தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்கள் | தீர்மானம் 1

அதிகார வர்க்கமும் ஆதிக்க சக்திகளும் சாதிவெறி, மதவெறியில் மூழ்கித் திளைப்பதால், சட்டங்கள் இயற்றுவது மட்டும் தீர்வல்ல. தலித் மக்கள் மீதான வன்முறைகள், ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக களப் போராட்டங்கள் மட்டுமின்றி, அவை, பண்பாட்டுப் போராகவும் உழைக்கும் மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் சாதி, மதம், இனம், மொழி கடந்த பண்பாட்டை வளர்ப்பதாகவும் அமைய வேண்டும்.

மார்ச் 07, 2026 மதுரை தமுக்கம் மைதானத்தில், மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மா.ஒ.கு.) ஆகிய புரட்சிகர அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் “சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா”வில் கீழ்க்காணும் ஐம்பெரும் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இப்பெருவிழாவில் பங்கேற்ற ஜனநாயக சக்திகள், மக்கள் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்பட்டு தீர்மானங்களாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1:

பண்பாட்டு எழுச்சியும்
ஆணவப் படுகொலைத் தடுப்புச் சிறப்புச் சட்டமும்

கண்ணகி-முருகேசன், இளவரசன், கோகுல்ராஜ் முதலாக தற்போது அழகேந்திரன், கவின் என சாதி ஆணவப் படுகொலைகள் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடுகின்றன. இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து திருவள்ளூர் அருணா, விழுப்புரம் தேவ ஜெசிப்பிரியா, நெல்லை சிவமதி என அடுத்தடுத்து சாதி ஆணவப் படுகொலைகள் அரங்கேறி வருகின்றன. தற்போது, தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் நடக்காத மாவட்டங்களே இல்லை, மாதங்களே இல்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது.

இளம் பெண்கள் வயிற்றுவலியால் மரணம், தற்கொலை என வெளியாகும் பல செய்திகள், உண்மையில் ஆணவப் படுகொலைகளாகவே அரங்கேறியுள்ளன. இவற்றையும் கணக்கிட்டால் ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருவதன் பரிமாணம் மிகத் தீவிரமாக இருப்பதை உணர முடியும்.

தனியார்மய – தாராளமய – உலகமயப் பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவாக, கிராமப்புறங்களில் வாழ்விழந்த உழைக்கும் வர்க்கங்கள், நகரங்களை நோக்கி நகர்கின்றன. பழைய உற்பத்திப் பிணைப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்த வர்க்கங்களுக்குள் சாதி, மதம், இனம், மொழி கடந்த சமத்துவ உணர்வு வளர்ந்து வருகிறது. இது, உழைக்கும் மக்களின் பண்பாட்டிலும் மாற்றங்களை உருவாக்கி வருகிறது. இந்த சமத்துவப் பண்பாட்டின் ஒரு வெளிப்பாடுதான் சாதி, மதம் கடந்த காதல்கள், மணங்களாகும். இவையெல்லாம், உழைக்கும் மக்களிடையே ஒரு பண்பாட்டு எழுச்சி ஏற்பட்டுள்ளதை அடையாளப்படுத்துகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

சமூகத்தில் ஏற்பட்டுவரும் இந்த சாதி கடந்த உறவைத் தடுக்கும் வகையில்தான், சாதி ஆதிக்க வன்முறைகளும் ஆணவப் படுகொலைகளும் அதிகரித்து வருகின்றன. இத்தாக்குதல்கள், பார்ப்பனிய சாதிய – ஆணாதிக்கக் கட்டமைப்பின் தொடர்ச்சியாக அமைந்துள்ளன.

தலித் மக்களையும் பெண்களையும் ஒடுக்கப்பட வேண்டியவர்களாகவும் இழிவானவர்களாகவும் கருதும் பார்ப்பனிய மனுதர்ம சித்தாந்தத்தின் கூர்மையான வெளிப்பாடாக இந்த ஆணவப் படுகொலைகள் அமைந்துள்ளன. தொழிலாளியின் வாழ்வே முதலாளித்துவச் சுரண்டலுக்கு ஊற்றுக்கண்ணாக இருப்பதைப் போல, தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறையே பார்ப்பனிய சாதிய கட்டமைப்புக்கு அடிப்படையாக இருக்கிறது. பார்ப்பனிய சாதியாதிக்கத்தின் கீழ், தலித் மக்களின் இருப்பே போராட்டமாகும். சாதி, மதம் கடந்த தலித் மக்களின் காதலும் அவ்வாறே!

மேலும், இந்த ஆணவப் படுகொலை என்பது, பெண்கள் மீதான அடக்குமுறையின் கூர்மையான வடிவமாகவும் அமைந்துள்ளது. பெண்கள் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதைத் தடுப்பது மட்டுமின்றி, பெண்களின் சொத்துரிமை, தன்முனைப்பில் பொருளீட்டும் உரிமை, கல்வி உரிமை போன்றவற்றையும் பறிப்பதாக அமைந்துள்ளது. அதாவது, பெண்களை உடைமையாகப் பார்க்கும் பார்ப்பனிய ஆணாதிக்கத்தின் உச்சமான வெளிப்பாடாக ஆணவப் படுகொலைகள் அமைந்துள்ளன.

ஆகையால், தலித்துகள் மீதான சாதிவெறித் தாக்குதல்களும், ஆணவப் படுகொலைகளும் முற்றாகத் தடுக்கப்பட வேண்டும் என்பது உழைக்கும் மக்களின் முதன்மையான கோரிக்கையாகும்.

ஆனால், அரசுக் கட்டமைப்பே சாதிவெறியில் ஊறிப் போயுள்ளது என்பதே அவலமான எதார்த்தமாகும். இதனால், ஆதிக்கச் சாதிவெறித் தாக்குதல்கள், ஆணவப் படுகொலை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது பெரும் போராட்டமாகவே உள்ளது. பல லட்சங்களை செலவழித்தும் ஆண்டுக்கணக்கில் வழக்கு நடத்திப் போராடவும் வாய்ப்பில்லாதவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை. வேங்கைவயல் போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட தலித் மக்களே குற்றவாளியாக்கப்படும் அவலமும் அரங்கேறுகிறது. ஆனால், சாதிவெறிக் கொலைக் குற்றவாளிகளோ சுதந்திரமாக சுற்றித்திரிந்து வருகின்றனர்.

மற்றொருபுறம், “ஆண்ட பரம்பரை” என்ற வீண் பெருமையை பலவாறு பேசி சாதிவெறிச் சங்கங்கள் சாதிவெறியைத் தூண்டி வருகின்றன. இந்த ஆதிக்க சாதிவெறிச் சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் கும்பல்கள் ஊடுருவி வருகின்றன. தற்போது தலித் மக்கள் மீது சாதிவெறித் தாக்குதல்கள் அதிகரிப்பதன் பின்னணியில் இருப்பது, இந்த மக்கள் விரோத சக்திகளே.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. சங்கப் பரிவாரப் பாசிச அமைப்புகள், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் இனவெறியையும், குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் மதவெறியையும் தூண்டி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, மக்களை அடக்கி ஒடுக்குவதைப் போல, தமிழ்நாட்டில் அரசியலதிகாரத்தைக் கைப்பற்ற சாதிய வன்முறைகளைத் தூண்டி வருகின்றன. இந்த பாசிச சக்திகளின் வளர்ச்சி உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நமது போராட்டங்கள் இந்தப் பரிமாணத்தில் அமைய வேண்டும்.

புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் பல்வேறு கட்ட போரட்டங்களுக்குப் பிறகு தமிழ்நாடு அரசு, ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை வடிவமைக்க ஆணையத்தை அமைத்துள்ளது.

இச்சட்டம் வெறும் தண்டனைச் சட்டமாக மட்டுமல்லாமல், ஆணவப் படுகொலைகளின் மையக் காரணிகளை களைவதற்கான சமூக-அரசியல் நோக்குடன் அமைய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மேற்குறிப்பிட்டபடி, இன்று அதிகரித்துவரும் சாதி ஆணவப் படுகொலைகள், சாதிவெறியாட்டங்களின் பின்னணியில் ஆதிக்கச் சாதி சங்கங்களும் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவலுமே பிரதானக் காரணியாக உள்ளது. எனவே,  ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. சங்கப் பரிவார அமைப்புகள், ஆதிக்கச் சாதிவெறிச் சங்கங்களைத் தடை செய்வது என்பது இச்சட்டத்தின் முக்கியமான அம்சமாக இருக்க வேண்டும். அதேபோல், ஆணவப் படுகொலைக் குற்றவாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்; ஆணவப் படுகொலைக்கு உள்ளானவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

மேலும், சாதி, மதம் கடந்து காதலிப்பதற்கு, மணம் முடிப்பதற்கான சட்டபூர்வ உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். சாதி, மதம் கடந்து காதலிப்பதற்கும் மணம் முடிப்பதற்கும் எதிரான கருத்துகள், நடவடிக்கைகள், கலை-இலக்கியங்கள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும். அந்தவகையில், சாதி, மதம் கடந்து காதலிப்பதையும் மணம் முடிப்பதையும் எதிர்க்கும் கருத்துகள், நடவடிக்கைகள் அனைத்தும் வன்கொடுமைகளாகக்  கருதப்பட்டு, அக்குற்றங்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

மேற்கண்ட அம்சங்களை உள்ளடக்கி, ஆணவப் படுகொலை தடுப்பு சிறப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” கேட்டுக்கொள்கிறது.

மற்றொருபுறம், அதிகார வர்க்கமும் ஆதிக்க சக்திகளும் சாதிவெறி, மதவெறியில் மூழ்கித் திளைப்பதால், சட்டங்கள் இயற்றுவது மட்டும் தீர்வல்ல. தலித் மக்கள் மீதான வன்முறைகள், ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக களப் போராட்டங்கள் மட்டுமின்றி, அவை, பண்பாட்டுப் போராகவும் உழைக்கும் மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் சாதி, மதம், இனம், மொழி கடந்த பண்பாட்டை வளர்ப்பதாகவும் அமைய வேண்டும்.

அந்தவகையில், மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பாக, டிசம்பர் 28, 2025-இல் நடத்தப்பட்ட தோழர் ரவி, ராதிகா மணவிழாவானது, பண்பாட்டு எழுச்சி விழாவாக அமைந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் இந்த விழாவில் தன்முனைப்பில் கலந்து கொண்டது, பண்பாட்டு ரீதியாக மக்களைத் திரட்ட வேண்டிய அவசியத்தை உணர்த்தியது. அதன் தொடர்ச்சியாகத்தான், மிகக் குறுகிய காலத்தில், “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா”வைத் தொடங்கப்பட்டு, அதன் முதல் கருப்பொருளாக, “சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்!” என்ற முழக்கம் அமைந்துள்ளது.

அந்தவகையில், இந்தப் பண்பாட்டுப் பெருவிழாவின் கருப்பொருள், முழக்கம், முன்வைக்கப்பட்ட கருத்துகள் மக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் பெருவிழாவில் திரள்வதற்கு ஊக்குவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க