- திருப்பரங்குன்றம் மலை தமிழர்களின் குறிஞ்சி நிலக் கடவுள் தொல் முருக வழிபாடு, நாட்டார் மரபின் கருப்பு வழிபாடு, சமண வழிபாடு, ஆதி தமிழ்ச் சமூகத்தின் கொற்றவை வழிபாடு, சைவ வழிபாடு, இசுலாமியர்களின் பள்ளிவாசல் வழிபாடு, இசுலாமியர் இந்துக்களின் தர்கா வழிபாடு என ஏழு வழிபாட்டு முறைகளின் கூட்டு வழிபாட்டு இடமாக ஆயிரமாண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் தமிழர்களின் பெருமிதம். மதநல்லிணக்க அடையாளம். திருப்பரங்குன்றம் மலையின் பன்மைத்துவத்தை, மதநல்லிணக்க மரபை தமிழ்நாடு அரசு பாதுகாப்பதுடன் தமிழ்நாட்டின் மதநல்லிணக்க மலையாக திருப்பரங்குன்றம் மலையை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என மதநல்லிணக்க மாநாடு கோருகிறது.
- 1923 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 25 அன்று மதுரை சார்பு நீதிமன்ற நீதிபதி இராம அய்யர் வழங்கிய தீர்ப்பின்படி, கோயில், பள்ளிவாசல் நிர்வாகங்களின் உரிமைப் பகுதிகள் வரையறுக்கப்பட்டு விட்டது. 100 ஆண்டுகளுக்கு முன்பே தீர்ப்பால் தீர்க்கப்பட்ட பிரச்சனையில் மக்களிடையே மதப் பிளவை உருவாக்கும் வகையில் திருப்பரங்குன்றம் கோயிலில் புகுந்து கலவரம் செய்த கட்சிகள், அமைப்புகள், உயர்நீதிமன்றத்தில் உறுதிமொழி கொடுத்துவிட்டு, அதனை மீறிய நபர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
- ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக திருப்பரங்குன்றம் மக்கள் மதவேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். தர்காவில் இசுலாமியர்களும் இந்துக்களும் ஆடு, கோழி வெட்டி நேர்த்திக் கடன் செய்யும் நடைமுறை நூறாண்டுகளுக்கும் மேல் உள்ளது. இதனை அரசியல் ஆக்கி, தேவையற்ற பிரச்சனையை உருவாக்கிவரும் சங்பரிவார் மதவெறி அமைப்புகளுக்கு தொடக்கம் முதலே திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதுரை வீரன், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் சூர்ய குமார், திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகர காவல் ஆணையர் லோகநாதன், சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆணையர் சண்முகம், தமிழ்நாடு அரசின் உளவுத்துறை தலைவர் செந்தில்வேலன் ஆகியோர் ஆதரவாகச் செயல்பட்டு வருவது இந்திய அரசியல்சட்டத்தின் அடிப்படை விழுமியங்களான சமத்துவம், சகோதரத்துவத்திற்கு எதிரானது. எனவே, தமிழ்நாடு அரசு சங்பரிவார் சிந்தனை கொண்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து, அரசியல் ஈட்ட மத நல்லிணக்க சிந்தனை கொண்ட அதிகாரிகளை உளவுத்துறை மற்றும் காவல்துறை தலைமைப் பொறுப்பில் நியமிக்க வேண்டும் என இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கோருகிறது.
- மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகர், புறநகர் காவல்துறை அதிகாரிகள் திருப்பரங்குன்றம் மலையை வைத்து மதப்பிளவை உருவாக்கும் சங்பரிவார் அமைப்புகளின் பிரச்சாரங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதுடன், மதநல்லிணக்க, அரசியல் சட்ட செயல்பாட்டாளர்களுக்கு எதிராகச் செயல்படுகின்றனர்.மதுரையை காவல் நகரமாக (Police state) ஆக மாற்ற முயற்சிக்கின்றனர். அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளான கூட்டம் கூடும் உரிமை, பிரச்சாரம் செய்யும் உரிமைகள் ரத்து செய்யப்படுகிறது. அதேசமயம், சங்பரிவார் அமைப்புகளுக்கு 144 தடை உத்தரவின் போதே, ஆர்ப்பாட்ட அனுமதியை காவல்துறையும், நீதித்துறையும் சேர்ந்து அளிக்கின்றன மதநல்லிணக்க செயல்பாட்டாளர்களின் பேரணி திறந்தவெளி மாநாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டு, செய்தியாளர் சந்திப்பிற்குக் கூட கடும் நெருக்கடி உருவாக்கப்படுகிறது. அரசு நிர்வாகத்தின் பாரபட்ச அணுகுமுறையால் சிறுபான்மை மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தமிழக அரசின், காவல்துறையின் இந்த அரசியல்சட்ட விரோதப் போக்கை இம்மாநாடு கண்டிக்கிறது. அனைத்து மக்களுக்கும் அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளை செயல்படுத்த உரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென இம்மாநாடு கோருகிறது.
- பல்லாயிரமாண்டு பழமையான வைகை நதியோர மதுரை மண், தமிழர்களின் தொல் நாகரீகத்தின் உன்னத அடையாளம். மத நல்லிணக்கத்தின் தொட்டில். மதுரை – திருப்பரங்குன்றம் மத நல்லிணக்க மரபை உலகெங்கும் உயர்த்திப் பிடிக்க இம்மாநாடு உறுதி ஏற்கிறது. மதுரையின் வளர்ச்சிக்கு எதிரான பிளவுவாத, நச்சு சிந்தனையை மக்கள் நிராகரிக்க வேண்டுமென இம்மாநாடு கோருகிறது. மதுரை மாநகர், புறநகர், திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் அனைத்து வார்டுகளிலும் மதநல்லிணக்க குழுக்கள் உருவாக்கி மதுரையின் அமைதி, வார்ச்சி, மத நல்லிணக்கத்தைக் காக்க மதுரை மக்கள் அணிதிரள வேண்டுமெனவும், தமிழ்நாடு முழுவதும் மதுரை மதநல்லிணக்க மாடலை முன்மாதிரியாகப் பின்பற்றி மதநல்லிணக்க குழுக்கள் உருவாக்கி தமிழ்நாட்டை மாபெரும் மதநல்லிணக்க முன்மாதிரி மாநிலமாக மாற்ற, இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.
மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு
சே.வாஞ்சி நாதன்
98653 48163
ஹென்றி டிபேன்
98940 25859
மீ.த.பாண்டியன்
90804 27640

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram