தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்கள் | தீர்மானம் 2

சாதி, மத மறுப்பு மணம்புரியும் பண்பாட்டை வளர்த்தெடுப்பதை ஓர் இயக்கமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்தவகையில், புரட்சிகர - ஜனநாயக சக்திகள் டிசம்பர் 28-ஆம் தேதியை சாதி, மத மறுப்பு மணங்களுக்கான நாளாகக் கடைப்பிடிப்பது என்று தீர்மானித்துள்ளோம்.

மார்ச் 07, 2026 மதுரை தமுக்கம் மைதானத்தில், மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மா.ஒ.கு.) ஆகிய புரட்சிகர அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் “சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா”வில் கீழ்க்காணும் ஐம்பெரும் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இப்பெருவிழாவில் பங்கேற்ற ஜனநாயக சக்திகள், மக்கள் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்பட்டு தீர்மானங்களாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 2:

சாதி, மத மறுப்புத் திருமணங்கள்,
பார்ப்பனிய நச்சுமுறிவு மருந்து!

சாதி ஒழிப்பில் புறமணமுறையின் முக்கியத்துவத்தை பெரியார், அம்பேத்கர் போன்ற சித்தாந்தத் தலைவர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர். செங்கொடி இயக்கம், நக்சல்பாரி இயக்கத் தோழர்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சாதி மறுத்து மணம் முடித்துக் கொள்வதை இயல்பான வழிமுறையாகக் கடைப்பிடித்து வருகின்றனர். சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைப்பதில் திராவிட இயக்கம் முன்னணியான பங்காற்றியுள்ளது. மற்றொருபுறம், ஒடுக்கப்படும் மக்களுக்கான தலித் அமைப்புகள் மத்தியிலும் சாதி, மத மறுப்பு மணங்கள் நடத்தப்படுகின்றன.

1990-களின் பிற்பகுதியில் ம.க.இ.க. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் அங்கமாக சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாக்களை நடத்தி வந்துள்ளன. அதன் தொடர்ச்சியாகவே, டிசம்பர் 28, 2025 அன்று தோழர்கள் ராதிகா-ரவி இணையரின் “சாதி மறுப்புப் புரட்சிகர மணவிழா” நடந்தேறியது. இம்மணவிழாவானது, மாறிவரும் இச்சமூகத்தின் மீது பிற்போக்கு சக்திகள் தொடுக்கும் சாதியத் தாக்குதல்கள், ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக ஒரு மாற்றுப் பண்பாட்டுப் போரைத் தொடுக்க வேண்டியதன் தேவையை உணர்த்தியது. அந்தவகையில், இம்மணவிழா நாளை பண்பாட்டு எழுச்சி நாளாக அடையாளப்படுத்துகிறோம்.

சாதி, மத மறுப்பு மணம்புரியும் பண்பாட்டை வளர்த்தெடுப்பதை ஓர் இயக்கமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்தவகையில், புரட்சிகர – ஜனநாயக சக்திகள் டிசம்பர் 28-ஆம் தேதியை சாதி, மத மறுப்பு மணங்களுக்கான நாளாகக் கடைப்பிடிப்பது என்று தீர்மானித்துள்ளோம்.

மேலும், சாதி, மதம் கடந்து மணம் புரிந்தவர்களுக்கும், காதல் மணம் புரிந்தவர்களுக்கும் சமூகத்தில் சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டியுள்ளது. அதற்கு அரசிடம் கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக சக்திகள் அனைவரும் தொடர்ந்து போராட வேண்டும் என“ தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” மூலமாகக் கேட்டுக்கொள்கிறோம்.

சாதி ஒழிப்பின் முக்கியமான அங்கமாக இருக்கும் சாதி, மதம் கடந்த மணவிழாக்களை மக்கள் முன்னிலையில் அரசே முன்னின்று நடத்தி சட்டபூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டும். சாதி, மத மறுப்பு மணம் புரியும் இணையர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதுடன் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதுடன் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி, மதமற்றவர் என்று பதிவு செய்ய தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். சாதி, மதமற்றோர் என சான்றிதழ் பெற்றவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

சாதி, மத மறுப்புக் காதல்கள் மற்றும் மணங்களுக்கு எதிரான கலை, இலக்கியங்கள், படைப்புகள், பழக்க வழக்கங்கள், இன்ன பிற குறியீடுகள் உள்ளிட்ட அனைத்து வகையான நடவடிக்கைகளும் வன்கொடுமைக் குற்றங்களாகக் கருதப்பட்டு அவ்வகைக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க