Tuesday, December 10, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழல்: வழக்கு நீர்த்துப் போகும் காரணம் என்ன?

ஸ்பெக்ட்ரம் ஊழல்: வழக்கு நீர்த்துப் போகும் காரணம் என்ன?

-

ஸ்பெக்ட்ரம் ஊழல்: வழக்கு நீர்த்துப் போகும் காரணம் என்ன?
படம் - www.thehindu.com

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நடந்த பிரம்மாண்டமான ஊழலை மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.  நாமோ அப்போதே இதை வெறும் ஊழல் மட்டுமல்ல – கார்ப்பரேட் பகற்கொள்ளை என்றோம். மட்டுமல்லாமல், இந்த ஊழல் தனியார்மய தாராளமயக் கொள்(ளை)கை  எனும் அடித்தளத்தில் நிற்கிறது என்பதை எமது பதிவுகளிலும், பத்திரிகைகளிலும் சுட்டிக் காட்டி எழுதினோம். தனியார்மயத்தை  ஆதரித்துக் கொண்டே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை  ஊழல் என்று தனியாக பிரிக்க முடியாது என்பதையும் வலியுறுத்தியிருந்தோம்.

கடந்த மாதத்தில் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு சர்க்கஸ் நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் இந்த வழக்கு விசாரணைகளில் நடந்துள்ள சில முக்கியமான விஷயங்கள் ஏற்கனவே நாம் வைத்த வாதங்களை மெய்பிப்பதாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் தேசிய அளவிலான ஒரு விவாதப் பொருளாக ஆனபின் உச்சநீதிமன்ற உத்திரவின் கீழ் விசாரணையைத் துவக்கும் சிபிஐ, இதில் சுமாராக முப்பதாயிரம் கோடிகள் அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என்று ஒரு குத்துமதிப்பாக தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டது.

பின்னர், இந்த ஊழலில் குறிப்பாக ஏற்பட்ட இழப்பின் அளவு என்ன என்பதை தொலை தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஜனவரி 19-ம் தேதி சி.பி.ஐ கேட்டது. இதற்காக ஒரு ‘நிபுணர்’ குழுவை தொலைதொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அமைத்தது. சி.பி.ஐயிடம் செப்டெம்பர் முதல் வாரத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்த அக்குழு, அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு ஏதும் இல்லையென்றும், நியாயமாகப் பார்த்தால் மூவாயிரம் கோடியில் இருந்து ஏழாயிரம் கோடிகள் வரை லாபம் கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் ஏதும் நடக்கவே இல்லை என்று ஆ.ராசாவைத் தொடர்ந்து தொலைதொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் கபில் சிபல் தெரிவித்து வருகிறார். இதே பாட்டை மன்மோகன் சிங்கும் பாராளுமன்றத்தில் பாடியிருக்கிறார்.

ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஏலம் விடவில்லை என்றும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற கொள்கையைக் கடைபிடித்தார் என்றும், இதனால் தான் ஊழலுக்கு வழியேற்பட்டது என்றும் ஆங்கில ஊடகங்கள் எழுதி வந்த நிலையில், ஆகஸ்ட் 20-ம் தேதியிட்ட தனது கடிதம் ஒன்றில், ட்ராய் செயலாளர் ஏ.கே. அர்னால்ட், “ஸ்பெக்ட்ரமை ஏலம் விடக்கூடாது என்பது தான் தமது கொள்கை, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பொருத்தமட்டில் அதை ஒரு வருமானம் ஈட்டும் வகையினமாகக் கருதக் கூடாது என்பதே ட்ராயின் கொள்கை முடிவு” என்றும் தெரிவித்திருந்தார்.

ஆக, இப்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தேசத்திற்கு பாரதூரமான இழப்பை ஆ.ராசா ஏற்படுத்தி விட்டார் எனும் குற்றச்சாட்டை தொலைத்தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையமே காலாவதியாக்கி விட்டது. அடுத்து, ‘இதையே ஏலம் விட்டிருந்தால்….’ எனும் கேள்விக்கும் மடையடைத்து விட்டது. மேலும், ஒரு பொருளைக் களவு கொடுத்தவனின் குற்றச்சாட்டு தான் குற்றவியல் விசாரணைக்கே மிக அடிப்படையான ஆதாரம் – இங்கோ, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை யாருக்கு சொந்தமோ – அதாவது அரசு – அவரே, இதில் இழப்பு ஏதும் இல்லை என்பதை பாராளுமன்றத்துக்கு உள்ளும் வெளியேயும் பட்டவர்த்தனமாக சொல்லியாகிவிட்டது.

மட்டுமல்லாமல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பலனடைந்த டாடா குழுமத்துக்கு சி.பி.ஐயே முன்வந்து தனது குற்றப்பத்திரிகையில் பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளது. மேலும் சம்பந்தமே இல்லாமல், ‘எங்கப்பன் குதிருக்குள்ள இல்லையே..’ என்கிற கணக்கில் ‘மன்மோகன் சிங் நெம்ப நல்லவராக்கும்‘ என்றும் குற்றப்பத்திரிகையில் சொருகியிருக்கிறது.

அடுத்து, ஊழல் நடந்திருப்பதற்கு சான்றாக குறைந்த விலையில் வாங்கிய அலைக்கற்றை உரிமத்தை, வேறு பன்னாட்டு கம்பெனிகளுக்கு அதிக விலைக்குக் கைமாற்றி விட்டதை குறிப்பிட்டார்கள். இந்நிலையில் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கிய ஆ.ராசா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் எனும் வகையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் தான் எடுத்த முடிவுகளால் அரசுக்கு இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும், இதில் ஊழல் நடைபெறவில்லை என்றும், தனது முடிவுகள் அனைத்தும் பிரதமருக்கும் பா. சிதம்பரத்துக்கும் ஏற்கனவே தெரியுமென்றும், தேவைப்பட்டால் அவர்கள் இருவரையும் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் ஆ.ராசா மன்மோகன் சிங்கின் டவுசரை அவிழ்த்ததும், ஆங்கிலச் செய்தி ஊடகங்களில் தோன்றிய சிதம்பரம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று ஏற்கனவே கபில் சிபலும் பிரதமரும் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார். மேலும், ஒரு நிறுவனம் தனது பங்குகளை விற்பதோ அல்லது முதலீடுகளை வெளிச்சந்தையில் இருந்து கோரிப் பெறுவதோ சட்டப்படி தப்பே இல்லை என்று தெரிவித்தார்.

இதற்கிடையே தனது ஆகஸ்ட் 29-ம் தேதியிட்ட அறிக்கையில், ஆ.ராசாவுக்கும் யுனிடெக்குக்கும் இடையிலான பணப்பரிவர்த்தனையையோ, ரிலையன்ஸால் போலியாக உருவாக்கப்பட்ட ஸ்வான் டெலிகாமுக்கும் அதனால் ரிலையன்ஸ் அடாக் குழுமத்துக்கு கிடைத்த ஆதாயத்தையோ நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. அதே போல், மாக்ஸிஸ் நிறுவனத்திடம் இருந்து தயாநிதி மாறனும் சன் டிவி குழுமமும் லஞ்சம் பெற்று, ஏர்செல்லின் பங்குகளை அடாவடியாக மாக்ஸிஸ் நிறுவனம் கைப்பற்ற வகைசெய்தார்கள் எனும் குற்றச்சாட்டையும் நிரூபிக்க போதுமான ஆதாரம் ஏதும் இல்லை என்று சிபிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆக, இந்த விவரங்களில் இருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால், சிபிஐயே ஊழல் பெருச்சாளிகள் புகுந்து புறப்படுவதற்கான அத்தனை ஓட்டைகளையும் தனது குற்றப்பத்திரிகைகளிலும் விசாரணை அறிக்கைகளிலும் செய்து முடித்துள்ளது என்பதைத் தான். இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இது அனைத்தும் அண்ணா ஹசாரே நாடகம் சிறப்பாக நடந்தேறிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் நடந்து முடிந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பொருத்தளவில், அரசுக்குச் சொந்தமான அலைக்கற்றையை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லிடம் அளிக்காமல் தனியாருக்கு விற்பது என்று முடிவெடுத்த இடத்தில் தான் இந்த மோசடியின் மையம் உள்ளது. பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லை முடக்கி வைப்பது என்கிற ‘கொள்கை’ முடிவின் ஆரம்பம் காட் ஒப்பந்தத்தில் இருக்கிறது. ஆக, பொதுச் சொத்தை கூறு கட்டி தனியாருக்கு தாரை வார்ப்பதை கொள்கையாக வைத்திருப்பதில் தான் ஊழலின் அச்சு இருக்கிறது. ஊழலை எதிர்க்க வேண்டுமென்றால், தனியார்மய தாராளமய பொருளாதாரக் கொள்கையை எதிர்க்க வேண்டியிருக்கும். ஒன்றை விட்டு ஒன்றைப் பேசுவதும், ஒன்றை ஆதரித்துக் கொண்டு இன்னொன்றை எதிர்ப்பதும் அடிப்படையிலேயே முட்டாள்தனமானது.

ஆனால், இந்த முட்டாள்தனம் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவந்த சமயத்தில் தேசிய  ஊடகங்களில் இருந்து நம் தமிழ் வலைப்பதிவு உலகம் வரையில் நடந்து வந்தது. இந்த ஊழலைக்  குறித்து வலைப்பதிவுகளில் எழுதியவர்களில் பெரும்பாலானோர் இந்த அமைப்பு முறையை மனதார நம்புகிறவர்கள். இந்த ஊழல் நீதிமன்றத்தில் வைத்து முறையாக விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட்டுவிடும் என்று இன்னமும் நம்புபவர்கள். இதோ, இந்த வழக்கையே ஒட்டுமொத்தமாக நீர்த்துப் போகச் செய்யும் சி.பி.ஐயின் சதிகள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையிலும் அவர்களது நம்பிக்கையின் தரமென்ன என்று கேட்கிறோம்.

முக்கியமாக இவர்கள் தான் ஊழலுக்கும் தனியார்மய கொள்கைகளுக்கும் தொடர்பே இல்லை என்றும், தனியார்மயம் தான் போட்டியை ஊக்குவித்து தரமான சேவை கிடைப்பதை உறுதி செய்ய வல்லது என்றும் பேசினார்கள். ஊழலுக்கும் லஞ்சத்துக்குமான அடிப்படை வேறுபாடு கூட தெரியாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் தரகர்கள் பெரும் லஞ்சத்தையும் ஸ்பெக்ட்ரம் போன்ற கார்ப்பரேட் பகற்கொள்ளையையும் இணைவைத்துப் பேசினார்கள்.

ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் எனும் பிரம்மாண்டம் அளித்த அதிர்ச்சி மயக்கத்திற்கு இப்போது சி.பி.ஐ விசாரணையின் பித்தலாட்டங்கள் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டுக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு தேசத்தின் வளங்களின் மேலிருக்கும் உரிமையை மறுப்பதிலிருந்தும், அதை பங்கு வைத்து பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப் பரிமாற வேண்டும் என்கிற இந்தக் கைக்கூலிகளின் துரோகத்தனங்களிலிருந்துமே ஊழலுக்கான ஆரம்ப விதை தூவப்படுகிறது. அதற்குத் தண்ணீர் ஊற்றி வளர்ப்பது தான் சி.பி.ஐ, போலீசு, நீதிமன்றம் போன்ற அரசு அலகுகளின் நடைமுறையாக உள்ளது.

இதில் எரியும் அடிக்கொள்ளியான மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி முறியடிக்கும் போது, அதற்கு இசைவாய் ஒத்து ஊதிக் கொண்டிருக்கும் இந்த அரசு இயந்திரங்களின் கொதிப்பு தானே அடங்கிப் போகும்.

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

  1. //அரசுக்குச் சொந்தமான அலைக்கற்றையை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லிடம் அளிக்காமல் தனியாருக்கு விற்பது என்று முடிவெடுத்த இடத்தில் தான் இந்த மோசடியின் மையம் உள்ளது.///

    அப்படியா ? ஒரு ஒரு கேள்வி மட்டும் உங்களுக்கு : ஊழலில் ஊற்றுகண் தனியார்மயம் தான் என்றால், கடைசியாக நடந்த 3ஜி ஏலத்தில் என்ன ஊழல் நடந்தது என்று சொல்லுங்களேன். அதன் மதிப்பை கொண்டு தான் 2ஜி ஊழலின் மதிப்பை அளக்க முடிந்தது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். என்னவோ ஊழல் இந்த விசியத்தில் தொடர்ந்து நிகழ்வது போல் பேசுகிறீர்கள். 40 ஆண்டுகள் லைன்செஸ் ராஜ்யத்தின் விளைவுகள் (long term effects) வெளிப்பட்டுகொண்டே இருக்கிறது. அதை களையவும் முயற்ச்சிகள் ஓரளவு நிகழ்கிறது. 3ஜி ஏலம் வெற்றிகரமாக, ஊழல் இல்லாமல், லச்சம் கோடிகளுக்கு நடந்திருப்பதே சாட்சி.

    //// பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லை முடக்கி வைப்பது என்கிற ‘கொள்கை’ முடிவின் ஆரம்பம் காட் ஒப்பந்தத்தில் இருக்கிறது. ஆக, பொதுச் சொத்தை கூறு கட்டி தனியாருக்கு தாரை வார்ப்பதை கொள்கையாக வைத்திருப்பதில் தான் ஊழலின் அச்சு இருக்கிறது. ஊழலை எதிர்க்க வேண்டுமென்றால், தனியார்மய தாராளமய பொருளாதாரக் கொள்கையை எதிர்க்க வேண்டியிருக்கும். ஒன்றை விட்டு ஒன்றைப் பேசுவதும், ////

    1994 வரை தொலைதொடர்பு, தொலைகாட்சி, விமான சேவை போன்ற துறைகளில் தனியார்களுக்கு அனுமதியே இல்லை. அரசு மட்டும் தான் ‘சேவைகளை’ அளித்தது. அன்று நிலைமை எப்படி இருந்தது ? இன்று வரை தனியார்களை இத்துறைகளில் அனுமதிக்காமலே, பழைய முறையிலேயே தொடர்ந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ?
    இந்த உரையாடல் இங்கு சாத்தியமாகியிருக்காது. தொலைபேசி மற்றும் இணைய கட்டிணங்கள் 1990 அளவில் மிக மிக அதிகமாக, பெரும்பாலனவர்களுக்கு எட்டாகனியகவே இருந்திருக்கும். ஒரு இணைப்பு வாங்க பல வருடங்கள் காத்திருக்க வேண்டும். எ.பி கோட்டா மற்றும் ஊழல் மலிந்திருக்கும். பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கொழுத்திருப்பார்கள்.

    ஊழல் பற்றி ‘மட்டும்’ தான் பேசுவீர்கள். ஆனால் தனியார்கள் போட்டியிட ஆரம்பித்தால் உருவான மலிவான, அருமையான தொலைதொடர்பு சேவைகளை (இணைய வசதிகள், கம்யூட்டர்கள், செல்போன்கள்) ‘தாரளமாக’ பயன்படுத்திக்கொண்டே தொடர்ந்து உங்க இத்து போன் பல்லவியை பாடுவது பெரிய முரண்நகை !!

    ஊழலில் ஊற்றுகண் அரசுமயம் தான். அதாவது ஜனனாயக சோசியலிச பாணி என்று பெயரில் இங்கு 40 ஆண்டுகள் நிகழ்ந்த crony capitalism or crony socialism தான் மூலக்காரணம். வெறும் 20 ஆண்டுகளில் அதன் கேடுகளை, விளைவுகளை நீக்கிவிட முடியாது. தனியார்மயம் தான் காரணம் என்றால், பிறகு முற்றிலும் தனியார்மயமான பல அய்ரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் ஊழல் ஏன் மிக மிக குறைவாக உள்ளது. இதே செல்போன் சேவைகள், கனிம வளங்களை ஏலம் விடுதல், (பெட்ரோலிய, நிலக்கரி, இரும்பு, காப்பர் சுரங்கங்கள் அங்கும் உண்டு. ஆனால் இந்தியா போல் ஊழல்மயமாகவில்லை. ஏன் ?

    • //3ஜி ஏலத்தில் என்ன ஊழல் நடந்தது என்று சொல்லுங்களேன். அதன் மதிப்பை கொண்டு தான் 2ஜி ஊழலின் மதிப்பை அளக்க முடிந்தது என்பதும் //

      அப்படி அளந்தது தவறு என்பது தான் ட்ராயின் முடிவு. சி.பி.ஐயும் அப்படித் தான் சொல்கிறது. எனவே இந்த விஷயத்தில் நீங்கள் நீதிமன்றத்திலும் சி.பி.ஐயிடமும் பேசலாம்.

      //கடைசியாக நடந்த 3ஜி ஏலத்தில் என்ன ஊழல் நடந்தது என்று சொல்லுங்களேன்//

      முதலில் பொதுச்சொத்தான ஒரு வளத்தை தனியாரிடம் கையளிப்பது – அதிலிருந்து தனியார் நிறுவனம் லாபம் சம்பாதிக்க அனுமதிப்பது – அதிலும் அதே தொழிலை ஒரு பொதுத்துறை நிறுவனம் செய்யும் திறன் இருக்கும் போதே செய்வது என்பது ஊழல் இல்லை என்கிறீர்களா?

      இன்று மலைகளையும், பரந்த நிலப்பரப்புகளையும், ஆறுகளையும், தனியார் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு தாரைவார்ப்பதும் – அதில் இருந்து அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க அனுமதிப்பதும் ஊழல் இல்லையா?

      பொதுத்துறை நிறுவனங்கள் சிலவற்றை கைமாற்றியது பற்றிய விவரங்கள் சிலவற்றை இங்கே தருகிறேன்… இது ஊழல் இல்லை என்றால் எது ஊழல் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

      வி.எஸ்.என்.எல் நிறுவனத்தை டாடாவுக்கு அடிமாட்டு விலைக்கு விற்றது. கூடவே சேர்த்து அதன் நிதி ரிசர்வையும் அசையாச் சொத்துக்களையும், பல்லாயிரம் ஏக்கர் நிலங்களையும் இலவச இணைப்பாக கொடுத்தது.

      லாபத்தில் இயங்கிய மாடர்ன் ப்ரெட் நிறுவனத்தை கள்ளத்தனமாக கணக்கெழுதி, நட்டக் கணக்குக் காட்டி அடிமாட்டு விலைக்கு விற்றது.

      நல்ல லாபத்தில் இயங்கிய பால்கோ வின் பங்குகளை விற்றது.

      லாபத்தில் இயங்கிய இந்துஸ்தான் டெலி பிரின்டர்ஸின் மதிப்பை குறைத்துக் காட்டி விற்றது.

      இந்நிறுவனங்களெல்லாம் பொதுத்துறை நிறுவனங்கள் தான். நல்ல முறையில் இயங்கியவை தான். தரமான சேவை வழங்கிய நிறுவனங்கள் தான். இவற்றை ஏன் தனியார் மயமாக்க வேண்டும்?

      கடைசியாக, தனியார் சேவை தான் தரமான சேவை என்றால், போலீசு, ராணுவம், நீதிமன்றம், சிறைச்சாலைகளையும் தனியாருக்கே விட்டு விடலாமே? அது மட்டும் ஏன் அரசு நடத்த வேண்டும்? மற்ற கேள்விகளுக்கு இல்லாவிட்டாலும் இதற்காவது பதில் சொல்லுங்களேன்.

  2. //முதலில் பொதுச்சொத்தான ஒரு வளத்தை தனியாரிடம் கையளிப்பது – அதிலிருந்து தனியார் நிறுவனம் லாபம் சம்பாதிக்க அனுமதிப்பது – அதிலும் அதே தொழிலை ஒரு பொதுத்துறை நிறுவனம் செய்யும் திறன் இருக்கும் போதே செய்வது என்பது ஊழல் இல்லை என்கிறீர்களா?///

    Good. in fact, very good. நான் சொல்ல வந்ததை மிக ‘சரியாகவே’ புரிந்து கொண்டுள்ளீர்கள் !!! தனியாருக்கு இந்த வளங்களை, முக்கியமாக செல்போன் ஸ்பெக்டரங்களை ‘தாரை வார்ப்பதை’ முற்றாக நாம் தவரித்திருக்க வேண்டும். 1990 வரை இருந்த ‘தனியார்களே இல்லாத’ முறை இன்று வரை தொலைதொடர்பு சேவைகளில் இருந்திருக்க வேண்டும். அப்ப தான் உங்களை போன்ற நிபுணர்களிடம் ‘விவாதிக்கும்’ பாக்கியம் எம்மை போன்ற பேதைகளுக்க்கு கிடைத்தே இருக்காது. வினவு தளமே உருவாகியிருக்காது. ம.க.இ.க தோழர்கள், தங்கள் பத்திரிக்கையான ‘புதிய ஜனனாயகத்தை’ அன்று போல் மட்டமான பேப்பரில் அச்சிட்ட்டு, தெருக்களில் கூவி விற்று, ‘பிரச்சாரம்’ செய்வது இன்று வரை அப்படியே தொடர்ந்திருக்கும். என்ன செய்வது. விதி யாரை விட்டுது. நாரயணா, என்னே உன் லீலை ? :)))

    வளர்ந்து நாடுகளில் இதே போல் தனியார்களுக்கு கனிம வளங்கள் மற்றும் அலைகற்றைகள் ஊழல் இல்லாத முறை அளிக்கப்பட்டுவதை பற்றியும் ஒரு அற்ப கேள்வி எழுப்பியிருந்தேன். அதை பற்றியும் திருவாய்மலர்ந்திடுங்களேன், திரு.மன்னார்சாமி அவர்களே.

    இணையத்தின் மகிமை பற்றி ஆண்டாள் ப்ரியதர்ஷிணி என்னும் கவிஞர் முன்பு எழுதிய அற்புதமான கவிதை இது : (ரொம்ப சீரியசா விவாதித்து போரடிப்பதால், கவிதை கொஞ்சம்)

    ‘எலிப்பொறிக்குள் மனிதர்கள்’

    எல்லாருமே
    பிள்ளையார் ஆகிவிட்டோம்
    உலகமே
    எலி வாகனத்தில்
    பயணிக்கிறது

    சிவ பார்வதியைய் சுற்றிய
    பிள்ளையாராக
    வாமன வாரிசுகள்
    ஓரடிப் பெட்டிக்குள்
    உலகைச் சுற்றுகிறார்கள்.

    கால்களைக் கழற்றிவிட்டுக்
    கைவிரல்களால்
    ஊழித் தாண்டவம்
    ஆடுகிறோம்
    அரூபச் சிலந்தி வலையை
    எலியால் பிறாண்டிப்
    பிறாண்டிப் பிரபஞ்சம் தாண்டித்
    தேடுகிறோம்

    எலிக்கு மனித வாகனம்
    இருபத்தொன்றில்
    வாழ்க எலி சாம்ராஜ்யம் !

    -ஆண்டாள் பிரியதர்ஷினி

    நன்றி : சுஜாத்தாவின் கற்றதும் பெற்றதும்.

  3. திரு.மன்னார்சாமி சொன்ன நிறுவனங்கள் சில ஆன்டுகள் விட்டிருந்தால், அதியமான் சொல்வதைப் போல கேவலமாகத்தான் ஆகியிருக்கும்.

  4. “மக்களுக்கு தேசத்தின் வளங்களின் மேலிருக்கும் உரிமையை மறுப்பதிலிருந்தும், அதை பங்கு வைத்து பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப் பரிமாற வேண்டும் என்கிற இந்தக் கைக்கூலிகளின் துரோகத்தனங்களிலிருந்துமே ஊழலுக்கான ஆரம்ப விதை தூவப்படுகிறது. அதற்குத் தண்ணீர் ஊற்றி வளர்ப்பது தான் சி.பி.ஐ, போலீசு, நீதிமன்றம் போன்ற அரசு அலகுகளின் நடைமுறையாக உள்ளது”
    dont divert the issue athiyaman.the main issue vinavu writing in this is as shown above,i think.do u agree r no.

    • “மக்களுக்கு தேசத்தின் வளங்களின் மேலிருக்கும் உரிமையை மறுப்பதிலிருந்தும்”

      எனக்கு புரியவில்லை. ஸ்பெக்ட்ரத்தை எப்படி பொது மக்களுக்குப் பிரித்தளிப்பது? நீங்கள் பி.எஸ்.என்.எல் கைப்பேசி பயன்படுத்துகிறீர்களா? உங்கள் கால் சார்ஜ் எவ்வளவு? தனியார் நிறுவனங்களின் கால் சார்ஜ் எவ்வளவு? நீங்கள் கூறுவது போல பி.எஸ்.என்.எல் மட்டுமே இந்த ஸ்பெக்ட்ரத்தைப் பயன்படுத்தினால் கட்டணம் கட்டாயம் அதிகமாகவே இருக்கும். ச்ர்வீஸ் சரி இல்லை என புகார் கொடுத்தால் மதிக்கக்கூட மாட்டார்கள். உனக்கு வேறு மாற்று எதுவும் இல்லை. என்னிடம் தானே வந்தாகவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். அப்போது தான் மக்களுடைய உரிமை பறிக்கப்பட்டிருக்கும்.

      நீங்கள் ஏதோ இயற்கை வளங்களை ஒ.சி. யில் தருவது போல பேசுகிறீர்கள். டெண்டர் விட்டு தான் தரப்படும். நிறுவனங்கள் தேவை இல்லா செலவுகளை குறைப்பது, தரத்தைக் தக்கவைத்துக்கொள்வது, தடை இன்றி சேவை, கஸ்டமர் ச்ர்வீஸ் என எல்லாவற்றையும் ஒழுங்காக செய்தால் தான் லாபம் ஈட்ட முடியும். அப்படி செய்யும்போது, தரம் அதிகரிக்கும். இது தான் மார்க்கெட் விதி. உதாரணம்: ஒரு வேளை நோக்கியா அரசு கன்பெனி என்று வைத்துக்கொள்வோம். போட்டி தனியார் இல்லை என்று வைத்துக்கொள்வோம். அப்படி ஒரு சூழலில், நாம் இன்றும் 3230 மாடல் தான் வைத்திருப்போம். அதுவும் புக் செய்து 6 மாதம் கழித்து தான் கிடைத்திருக்கும்.

      டெண்டர் விடுவதில் ஊழல் என்றால், அதில் தனியாரிடம் முறை இல்லாபமல் வியாபாரம் செய்யும் அரசு இயந்திரமே காரணம்.

      • நான் அரசு இயந்திரம் என் குறிப்பிட்டது, டெண்டரின் போது நியாயமாக செயல்படாமல் முறை தவறி மேஜைக்கு கீழே வியாபாரம் பேசுபவர்களை..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க