ஹரியானா: விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட வினேஷ் போகத்

"உங்கள் மகள் உங்களுடன் இருக்கிறேன். நம் உரிமைக்காக நாம் நிற்க வேண்டும், நமக்காக வேறு யாரும் வரப்போவதில்லை" என்று வினேஷ் போகத் பேசினார்.

ஞ்சாப் – ஹரியானாவின் ஷம்பு எல்லையில் ஹரியானா விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 200 நாள்களை எட்டியுள்ளது. இந்நிலையில் பெரிய அளவிலான போராட்டத்தை இன்று (ஆகஸ்ட் 31) முதல் விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர்.

இன்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டார். “உங்கள் மகள் உங்களுடன் நிற்கிறேன்” எனப் பேசி தனது உறுதியான ஆதரவைத் தெரிவித்தார். அப்போது அவருக்கு விவசாயிகள் சார்பாக வாள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 13-ம் தேதி முதல் ஹரியானா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உறுதியை அளிக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். டெல்லி நோக்கிய விவசாயிகள் பயணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய நிலையில் ஹரியானா எல்லையான ஷம்பு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

விவசாயிகளின் மத்தியில் உரையாற்றிய வினேஷ் போகத், “விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் நான் என்னை அதிர்ஷ்டசாலியாகக் கருதுகிறேன். உங்கள் மகள் உங்களுடன் இருக்கிறேன். நம் உரிமைக்காக நாம் நிற்க வேண்டும், நமக்காக வேறு யாரும் வரப்போவதில்லை. நம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்காக கடவுளை வேண்டிக்கொள்கிறேன். நம் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளாமல் வீடு திரும்பாதீர்கள்” என்று பேசினார்.

மேலும், “விவசாயிகள் இங்கே நீண்ட நாள்களாக அவர்களது உரிமைக்காகப் போராடுகின்றனர். அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று அரசைக் கேட்டுக்கொள்கிறேன். 200 நாள்களாகியும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்பது வருத்தமளிக்கிறது. உரிமைக்காகக் குரல்கொடுக்கும் அவர்களைப் பார்க்கும்போது எங்களுக்குக் கூடுதல் வலிமை கிடைக்கிறது” என்றார்.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடுமையான போராட்டத்தை நடத்தினார் வினேஷ் போகத். அப்போது தொடங்கிய பாசிச பா.ஜ.க அரசுக்கு எதிரான அவரது போராட்டம் தற்போது வரை தொடர்கிறது.


தினேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க