பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான சுர்ஜித் பல்லா பதவி விலகியதைத் தொடர்ந்து இக்கட்டுரையை மீள் பிரசுரித்திருக்கிறது ’தி வயர்’.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினராக இருப்பவர் சுர்ஜித் பல்லா. இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டில் சுமார் ஒன்றரை கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கபட்டன என சுர்ஜித் பல்லா கடந்த ஏப்ரல், 2018-ல் கூறியிருந்தார். தேசிய அளவிலான வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த சுர்ஜித் பல்லாவின் இப்புள்ளி விவரம் நேர்மையற்றது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (இ.பொ.க.மையம்) தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இ.பொ.க.மையம், இந்தியாவின் மிகப்பெரிய அளவிலான வேலைவாய்ப்பு கள ஆய்வு ஒன்றை எடுத்தது. இந்தக் கள ஆய்வு சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் ஒவ்வொரு மாதமும் எடுக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் “வலுவான வேலைவாய்ப்பு வளர்ச்சி, பொய்ச் செய்தியல்ல” என்ற தலைப்பில் சுர்ஜித் பல்லா ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் இ.பொ.க.மையத்தின் தகவல்களையும் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தின் தகவல்களையும் சுட்டிக்காட்டி 2017-ம் ஆண்டு மட்டும் சுமார் ஒன்றரை கோடி வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாகக் கூறினார்.

இது குறித்து இ.பொ.க.மையத்தின் தலைமைச் செயல் அதிகாரி மகேஸ் வியாஸ், ‘தி வயர்’ இணையதளத்திடம், 2017-ம் ஆண்டுக்கான தனது நிறுவனத்தின் கள ஆய்வுப்படி ஒட்டுமொத்தமாக வெறும் 18 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகள்தான் வளர்ந்திருப்பதாகக் கூறினார்.

சுர்ஜித் பல்லா.

பின்னர் பல்லாவுக்கு எங்கிருந்து ஒன்றரை கோடி வேலை வாய்ப்புகள் என்ற எண்ணிக்கை கிடைக்கப்பெற்றது? இ.பொ.க.மையத்தின் தகவல்களிலிருந்து தேவையான விவரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, பிற விவரங்களை தொழிலாளர் வைப்பு நிதி நிறுவன தகவல்களிலிருந்து எடுத்து அந்த எண்ணிக்கைக்கு வந்தடைந்துள்ளார். இதனை இ.பொ.க.மையத்தின் தலைமை அதிகாரி மகேஷ் வியாஸ் ’புதிய கண்டுபிடிப்பு’ என்றே கிண்டல் செய்கிறார்.

தனது ஆய்வில், இ.பொ.க.மையத்தின் தகவலிலிருந்து 25 – 64 வயதுப் பிரிவினருக்கான புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த தகவலை எடுத்துக் கொண்டார். இந்த வயது வரம்பில் 2017-ம் ஆண்டில் வேலை வாய்ப்பு உருவாக்கம் 1 கோடியே 18 இலட்சம் ஆகும்.

இ.பொ.க.மையம், தனது தகவல் திரட்டில் 15-24 வயதினருக்கான வேலைவாய்ப்புகள் சுமார் 70 லட்சம் சரிவடைந்துவிட்டதாக குறிப்பிட்டிருப்பதை பல்லா வசதியாக தவிர்த்து விட்டதாகக் கூறுகிறார் வியாஸ். 65 வயதுக்கு மேலானோருக்கான வேலைவாய்ப்பிலும் சுமார் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் சரிந்துவிட்டதாக குறிப்பிடுகிறார். இ.பொ.க.மையத்தின் தகவல்படி, 2017-ம் ஆண்டுக்கான மொத்த வேலைவாய்ப்பு வளர்ச்சி, இளைஞர்கள் மற்றும் முதியோர் வேலைவாய்ப்பு வீழ்ச்சியையும் உள்ளடக்கி வெறும் 18 லட்சம் மட்டுமே.

மகேஸ் வியாஸ்.

இ.பொ.க.மையத்தின் தகவல் திரட்டிலிருந்து 25 – 64 வயது பிரிவினருக்கான புள்ளிவிவரத்தை எடுத்துக் கொண்டு, தொழிலாளர் வைப்பூதிய நிதி நிறுவனத்தின் தகவல்களைப் பெற சிறப்பு அனுமதி பெற்று தகவல் சேகரித்த இரண்டு பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ள 30 லட்சம் புதிய சந்தாதாரர்களையும் சேர்த்து ஒன்றரை கோடி எனக் கூறியிருக்கிறார் சுர்ஜித் பல்லா. இவரது இச்செயல், பிரச்சினைக்குரியதாக மாறியது. அதற்குக் காரணம், தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் ஆகியவற்றின் சந்தாதாரர் அளவை அடிப்படையாகக் கொண்டு 70 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியது பொருளாதார நிபுணர்கள் மத்தியில் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் பொருளாதார நிபுணர்களே, தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தின் தகவல்களைக் கொண்டு வேலைவாய்ப்பு வளர்ச்சியை கணக்கிட முடியாது எனக் கூறினர்.

பிரதமர் பேசிய விவகாரம் பேசப்பட்டு அடங்குவதற்குள், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவன தகவலுடன் இ.பொ.க.மையத்தின் தகவலோடு கலந்து அதனைக் கொண்டு பேசியிருப்பது முற்றிலும் தவறானது என்கிறார் வியாஸ்.

பெரும்பாலான பொருளாதார வல்லுனர்களும் இதையேதான் கூறியிருக்கின்றனர். வைப்பு நிதி நிறுவன தகவலை வைத்து வேலைவாய்ப்பு குறித்து பேச முடியாது எனக் கூறியிருக்கின்றனர். முன்னாள் நிதி ஆயோக் தலைவரான அரவிந்த் பனகாரியாவும் இதை கூறியிருக்கிறார். உதாரணத்திற்கு, ஒரு சிறிய நிறுவனத்தில் 19 பேர் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர் என வைத்துக் கொண்டால், ஒரு நபர் அதிகமாகி 20 பேர் என்றாகும் போது அந்நிறுவனம் அந்த 20 ஊழியர்களையும் வைப்பு நிதியகத்தில் பதிவு செய்ய வேண்டும், அவ்வாறு செய்கையில் 20 பேரின் பெயரும் அங்கு புதியதாக பதிவு செய்யப்படும். ஆனால் ஒருவர் மட்டுமே புதியதாக பணிக்குச் சேர்ந்தவர். ஆகவே வைப்புநிதி சந்தாதாரர்களின் எண்ணிக்கையிலிருந்து வேலை வாய்ப்பு வளர்ச்சியை கணக்கிட முடியாது.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் சுட்டிக்காட்டிய 15-24 வயது பிரிவினருக்கான வேலைவாய்ப்பு சரிவு என்பது மோடி வருந்த வேண்டிய ஒரு விசயம். ஏனெனில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதாகக் கூறியே ஆட்சிக்கு வந்தார் மோடி. இந்த கணக்கை மட்டும் பல்லா கண்டுகொள்ளவில்லை.

படிக்க:
ஏண்ணே ! வெற்றிகரமான தோல்வின்னா என்னான்னே ?
வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறதாம் – மோடியின் அடுத்த ஜும்லா

ஹிந்தி பேசும் பகுதிகளில் மோடியினுடைய பிரச்சாரத்தை பதிவு செய்யும் பத்திரிகையாளர்கள் அனைவரும் அவர் இளைஞர்களின் வாழ்வை முன்னேற்றுவதாகக் கூறி உறுதியளித்ததை மறந்துவிட முடியாது. ஆனால் இ.பொ.க.மையத்தின் ஆய்வுத் தகவல்கள் இளைஞர்களின் வேலையின்மை குறித்த ஒரு பீதியூட்டும் சித்திரத்தையே தருகின்றன.

குறிப்பு : சுர்ஜித் பல்லா நெட்நொர்க்18 குழுமத்தில் ஆலோசகராக பணியில் சேர்வதற்காகவும், தாம் எழுதி வரும் ஒரு நூலை முடிப்பதற்காகவும் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதாக தெரிவித்திருக்கிறார்.

வினவு செய்திப் பிரிவு
தமிழாக்கம்: நந்தன்
நன்றி: thewire

சந்தா செலுத்துங்கள்

மக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா? வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.

1 மறுமொழி

  1. பொய்யாக இருக்க வாய்ப்பு உண்டு… அரசு கஷ்ட்டப்பட்டு வேலைவாய்ப்புகளை உருவாக்க பல தொழிற்சாலைகளையும், சாலைகளையும், விமான நிலையங்கள், துறைமுகங்களை கட்ட பார்க்கிறது.

    அதை புரட்சி, போராட்டம் என்ற பெயரில் கம்யூனிஸ்ட்களும் கிறிஸ்துவ மதவெறி அமைப்புகளும் தடுத்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் எப்படி வேலைவாய்ப்பு உருவாகும் எல்லோரும் வீட்டிலேயே இருக்க வேண்டியது தான்.

    இந்த நிலையில் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கி விட்டது என்று சொல்லும் புள்ளிவிவரங்கள் பொய்யாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

    கம்யூனிஸ்ட் கிறிஸ்துவ தேசவிரோத அமைப்புகள் மாறாத வரையில் தமிழகத்தின் அழிவை யாராலும் தடுக்க முடியாது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க