27.04.2026

நொய்டா: தொழிலாளி வர்க்கத்தின் மீது பாசிச யோகி அரசு
நடத்தும் பயங்கரவாதப் போர்!

கண்டன அறிக்கை

த்தரப்பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. மாருதி கார் நிறுவனத்திற்குத் தேவையான உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்வதே இத்தொழிற்சாலைகளின் இலக்காக உள்ளது. எனினும் தொழிற்சாலைகளில் வேலை செய்து வரும் இலட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மிக இழிவான நிலையில் உள்ளது. தொழிலாளிகள் என்பதற்கான எவ்வித அடிப்படை வசதியும் இன்றி அவர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு நிகழ்காலத்தில் தொழிலாளி வர்க்கத்தின் நரகமாக விளங்குகிறது நொய்டா.

தொழிலாளர்கள் அவலமான மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் வேலை செய்ய வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சம்பளமோ ரூ.18,000 என்று கூறப்பட்டாலும் அவர்களுக்கு ரூ.11,000 மட்டுமே வழங்கப்படுகிறது. இரட்டிப்பு கூடுதல் நேர ஊதியத்திற்கான சட்டப்பூர்வ உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணிபுரியும் இடத்தில் தொடர்ந்து தவறாக நடத்தப்படுகின்றனர். இந்தச் சுரண்டல் மற்றும் அடக்குமுறை நிலைமைகளுக்கு எதிராகப் போராடுவது தொழிலாளர்களின் அடிப்படை உரிமையாகும். அந்த உரிமைகளும் அவர்களுக்கு மறுக்கப்பட்டது. ஆகவே தொழிலாளர்கள் தங்கள் மீது நடத்தப்படும் கட்டற்ற வேலை சுரண்டல், மிகக் குறைவான ஊதியம், தொழிலாளர்களுக்கு உரிமைகள் மறுப்பு ஆகியவற்றுக்கு எதிராகத்தான் தங்களுடைய போராட்டத்தைத் தொடங்கினர்.

அண்டை மாநிலமான ஹரியானாவில் உள்ள இதே தொழிற்சாலைகளில் ஊதிய உயர்வை மாநில அரசு அறிவித்துள்ளது. எனினும் உத்தரப்பிரதேச அரசு ஊதிய உயர்வை அறிவிக்க மறுத்தது. இதற்கு எதிராகத்தான் தொழிலாளி வர்க்கம் தீவிரமாகப் போராடியது. அரசியல் அமைப்பு கொடுத்துள்ள சங்கம் வைக்கும் உரிமை, போராடுகின்ற உரிமை என்ற அடிப்படையில் போராடிய தொழிலாளி வர்க்கத்தை வேட்டையாடி இருக்கிறது உத்தரப்பிரதேச பாசிச யோகியின் அரசு.

இஸ்லாமியர்கள் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளி அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றும் உ.பி அரசு, மாற்றுக் கருத்து கூறுபவர்களைக் கைது செய்து சித்திரவதை செய்யும் உ.பி அரசுதான் இப்பொழுது போராடுகின்ற தொழிலாளிகளை பயங்கரவாதிகள் என்கிறது.

தங்கள் மீது நடத்தப்படும் கட்டற்ற சுரண்டலுக்கு எதிராகப் போராடிய தொழிலாளர்கள் மீது ஏப்ரல் 13 ஆம் நாள் மிகக் கடுமையான அடக்கு முறையை தாக்குதலை தொடங்கியது பாசிச யோகி அரசு.

நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமன்றி பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டிருக்கின்றன. கைது செய்யப்பட்டவர்களை கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளது பாசிச யோகியின் அரசு.

மேலும் கைது செய்யப்பட்ட குடும்பங்களை விடுவிப்பதற்கு ஒவ்வொரு குடும்பத்தினரிடமிருந்தும் பல ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்தை மிரட்டிப் பறித்துள்ளது உ.பி போலீசு.

அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாகச் சித்தரித்து இந்தப் போராட்டமானது பாகிஸ்தானால் தூண்டி விடப்பட்டது என்று கட்டுக்கதையைக் கிளப்பியது. அதனை வட இந்திய ஊடகங்கள் வாந்தி எடுக்க அதனையே தமிழ்நாட்டு ஊடகங்களும் திருப்பி வாந்தி எடுத்தன.

நொய்டா தொழிலாளர் போராட்டத்தின் “மூல சூத்திரதாரி” பயங்கரவாதி என்று தொழிலாளர் தலைவர் ஆதித்யா ஆனந்த் அவர்களை முத்திரை குத்தி பயங்கரவாத பிரச்சாரம் செய்தது என்.டி.டி.வி.

ஆதித்யா ஆனந்த் தமிழ்நாட்டுக்கு வந்ததை அறிந்து ஏப்ரல் 19 அன்று தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் பயங்கரவாதி கைது செய்யப்பட்டார் என்று பிரச்சாரம் செய்தன மோடியின் ஊடகங்கள்.

மற்றொரு ஊடக நிறுவனமான இந்தியா டுடே, நொய்டா தொழிலாளர் போராட்டத்திற்குப் பின்னால் மூன்று “ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள்” இருந்ததாகவும், ஒரு இடதுசாரி அமைப்பின் உறுப்பினர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசு கூறியதாகத் தெரிவித்துள்ளது.

தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் பேசிய ஒரே காரணத்திற்காக, டெல்லி மற்றும் லக்னோ போன்ற இடங்களிலிருந்து பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் எழுத்தாளர்கள் எவ்விதக் காரணமும் இன்றி கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வழக்கறிஞர்கள் கூட நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முடியவில்லை என்றும், உண்மையில், தங்கள் வேலையைச் செய்ததற்காகவே போலீசாரால் அவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்பதையும் அவர் பதிவு செய்துள்ளார்.

கைது செய்யும்போதும், கைது செய்யப்பட்ட பிறகும் உரிய நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை; மாறாக அவை வெளிப்படையாக மீறப்பட்டுள்ளன.

கைது குறித்த குறிப்பாணைகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. மேலும் உறவினர்களுக்குக் கூட தகவல் தெரிவிக்கப்படவில்லை. தொழிலாளர் உரிமைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது மற்றும் அவர்களின் நிலை மோசமடைந்து வருவதாக மனித உரிமை ஆர்வலர் ஹிமான்ஷு குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பகுதியில் பால், பழங்கள், காய்கறிகள் வாங்கச் சென்ற 350-க்கு மேற்பட்ட சிறுவர்கள் சிறுமியர்களும் போலீசால் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதை அம்பலப்படுத்துகிறார் எஸ்.எஃப்.ஐ-யின் டெல்லி மாநில தலைவர் அஜின்தியா.

மேலும் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டவர்கள் ஒவ்வொருவரையும் விடுவிக்க ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை யோகியின் உ.பி போலீசு பெற்றுள்ளது.

இப்படிப்பட்ட பயங்கரவாத அடக்குமுறைகள் மூலம் தொழிலாளர்கள் நசுக்கப்படுவதையும், 13 மணிநேர வேலை என்பதையும் இயல்பான ஒன்றாக மாற்றுகின்றது அரசு.

கார்ப்பரேட்டுகளின் சுரண்டலை மறைக்க சதிக்கோட்பாட்டை உருவாக்குவது பாசிஸ்டுளுக்கு கைவந்த கலைதான்.

ஆக, கூலி உயர்வுக்காக நடத்தப்பட்ட போராட்டத்தை ஒரு கிரிமினல் நடவடிக்கையாகச் சித்தரித்து இருக்கிறது பாசிச மோடி அரசும் மோடியின் ஊடகங்களும்.

தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்கம் உத்தரப்பிரதேசம் நொய்டா தொழிலாளி வர்க்கத்தின் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக கடும் எதிர்வினை ஆற்ற வேண்டும். கூலி உயர்வு போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாகச் சித்தரிக்கும் இந்த பயங்கரவாத செயல்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.

கூலி உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களை வரைமுறையின்றி கைது செய்வதும் அவர்களை நகர்ப்புற நக்சல்கள் என்று முத்திரை குத்துவதையும் கூலி உயர்வு போராட்டத்தில் கலந்து கொண்டதற்காகவே நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதையும் மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நொய்டாவில் போராடும் தொழிலாளி வர்க்கத்துக்கு மக்கள் அதிகாரக் கழகம் தன்னுடைய ஆதரவைத் தெரிவிக்கிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட நொய்டா தொழிலாளி வர்க்கத்தின் தலைவர் ஆதித்யா ஆனந்த் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க