உலக பாட்டாளி வர்க்க ஆசான் மாமேதை  தோழர் லெனின்  149 -ஆவது  பிறந்த நாள்  விழாவை புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் கொண்டாடி வருகின்றன.

ம.க.இ.க., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து வேலூர் இராணிப்பேட்டையிலும்;  ம.க.இ.க., பு.மா.இ.மு. அமைப்புகளின் சார்பில் மதுரையிலும் தெருமுனைக்கூட்டங்களை நடத்தின. கடலூரில் பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு., ஆகிய அமைப்புகள் இணைந்து நகரின் முக்கிய பகுதிகளின் வழியே இருசக்கர பேரணி நடத்தினர்.

லெனின் பிறந்த நாள் விழா என்பது இந்த உலகில் உழைக்கும் தொழிலாளர்களான பெரும்பான்மை மக்கள் எப்படி நல் வாழ்க்கை வாழ்வது என்கின்ற சிந்தனையை நினைவு கூர்வதாகும்.

நம்நாட்டில் சிறிய தொழில்கள் குடிசைத் தொழில்கள் இருந்த இடம் தெரியாமல் போகின்றன.  விவசாயம் அழிவு நோக்கி செல்கிறது. ஏதாவது டெக்ஸ்டைல் கடையில் வேலைக்கு போகலாம் என்றால் அங்கே நாள் முழுவதும் நின்றாக வேண்டுமென்ற கொடுமை.  ஆட்டோ ஓட்டி பிழைத்து கொள்ளலாம் என்றால் போலீசு தொல்லை.

பெரும்பான்மை மக்களுடைய வாழ்க்கை  இப்படி அவலமும் இன்னலும் நிறைந்திருக்க,  இன்னொரு புறம் அம்பானி 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வீடு கட்டுகிறார்.  அவருடைய அந்த வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் உலகின் வறுமைக்கான சான்றாக விளங்கும் ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவி தெரிகிறது. இது தான்  இன்றைய உலகத்தைக் காட்டும் கண்ணாடி . முதலாளிகளுக்கு 6 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது, நீரோ மோடி, லலித் மோடி, விஜய் மல்லையா போன்றவர்கள் கோடிக்கணக்கில் அரசு வங்கியில் கடன் வாங்கி விட்டு வெளிநாடு தப்பியோடுகின்றனர்.

கூடங்குளம், மீத்தேன், நியூட்ரினோ, சாகர்மாலா, ஸ்டெர்லைட் போன்ற அழிவு திட்டங்கள் தமிழகத்தின் மீது வன்மத்தோடு திணிக்கப்படுகின்றது. இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தனித்தனியாக போராட முடியுமா அல்லது ஓட்டு சீட்டு மூலம் தீர்த்து விட முடியுமா? முடியவே முடியாது!

நாட்டை பாசிச அபாயம் சூழந்திருக்கும் இந்த வேளையில், நாடு முழுவதும் உள்ள அரசு நிறுவனங்களை காவி கும்பல்களால் நிரப்பப்படும் இந்த காலத்தில் அதை முறியடிக்க லெனின் நமக்குத் தேவைப்படுகிறார். ஆசான் லெனின் காட்டிய வழியில் சோசலிசம் படைக்க, தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் புரட்சிகர அமைப்புகளில்  அணிதிரள வேண்டுமென்ற அறைகூவலோடு, லெனின் பிறந்தநாள் விழா நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

கடலூர்

வேலூர் – இராணிப்பேட்டை

மதுரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க