14.04.2026

தொகுதி மறுவரையறை சட்டம் 2026:

தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களின் உரிமைகளை
ஒழித்துக் கட்டும் சட்டத்திற்கு முடிவு கட்டுவோம்!

பத்திரிகைச் செய்தி

ருகின்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தைக் கொண்டு வருவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சியில் பாசிச பா.ஜ.க மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி (2011) நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளும் மறு வரையறை செய்யப்படும்போது மக்கள் தொகை குறைவாக உள்ள மாநிலங்கள் பாதிக்கப்படும்.

குறிப்பாக ஒன்றிய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களை தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் தீவிரமாகப் பின்பற்றின. அதன் காரணமாக வட மாநிலங்களை ஒப்பிடும் போது தென் மாநிலங்கள் மக்கள் தொகையில் வீழ்ச்சி அடைந்துள்ளன. இப்படிப்பட்டச் சூழலில் தொகுதி வரையறை கொண்டு வரப்பட்டால் வட மாநிலங்கள் அதிகப்படியான தொகுதிகளைப் பெறும். தென்மாநிலங்கள் தங்களுடைய உரிமைகளை இழக்கும்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவையானது 888 பேர் (நாடாளுமன்றக் கூட்டுத் தொடரின்போது 1,272 பேர்) அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டது. 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொத்தம் உள்ள சூழலில் எதற்காக 888 பேர் அமரக்கூடிய வகையில் நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டது என்ற கேள்வி அப்போது பலரிடமும் எழுந்தது.

2047 ஆம் ஆண்டுக்குள் இந்து ராஷ்டிரத்தை அமைக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி- அதானி பாசிச கும்பல். அந்த பாசிச திட்டத்திற்காகவே தற்பொழுது மிகவும் வேகமாக தொகுதி வரையறைச் சட்டம் கொண்டுவரப்படுகிறது.

இதன் மூலம், வருங்காலத்தில் தங்களுடைய பாசிசத் திட்டங்களை வட மாநில எம்.பி.க்களின் ஆதரவுடன் மட்டும் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற நிலைமையை உருவாக்க முனைகிறது பாசிச மோடி அரசு.

1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 2001 வரை மாற்றக் கூடாது என்ற திருத்தத்தை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அரசியலமைப்பு சட்டப் பிரிவு 82-ல் சேர்த்தார். இதனால், மக்கள் தொகை அதிகரித்தாலும் புதிய தொகுதிகளை உருவாக்க இயலாது. அதன் பின், 2001-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 25 ஆண்டுகள் ஒத்திவைத்தார். இன்று வரை இந்த சட்டத் திருத்தத்தின் அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகளின் வரையறை இருந்துள்ளது. தற்போது 25 ஆண்டு காலம் நிறைவுபெறும் தருணத்தில் பா.ஜ.க அரசு தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் இந்த தேசிய அளவிலான தொகுதி மறுவரையறை நடவடிக்கையை தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத் திருத்தத்தோடு இணைத்து மேற்கொள்வதானது அயோக்கியத்தனமாகும். இது மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் கட்சிகளை பெண்களின் உரிமைகளுக்கு எதிரானவர்கள் என்று சித்தரித்து அரசியல் செய்வதற்கான பாசிச கும்பலின் சதியாகும்.

தொகுதி மறுவரையறை சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய போராட்டத்தைக் கட்டமைக்க வேண்டிய தேவையை பாசிச மோடி அரசு உருவாக்கி உள்ளது.

தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு விளக்கி இதற்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைப்பது புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகளின் உடனடி கடமை என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram