பா.ஜ.க-வின் பினாமி ஆட்சியா? கவர்ச்சி நாயகனின் கார்ப்பரேட் ஆட்சியா?

தற்போது தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மையை கொடுக்காத மக்களின் முடிவானது, விஜய்யின் பெயரில் பா.ஜ.க-வின் பினாமி ஆட்சி அல்லது விஜய் தலைமையில் இன்னொரு கார்ப்பரேட் ஆட்சி என்கிற நிலைமையைத்தான் உருவாக்கியுள்ளது.

டந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களுக்கு, தி.மு.க-வின் ‘திராவிட மாடல்’ கார்ப்பரேட் ஆட்சி மீதான எதிர்ப்புணர்வு, நீண்டகாலமாக தமிழ்நாட்டை ஆண்ட திராவிடக் கட்சிகள் மீதும் அவர்களுடன் கூட்டணி வைத்த சமரச, பிழைப்புவாதக் கட்சிகள் மீதும் இருக்கும் அதிருப்தி உணர்வு ஆகியவை காரணமாக, திரைக் கவர்ச்சி நாயகன் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை அதிக இடங்களில் வெற்றிபெற வைத்துள்ளனர். அதேவேளையில், பாசிச பா.ஜ.க-வை தமிழ்நாடு மக்கள் புறக்கணித்திருப்பதானது தமிழ்நாட்டிற்கே உரிய பார்ப்பனிய எதிர்ப்புணர்வின் வெளிப்பாடாகும்.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், திரைக் கவர்ச்சி நாயகர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தலைமையிலான பிழைப்புவாதக் கட்சியாக அ.தி.மு.க. பல ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளது. தற்போது, அந்த இடத்திற்கு அதே பாணியிலான இன்னொரு திரைக் கவர்ச்சி நாயகனான விஜய்யின் த.வெ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பதையும் ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டிருப்பதையும் பார்த்து வியப்படைய ஏதுமில்லை.

அதேவேளையில், தனது கொள்கை, நிலைப்பாடுகள் என்ன என்று இதுவரை விஜய் எதையும் அறிவிக்கவில்லை; “கொள்கை எதிரி பா.ஜ.க; அரசியல் எதிரி தி.மு.க.” என்று அவர் கூறினாலும், ’கொள்கை எதிரிக்கு’ எதிராக எந்த போராட்டத்தையும் மேற்கொள்ளவில்லை; தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆகிய எவை குறித்தும் கருத்து சொல்லவில்லை; திருப்பரங்குன்ற கலவர முயற்சி போல ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் கும்பலின் அட்டூழியங்கள், ஆணவப் படுகொலைகள், தலித் மக்கள் மீதான சாதிவெறித் தாக்குதல்கள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், இயற்கை வளக்கொள்ளை, அம்பானி-அதானி போன்ற ஆகப் பிற்போக்கு கார்ப்பரேட் கும்பல்களின் ஆதிக்கம் என எதற்கும் தனது கண்டங்களைக் கூட தெரிவித்ததில்லை.

மேலும், திரைக் கவர்ச்சிப் பிழைப்புவாதக் கட்சிகளிலேயே புதிய வகையாக த.வெ.க. உருவெடுத்துள்ளது. குறைந்தபட்சம் அ.தி.மு.க. போல ஒரு கட்சிக் கட்டமைப்பைக் கூட உருவாக்கவில்லை; ஊடகவியலாளர்களைச் சந்திக்க விஜய் மறுத்து வருகிறார்; எழுதி வைத்த குறிப்புகளைப் பார்த்து தவறில்லாமல் சில நிமிடங்கள் பேசுவதற்குக் கூட அவரால் முடியவில்லை; “பஞ்ச் டயலாக்” பேசுவது; ஒரே விசயத்தை திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருப்பது என்கிற அளவிற்குத்தான் அரசியல் அறிவு இருக்கிறது; அவரது கட்சியில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியிருக்கும் நிர்மல் குமார் போன்ற சிலர் ஆர்.எஸ்.எஸ்-இன் வளர்ப்பாவர்; சில மாதங்களுக்கு முன்புவரை அமித்ஷாவின் வீட்டு வாசல்படியில் அடிமையைப் போல அமர்ந்திருந்த செங்கோட்டையன் இவருக்கு முக்கியமான அரசியல் ஆலோசகர் ஆவார்; ஆட்சி அதிகாரத்திற்கு வந்து பதவி சுகத்தை அனுபவிக்க வேண்டுமென்கிற வெறிப் பிடித்த ஒரு பெரும் கூட்டம்தான் விஜய் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க-வும், 47 இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க-வும் பா.ஜ.க-விடம் தங்களது எம்.எல்.ஏ-க்கள் விலை போய்விடக் கூடாது என்பதற்காக, தங்களது ‘பாதுகாப்பில்’ வைத்துள்ளனர். இன்னொரு பக்கம், விஜய்யைப் பணிய வைத்து, தனது பினாமி ஆட்சியை அரங்கேற்ற ஆளுநர் மூலமாக, பா.ஜ.க. கொடுத்த நிர்ப்பந்தங்களுக்கு விஜய் பணியவில்லை. காங்கிரசு கொடுத்த ஆதரவைக் கொண்டு, த.வெ.க. ஆட்சி அமைக்கவும் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் வழக்கமாக வழங்க வேண்டிய வாய்ப்பை ஆளுநர் வழங்கவில்லை.

கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் விஜய் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளித்திருக்கும் நிலையில், பா.ஜ.க-வும் ஆளுநரும் விஜய்யை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்கும் அயோக்கியத்தனத்தை த.வெ.க-வும் விஜய்யும் கண்டிக்கவில்லை. த.வெ.க.வின் ‘கொள்கை எதிரி’யான பா.ஜ.க., அரசியல் எதிரியாக நேரடியாக வந்து ஆட்சி அமைப்பதைத் தடுக்கும் சூழலில் கூட, எதிரியை அம்பலப்படுத்தாமல், அதன் அடக்குமுறைகளை எதிர்க்காமல் இருப்பது அப்பட்டமான பிழைப்புவாதத்தைத் தவிர வேறில்லை.

இதேவேளையில், ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளார். அத்துடன், ஒன்றிய அரசு இந்த சூழலைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அரசிடம் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் த.வெ.க-வை ஆட்சி அமைக்கவிடாமல் இழுத்தடித்து, அந்த வாய்ப்பில், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும், மக்கள் விரோதத் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒன்றிய அரசு கொள்ளைப்புற முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சிகளான, சி.பி.ஐ., சி.பி.எம். ஆகியவை த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக அறிவித்திருப்பதன் மூலம், தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தைத் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வர முயற்சிக்கின்றன; வி.சி.க. நாளை காலையில் முடிவைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளது.

நாளை, வி.சி.க-வும் த.வெ.க-விற்கு ஆதரவு தெரிவித்து, விஜய் ஆட்சி அமைக்கும் நிலைமை உருவாகலாம். அதனால், விஜய்யின் த.வெ.க. கட்சியானது, பா.ஜ.க-வின் தற்போதைய நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு அரசியலில் குழப்பங்களை ஏற்படுத்தி, ஆட்சியைத் தன்வசம் கொண்டுவரும் முயற்சிகளை மோடி-அமித்ஷா கும்பல் ஒருபோதும் கைவிடப் போவதில்லை. செங்கோட்டையன், நிர்மல் குமார் போன்ற ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அடிமைகளையும் திடீர் அரசியல் பணக்காரக் கும்பலையும் தனது ஆட்சியின் அடித்தளமாகக் கொண்டிருக்கும் த.வெ.க., பா.ஜ.க-வின் நெருக்கடிகளுக்கு ஈடு கொடுப்பது கடினம்.

இன்னொருபுறம், பா.ஜ.க-வின் தயவில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொள்ளவில்லை என்பதற்காகவே, பா.ஜ.க-வின் கொள்கைகளையும் கார்ப்பரேட் திட்டங்களையும் விஜய் எதிர்த்து நிற்பார் என்று எதிர்பார்ப்பது பாமரத்தனமாகும்.

ஆகையால், தற்போது தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மையை கொடுக்காத மக்களின் முடிவானது, விஜய்யின் பெயரில் பா.ஜ.க-வின் பினாமி ஆட்சி அல்லது விஜய் தலைமையில் இன்னொரு கார்ப்பரேட் ஆட்சி என்கிற நிலைமையைத்தான் உருவாக்கியுள்ளது.

இந்த குழப்பமான முடிவினை, தமிழ்நாட்டு மக்களின் குழப்பமாக மட்டும் கருதிவிட முடியாது. கார்ப்பரேட் கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வகையிலான, இந்தத் தேர்தல் அரசியல் கட்டமைப்பே இவ்வாறான குழப்பமான முடிவுகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

ஆகையால், ஆட்சி அதிகாரத்தில் இருந்து பா.ஜ.க-வை விரட்டியடிப்பது மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் கும்பலையே விரட்டியடிக்க வேண்டும். அதற்கான மக்கள் போராட்டங்கள்தான் உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான தொடக்கப் பணியாகும். இதற்காக மக்களைத் தட்டியெழுப்புவது காலத்தின் கட்டாயமாகும்.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – மே 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



1 மறுமொழி

  1. • தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் நிலைமைகள்…

    • திமுக & அதிமுக ஆகிய 2 கட்சிகளும் சினிமாக் கவர்ச்சியைப் பயன்படுத்தியே கட்சியை வளர்த்துள்ளன. அதன் மூலமாக தமிழ்நாட்டின் அரசியலில் பல்வேறு இழிவான நிலைமைகள் ஏற்பட்டுள்ளது. இந்த 2 கட்சிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்து வந்த கட்சிகளாகும். அரசு துறைகளை தனியார் மயமாக்கி வந்ததோடு, அரசு & தனியார் துறைகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்கின்ற நடைமுறைகளை அமுல்படுத்திய கட்சிகளாகும். இன்றைய பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதியங்களை நிர்ணயம் செய்து, அவற்றை அமுல்படுத்தாத கட்சிகளாகும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்பவர்கள் பகுதி அளவிலான கொத்தடிமைத் தொழிலாளர்கள் ஆவார்கள்.

    • இப்போது அதே சினிமாக் கவர்ச்சியைப் பயன்படுத்தியே தவெக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் மட்டுமல்ல மத்தியிலும் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை கார்ப்பரேட் நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. சினிமாக் கவர்ச்சியைப் பயன்படுத்தி தவெக – வை வெற்றி பெற வைத்த கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊடகங்கள், அடுத்தடுத்த கட்டங்களில் பாஜக – வை ஆட்சிக்கு கொண்டு வர முடியாதா?. கூடவே தேர்தல் ஆணையம் மூலமாக மோசடிகள் செய்வதும் சாத்தியமானது.

    • சினிமாத் துறையினர் அரசியலுக்கு வருவது எந்த வகையில் ஆரோக்கியமானது. தவெக – வுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் அவற்றின் பலன்களை விரைவில் அறிவார்கள். இந்தத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் தவெக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி என்பது பாஜக – வின் பகுதி அளவிலான வெற்றியாகும். அடுத்தடுத்த தேர்தல்களில் தவெக – பாஜக கூட்டணியில், அதிமுக & கொசுறுகள் கூட்டுச் சேரும் வாய்ப்புகள் உள்ளன. தவெக – ஆட்சியில் பொறுக்கிக் கலாச்சாரம் & பொறுக்கி அரசியல் மேலும் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகளே அதிகம்.
    •••••• •••••• ••••••
    • மத்தியிலும் & மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வந்தாலும், உலகமயமாதல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு வளர்ச்சி (?) திட்டங்களின் பெயர்களில் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பல லட்சம் கோடிகளில் கடன்களைப் பெறுவதும், திட்டங்களில் ஊழல்கள் செய்து பல ஆயிரம் கோடிகளுக்கு சொத்துக்களைச் சேர்ப்பதும் தொடர் கதையாக நடைபெறுகிறது. பல ஆயிரம் கோடிகள் சொத்துக்களுக்காக உழைக்கும் மக்கள் போராடிப் பெற்ற உரிமைகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காக பலி கொடுக்கிறார்கள். உலக வர்த்தக நிறுவனத்தில் (WTO) உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளின் சுயசார்பு பொருளாதாரம் அழிக்கப்படுகிறது. அனைத்துத் தேவைகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையேந்தும் நிலைமைகள் ஏற்படுகிறது

    • வளர்ச்சி என்பது உழைக்கும் மக்களுக்கு ஏற்கனவே இருந்த சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை விட மேலும் மேம்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களாக இருக்க வேண்டும். மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போன்று பின் நோக்கி செல்வதாக இருக்கக் கூடாது. நாடு முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள், வேலை வாய்ப்புகளைத் தேடி நாடோடிகள் போன்று பல்வேறு மாநிலங்களை நோக்கி இடம் பெயர்கிறார்கள். இடம் பெயரும் தொழிலாளர்களின் பிரச்சனைகள் மற்றும் உரிமைகள் குறித்து ஆட்சியாளர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள். இவற்றைத் தான் வளர்ச்சி என்கிறார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க