மார்ச் 07, 2026 மதுரை தமுக்கம் மைதானத்தில், மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மா.ஒ.கு.) ஆகிய புரட்சிகர அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் “சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா”வில் கீழ்க்காணும் ஐம்பெரும் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இப்பெருவிழாவில் பங்கேற்ற ஜனநாயக சக்திகள், மக்கள் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்பட்டு தீர்மானங்களாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 5:
அழிவுத் திட்டங்களால் தடுமாறும் தமிழ்நாடு
இந்தியாவில் கனிம வளங்களில் செழித்து விளங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இரும்புத்தாது, பாக்சைட், கிராஃபைட், கிரானைட், பழுப்பு நிலக்கரி போன்ற பல்வேறு கனிமங்கள் மாநிலத்தின் பல மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.
பழனி முருகன் கோயிலை சுற்றி மாலிப்டினம், அரிட்டாபட்டியை சுற்றி டங்ஸ்டன், சிவகங்கையில் கிராஃபைட் போன்ற தனிமங்கள் தோண்டி எடுப்பதற்கான திட்டங்கள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டு அவை மக்களின் எதிர்ப்பை சந்தித்துள்ளன. “வளர்ச்சித்” திட்டங்கள் என்ற பெயரில் இயற்கை மற்றும் மக்கள் விரோதத் தன்மை கொண்ட, கார்ப்பரேட் பெருநிறுவனங்களின் கொள்ளைக்கான திட்டங்கள் தமிழ்நாட்டில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
“ஆய்வு” என்ற பெயரில் தொடங்கும் அரசின் செயல்பாடுகள், அடுத்தடுத்து “அகழ்வு” மற்றும் “தொழில்துறை வளர்ச்சி” என முற்றிலும் வெளிப்படைத் தன்மையற்ற முறையில் இப்பேரழிவு திட்டங்களுக்கான பணிகளாக முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி அகழ்வின் மையமாக விளங்குவது நெய்வேலி. இங்கு என்.எல்.சி. இந்தியா லிமிடெட் (NLC India Limited) பல ஆண்டுகளாக சுரங்கப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆரம்பக் காலங்களில், “வேலைவாய்ப்பு”, “பகுதி வளர்ச்சி”, “மின்சார உற்பத்தி” போன்ற அரசின் வாக்குறுதிகளை நம்பி அப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களை ஒப்படைத்தனர். ஆனால், பாதிக்கப்பட்ட அனைத்து பூர்வகுடி மக்களுக்கும் உரிய இழப்பீடு மற்றும் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்பட்டவில்லை. இதுதான், தமிழ்நாட்டில் இதுவரை தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட நில அபகரிப்புகளின் கதையாகவும் உள்ளது. இப்பகுதிகளில் நிலத்தடி நீர் குறைவு, நில அமைப்பு பாதிப்பு, காற்று மாசு போன்ற பிரச்சினைகளும் தொடர்கதையாக உள்ளன.
மதுரை, விருதுநகர், கரூர், திருப்பூர், ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கல்குவாரிகள் அதிகரித்து வருகின்றன. ஒட்டுமொத்தமாக அனுமதி பெற்று 2,000 குவாரிகளும் அனுமதி பெறாமல் அதற்கு இணையான எண்ணிக்கையிலும் கல்குவாரிகள் செயல்படுகின்றன. இவை அனைத்தும் தமிழ்நாட்டின் இயற்கை வளத்தை மிகப்பெரும் அளவில் சீரழித்து வருகின்றன.
கல்குவாரிகளுக்கு எதிராக பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகள் முன்வரவில்லை. மதுரை கல்லணை கிராமத்தை சேர்ந்த இராணுவ வீரர்கள் தங்களது சீருடைகளுடன் “நாட்டை காக்க முடிந்த எங்களால் ஊரைப் பாதுகாக்க முடியவில்லை” என வேதனையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கல்குவாரிகளின் பெரிய வலைப்பின்னலுக்கு கல்லணை மற்றும் திருமால் கிராமத்தில் நடக்கும் கொள்ளை சாட்சியாக உள்ளது.
பல இடங்களில் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் கண்துடைப்பாகவே நடத்தப்படுகின்றன. 100 சதவிகிதம் மக்கள் எதிர்ப்பு இருந்தும் மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தின் அதிகாரிகள் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு சட்டத்தை மீறி கல்குவாரிகளை நடத்த அனுமதி அளிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
கல்குவாரிக்கு எதிராக போராடிய புதுகோட்டையின் வெங்களூரை சேர்ந்த ஜபகர் அலி கல்குவாரி கிரிமினல்களால் படுகொலை செய்யப்பட்டது தமிழ்நாட்டில் தீவிரமடைந்துவரும் கல்குவாரி முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது.
தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம், விமான நிலைய விரிவாக்கம், துறைமுக விரிவாக்கம், சிப்காட் அமைப்பது போன்ற பெயர்களில் விவசாயிகளின் விளைநிலங்களை அபகரிப்பதும், அரசு கைப்பற்றிய நிலங்களுக்கு உரியத்தொகை கொடுக்காமல் ஏமாற்றுவதும் தொடர்கதையாக உள்ளன.
தொழிற்பேட்டை வளர்ச்சி என்ற பெயரில், இயற்கைக்கும் மக்களுக்கும் எதிரான, சுற்றுச்சூழலை பாதிக்கின்ற ஆலைகள் நிறுவப்படுகின்றன. இதனால் சென்னை – எண்ணூர், ஈரோடு (பெருந்துறை), கடலூர், கும்மிடிப்பூண்டி, வேலூர் (குடியாத்தம்) போன்ற பகுதிகளில் நிலம், நீர், காற்று மாசுபாடு ஏற்படுவது குறித்து மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுவதில்லை.
மதுரை கல்லாங்காடு, திருவண்ணாமலை மேல்மா போன்ற இடங்களில் சிப்காட்டிற்கு எதிராகவும் மதுரை சின்ன உடைப்பு, சென்னை பரந்தூர் போன்ற பகுதிகளில் விமான நிலைய விரிவாக்கம், நில அபகரிப்பால் பாதிக்கப்பட்ட மக்களும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், ஒன்றிய அரசின் 2026-2027 நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டைக் “கனிமவளத் தாழ்வார”மாக மாற்றுவோம் என்ற பெயரில் கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடும் அழிவுத் திட்டம் தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கண்ட மக்கள் விரோத, இயற்கை விரோதத் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். “வளர்ச்சி” என்ற பெயரில் “வாழ்விட அழிவுத்” திட்டங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நேர்மையான முறையில், சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இழப்பீடு மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் கல்குவாரிகளுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள திருமால் மற்றும் கல்லணை கிராம மக்கள் கல்குவாரிகளால் ஏற்பட்ட பாதிப்புகளை உணர்ந்து அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
மக்கள் விரோதத் திட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், 2018 ஸ்டெர்லைட் போராட்டம் முன்னுதாரணமிக்கதாக இருந்ததெனில், கனிவவளச் சூறையாடலுக்கு எதிரரான போராட்டத்தில் 2025 மதுரை டங்ஸ்டன் எதிர்ப்புப் போராட்டம் முன்னுதாரணமிக்கதாக இருந்தது. டங்ஸ்டனுக்கு எதிரான மேலூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் எழுச்சி என்பது, அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பல்வேறு இயற்கை விரோத, மக்கள் விரோதத் திட்டங்களுக்கு எதிரான மக்களது உணர்வின் உச்சமாகும். சமகாலத்தில் தமிழ்நாட்டில் நடந்துவரும் மக்கள் போராட்டங்களுக்கெல்லாம் சிகரமாகும். தங்களது நிலம், பண்பாடு, தங்களது சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க மேலூர் மக்களின் போராட்ட உணர்வை, இந்த “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” போற்றி வரித்துக்கொள்கிறது.
எந்தக் கட்சியாக இருந்தாலும் தேர்தலில் ஓட்டு வாங்கும் வரை, மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்ப்பதைப் போல நாடகமாடுவது, ஆட்சிக்கு வந்த பின்னர், அதே மக்கள் விரோதத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது என கார்ப்பரேட் சேவையில் கரைதேறியுள்ளன. ஆகையால், இந்தக் கட்சிகளை நம்பியும், கார்ப்பரேட் கொள்ளைக்குத் துணைபோகும் இந்த சட்டம், நீதிமன்றங்களை நம்பியும் மக்கள் தமது வாழ்வாதாரங்களை இனியும் இழக்கக் கூடாது.
ஆகையால், இயற்கைச் சுற்றுச்சூழல் – மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான மக்கள் கூட்டமைப்புகளை அனைத்து பகுதிகளிலும் கட்டியமைக்க வேண்டும். அதன் மூலமாக, நமது நிலத்தையும் இயற்கையையும் பண்பாட்டையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென இந்த “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” மக்களுக்குத் தெரிவிக்கிறது.
மேலும், தமிழ்நாட்டு வணிகர்களின் வாழ்வாதாரத்தை மார்வாடி, சேட்டுகள் ஆக்கிரமித்துள்ளனர். முக்கியமான பொருட்களின் வணிகத்தில் இந்தப் பிரிவினரே ஏகபோகம் செலுத்துகின்றனர். இவர்கள் வணிகம் செய்வது என்றளவில் மட்டுமில்லாமல், இவர்கள்தான் சங்கப் பரிவார அமைப்புகளுக்கும் பெரும் பின்பலமாக அமைகின்றனர். மத நல்லிணக்க மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு மதக்கலவர பூமியாக மாறாமல் இருக்க வேண்டுமெனில், தமிழ்நாட்டை ஆக்கிரமித்துள்ள இந்த மார்வாடி – சேட்டு வணிகர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று இந்த “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.
***
இறுதியாக…
சமூக மாற்றத்திற்கான போராட்டம் என்பது மிகநீண்டது, பல்வகைப்பட்டது. அரசியல், பொருளாதாரம், சமூக தளங்களில் இப்போராட்டங்கள் நடத்தப்படடும் அதேவேளையில், கலை, இலக்கியம், பண்பாட்டுத் தளங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதன் பொருட்டு, “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா”வைத் தொடங்கியுள்ளோம்.
1990 ஆண்டுகள், 2000 ஆண்டுகளில் எமது, மக்கள் கலை இலக்கியக் கழகம் என்கிற புரட்சிகர அமைப்பின் சார்பாக, “தமிழ் மக்கள் இசை விழா” முன்னெடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே, இன்று, “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” முன்னெடுக்கப்படுகிறது.
பார்ப்பனிய பிற்போக்குப் பண்பாட்டிற்கு எதிராகவும் ஏகாதிபத்திய சீரழிவுப் பண்பாட்டிற்கு எதிராகவும் தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் சமத்துவ, புரட்சிகரப் பண்பாட்டையும் மரபையும் உயர்த்திப் பிடிக்கும் வகையில் இந்த தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா இனி ஆண்டுதோறும் நடத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் பெருவிழாவிற்கான பரப்புரை இயக்கத்தின் போது, “ஐம்பெரும் முழக்கங்களை” முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்தோம். ஆணவப் படுகொலைகள் தடுக்கப்பட வேண்டும்; சாதி, மத மறுப்பு இணையர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்; பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், போதைக் கலாச்சாரம் தடுக்கப்பட வேண்டும்; தமிழ்ப் பண்பாட்டின் தலைநகரமாக, மதுரை மண்டலத்தை அறிவிக்க வேண்டும்; இயற்கை சுற்றுச்சூழலைப் பாதிக்கின்ற கார்ப்பரேட் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும் ஆகியவைதான் இந்த ஐம்பெரும் முழக்கங்களாகும். இந்த ஐம்பெரும் முழக்கங்களும் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு ரீதியில் ஒன்றோடொன்று தொடர்புடையவையாகும்.
இந்த முழக்கங்கள் அனைத்தும் ஜனநாயக சக்திகளாலும் மக்களாலும் பெரிதும் வரவேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்கள் தெரிவித்த கருத்துகளையும் உள்ளடக்கி, இந்த ”ஐம்பெரும் முழக்கங்களை” விரிவாக வகுத்து இந்தப் பெருவிழாவின் முந்தைய அமர்வுகளில் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான எமது பரப்புரை மிகக் குறுகிய காலத்தில், சரியாக 20 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட பரப்புரையாகும். எனினும், இவ்விழா குறித்த செய்தியும் கருத்துகளும் கோடிக்கணக்கான மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. அதற்கு ஜனநாயக சக்திகளும் உழைக்கும் மக்களும் இந்த இயக்கத்திற்கு கொடுத்த ஆதரவுதான் முதன்மையான காரணமாகும். இன்று, இந்த மாநாட்டில் பல்வேறு சாதி மறுப்பு இணையர்கள் பங்கேற்றுள்ளனர்; சமத்துவ சமுதாயத்தை விரும்புகின்ற மக்கள் பல்லாயிரக்கணக்கில் குழுமியுள்ளனர். இந்த ஆதரவானது, இந்த இயக்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
இந்தப் பெருவிழாவில் முன்வைக்கப்பட்ட இந்த ஐம்பெரும் முழக்கங்களும் மக்களின் ஐம்பெரும் முழக்கங்களாகும். இவை, சமத்துவப் பண்பாட்டுப் போரின் முக்கியமான முழக்கங்களாகும். இந்த ஐம்பெரும் முழக்கங்களை நடைமுறையில் நிறைவேற்றவதற்கு தொடர்ந்து போராட நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். அந்தவகையில், இந்தப் பெருவிழாவில் பங்கேற்றுள்ள அனைத்து தலைவர்கள், மக்களின் சார்பாக இந்த ஐம்பெரும் முழக்கங்களை நடைமுறையில் சாதிப்பதற்கான நடவடிக்கைகளில் நாம் ஈடுபட வேண்டும்.
அதன் முதல் நடவடிக்கையாக, இந்த ஐந்து முழக்கங்கள், நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பரப்புரைகளாக மேற்கொள்ளப்பட வேண்டும் என புரட்சிகர, ஜனநாயக சக்திகளை இந்தப் பெருவிழா சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு நாம் அவர்களை நிர்பந்திக்க வேண்டும்.
அந்தவகையில், இந்த ஐம்பெரும் முழக்கங்களை நிறைவேற்றுவதை ஒட்டி, அந்தந்த முழக்கங்களின் தன்மைக்கேற்ற ஜனநாயக சக்திகள், ஒடுக்கப்பட்ட மக்களின் அமைப்புகளுடன் இணைந்து பல கூட்டமைப்புகளைக் கட்ட வேண்டும். போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
தற்போது நிலவுகின்ற ஆட்சி அதிகாரத்திற்கான தேர்தல் என்பது நம்மை ஆட்சி செய்யும் ஆளும் வர்க்கங்கள் தங்களுக்குள் அதிகாரத்தைப் பகிர்ந்துக் கொள்வதற்கான ஏற்பாடாகும். மேலும், இந்த ஆட்சி அதிகாரம் பாசிச சக்திகளால் மிக வேகமாக சுவீகரிக்கப்பட்டு வருகிறது. ஆகையால், இந்தக் கட்டமைப்புக்குள் உழைக்கும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டிவிட முடியாது.
எனவே, மேற்கண்ட ஐம்பெரும் முழக்கங்களை நடைமுறையில் சாதிக்க, தேர்தல் அரசியலுக்கு வெளியில், கூட்டமைப்புகளைக் கட்டி செயல்பட வேண்டுமென புரட்சிகர, ஜனநாயக சக்திகளை இந்த ”தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” வலியுறுத்துகிறது.
★
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











