privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்ஜிண்டாலை அடித்து விரட்டுவோம் - மே நாள் போராட்டச் செய்தி

ஜிண்டாலை அடித்து விரட்டுவோம் – மே நாள் போராட்டச் செய்தி

-

திருவண்ணாமலையிலிருந்து 7 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது கவுத்தி-வேடியப்பன் மலைகள். இம்மலைகளில் இரும்பு கனிமம் இருப்பதையறிந்து அதை வெட்டியெடுக்க தமிழ் நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO-Tamilnadu Industrial Development Corporation) ஏலமுறையில் தேர்வு செய்த ஜிண்டால் விஜய நகர் ஸ்டீல் லிமிடெட் (JVS Limited) என்ற பன்னாட்டு நிறுவனத்துடன் 30 ஆண்டுகளுக்கான கூட்டு முதலீடு ஒப்பந்தம் ஒன்றை டிம்கோ (TIMCO-Tamilnadu Iron Ore Minarals Corporation) என்ற பெயரில் 29.03.2005 அன்று செய்து கொண்டது.

அரசு அதிகாரிகள், ஓட்டுச்சீட்டு பொறுக்கி அரசியல்வாதிகளின் ஏல முறைகள் மூலம் மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடிக்க பலவழிகளை கையாண்டு வந்தார்கள். தெரிந்தவர்களுக்கு கான்ட்ராக்ட் கொடுப்பது, பினாமி முறையில் கான்ட்ராக்ட் எடுப்பது ஆகியவை மக்களின் விழிப்புணர்வில் மாறுதல் அடைந்து டெண்டர் முறை வந்து அதிலும் ஊழல் நாறிய பின் முன்னேற்றம் ஏற்பட்டதா என்றால் மாறாக ஓட்டப் பந்தயத்தில் முதலில் வருபவருக்கு பரிசு என்பது போல் அலைக்கற்றை ஊழல் நடந்து நாறியதை அறிவோம்.

ஆனால் தற்போது ஜிண்டாலுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் எல்லாவற்றையும் விஞ்சக்கூடியது. ஜிண்டால் ரூ 135 கோடி முதலீடு செய்வாராம், தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சிக்கழகம் 1%  (1.35 கோடி) முதலீடு செய்யுமாம். இரும்புத்தாது விற்பனை மூலம் 1,000 கோடி ரூபாய் லாபம் வரும் என்றால் ஜின்டாலுக்கு பங்கு 999 கோடி ரூபாய், அரசுக்கு லாபத்தில் பங்கு 1 கோடி ரூபாய் என்பது இதன் அர்த்தம்.

ஒப்பந்தத்தை பார்த்தாலேயே அதிகாரிகளூம், அரசியல் வாதிகளும் கூட்டுக்கொள்ளை அடித்துள்ளனர் என்று தெரிந்து விடும். ஜிண்டால் சுரங்கம் வெட்ட கேட்ட நிலப்பரப்பு 325 ஹெக்டேர் (சுமார் 800 ஏக்கருக்கு மேல்). இதில் உள்ள கனிமத்தை எடுத்து பதிலுக்கு ஜிண்டால் கொடுப்பது ஒரு பேரழிவை.

ஜிண்டால் அமைக்கும் திறந்தவெளி சுரங்கம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளதால் , கழிவுகள் தேக்கி வைக்கும் குட்டைகள், இரும்புத் தாது தொடர்வண்டி நிலயத்தில் சேர்க்க டம்பர்கள் மூலம் எடுத்துச்செல்ல வேண்டும். அதற்கு தடையாக உள்ள 2,22,00 மரங்களை வெட்ட வேண்டும். மரங்களை வளர்க்க வக்கற்ற இந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஒரு முதலாளி தரும்  பிச்சை காசுக்காக பல லட்சம் மரங்களை வெட்டுவதை ஏற்கமுடியுமா?

ஒவ்வொரு நாட்டிலும் மழை ஆதாரத்திற்காக நிலப்பரப்பில் 33% காடுகள் இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் தற்போது உள்ள காடுகள் 25%-க்கும் குறைவாகவே உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பல லட்சம் மரங்களை வெட்டி ஒரு தனிநபருக்கு தாரை வார்க்கும் கயவர்களை நாம் அனுமதிக்க முடியுமா?

சுரங்கம் அமைக்க வெட்டப்படும் காடுகளில் 20 வகை மூலிகைகளும் அழியும். மேலும் பாதுகாக்கப்பட்ட இந்த வனப்பகுதியில் மயில்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான அழகிய பறவைகள் அழியும், மான்கள், குரங்குகள் போன்ற ஆயிரக்கணக்கான விலங்குகள் கொல்லப்படும்.

கிராமத்து மக்களின் வேடியப்பன் சாமி தூக்கியெறியப்படுவார். வெடியினால், பாறைகள் வெட்டுவதால், இரும்புத்தாது எடுத்துவரும் டம்பர்களால் ஏற்படும் தூசிகள் திருவண்ணாமலை முழுமைக்கும் பதிப்பை ஏற்படுத்தும்.

பெண்கள் குடிநீர் கேட்டு போராடினால் போலீசு குண்டாந்தடி சுழற்றி அடித்து விரட்டுகிறது. ஆனால் ஜிண்டால் நிறுவனம் சுரங்கம் தோண்ட நாள் ஒன்றிற்கு சாத்தனூர் அணையிலிருந்து 560 கன மீட்டர் அதாவது 5,60,000 லிட்டர் ( அம்மா இதை 10/-ரூ வீதம் விற்றால் நாள் ஒன்றுக்கு 56 லட்சம் ரூபாய் கிடைக்கும் ) தண்ணீர் வழங்க ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மலைகளை சுற்றியுள்ள 51 கிராமங்களில் உள்ள 2 லட்சம் மக்கள் 20,000 க்கு மேற்பட்ட விவசாயிகள், அவர்கள் பயிரிடும் 18,000 ஏக்கர் விவசாய நிலங்கள் எல்லாவற்றையும் அழிக்கும் இந்த திட்டம் மனிதகுலத்திற்கு உடனுக்குடன் பேரழிவை தரும் வல்லமை உள்ளது.

தங்களின் வாழ்வாதாரத்தை அடியோடு நாசமாக்கும் இந்த கொடிய ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் கவுத்தி-வேடியப்பன் மலை பாதுகாப்பு இயக்கம் என்ற ஒரு சங்கத்தை கட்டி சாதி, கட்சி வேறுபாடில்லாமல் அனைத்து ஓட்டுக்கட்சிகளின் ஆதரவை கேட்டனர்.

இவர்களுக்காக எந்த ஓட்டு பொறுக்கி கட்சியும் நேரில் வந்து ஆதரவு அளிக்கவில்லை. பகுதிமக்களே பலவகை போராட்டங்களை முன்னெடுத்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் கருத்து கேட்பு கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களின் ஆவேசத்தை வெளிப்படுத்தினர். மக்களின் ஆவேசம் கலவரமாக மாறும் வாய்ப்புள்ளதை உணர்ந்து மக்களுக்கு சாதகமாக பரிந்துரை செய்வதாக வாக்களித்தார்.

அதேசமயம் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதை வனத்துறை ஆட்சேபித்ததால் ஜிண்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் அதை ஏற்று பாதிக்கப்படும் பகுதியை ஆராய்ந்துவர பி.வி.ஜெயகிருஷ்ணா என்பவர் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தது. அந்த குழு 2.20 லட்சம் மரங்கள் வெட்டப்படும் நிலை உள்ளது என அறிக்கை கொடுத்தது. அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது.

சுரங்கம் வெட்டப்படுவது நிறுத்தப்பட்டது, என பகுதி மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆனால் உச்ச நீதிமன்றம் வெட்டப்படும் மரங்களை பார்த்ததேயொழிய பாதிக்கப்படும் மனிதர்கள், குடியிருப்புகள், விவசாய நிலங்கள், சுற்றுச்சூழல், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

அதனால்தான் ஜிண்டால் நரித்தனமாக முன்பு ஒதுக்கப்பட்ட 325 ஹெக்டேருக்கு பதில் வெறும் 32.5 ஹெக்டேர் நிலத்தில் சுரங்கம் வெட்ட அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளான். இடத்தை பிடித்து மடத்தை வளைக்கும் பாமர மக்களுக்கும் தெரிந்த இந்த நயவஞ்சக திட்டம் உச்ச நீதிபதிகளுக்கு தெரியாததல்ல. ஜிண்டாலுக்கு கவுத்தி-வேடியப்பன் மலைகளையும் அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்க ஒப்புதல் கொடுக்க தயாராகி விட்டனர் என்பதுதான் அர்த்தம். அதனால்தான் ஜிண்டாலின் மனுவை ஏற்று 32.5 ஹெக்டேரில் சுரங்கம் வெட்டுவதால் பாதிப்பு வருமா என ஆராய்ந்துவர மீண்டும் ஜெயகிருஷ்ணா தலைமையில் கமிட்டி அமைத்துள்ளது.

நிச்சயம் ஜிண்டால் வரப்போவது உறுதியாகி விட்டது.ஒரு பேரழிவை எதிர்கொள்ள அப்பகுதி மக்கள் தயாராக வேண்டும். எப்போதும் போல ஓட்டுப்பொறுக்கி கட்சிகள், வாக்குறுதிகளை அள்ளி வீசும், ஏகாதிபத்தியங்களிடம் பணத்தை பெற்று மக்களின் போராட்டங்களை மழுங்கடிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மக்களிடம் ஊடுருவும், சாதிக் கலவரங்களை எழுப்பி மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பார்கள், திட்டத்தை நடைமுறைபடுத்தும் மாவட்ட ஆட்சியரிடமே நீதி கேட்டு மனு கொடுக்கச் சொல்லுவார்கள்.

ஜிண்டால் என்ற தனி நபருக்காக மூன்று மாவட்டங்களை அழிக்கும் இந்த திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என மனித உரிமை பாதுகாப்பு மையம், விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி, விழுப்புரம்-கடலூர் மாவட்ட புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர்கள், “இந்த திட்டத்திற்கு ஆதரவாக மத்திய வனத்துறை, சுற்றுசூழல் துறை, மாவட்ட ஆட்சியர், உச்ச நீதிமன்றம், அனைத்து ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும் செயல்படுகின்றனர்” என்பதை விளக்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

உலக பாட்டாளி வர்க்க நாளான மே-1 அன்று இந்த திட்டத்திற்கு ஆதரவாக செயல்படும் வனத்துறை அலுவலத்தை முற்றுகையிட வேண்டும் என்று “உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!” “கவுத்தி-வேடியப்பன் மலைகளை சூறையாடவரும் ஜிண்டாலை அடித்து விரட்டுவோம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து புரட்சிகர அமைப்புகள் மூன்று மாவட்டங்களிலும், கவுத்தி வேடியப்பன் மலைகளை சுற்றியுள்ள கிராமங்களிலும் பிரச்சாரம் செய்தனர்.

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்புகளை சார்ந்த இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் கிராமங்களில் உள்ள மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தனர். மக்களிடமே தங்கி, அவர்களிடம் உணவு பெற்று வீடுகள், வயல்களில் வேலை செய்யும் இடங்கள், 100 நாள் திட்டத்தில் வேலை செய்யும் இடங்கள், ஊர் பிரமுகர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கட்சிக்கார்ர்கள் என ஒருவர்கூட விடாமல் பிரச்சாரம் செய்யப்பட்டது. “சுட்டெரிக்கும் வெய்யிலில் எங்களுக்காக பிரச்சாரம் செய்கிறீகள், மே 1 கூட்டத்தில் உங்களோடு இணைந்து வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட வருகிறோம்” என பலர் கூறினார்கள்.

கவுத்தி-வேடியப்பன் மலை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர், பாலியப்பட்டு கிராம மக்களை திரட்டி நம்மை விளக்கி பேச அழைத்தார்.

நகர பகுதி மக்களிடம் பிரச்சாரம் செய்தபோது “ஜிண்டால் சுரங்கம் வெட்டுவதால் பாதிப்பு கிராம மக்களுக்கு மட்டும்தான் ஏற்படும் என்று நினைத்தோம், நீங்கள் விளக்கியபிறகுதான் எங்களுடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்போகிறதுஎன்பதை புரிந்து கொள்ள முடிகிறது” என்றனர்.

பேருந்து பிரச்சாரத்தின்போது பாதிப்பிற்குள்ளாகும் கிராமத்தை சேர்ந்த பயணிகள் நம்மிட்டம் “நாங்களும் இரண்டு மாதமாக பார்க்கிறோம், எங்கிருந்தோ வந்து எங்களுக்காக பிரச்சாரம் செய்து வருகிறீகள், உங்கள் மாதிரி நாங்கள் கஷடப்படவில்லையே என்று உங்களை பார்க்கும்போது எங்களுக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது. நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம் “ என்று கூறினர்.

மே-1 அன்று விழுப்புரம், கடலூர் மாவட்டம் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி, மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள், நகர இளைஞர்கள், பாதிக்கப்படும் கிராமங்களான பாலியப்பட்டு, சின்னபாலியப்பட்டு, இனாம் காரியாந்தல், சின்ன புனல்காடு, வடமாத்தூர், ஆடையூர் பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், கலந்துகொண்டனர்.

ஊர்வலத்திற்கு வி.வி.மு.தோழர். ஏழுமலை தலைமை தாங்கினார். மனித உரிமை பாதுகாப்பு மையம், மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். ராஜு, வி.வி.மு.மாவட்ட அமைப்பாளர் தோழர். அம்பேத்கார், பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பாளர் தோழர்.செல்வகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றியபின் தோழர்களின் விண்ணதிரும் முழக்கங்களோடு ஊர்வலம் நகரின் மையபகுதி வழியாக வனத்துறை அலுவலகத்தை அடைந்தது.

ஓட்டுக்கட்சிகள், அதிகாரவர்க்கம் ஆகியோர் மக்களுக்கு எதிராக செயல்படுவது, இரும்புத்தாது எடுப்பதால் ஏற்படும் பாதிப்பை விளக்கி எழுப்பிய கோஷங்களை செல்லும் வழியில் உள்ள மக்கள் அனைவரும் நின்று கவனித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும்போது போலிசு  தடுத்து நிறுத்தி கைது செய்தது. அப்போது தோழர்கள் ராஜு, அம்பேத்கார், செல்வகுமார் ஆகியோர் எழுச்சியுரை ஆற்றினர்.

பின்னர் போலிசு அனைத்து தோழர்களையும் ஒரு கல்யாண மண்டபத்தில் அடைத்தனர். மண்டபத்தில் தோழர்களின் கலைக்குழு பாடல்கள், பேச்சுக்கள் புதிதாக வந்த மக்கள் ஆச்சரியத்துடன் ரசித்தனர். கவுத்தி-வேடியப்பன் மலை பாதுகாப்பு இயக்க தலைவர் திரு. பாலகிருஷ்ணன் பேசும்போது, “வனத்துறை, வருவாய்த்துறை ஜிண்டாலுக்கு ஆதரவாக இருக்கிறது, காட்டில் ஒரு மான் அடிபட்டால் அப்பாவிகளிடம் வனத்துறையினர் ரூ.1000/- லஞ்சம் வாங்குகின்றனர்.ஜிண்டாலுக்காக 10,000-க்கும் மேற்பட்ட விலங்குகளை கொள்ளப்போகிறார்கள், இது எந்த சட்டத்தில் உள்ளது” என கேள்வி எழுப்பினார்.

பாலியப்பட்டை சேர்ந்த பச்சையப்பன் பேசும்போது “50 கிராமம் பாதிக்கும் என்பது பொய் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இரும்பு எடுக்கும்போது வரும் கழிவு கெட்ட நீரால் துர் நாற்றம் வீசும், இந்த மலை பாட்டன், பாட்டி சம்பாதித்த சொத்து, உயிரை விட்டாலும் விடலாமே தவிர மலையை விட தயாராக இல்லை” என்றார்.

அப்பகுதியில் செயல்படும் திரு அண்ணாமலை பேசும்போது பகுதியில் இருந்து பெரும்பான்மை மக்களை திரட்டி வராததற்கு வருத்தம் தெரிவித்தார். கழிவுகளால் துரிஞ்சல் ஆறு பாதிக்கப்படுவதை விளக்கி பேசினார்.

புனல்காடு பகுதியை சேர்ந்த திரு முத்துகிரிட்டிணன் பேசும் போது “ இரண்டு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறோம். நீங்க வந்திருக்கீங்க சந்தோசம், நாங்க 100 போராட்டம் நடத்தியிருப்போம் யாரும் இந்த மாதிரி நடத்தவில்லை. சந்தோசமாக இருக்கிறது” என்றார்.

அம்சா என்ற பெண்மணி பேசும்போது “ எங்க வேடியப்பன் சாமி, மலையை பாதுகாக்க நீங்க வந்திருக்கீங்க, இனி நாங்க உங்களுக்காக வருவோம்” என்று கூறினார்.

திருவண்ணாமலை மனித உரிமை பதுகாப்பு மையத்தை சேர்ந்த தோழர் கண்ணன் பேசும் போது “ 1998-ல் பகுதியில் பிரச்சனை ஏற்பட்டபோது பிரச்சாரம், கணடன ஆர்ப்பாட்டம் செய்தோம். தற்போது புரட்சிகர அமைப்புகள் முதன் முறையாக திருவண்ணாமலையில் குவிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு திருவண்ணாமலை சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தோழர்கள் அம்பேத்கார் மற்றும் சில தோழர்கள் பேசும் போது பிரச்சாரத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை விளக்கியும் பகுதியில் அதிகாரவர்க்கம் மக்களை சாதிரீதியாக பிரிக்க முயற்சி செய்கிறான். மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போராட்டங்களை மட்டுப்படுத்த உள்ளே நுழைந்திருப்பதன் அபாயத்தை எச்சரித்து பேசினார்கள்.

இறுதியில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு பேசும்போது “அதிகார வர்க்கங்கள் எதிர்காலத்தில் எப்படி செயல்படும்” என்றும், தொண்டு நிறுவனங்களால் திசைமாறிய போராட்டங்களை உதாரணங்களோடு எடுத்துக்காட்டி பேசினார்.

தற்போது கிராமப்பகுதியில் போராடும் இயக்கங்கள் எப்படி தங்களை மேம்படுதிக்கொள்ள வேண்டும் என்றும், தற்போது அதிகாரவர்க்கம் கூறும் ஜனநாயகத்தில் மக்களுக்கு எப்படிப்பட்ட உரிமை இருக்கிறது என்பதை உணர்வுபூர்வமாகவும், நையாண்டியாகவும் விளக்கி பேசியதை கூர்ந்து கவனித்தனர். மாலையில் தோழர்களை போலிசு விடுவித்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இந்த மே-1 பிரச்சாரத்தின் மூலம் பேருந்துகளில் கடந்த இரண்டுமாதங்களாக சுமார் 1,00,000-க்கும் மேற்பட்ட மக்களிடமும், திருவண்ணாமலை நகர மக்கள் சுமார் 10,000-க்கு மேற்பட்டவர்களிடமும், பாதிக்கப்படும் கிராம மக்களிடமும், விழுப்புரம், கடலூர், பண்ருட்டி, திருக்கோயிலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் ஆகிய நகரங்கள், கிராமங்கள் என பிரச்சாரம் செய்து ஊர்வலத்திலும், கைதிலும் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டதை அறிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட தோழர்கள் மகிழ்ச்சியுடனும், உத்வேகத்துடனும் விடைபெற்றனர்.

பகுதி மக்கள் நம்மிடம் காட்டிய ஆதரவு ஜிண்டால் மட்டுமல்ல, எந்த கொம்பனும் நெருங்க முடியாது என்பதை உணர்த்தியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

விவசாயிகள் விடுதலை முன்னணி,
திருவண்ணாமலை