தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்கள் | தீர்மானம் 4

வரலாற்று காலத்திற்கு முன்பிருந்து இன்றுவரை இயங்கி வரும் தமிழ்நாட்டின் தொன்மையான மதுரை மண்டலத்தை தமிழ்ப் பண்பாட்டின் தலைநகராக அறிவித்து பாதுகாக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை மக்கள் இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டும் என “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” மூலமாக கேட்டுக்கொள்கிறோம்.

மார்ச் 07, 2026 மதுரை தமுக்கம் மைதானத்தில், மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மா.ஒ.கு.) ஆகிய புரட்சிகர அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் “சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா”வில் கீழ்க்காணும் ஐம்பெரும் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இப்பெருவிழாவில் பங்கேற்ற ஜனநாயக சக்திகள், மக்கள் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்பட்டு தீர்மானங்களாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 4:

தமிழ்ப் பண்பாட்டுத் தலைநகரம் மதுரை

சாதி, மதமற்ற சமத்துவப் பண்பாட்டிற்கு தமிழ் மண் மிகவும் முன்னுதாரணமிக்கதாகும். தமிழ்நாட்டில் பல மதங்கள் தோன்றியிருந்தாலும் மத நல்லிணக்கத்தின் நிலமாக இன்றளவும் இருப்பது சமத்துவ மரபின் வெளிப்பாடாகும். ஆனால், இந்த சாதி, மதமற்ற பண்பாட்டை அழிப்பதற்கு சங்கப் பரிவாரக் கும்பல்கள் தீவிரமாக முயன்று வருகின்றன. தமிழ் மக்களின் பண்பாட்டை அழித்துப் பார்ப்பனமயமாக்கி வருகின்றன. தமிழ்ப் பண்பாட்டின் மீது சங்கப் பரிவாரக் கும்பல் தொடுத்திருக்கும் பார்ப்பனிய பண்பாட்டுப் போருக்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்து போராடும் என்பதற்கு இந்தப் பெருவிழா ஒரு சான்றாக அமைந்துள்ளது.

அத்துடன், தமிழ்நாட்டின் மரபை மீட்டெடுப்பது நமது கடமையாகும். அந்தவகையில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியும் பல்வேறு வகையான சிறப்புகளைப் பெற்றுள்ளன. அந்த சிறப்புகளின் அடிப்படையில் அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

அந்தவகையில், மதுரை மண்டலத்தை தமிழ்ப் பண்பாட்டின் தலைநகரமாக அறிவித்து, பாதுகாக்கப்பட வேண்டுமென்ற முன்மொழிதலை தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா மூலமாக முன்வைக்கிறோம்.

மதுரை மண்டலத்தைத் தமிழ்ப் பண்பாட்டின் தலைநகராக அறிவிப்பதற்கு மதுரை மண்டலத்தில் கண்டறியப்பட்டுள்ள, பழங்கற்காலம் முதலாக, தற்காலம் வரையிலான தமிழ் மக்களின் வாழ்வியல் தரவுகளே இதற்கு சான்றுகளாக அமைந்துள்ளன.

மதுரை மாவட்டத்திற்கு அருகே குண்டாற்றின் ஆவியூர் எனும் இடத்தில் பழங்கற்கருவியைத் தொல்லியல் ஆய்வாளர் ராபர்ட் புருஸ்புட் என்பவர் கண்டறிந்துள்ளார். இவ்வூர் இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் வட்டத்தில் பல இடங்களில் இடைக்கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை குண்டாற்றின் களிமண் படுகையில் தெ.புதுப்பட்டி என்ற ஊருக்கு அருகிலும் சிவரக்கோட்டை என்ற ஊருக்கு அருகிலும் கிடைத்துள்ளன.

திருமங்கலம் வட்டத்தில் திருமங்கலம், தே.கல்லுப்பட்டி, சென்னம்பட்டி, கருவேலம்பட்டி, உசிலம்பட்டி வட்டத்தில் திடியன், மதுரை வட்டத்தில் கோவலன் பொட்டல் ஆகிய ஊர்களில் மலைக்குன்றின் அடிவாரங்களிலும் கடைக்கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் மதுரைக்குத் தெற்கில் புதிய கற்காலக் கருவிகளை வெள்ளாங்குளம் என்னுமிடத்தில் ராபர்ட் புருஸ்புட் கண்டறிந்துள்ளார். அண்மையில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மதுரை மாவட்டம் துவரிமான் என்னும் ஊரில் வைகைக் கரையில், புதிய கற்காலக் கருவிகள் சிலவற்றைக் (கோடரிகள்) கண்டறிந்தார்கள். கோவலன் பொட்டல் அகழாய்வில் உடைந்த ஒரு புதிய கற்காலக் கருவி வெளிப்பட்டது.

மேலூர் நரசிங்கம்பட்டி, கருங்காலக்குடி, பால்குடி, குன்னங்குடிபட்டி, வஞ்சிநகரம், வாடிபட்டி குலசேகரன்கோட்டை, உசிலம்பட்டி அல்லிகுண்டம், திருமங்கலம் செங்குளம், பேரையூர் ஆகிய பகுதிகளில் பெருங்கற்படைச் சின்னங்கள் காணப்படுகின்றன. பரவை, துவரிமான், தாதம்பட்டி, அனுப்பானடி, திருமங்கலம் ஆகிய ஊர்களில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புதிய கற்கால மற்றும் இரும்புக்கால பண்பாட்டை விளக்கும் தொன்மையான குகை ஓவியங்கள் என்றழைக்கப்படும் பாறை ஓவியங்கள் மதுரை மாவட்டத்தில் பல்வேறு மலைகளில் கண்டறியப்பட்டுள்ளன. புலிபட்டி, அழகர்மலை கிடாரிபட்டி, கீழக்குயில்குடி, கொங்கர் புளியங்குளம், முத்துப்பட்டி, திருவாதவூர், கல்லூத்து மேட்டுப்பட்டி, நடுமுதலைக்குளம், கருங்காலக்குடி, கீழவளவு, மூன்றுமலை வகுரணி, புத்தூர்மலை மலைப்பட்டி, தேவன்குறிச்சிமலை, தே.கல்லுப்பட்டி, பூசாரிபட்டி, பரங்கிரி பேரையூர், மூலிக்கல், பேரையூர், வாசிமலை தொட்டப்ப நாயக்கனூர், மேலவளவு ஆகிய பகுதி மலைப் புடவுகளில் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட தமிழி எழுத்து பொறித்த பானை ஓடுகள் தமிழியின் காலத்தை கி.மு.600 வரை எடுத்துச் சென்றிருக்கிறது. கீழடி சங்க கால ஊர் என்பதை அகழாய்வுகள் சான்று பகிர்கின்றன.

ஈராயிரமாண்டு பழமையான தமிழிக் கல்வெட்டுகள் காணப்படும் சித்தர்மலை, முதலைக்குளம், விக்கிரமங்கலம், புளிங்குன்றூர், குயில்குடி, நாடாற்றுப்புறம், மாங்குளம், அரிட்டாபட்டி, ம.குன்னத்தூர், திருவாதவூர், கீழவளவு, கருங்காலக்குடி, திருமலை ஆகிய மலைக் குன்றத்து ஊர்களையும் சங்க கால ஊர்களாக கொள்ளலாம்.

கூடல், மதுரை, பரங்குன்று, பறம்பு, மாலிருங்குன்றம், மோகூர், தேனூர் ஆகிய ஊர்கள் குறித்து சங்க இலக்கிய நூல்கள் குறிப்பிடுகின்றன. இவகுன்றம் (யானைமலை), விந்தையூர் (வண்டியூர்), நாகப்பேரூர் (நாகமலை), வெள்ளறை (வெள்ளரிப்பட்டி), எருக்காட்டூர், மதிரை (மதுரை), திடியில் (திடியன்), பாங்காட (பனங்காடி), ஏழையூர் (கருங்காலக்குடி) ஆகிய ஊர்களின் பெயர் மதுரையைச் சுற்றியுள்ள மலைக் குன்றுகளின் தமிழிக் கல்வெட்டுகளில் இடம் பெறுகின்றன. இவ்வூர்களை ஈராயிரமாண்டுகளாக இயங்கி வரும் மதுரை வட்டார சங்க கால ஊர்களாக அறிய முடிகிறது.

இவ்வுலகில் ஈராயிரமாண்டுகளுக்கு மேலாக உயிர்ப்புடன் இயங்கிவரும் ஒரு சில நகரங்களில் மதுரையும் ஒன்றாகும். துவக்கத்தில் ஆலவாய், கூடல், நடுவூர் ஆகிய மூன்று ஊர்களின் தொகுப்பு மதுரை என்று அழைக்கப்பட்டது. பண்பாட்டுத் தலைநகரம், கோயில் நகரம், தூங்காநகரம் எனப் பல சிறப்புப் பெயர்களைத் தாங்கி நிற்கிறது. இலக்கியங்களில் மதுரை என்றும், தமிழிக் கல்வெட்டுகளில் மதிரை எனவும் குறிப்பிடப்படுகிறது. தாமரை இதழ் போன்ற அடுக்கடுக்கான தெருக்களைப் பற்றியும், அத்தெருக்களின் மையத்தில் அமைந்திருந்த கோயில் பற்றியும் பரிபாடல் பாடுகிறது. பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள பழையக் கோட்டை வாசலின் எச்சம், கீழவாசல் அருகேயுள்ள விட்டவாசல், ஆவண வீதி, காவற்கூடத் தெரு, அக்காசு தெரு, பாண்டியன் அகழ் தெரு ஆகியன கோட்டைக் கொத்தளங்களுடன் விளங்கிய பழைய மதுரையை நினைவூட்டுகின்றன.

மதுரைத் திருமலை நாயக்கர் அரண்மனை, பத்துத்தூண் வீதி, ராயர் மண்டபம், புது மண்டபம் ஆகியனவும் இராணி மங்கம்மாள் எழுப்பிய அரண்மனையும் (காந்தி அருங்காட்சியகம்), தமுக்கம் மைதானமும் மதுரை நகரின் உள்கட்டமைப்பு மற்றும் கட்டடக்கலைத் தொடர்ச்சிக்கு சான்றாக அமைகின்றன.

மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அழகர் கோயில், கூடல் அழகர் கோயில் ஆகியன மதுரையின் தொன்மையான கோயில்களாகும்.

நரசிங்கம் யானைமலை, மாங்குளம் கழுகுமலை, அரிட்டாபட்டி கழிஞ்சமலை, கிடாரிப்பட்டி அழகர்மலை, கருங்காலக்குடி பஞ்சபாண்டவர் மலை, கீழவளவு பஞ்சபாண்டவர் மலை, திருவாதவூர் ஓவாமலை, ம.குன்னத்தூர் மலை, புளிங்குன்று, திருப்பரங்குன்றம், கீழக்குயில்குடி சமணர் மலை, முத்துப்பட்டி பெருமாள்மலை, நடுமுதலைக்குளம் பெரிய உண்டங்கல், விக்கிரமங்கலம் சின்ன உண்டங்கல், கல்லூத்து சித்தர்மலை உள்ளிட்ட 15 மலைக்குன்றுகளில் 61 தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த 15 மலைக்குன்றுகளையும் ஒரு தொகுப்பாக ”மதுரை தமிழிக் குன்றுகள்” என்னும் பெயரில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்.

தாய்த் தெய்வ வழிபாடு, முருக வழிபாடு, சைவ, வைணவ, சமண, பௌத்த, இசுலாமிய, கிறித்துவம் உள்ளிட்ட பல சமயங்களின் கூடலாக மதுரை விளங்குகிறது. சங்க காலத்தில் திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயில் பற்றியும், அதில் நடந்த விழா குறித்தும் அகநானூற்றுப் பாடல் (59 மற்றும் 149) குறிப்பிடுகிறது. சங்க காலத் திருப்பரங்குன்றத்து முருகன் கோயில் இன்று பல்வேறு மாற்றங்களைக் கண்டிருக்கிறது.

தமிழி கல்வெட்டுகள் காணப்படும் யானைமலை, சமணர் மலை, கீழவளவு, திருப்பரங்குன்றம், முத்துப்பட்டி, அரிட்டபட்டி, அழகர்மலை, கருங்காலக்குடி, பொய்கைமலை (தமிழிக் குன்றல்ல) உள்ளிட்ட ஒன்பது மலைகளில் கிபி 9-10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 46 சமணத் துறவிகளின் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. வடுகப்பட்டி, முத்துப்பட்டி, கீழ உப்பிலிகுண்டு, காரைக்கேணி, செங்கமேடு, கவசக்கோட்டை, வேளாம்பூர் ஆகிய பகுதிகளில் மகாவீரர் சிலைக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புத்தூர் மலையில் சமண தீர்த்தங்கரர் போன்ற தோற்றத்தைக் கொண்ட மூன்று புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

கி.பி. 1050-களில் இசுலாம் மார்க்கம் மதுரைக்கு வந்துவிட்ட செய்தியை அறிந்துகொள்ள முடிகிறது. போகர் சித்தர் எழுதிய “சத்தகாண்டம் ஏழாயிரம்” பாடலின் வழியே சிக்கந்தர் என்னும் இசுலாமிய துறவி கி.பி. 12-13 நூற்றாண்டில் திருப்பரங்குன்றம் வந்திருக்கலாம் எனக் கருதலாம். கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் காஜிமார் பள்ளிவாசலுக்கும், கோரிப்பாளையம் பள்ளிவாசலுக்கும் பாண்டிய மன்னர்கள் ஆதரவளித்து இருக்கிறார்கள் என்கிற செய்தியை கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்கள், இசுலாமியர்களை மாமா, மருமகன், பங்காளி, மானான், அப்பு, சீயான் என உறவு பெயர் சொல்லி அழைக்கும் வழக்கும் மதுரையின் தனி சிறப்பு.

அதைப்போல, கிறித்துவத்திற்கும் மதுரைக்கும் நீண்டகாலத் தொடர்பு இருந்துள்ளது. கீழவாசல் புனித மேரி அன்னை திருத்தலம், புதூர் லூர்து அன்னை திருத்தலம், புனித ரோசரி அன்னை திருத்தலம், புனித ஜார்ஜ் திருத்தலம் ஆகியவை மதுரையின் பழமையான கிறித்துவத் திருத்தலங்களாகும். 1812-1828 காலப்பகுதியில் மதுரை கலெக்டராக இருந்த ரௌஸ் பீட்டர் (Rous Peter) பரிசளித்த தங்கக் காலணிகள் (பாதுகம்) சித்திரைத் திருவிழாவில் அம்மனுக்கு அணிவிக்கப்படுகின்றன என்பது மதுரையின் சிறப்புகளில் ஒன்று.

மேலே குறிப்பிட்டுள்ள மதுரையின் சிறப்புகள் மட்டுமின்றி, பழந்தமிழ் இலக்கியங்களில் மதுரை பற்றிய குறிப்புகள் மிகப்பெரும் அளவில் காணக்கிடைக்கின்றன. இவற்றையும் இணைத்துப் பார்க்கும்போது மதுரையின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது.

இவ்வாறாக, வரலாற்று காலத்திற்கு முன்பிருந்து இன்றுவரை இயங்கி வரும் தமிழ்நாட்டின் தொன்மையான மதுரை மண்டலத்தை தமிழ்ப் பண்பாட்டின் தலைநகராக அறிவித்து பாதுகாக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை மக்கள் இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டும் என “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” மூலமாக கேட்டுக்கொள்கிறோம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க