
29.05.2026
பீகாரில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை சரி என்று
பாசிஸ்டுகளுக்கு பச்சைக்கொடி காட்டும் உச்ச நீதிமன்றம்!
பத்திரிகைச் செய்தி
2025-ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த நடவடிகையைத் தொடங்கியது. அதன்பிறகு 65 லட்சம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது குறித்து மிகப்பெரிய கண்டனங்கள் எழுந்தன.
அதைத் தொடர்ந்து ஏ.டி.ஆர், பி.யூ.சி.எல் போன்ற அமைப்புகள், கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்), மனோஜ் குமா் ஜா (ஆர்.ஜே.டி), மஹுவா மொய்த்ரா (திரிணாமுல் காங்கிரஸ்) உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்லவர் யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த நடவடிகையை எதிர்த்து வழக்குகள் தொடர்ந்தனர்.
அந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் பக்சி தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
“இதில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. தேர்தல் ஆணையம் எந்தவொரு சட்டரீதியான விதியையும், அரசியலமைப்பு ரீதியான விதியையும் மீறவில்லை. எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை என்பது நேர்மையான தேர்தல் நடைமுறையுடன் தொடர்புடையது.” என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
இது பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் நடந்த முறைகேடுகள் அனைத்தையும் மூடி மறைத்த தேர்தல் ஆணையம், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கும்பலுக்கு பச்சைக்கொடி காட்டுவதாகும்.
இதனை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த நடவடிக்கை மூலம் 65 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதில் மூன்றில் இரண்டு பங்கு இஸ்லாமியர்கள் என்கிறது புள்ளிவிவரம். அதிகளவிலான வாக்காளர்கள் நீக்கப்பட்ட பத்து மாவட்டங்களில், ஐந்து இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களாக உள்ளது.
இஸ்லாமிய மக்கள் அடர்த்தியாக வசிக்கும் கிழக்கு பீகாரிலுள்ள சீமாஞ்சல் பகுதியில் மட்டும் 2.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர். இது சிறப்பு தீவிர மறு ஆய்வின் முக்கிய நோக்கம் இஸ்லாமிய மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதே என்பதை அம்பலப்படுத்துகிறது.
இந்த நடவடிக்கைகள் இஸ்லாமிய மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டவை.
மேலும் நீதிபதி தனது தீர்ப்பில் “வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நோக்கத்திற்காக, குடியுரிமை தொடர்பான விவகாரங்களை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. அதே சமயம், தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதற்கு மட்டுமே குடியுரிமை விவகாரங்களை ஆய்வு செய்ய முடியும்.”
குடியுரிமையைச் சோதிப்பது, சட்டவிரோத குடியேற்றத்தைக் கண்டடைவதற்கான அதிகாரம் உள்துறை அமைச்சகத்திற்கே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் குறுக்குவழியில் இப்பாசிச நடவடிக்கையில் ஈடுபட்டதை தற்போது உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது.
ஆகவே கொள்ளை புற வழியாக குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தும் பாசிச மோடி அரசின் நோக்கத்தை அங்கீகரித்து நிறைவேற்றித் தந்துள்ளது உச்ச நீதிமன்றம்.
எஸ்.ஐ.ஆர் (சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம்) நடவடிக்கைகளை ஆதரிப்போர் மக்களுக்கு கிராமங்களில் ஒன்று நகரங்களில் ஒன்று என ஓட்டு போடும் உரிமை இரண்டு இடத்தில் உள்ளது அதை நீக்குவதற்குத் தான் எஸ்.ஐ.ஆர் என ஆதரித்து பேசுகின்றனர்.
ஆனால் பி.ஜே.பி ஆளக்கூடிய மாநிலங்களிலும், தமிழ்நாடு மேற்குவங்கம் போன்று பி.ஜே.பி கைப்பற்ற துடிக்கும் மாநிலங்களிலும் எஸ்.ஐ.ஆர் என்பது பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் கும்பல் இந்த தேர்தல் கட்டமைப்பில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்வதற்காகவும், இஸ்லாமிய மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றி வருவதையும் அவர்கள் மீதான அடக்கு முறையையும் கட்டமைக்கிறது. எஸ்.ஐ.ஆர்-ஐ ஆதரிப்பவர்கள் இதனைப் பேசாமல் அமைதி காக்கிறார்கள்.
சொல்லிக் கொள்ளப்படும் தேர்தல் ஜனநாயகம் என்பது போலியானது என்பதையும் உழைக்கும் மக்கள் மீதான அடக்கு முறையையும் ஒருங்கே கொண்டு வந்துள்ள இந்த சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் அடிப்படையில் மோசடியானது பாசிசமயம் ஆனது.
இந்தத் தீர்ப்பினை அனைத்து ஜனநாயக சக்திகளும் வன்மையாகக் கண்டிப்பதுடன் இந்த பாசிசமயமான எஸ்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யப் போராட முன் வருமாறு கழகம் கேட்டுக்கொள்கிறது.
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை உருவாக்குவதற்கான மாற்றத்திட்டத்தை முன்வைத்து மக்களை அணி திரட்ட வேண்டிய தேவையையும் கழகம் வலியுறுத்துகிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads




