தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்கள் | தீர்மானம் 3

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் மிக முக்கியமான கோரிக்கையை தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா முன்னெடுக்கிறது. இனிவரும் எந்த ஆட்சியும் டாஸ்மாக் கடைகளை மூடாமல் தொடர அனுமதிக்கக் கூடாது, அதற்காக புரட்சிகர - ஜனநாயக சக்திகளும் தமிழ்நாட்டு மக்களும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பர் என இப்பெருவிழா அறிவிக்கிறது.

மார்ச் 07, 2026 மதுரை தமுக்கம் மைதானத்தில், மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மா.ஒ.கு.) ஆகிய புரட்சிகர அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் “சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா”வில் கீழ்க்காணும் ஐம்பெரும் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இப்பெருவிழாவில் பங்கேற்ற ஜனநாயக சக்திகள், மக்கள் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்பட்டு தீர்மானங்களாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 3:

பெண்விடுதலையும் போதைக் கலாச்சாரத் தடுப்பும் ஒன்றிணைந்தவை

உழைக்கும் மக்களின் வாழ்வை அழிக்கும் அம்சங்களில் போதைக் கலாச்சாரம் முக்கியமான பங்காற்றுகிறது. மது வகைகள், கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் இவற்றில் முதன்மையான பங்காற்றுகின்றன. கூலிப்புகள் (Cool lip), மெத்தபெட்டமைன் (Methamphetamine) போன்ற விதவிதமான போதைப்பொருட்கள் அதிகரித்து வருகின்றன. ”பப், கிளப்” (Pub, Club) போன்றவை போதைக் கலாச்சாரம் பல வகைகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இத்துடன், மக்கள் நல அரசு என்று கூறிக்கொண்டு, அரசே “டாஸ்மாக்” மதுக்கடைகளை நடத்துகிறது. அரசே மதுக்கடைகளை நடத்துவதால் போதைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைக்கிறது. இந்த டாஸ்மாக் கடைகளில் இலக்கு வைத்து மது விற்பனையை அதிகரிப்பது என்பது, மக்களின் வாழ்வை இலக்கு வைத்து சூறையாடுவதாகும். பள்ளிகள், வழிபாட்டு தலங்களுக்கு அருகில் டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து, மக்களின் சுதந்திரமான செயல்பாடுகளுக்கே அரசு இடையூறு செய்து வருகிறது.

இத்துடன், அதானி துறைமுகத்தின் மூலமாக நாட்டிற்குள் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் விநியோகிக்கப்படுவது, கார்ப்பரேட் முதலாளிகள் உள்ளடக்கிய மிகப்பெரிய வலைப்பின்னலுடன் இந்தப் போதைக் கலாச்சாரம் பெருகி வருவதை உணர்த்துகிறது.

சட்டபூர்வமான வகையிலும் சட்டவிரோதமான வகையிலும் அதிகார வர்க்கம், போலீசு, அரசியல்வாதிகள், கார்ப்பரேட் முதலாளிகள், கூலிப்படைகள் என பெரும் கட்டமைப்பே இந்தப் போதைக் கலாச்சாரத்தை வளர்க்கிறது.

இவ்வாறு ஊக்குவிக்கப்படும் இந்தப் போதைக் கலாச்சாரமானது, மக்களின் குறைந்தபட்ச வருமானத்தையும் பறிப்பது மட்டுமின்றி, குடும்பங்களின் வாழ்வை அழிக்கிறது; குடும்பத் தலைவிகள் மீது பெரும் சுமையை சுமத்துகிறது; பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது; எதிர்கால தலைமுறையே சுய சிந்தனையற்றவர்களாக மாறுவதற்கு வழி வகுக்கிறது; கூலிப்படைக் கலாச்சாரம் வளர்வதற்கும் இந்த போதைக் கலாச்சாரம் காரணமாக அமைகிறது. ஆகையால், போதைக் கலாச்சாரமானது அனைத்து வகைகளிலும் தடை செய்யப்பட வேண்டும்.

முக்கியமாக, போதைக் கலாச்சாரத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். 2011-2016 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்த போது, அன்றைய எதிர்க்கட்சியான தி.மு.க. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தது. அதன் பின்னர், 2021 சட்டமன்றத் தேர்தலின் போதும் தி.மு.க. அவ்வாறே வாக்குறுதியளித்தது. ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றிலிருந்து இன்று வரை டாஸ்மாக் விற்பனையை அதிகரிப்பதிலேயே முனைப்புக் காட்டி வருவது தமிழ்நாடு மக்களுக்கு இழைக்கும் மிகப் பெரும் துரோகமாகும்.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் மிக முக்கியமான கோரிக்கையை தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா முன்னெடுக்கிறது. இனிவரும் எந்த ஆட்சியும் டாஸ்மாக் கடைகளை மூடாமல் தொடர அனுமதிக்கக் கூடாது, அதற்காக புரட்சிகர – ஜனநாயக சக்திகளும் தமிழ்நாட்டு மக்களும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பர் என இப்பெருவிழா அறிவிக்கிறது.

இத்துடன், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பெண் கல்வி, பெண் சுதந்திரத்தை மறுக்கும், பெண்களை போகப் பொருளாக்கும் ஆபாச இணையதளங்கள், சமூக ஊடகப் பக்கங்கள், இலக்கியங்கள், புராண இதிகாசங்கள், திரைப்படங்கள், விளம்பரங்கள் போன்றவை பெண்கள் மீதான வன்முறைகளை அதிகரிக்கின்றன. ஆகையால், இவை அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத போலீசு அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும். அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படும் ஊழியர்கள், மக்கள் தொண்டு செய்தவர்களாகவும் பாலியல் ஒழுக்கம் மிக்கவர்களாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க