privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விசிதம்பரம் காமராஜ் பள்ளியின் ரவுடி முதலாளி !

சிதம்பரம் காமராஜ் பள்ளியின் ரவுடி முதலாளி !

-

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் சங்கத்தின் இடைவிடாத போராட்டத்தால் இந்த ஆண்டு அரசு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. உதிரி செலவுகள் என சொல்லி 2500 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் பெற்றோர் சங்கத்தை சேர்ந்த நடராசன் என்பவர் கல்வி கட்டணம் செலுத்த தாமதம் ஆகிவிட்டது என ஆறாம் வகுப்பு படிக்கும் அவரது மகன் டேவிட் ராஜாவை மாதாந்திர தேர்வு எழுத விடாமல் அரை நாள் வெளியே நிற்க வைத்துவிட்டது பள்ளி நிர்வாகம். கட்டணம் சீக்கிரம் செலுத்தி விடுகிறேன். அடுத்த தேர்வில் என் மகனை வெளியே நிற்க வைக்காதீர்கள் என பள்ளி நிர்வாகத்திடம் முறையிட சென்ற நடராசனை 1-45 மணி நேரம் காக்க வைத்து முதல்வர் சக்தி என்பவரை பார்த்து முறையிடுகிறார்.

பேசிக் கொண்டிருக்கும் போதே தாளாளர் லட்சுமி காந்தன் உள்ளே வந்து, “இவனை யார் உள்ளே விட்டது ஏன் உட்கார வைத்து பேசுகிறீர்கள் வெளியே போடா” என கெட்ட வார்த்தையில் திட்டினார்.

நடராசன் “மரியாதையா பேசுங்க” என பதில் அளித்தார். சக ஆசிரியர்களை பார்த்து, “என்ன வேடிக்கை பார்க்கறீர்கள்” என சொல்லி லட்சுமி காந்தன் நேரடியாக நடராசனை அடித்தார். சுரேஷ், மணிகண்டன் மற்றும் இரு ஆசிரியர்களும் கடுமையாக தாக்கி வயிற்றில் எட்டி உதைத்தனர். “உன்னாலதான்டா எங்களுக்கு இவ்வளவு பிரச்சினை” எனச் சொல்லி அடித்துள்ளனர்.

நடராசன் சர்க்கரை நோயால் மிகவும் பாதிக்கபட்டவர். தினக்கூலி வேலை செய்து வருகிறார். அவரது தந்தை நான்கு நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். நடராசனை தாக்கியதுடன் போலீசில் குடித்து விட்டு தகராறு செய்கிறார் என புகாரும் கொடுத்து வேனில் ஏற்றி அனுப்பினார் பள்ளி தாளாளர். மேலும் கட்டணத்திற்கு எதிராக யார் பேசினாலும் இதுதான் கதி என எச்சரித்தார். இரண்டாண்டுகளுக்கு முன்பு கட்டாய டி.சி. கொடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் கல்விதுறை அதிகாரிகள் விசாரணை , உள்ளருப்பு போராட்டம் என பள்ளி நிர்வாகத்தை தொடர்ந்து பணிய வைத்ததற்கு காரணம் இந்த நடராசன்தான். இவர் பணம் தருகிறேன் என்ற தாளாளரின் ஆசை வார்த்தைக்கு மயங்காமல், மிரட்டலுக்கும் அஞ்சாமல் இறுதி வரை உறுதியாக இருந்தார்.

நடராசன் குடித்து விட்டு தகராறு செய்தார் என போலீசார் மருத்துவரிடம் சான்றிதழும் பெற்றது. நமது வழக்கறிஞர்களும், சங்க நிர்வாகிகளும், “இரத்த பரிசோதனை செய்யாமல் எப்படி உறுதி செய்ய முடியும்” என மருத்துவரிடம் சண்டையிட்டதும் போலீசும் பின் வாங்கியது.

பள்ளி முதல்வரை திட்டியதாக பள்ளியிடம் புகார் வாங்கி நடராசன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நடராசன் புகார் மீது தாளாளர், ஆசிரியர்கள் மீதும் சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. யாரும் காவல் நிலையத்திற்கு அழைக்கப்படவில்லை. விசாரிக்கப்படவில்லை. தாளாளர், ஆசிரியர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. நடராசன் மட்டும் இரவு 12 மணி வரை காவல் நிலையத்தில் உட்கார வைக்கப்பட்டார். சங்க நிர்வாகிகள் போராடி மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிதம்பரம் முழுவதும் தாளாளரையும் ஆசரியர்களையும் கைது செய்ய கோரி போஸ்டர் ஒட்டப்பட்டது. மறு நாள் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் செய்வது என முடிவு செய்யபட்டு வியாழன் 29-8-13 அன்று காலை காமராஜ் பள்ளிமுன்பு கூடிய பெற்றோர்களிடம் சிதம்பரம் காவல் துறை, “போராடுபவர்களை கைது செய்வோம், தேவைப்பட்டால் ரிமாண்ட் செய்வோம்” என பெற்றோர்களை பகிரங்கமாக மிரட்டியது. அதனால் பெற்றோர்கள் கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தனர். அவர் “கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறேன்” என உறுதி அளித்து, “2-ம் தேதிக்குள் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என பரிந்துரை செய்தார். மேலும் இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க தாமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என குறிப்பும் அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து திங்கள் 2-9-13 அன்று கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் சங்கத்தினர் பாதிக்கப்பட்ட நடராசன் மற்றும் மாணவன் டேவிட் ராஜா ஆகியோரை நேரிடையாக அழைத்து சென்று புகார் மனு கொடுத்தனர். பத்திரிக்கையாளர்களையும் சந்தித்தனர். கல்வித் துறைக்கும் காவல்துறைக்கும் பல முறை புகார் கொடுத்தும் இது வரை எந்த விசாரணையும், எந்த நடவடிக்கையும் இல்லை. தாங்கள் உறுதியாக நடவடிக்கை எடுத்தால் தான் கட்டணக் கொள்ளைக்கு எதிராக போராடும் பெற்றோர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் என தெரிவித்தார்கள். சிதம்பரம் வீனஸ் பள்ளி அரசு கட்டணம் செலுத்திய பெற்றோர்களை அடியாளை வைத்து மிரட்டியது. காமராஜ் பள்ளியில் தாளாளரும் ஆசிரியர்களுமே அடியாளாக மாறி பெற்றோரை அடித்துள்ளார்கள். கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்திற்கு பெற்றோர்கள் தயாராகி வருகின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் : மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

  1. ஆசிரியர்களின் பெயர்களையும் வெளியிடுவதுதான் சரியானதாக இருக்கும்

  2. தங்களது ரவுடித்தனத்தால் இவர்கள் (கல்விக்) கொள்ளையர்கள்தான் என்பதை நிரூபித்துள்ளார்கள். கொள்ளையர்களை மக்கள் எப்படி தண்டிக்கிறார்களோ அப்படி தண்டிக்கவில்லை என்றால் இவர்களின் கொட்டம் ஒரு போதும் அடங்காது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க