privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புதலைப்புச் செய்திபோலீசின் கொட்டத்தை அடக்கிய வேலூர் தரைக்கடை வியாபாரிகள் !

போலீசின் கொட்டத்தை அடக்கிய வேலூர் தரைக்கடை வியாபாரிகள் !

சொந்த மண்ணில் வாழவும் விடாமல், பிழைப்பு தேடி வந்த இடத்தில் பிழைக்கவும் விடாமல் விரட்டும் இந்த அரசையும் அதன் அடியாளான போலீசையும் இனியும் சகித்து வாழ்வதில் அர்த்தமில்லை.

-

 

தரைக்கடை காய்கறி வியாபாரம் (வினவு கோப்புப் படம்)

வெயில் மழை பாராது தலைச்சுமையாகவும், ரோட்டோரமாகவும் வியாபாரம் செய்யும் தள்ளுவண்டி மற்றும்  தரைக்கடை வியாபாரிகளிடம் உள்ளூர் கட்டப் பஞ்சாயத்து ரவுடிகளும்  போலீசு ரவுடிகளும் அன்றாட மாமூல் என்ற பெயரில் வழிப்பறி செய்வதென்பது தமிழகம் அறிந்த ஒன்று. போலீசு  சீருடையில், போலீசின் ரோந்து வாகனத்தில் வந்து கடைக்கு எதிரே நிறுத்தி நிர்ணயித்துள்ள மாமூலை வாங்கிச்செல்லும் காட்சிகள் சினிமாவில் மட்டுமல்ல; அன்றாடம் நாம் கடந்துபோகும் கடைவீதியில் காணக் கிடைக்கும் காட்சிகளுள் ஒன்றுதான்.

இந்தக் காட்சிகளை கண்டிராதவர்கள் எவரேனும் இருந்தால், இரவு பத்து மணிக்கு மேல் ஏதேனும் ஒரு தள்ளுவண்டி கடையருகில் நின்று பாருங்கள். “பத்து பொட்டலம் இட்லியக் கட்டு! இல்லேன்னா கடையக் கட்டு!” என்று சிங்கம் பட ரேஞ்சுக்கு மிரட்டும் போலீசின் அலப்பறைகளை காணும் பாக்கியம் கிட்டும்.

இந்த வரிசையில் இது வேலூர் போலீசின் கதை. அச்சு பிசகாமல் மேலே சொன்ன அத்தனை கொடுமைகளையும் அனுபவித்து வந்தனர் வேலூர் நகரிலுள்ள தரைக்கடை வியாபாரிகள். போலீசின் தொடர் அட்டூழியங்களால் கொதித்திருந்த அவ்வியாபாரிகள், அப்பகுதியில் செயல்படும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வழிகாட்டுதலில்,  “வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் சங்கம்” என்ற பெயரில் சங்கமாக ஒன்று திரண்டனர். சங்கம் தொடங்கிய குறுகிய காலத்திலேயே, மீன் மார்க்கெட், அண்ணா கலையரங்கம் மற்றும் அடுக்கம்பாறை என வேலூர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் சங்கக்கிளைகள் விரிவடைந்தன.

சங்கம் தொடங்கி தமது மாமூல் வேட்டைக்கு வேட்டு வைத்ததோடு, தமது அத்துமீறல்களையும் சங்கம் தட்டிக்கேட்டதால், ஆத்திரமுற்ற போலீசு அவ்வியாபாரிகளை பழிவாங்கும் சந்தர்ப்பத்திற்காக வன்மத்தோடு காத்திருந்தது.

இந்தச் சூழலில், குடியரசுத் தலைவர் வேலூருக்கு வருவதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது.  கடந்த  03.05.2018 அன்று அடுக்கம்பாறையில் செயல்படும் சாலையோரக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று திடீரென்று வந்து மிரட்டியது, கணியம்பாடி போலீசு. சிறிது நேரம்கூட அவகாசம் கொடுக்காமல் வியாபாரிகளை விரட்டியது. முதல்நாளே சொல்லியிருந்தால் கடை போடாமலிருந்திருக்கலாம் என்று வியாபாரிகள் தங்களுக்குத் தாங்களே புலம்பிக்கொண்டு கடைவிரித்திருந்த பொருட்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, ”என்ன நான் சொல்லிக்கிட்டே இருக்கிறேன். நீ இன்னும் கடையை எடுக்கல…” என்று கெட்டவார்த்தைகளால் திட்டியபடியே சங்கத்தின் கிளைச் செயலர் தோழர் முருகனை குறிவைத்துத் தாக்கினார் கணியம்பாடி போலீசு ஆய்வாளர் பாண்டியன்.

”கடையை அகற்றிக் கொண்டிருக்கும் போதே அடிக்கிறீயே! நீ என்ன போலீசா? ரவுடியா?” என நேருக்கு நேர் எதிர்த்துக் கேட்டனர், சக வியாபாரிகள். எதிர்த்துக் கேட்டவர்களையும் பெண்கள் என்றும் பாராமல் தாக்கத் தொடங்கினார் இன்ஸ்பெக்டர் பாண்டியன். பரபரப்பான நகரின் மையப்பகுதியில் போலீசின் இந்த அத்துமீறலை கண்ட பொதுமக்களும் குவியத் தொடங்கினர். போலீசின் அடாவடித்தனத்தை அங்கேயே கண்டித்தனர். தர்ம அடி வாங்க நேரிடும் என்ற பயத்தில், அங்கிருந்து ஓடிவிட்டார் இன்ஸ்பெக்டர் பாண்டியன். தாக்கப்பட்ட முருகனை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு திரண்ட மக்கள்.

இன்ஸ்பெக்டர் பாண்டியனை கைது செய்யக்கோரி, ”பாண்டியன் போலீசா? ரவுடியா?” எனக் கேள்வியெழுப்பும் சுவரொட்டிகளை வேலூர் நகர் முழுவதும் ஒட்டியது, பு.ஜ.தொ.மு. அச்சுவரொட்டிகளைத் தேடித் தேடி கிழித்த இன்ஸ்பெக்டர் பாண்டியன், ”என்னைக் கண்டித்தே போஸ்டர் போடுறீங்களா! உங்கள பாக்குற வகையில பாத்துக்குறேன்!” என்று சங்க முன்னணியாளர்களை மிரட்டியிருக்கிறார்.

இந்த சம்பவத்தை செய்தியாக வெளியிட்ட தினகரன் நாளிதழ், “இன்ஸ்பெக்டர் பாண்டியன், தனது போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல், சாராயம் விற்பனை, காட்டன் சூதாட்ட கும்பல்களுடன் கைகோர்த்துக் கொண்டு மாமூல் வசூலித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்” என்றும் அம்பலப்படுத்தியிருந்தது.

தினகரனில் வெளியான செய்தி

இந்த செய்தி ஆதாரங்களோடு, தோழர் முருகனையும், பெண்களையும் தாக்கிய இன்ஸ்பெக்டர் பாண்டியன் மீது  உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூர் போலீசு துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் அவர்களிடம் மனு அளித்தனர் வியாபாரிகள்.

”தரைக்கடை வியாபாரிகள்தானே” என்றத் திமிரில் ஆட்டம் போட்ட பாண்டியன், அவ்வியாபாரிகளின் விடாப்பிடியானப் போராட்டத்தை கண்டு பதற வேண்டியதாயிற்று. நிலைமை கை மீறிப் போவதை உணர்ந்து,  சேதாரத்தின் அளவை குறைத்துக்கொள்ளும் பொருட்டு அ.தி.மு.க., பா.ம.க.வைச் சேர்ந்த பிரமுகர்களின் மூலமாக முருகனிடம் பேரம் பேச தூது விட்டார்.  முகத்திலறைந்தாற் போல பதிலளித்து திருப்பியனுப்பினார் தோழர் முருகன்.

போலீசின் தொடர் அட்டூழியத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். குறைந்தபட்சம், உடனடியாக பாண்டியனை பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக நிற்கின்றனர், அவ்வியாபாரிகள்.

இது வேலூர் நகரத்தோடு முடிந்துவிட்ட பிரச்சினையுமில்லை; சம்பந்தபட்ட இன்ஸ்பெக்டர் பாண்டியன் கொஞ்சம் எல்லை மீறிவிட்டார் என்றளவில் சுருக்கிவிடக்கூடியதுமில்லை; தமிழகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரச்சினை இது.

தெருவோரம் கடை விரிக்கும் இவர்கள் யார்? இதற்கு முன்னர் இவர்கள் எங்கிருந்தார்கள்? நீரின்றி வெடித்துக் கிடக்கும் நிலத்திற்குச் சொந்தக்காரர்கள். வேலூர் தோல்பட்டறை ஆலைக்கழிவுகளால் மலடாகிப்போன மண்ணைக் கைவிட்டு ஓடி வந்தவர்கள். நம்பியிருந்த நெசவும் கைத்தொழிலும் கைவிட்டதால் கால்வயிற்றுக் கஞ்சிக்காக நகரத்திற்குத் துரத்தப்பட்டவர்கள்.

தெருவோரம் கடை போடுவது ஆக்கிரமிப்பு; சட்டவிரோதம் என்று பீதியூட்டுவதன் மூலம் வியாபாரிகளை பணியவைக்கிறது போலீசு. வியாபாரிகளும், ரோட்ல கடை போடுவது தப்புதானே என்று தார்மீகரீதியில் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகின்றனர். இதிலிருந்துதான், இவர்களை பகைத்துக்கொண்டால் கால் வயித்துக் கஞ்சிக்கும் வழியில்லாமல் போய்விடும் என்று அஞ்சி, போலீசு – ரவுடிகளுக்கு மாமூல் கொடுக்கின்றனர்.

வியாபாரிகளின் இத்தகையக் குற்றவுணர்ச்சியைத்தான் தான் அதிகாரம் செலுத்துவதற்கான நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்கிறது, போலீசு. முதலில், ரோட்டில் கடை போடுவது சட்டவிரோதம் என்ற குற்றவுணர்ச்சியிலிருந்து வியாபாரிகள் விடுபட வேண்டும். உண்மையில், தள்ளுவண்டி வியாபாரி தொடங்கி குட்கா வியாபாரி வரையில் கைநீட்டும் போலீசின் நடவடிக்கைகளல்லவா சட்டவிரோமானவை.

ரோட்டில் கடை போடுவதென்பது, வியாபாரிகளின் வாழ்வுரிமை. அவர்களை நடுத்தெருவுக்கு இழுத்துவந்து விட்டதே இந்த அரசுதான். சொந்த மண்ணில் வாழவும் விடாமல், பிழைப்பு தேடி வந்த இடத்தில் பிழைக்கவும் விடாமல் விரட்டும் இந்த அரசையும் அதன் அடியாளான போலீசையும் இனியும் சகித்து வாழ்வதில் அர்த்தமில்லை.

போலீசின் அத்துமீறல்களையும் அட்டூழியங்களையும் காணும் இடத்திலேயே, அந்தக் கணத்திலேயே கணக்குத் தீர்த்துக்கொள்வதைத் தவிர, காரிய சாத்தியமான வழியேதுமில்லை.

வேலூர் தரைக்கடை வியாபாரிகளின் போராட்டம் உணர்த்தும் செய்தி இதுவொன்றுதான்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க