப்பின் கூட்டுச் செல்வாக்கு ஒரு நாள் வருமே. அப்போது என்ன செய்வது? ஆசிரியரின் அநீதி பற்றிய எண்ணங்களும் சொந்த விருப்பங்கள் புண்பட்ட உணர்வும் குழந்தைகளிடம் எஞ்சும். ஆரம்ப வகுப்பாசிரியருக்குப் பின் கல்வியின் இரண்டாவது கட்டத்தில் வரும் ஆசிரியர்கள், இந்தக் கூட்டு உணர்வை பலப்படுத்தவும், வகுப்பின் கூட்டுச் செல்வாக்கு ஒவ்வொரு குழந்தையின் மன நிலையின் வளர்ச்சி மீதும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துமாறு செய்யவும், இன்னமும் சொந்த செல்வாக்கை வென்று நிலைநிறுத்தவும் எவ்வளவு பாடுபட வேண்டும்! குழந்தைகளின் முதல் ஆசிரியர் தனது அதிகாரபூர்வமான முறைகளால் செல்வாக்கைப் பயன்படுத்தும் போது, வகுப்பின் கூட்டு முடிவைத் தன் முடிவால் மாற்றும் போது இதைப் பற்றி நினைக்கிறாரா? இந்த அதிகாரத் தொனியும் தான்தோன்றித்தனமும் ஆசிரியருக்கு உகந்தவையல்ல.
இல்லை, என் முடிவை இவர்கள் மீது திணிக்க மாட்டேன், யார் போவதென்று தீர்மானிப்பதைக் குழந்தைகளிடமே விட்டு விடுவேன்.
“குழந்தைகளே, நாம் மூவரை அனுப்ப வேண்டும்! பின்னர் அவர்கள் வந்து தாம் பார்த்ததையும் கேட்டதையும் நமக்குச் சொல்லுவார்கள். யாரால் பொறுமையாக இருக்க முடியுமோ, கேட்கும் போது புத்திசாலித்தனமான பதில்களைச் சொல்ல முடியுமோ அவர்களை அனுப்பினால் – நன்றாயிருக்கும். மூன்றாம் வகுப்பு மாணவர்களின் விழாவிற்கு யாரை அனுப்பலாம் என்று யோசியுங்கள்!”
ஒரு நிமிட இடைவெளி. இப்போது எந்த ஒரு குழந்தையின் பெயர் முன் மொழியப்பட்டாலும் அதை ஆதரித்து, நியாயப்படுத்துவது என் கடமை. நான் வாக்குவாதம் நடத்தப் போவதில்லை, யார் ஆதரிக்கின்றனர், யார் எதிர்க்கின்றனர் என்று வாக்கெடுப்பு நடத்தப் போவதில்லை. ஒரு குழந்தையின் பெயர் முன்மொழியப்பட்டு நிராகரிக்கப்பட்டால் அது அவனுக்குக் கடும் தண்டனையாக இருக்கும், அவனோ அச்சமயம் எக்குற்றமும் செய்யவில்லை. குழந்தைகளிடமிருந்து கிடைக்கப் போகும் ஆதரவின் அடிப்படையிலான என் செல்வாக்கு இங்கே செயல்படத் துவங்கும், இத்துடன் விஷயம் முடிவடையும்.
“யோசித்து விட்டீர்களா? யாரை அனுப்பலாம், சொல்லுங்கள்!”
சாஷா: “ஏக்காவை அனுப்பலாம். அவள் எப்போதும் பொறுமையானவள், புத்திசாலி, அன்பானவள். யாருக்கும் இடையூறு செய்ய மாட்டாள். அங்கும் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டாள்.”
“சாஷா, நீ சொல்வது சரி! ஏக்கா, இங்கே வா! எல்லோரும் உன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் பார்!”
விக்டர்: “கோத்தேயை அனுப்பலாம். அவனுக்கு இசை மிகவும் பிடிக்கும். அங்கு இசை விழா அல்லவா நடக்கிறது.”
“விக்டர், நீ சொல்வது சரி! இது பொறுமையாயும், கவனமாயும் இருக்க அவனுக்கு ஒரு சோதனையாக இருக்கட்டும்! கோத்தே, இங்கே வா!”
மாக்தா: “நாத்தோவை அனுப்பலாம்! ஒரு வேளை திடீரென பாடும்படியோ, கவிதை படிக்கும்படியோ சொல்லலாம். நாத்தோ நன்கு கவிதை படிப்பான்.”
“நன்றி, மாக்தா! நாத்தோவும் இதற்குத் தகுதியானவன்! சரி, இப்போது அவர்கள் அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டுமெனச் சொல்லுங்கள்!”
“எல்லோரையும் பார்த்து ‘வணக்கம்!’ சொல்ல வேண்டும்!”
“அழைப்பிற்கு நன்றி சொல்ல வேண்டும்!”
கலை நிகழ்ச்சியின் போது சத்தம் போடக் கூடாது, பேசக் கூடாது!”
“கவனமாகக் கேட்டு எல்லோருக்கும் சொல்ல வேண்டும்!”
“பாடச் சொன்னாலோ, கவிதை வாசிக்கச் சொன்னாலோ தயங்கக் கூடாது!”
“ஏதாவது பிடிக்காவிடில் பேசி, புண்படுத்தக் கூடாது!”
நான் எங்கள் வகுப்புப் பிரதிநிதிகளிடம் அழைப்பிதழ்களைத் தருகிறேன்.
“நண்பர்கள் சொன்னதையெல்லாம் கவனமாகக் கேட்டீர்களா? அவர்கள் நம்பிக்கையை மெய்ப்பிக்க வேண்டும்! கிளம்புங்கள், தாமதமாகப் போகக் கூடாது!..”
ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுப்பதில், யாரிடம் எதைச் செய்யச் சொல்வது என்பதில் (கதை அல்லது கவிதையைப் புத்தகத்திலிருந்து படிப்பது, கரும்பலகைக்குச் சென்று கணக்குப் போடுவது, பிடித்த கட்டுரையைப் பற்றி விவாதிப்பது) இந்த அணுகுமுறையை நான் வசதியான எல்லா சந்தர்ப்பங்களிலும் பின்பற்றுவேன்.
(தொடரும்)
முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!