நூல் அறிமுகம் : முருகன் வணக்கத்தின் மறுபக்கம்

சமய உலகில் தோன்றிய பல ஞானிகள் சடங்குகளை எல்லாம் நிராகரித்திருக்கிறார்கள். சீர்திருத்தம் பேசியிருக்கிறார்கள். வடலூர் சக்தியஞான சபைக்கும் காஞ்சி மடத்திற்கும் வேறுபாடு இல்லையா?

புராணக் கதைகளுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் ஆட்பட்ட மக்களை, சமயநிலைப்பாட்டை சமூக வரலாற்று, பொருளாதார அறிவியல் பின்னணியில் புரிந்து கொள்வதற்கு நாம் உதவ வேண்டும். சமய சக்திகளுக்குள்ளும் மோதல்கள், முரண்பாடுகள் உண்டு. மூடப் பழக்க வழக்கங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிரான கலகக்குரல் சமய உலகிலும் உண்டு. சமய உலகில் தோன்றிய பல ஞானிகள் சடங்குகளை எல்லாம்  நிராகரித்திருக்கிறார்கள். சீர்திருத்தம் பேசியிருக்கிறார்கள். வடலூர் சக்தியஞான சபைக்கும் காஞ்சி மடத்திற்கும் வேறுபாடு இல்லையா? இந்த வேறுபாட்டை மேலோட்டமாகப் பார்க்காமல், இவற்றின் வேர்களை மக்களுக்குக் காட்ட வேண்டும்.

தமிழில் அர்ச்சனை, சாதிபாகுபாடு இன்றி அனைத்து மாந்தரும் அர்ச்சகராதல் போன்ற கோரிக்கைகளை கொள்கை அளவில் ஏற்கும் பலர் அதை நடைமுறைப்படுத்திக் கொள்ள தயங்குகிறார்கள். அந்தத் தயக்கம் உடைபட வேண்டும். அந்தத் தயக்கத்தை உடைக்க பக்தர்கள் மத்தியிலேயே பலர் இருக்கிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்தவும், உறுதுணையாக இருப்பதும், தார்மீகக் கரம் நீட்டுவதும் காலம் இடும் கட்டளையாகும். அந்தக் கட்டளையின் திசைவழிச் செல்ல இந்த நூல் உதவும்.

முருக வழிபாடு குறித்த கருத்தாடலைப் பண்பாட்டுத்தளத்தில் விரிவாகவும், ஆழமாகவும் முன்வைக்கிறது, ‘’முருகன் வணக்கத்தின் மறுபக்கம்’’.

உணவை உற்பத்தி செய்யும் காலத்தில் அல்ல, உணவைத் தேடி அலையும் காலத்தில் தோன்றிய கடவுள் முருகன். இயற்கையை வணங்கிய காலத்தின் நீட்சி இது. கடவுளை வணங்க ஒரு உருவம் தேடினார்கள் மக்கள். அப்போதுகூட மனித உருவம் ஒன்றை அவர்கள் வணங்க முயலவில்லை. உணவைத் தேடி மிருகங்களை வேட்டையாடவும், அம்மிருகங்களிடமிருந்துத் தங்களைக் காக்கவும் அவர்கள் உற்பத்தி செய்திருந்த உற்பத்திக் கருவி ‘’வேல்’’ தான். அதனால் வேலை வணங்க ஆரம்பித்தார்கள். வேலைப் பயன்படுத்துபவன் வேலன் ! இந்த வேலன்தான் பின்னர் முருகன், முதல் உருவ வணக்கம் வேலில்தான் தோன்றியது. சமூக வளர்ச்சியில் இதுதான் சாத்தியம் !

முருகனுக்குத் தந்தை சிவன் என்பதும், தாய் பார்வதி என்பதும், அண்ணன் பிள்ளையார் என்பதும், வள்ளியைக் களவு மணம் புரிந்ததும், கற்புமண மனைவியாக தெய்வயானை ஆக்கப்பட்டதும் பின்னால் காலம் உருவாக்கிய கதைகள்.

முருகன் வரலாற்றுக்கு முந்திய கடவுள் (PRE HISTORIC GOD) வரலாற்றிற்கு முந்திய சமுதாயத்தையும் அதன் வாழ்க்கையையும் மானுடவியல் அடிப்படையில்தான் கண்டு தெளிய முடியும். முருகன் வணக்கத்தையும் மேலே கண்டவாறுதான் அணுகி தெரிந்து கொள்ள வேண்டும். பின்னால் வந்த புராணங்கள் வரலாறு ஆகாது ! உணவைத் தேடும் சமுதாயம் மாறி, உணவை உற்பத்தி செய்யும் சமுதாயம் உருவெடுக்கும்போது, அதாவது நிலவுடைமை தழைக்கின்றபோது, மொழியும் இலக்கியமும் தோன்ற அதன் ஊடாகச் சமுதாயத்தை அறிய முடிகிறது. நமக்குக் கிடைத்திருக்கும் பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் நிலவுடைமைச் சமூகத்தில் பூத்த மலர்கள் என்ற புரிதலோடு முருகன் வணக்கம் பற்றிய சிந்தனைகளோடு, அடுத்த படியில் ஏற வேண்டும். நிலவுடைச் சமூக இலக்கியங்களிலும் அதற்கு முந்திய காலத்தின் எச்சங்கள் இருக்கும் என்பதையும், நிலவுடைமைச் சமூகத்தின் வளர்ச்சியில் அது ஒரு கட்டம் என்பதையும் கூடவே புரிந்து கொள்ள வேண்டும்.

(நூலிலிருந்து)

நூல்: முருகன் வணக்கத்தின் மறுபக்கம்
ஆசிரியர்: சிகரம் ச.செந்தில்நாதன்
பக்கம்: 136
விலை: ரூ.110.00

பதிப்பகம்: சந்தியா பதிப்பகம்,
பு.எண்:77, 53-வது தெரு, 9-வது அவென்யூ, அசோக்நகர்,
சென்னை – 600083. தொலைபேசி: 044 – 24896979

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

(கீழைக்காற்று விற்பனையகம்  இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. கடையின் புதிய முகவரி கீழே)

1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107. 
பேச  : 99623 90277

  • வினவு செய்திப் பிரிவு.

1 மறுமொழி

  1. 1974 ரெயில்வே வேலை நிறுத்தப் பின்னணியில் ஸ்டிரைக் எனும் புதினமொன்றை எழுதியுள்ளேன், அனுப்பி வைத்தால் விமரிசனம் அல்லது அறிமுகம் செய்வீர்களா-
    ராமச்சந்திர வைத்தியநாத்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க