தீவிரமடையும் நாடு கடத்தல்: மேற்குவங்க இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல்

இந்தியாவில் சட்டவிரோத குடியேறிகளை கைது செய்து நாடு கடத்துவது என்ற பெயரில் மாநில அரசுகளின் பெயரளவிலான உரிமைகளைப் பறித்து, எல்லை மாவட்டங்களிலும் பெருநகரங்களிலும் இராணுவத்தைக் குவிக்க வேண்டும் என்ற சதித்திட்டமும் பாசிச மோடி அரசிற்கு உள்ளது.

வங்கதேசத்திற்குள் அகதிகளாக விரட்டியடிக்கப்படும் மேற்குவங்க இஸ்லாமியர்கள்.

மேற்குவங்கத்தில் பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இஸ்லாமியர்களை இலக்கு வைத்து பாசிச தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. இதன் உச்சமாக, “கண்டறி, அழி, நாடு கடத்து” (Detect, Delete, Deport) எனும் பாசிச கொள்கையின் அடிப்படையில், இஸ்லாமிய மக்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ எனக் கூறி தடுப்பு முகாம்களில் அடைத்து வங்கதேசத்திற்கு நாடு கடத்தி வருகிறது. “ஆபரேஷன் புஷ்பேக்” (Operation Push-back) எனும் பாசிச திட்டத்தின் கீழ் இத்தாக்குதலை தொடுத்து வருகிறது.

கடந்த ஆண்டு காஷ்மீரில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஒன்றிய மோடி அரசு நாடு முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட வங்கமொழி பேசும் இஸ்லாமிய மக்களை சட்டவிரோத குடியேறிகள் எனப் பொய் குற்றஞ்சாட்டி கைது செய்து நாடு கடத்தியது. இந்த பாசிச திட்டத்தின் நீட்சியாகவே மேற்குவங்க பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.

சட்டவிரோதமாக நாடு கடத்தப்படும் இஸ்லாமியர்கள்

கடந்த மே 20 அன்று மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, “கண்டறி, அழி, நாடு கடத்து” என்ற பாசிச கொள்கையின்படி, ‘சட்டவிரோத குடியேறிகளை’ மாநில போலீசு கைது செய்து எல்லைப் பாதுகாப்புப் படையிடம் (BSF) ஒப்படைக்கும் என்று அறிவித்தார். அவர்களை அடைத்து வைப்பதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு முகாம்களை அமைக்க மே 23 அன்று பா.ஜ.க. அரசு உத்தரவிட்டது. அடுத்த நாளே, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் மால்டா, முர்ஷிதாபாத் மாவட்டங்களில் இரு தடுப்பு முகாம்களும், ஒரு வாரத்தில் மேலும் ஒன்பது முகாம்களும் அமைக்கப்பட்டன.

இத்தடுப்பு முகாம்களில் அப்பாவி இஸ்லாமியர்களைச் சட்டவிரோத குடியேறிகள் என்று பொய் குற்றஞ்சாட்டி அடைத்து சித்திரவதை செய்து, வங்கதேசத்திற்கு நாடு கடத்துவதில் பா.ஜ.க. அரசு தீவிரமாக உள்ளது. “10,000 சட்டவிரோத குடியேறிகளை வங்கதேசத்திற்குத் திருப்பி அனுப்பியிருக்கிறோம்; மேலும் 1,800 பேர் 12 தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்று சுவேந்து அதிகாரி ஜூன் 23 அன்று மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார். தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கலாம்.

சட்டவிரோத குடியேறிகள் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான மக்களை சிறைப்பிட்டித்து வைத்திருகும் போலீசு.

உள்நாட்டு, சர்வதேச சட்டவிதிகளை எல்லாம் தூரவீசிவிட்டு ஒன்றிய மோடி அரசும், மேற்குவங்க பா.ஜ.க. அரசும் இப்பாசிச நடவடிக்கையை அமல்படுத்தி வருகின்றன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் என அனைவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டியும் விலங்குகளைப் போல இழிவான முறையில் நடத்தியும் ஈவிரக்கமின்றி வங்கதேச எல்லைக்குள் விரட்டி வருகின்றன.

அதேசமயம், வங்கதேசத்திற்குள் சட்டவிரோதமாக விரட்டியடிக்கப்படும் இந்திய மக்களைத் தடுத்து நிறுத்தி மீண்டும் இந்தியாவிற்குள் விரட்டியடிக்கும் நடவடிக்கையில் வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது. இந்த ஈவிரக்கமற்ற இருமுனை தாக்குதலால், மக்கள் பலரும் வங்கதேசத்திற்குள் நுழைய முடியாமலும், இந்தியாவிற்குள் திரும்ப முடியாமலும், இரு நாடுகளுக்கும் இடையிலான “ஜீரோ லைன்” (Zero Line) பகுதியில் அகதிகளாக தங்க வேண்டிய இழிநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

அப்பகுதியில் கடும் வெயிலுக்கு மத்தியில் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் மற்றும் பாதுகாப்பின்றி வயல்வெளிகளிலும் மரத்தடியிலும் அம்மக்கள் நிர்கதியாக இருக்கும் காணொளிகள் “அல் ஜசீரா” போன்ற ஆங்கில செய்தி ஊடகங்களில் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றன.

சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கண்டனத்திற்குப் பிறகு, ஜீரோ லைன் பகுதியில் தவிக்கும் மக்களில் சிலரை இந்திய எல்லைக்குள் எல்லைப் பாதுகாப்புப் படை அனுமதித்தாலும், நாடு கடத்தும் பாசிச நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதனிடையே, கடந்த காலங்களில் பிழைப்புத் தேடி மேற்குவங்கத்திற்குள் வந்த மக்களும் சித்திரவதைக்கு அஞ்சி எல்லையில் குவிந்து வருகின்றனர். இக்கொடூரத்தை “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததால் சட்டவிரோத குடியேறிகள் பயந்து வெளியேறி வருகிறார்கள்” என மோடியின் அடிவருடி ஊடகங்கள் (Godi Media) வக்கிரமாக பரப்பி வருகின்றன. மாறாக, அம்மக்கள் சட்டவிரோதமாக நாடு கடத்தப்படுவது குறித்தோ அவர்கள் படும் துன்பங்கள் குறித்தோ ஊடகங்கள் வாய்திறப்பதில்லை.

மேலும், மேற்குவங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இஸ்லாமியர்களும் சட்டவிரோத குடியேறிகள் என்ற பெயரில் பா.ஜ.க. அரசால் நாடு கடத்தப்படுகின்றனர். “எஸ்.ஐ.ஆர். (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களை நாடு கடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது” என மே 19 அன்று பவானிபூர் தொகுதியில் சுவேந்து அதிகாரி பேசியுள்ளார். இது, எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 31 இலட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும் பாசிச கும்பலால் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர்த்துகிறது.

குடியுரிமைச் சட்டத்தின் கீழ் வரும் பிற மதத்தினர் நாடு கடத்தப்படமாட்டார்கள் என்று சுவேந்து அதிகாரி தெரிவித்திருப்பது, இது இஸ்லாமியர்களுக்கு எதிரான அப்பட்டமான பாசிச நடவடிக்கை என்பதை உறுதி செய்கிறது. கடந்த ஆண்டில் “ஆபரேஷன் புஷ்பேக்” நடவடிக்கையிலும் இந்தியப் பூர்வீக இஸ்லாமியர்கள் நாடு கடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. இதற்கு உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற அதிகார அமைப்புகளும் துணை நிற்கின்றன.

இந்திய இஸ்லாமியர்கள் எதிர்நோக்கியுள்ள
பாசிச பேரபாயம்!

இந்தியாவின் அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களும் வங்கதேசத்துடன் 4,096 கிலோ மீட்டர் தொலைவிற்கு எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. வறிய மக்கள் வாழ்வாதாரத்திற்காகப் புலம்பெயர்வது இங்கு நூற்றாண்டு கால வரலாறு. இதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் பாசிச கும்பல் இம்மாநிலங்களில், ”சட்டவிரோத குடியேறிகள் இந்திய நிலங்களை ஆக்கிரமிக்கிறார்கள், வேலைவாய்ப்புகளைப் பறிக்கிறார்கள், பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறார்கள்” என நச்சுப் பிரச்சாரம் செய்து, இந்துமதவெறி – தேசவெறியைத் தூண்டித் தனது அடித்தளத்தை விரிவுபடுத்துகிறது.

இதன் தொடர்ச்சியாகவே, மேற்குவங்க பா.ஜ.க. அரசின் தற்போதைய ஒடுக்குமுறையையும், இஸ்லாமியர்களைச் சட்டவிரோத குடியேறிகள் எனத் தடுப்பு முகாம்களில் அடைத்து நாடு கடத்தும் நடவடிக்கையையும் பார்க்க வேண்டும். இதன் மூலம் பெரும்பான்மை மக்களிடம் இந்துமதவெறி – தேசவெறியை விதைப்பது; இஸ்லாமியர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்நடவடிக்கை மேற்குவங்கத்தின் சமத்துவக் கூறுகளையும், பார்ப்பனிய – பா.ஜ.க. எதிர்ப்பு மரபையும் ஒழித்துக்கட்டி மேற்குவங்கத்தை இந்துராஷ்டிரத்திற்கான சோதனைச்சாலையாக மாற்றுவதன் அங்கமாகும்.

அதைப் போல், எல்லைப்புற மாவட்டங்கள் மற்றும் தொழில் நகரங்களில் நடக்கும் மக்களின் இடப்பெயர்வை மதிப்பிட, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பிரகாஷ் பிரபாகர் நவோலேகர் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை மே மாதத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இக்குழு தெரிவிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் ‘சட்டவிரோத குடியேற்றங்களை’ கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்ட, நிர்வாகக் கொள்கைகளை ஒன்றிய அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இந்த உயர்மட்டக் குழுவின் அறிவிப்பை, நாடு தழுவிய மூன்று கட்ட எஸ்.ஐ.ஆர். (SIR) அமலாக்கத்துடனும், அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு முகாம்களைக் கட்ட வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கடந்த ஆண்டு அறிவிப்புடனும் இணைத்துப் பார்க்க வேண்டும். அதாவது, ‘குடியேற்றக் கட்டுப்பாடு’ என்ற பெயரில் ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமியர்கள் மீதும் தாக்குதல் நடத்த மோடி அரசு ஆயத்தமாகி வருகிறது.

இந்தியாவில் சட்டவிரோத குடியேறிகளை கைது செய்து நாடு கடத்துவது என்ற பெயரில் மாநில அரசுகளின் பெயரளவிலான உரிமைகளைப் பறித்து, எல்லை மாவட்டங்களிலும் பெருநகரங்களிலும் இராணுவத்தைக் குவிக்க வேண்டும் என்ற சதித்திட்டமும் பாசிச மோடி அரசிற்கு உள்ளது. இது, அமெரிக்காவில் மாகாண உரிமைகளைப் பறித்து, இராணுவத் தேடுதல் வேட்டை மூலம் டிரம்ப் அரசு குடியேறிகளை நாடு கடத்தும் பாசிச நடவடிக்கையை ஒத்துள்ளது.

இன்று இஸ்லாமியர்கள் மீது தொடுக்கப்படும் இப்பாசிச தாக்குதலானது, நாளை, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பலுக்கு எதிராக குரல் கொடுத்து போராடிவரும் ஜனநாயக சக்திகள் மீதும் தொடுக்கப்படும்; நக்சலைட்டுகள், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு பாசிச எதிர்ப்பு சக்திகள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுவர்.

ஆனால், பாசிச கும்பலின் இந்நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் எந்தவித போராட்டத்திலும் ஈடுபடாமல், பெயரளவிலான கண்டனங்களுடன் நிறுத்திக் கொள்கின்றன. இஸ்லாமியர்களின் பா.ஜ.க. எதிர்ப்புணர்வை வாக்குகளாக அறுவடை செய்துகொள்ளும் இக்கட்சிகள், தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு அப்பட்டமாக துரோகமிழைக்கின்றன.

மேற்குவங்கத்தில் இஸ்லாமியர்கள் மீது தொடுக்கப்பட்டுவரும் இப்பாசிச தாக்குதல் நாடு முழுவதும் விரிவடைந்து வருகிறது. அதனை தடுத்து நிறுத்த வேண்டியது பாசிச எதிர்ப்பு புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமையாகும். ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய எல்லைகளில் பரிதவித்து வருவதற்கு எதிராக மனிதநேயம் கொண்ட ஒவ்வொருவரும் உடனடியாக குரலெழுப்ப வேண்டும். மோடி அரசின் பாசிச நடவடிக்கையை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி போராட்டங்களைக் கட்டியெழுப்ப வேண்டும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க