அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 9

அரசியல் பொருளாதாரமும், பொருளாதாரமும்

அ. அனிக்கின்
அ.அனிக்கின்
 டந்த சில பத்தாண்டுகளில் மேற்கு நாடுகளில் அரசியல் பொருளாதாரம் என்ற வார்த்தை கைவிடப்பட்டு அதற்கு பதிலாகப் பொருளாதாரம் என்ற வார்த்தை உபயோகிக்கப்படுகிறது. அதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு: ஒரு சமூகத்திலுள்ள உற்பத்தி உறவுகளின் கூட்டு மொத்தம் என்பது ஒரு அர்த்தம், பொருளாதார வளர்ச்சி விதிகளின் விஞ்ஞானம் என்பது மற்றொரு அர்த்தம்.

எனினும் பொருளாதாரம் என்ற சொல்லும் அரசியல் பொருளாதாரம் என்பதும் ஒன்று எனக் கருதிவிடக் கூடாது. அறிவின் துறை என்ற அர்த்தத்தில் பொருளாதாரம் என்ற சொல் பொருளாதார விஞ்ஞானங்களையே அதிகமாகக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இன்று இந்த விஞ்ஞானங்கள் அரசியல் பொருளாதாரத்தைத் தவிர பொருளாதாரப் போக்குகளைப் பற்றிய பல அறிவுத் துறைகளையும் உள்ளடக்கியிருக்கின்றன.

உற்பத்தி அமைப்பு, உழைப்பு, உற்பத்திப் பொருள்களின் விற்பனை, தொழில் துறை நிதிமுறை பற்றியவை அனைத்தும் பொருளாதார விஞ்ஞானங்களே. இது முதலாளித்துவப் பொருளாதாரம், சோஷலிசப் பொருளாதாரம் ஆகிய இரண்டுக்குமே பொருந்தும்.

முதலாளித்துவத் திட்டம் என்பது பெரிய முதலாளித்துவ அமைப்புக்களின் சுற்றுவட்டத்துக்குள் நடைபெறுவது என்பது நமக்குத் தெரியும்; அதன் முறைகளும் வடிவங்களும் பொருளாதார விஞ்ஞானத்தின் துறையைச் சேர்ந்தவையே. இன்று அரசு ஏகபோக முறையில் பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு – இது இல்லாமல் நவீன முதலாளித்துவத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது – பொருளாதாரம் முழுவதைப் பற்றியும் அதனுடைய தனித்தனித் துறைகளைப் பற்றியும் யதார்த்த அறிவு என்ற அடிப்படை அவசியமாகிறது. எனவே பொருளாதார விஞ்ஞானங்களின் செய்முறைக் கடமைகள் அதிகரித்து வருகின்றன.

சோஷலிஸ்ட் நாடுகளில் பொருளாதார நிபுணருக்கு வெவ்வேறான பல கடமைகள் ஒதுக்கப்படுகின்றன; ஸ்தூலமான பொறி இயல் அல்லது திட்ட வேலைகள் முதல் மார்க்சிய-லெனினிய அரசியல் பொருளாதாரத்தைப் பரப்புகின்ற கலப்பற்ற சித்தாந்தக் கடமை வரை அவருக்கு உண்டு.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : பொது உடைமைக் கல்வி முறை | குரூப்ஸ்காயா
♦ கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !

உற்பத்தி உறவுகள் என்ற கருதுகோளின் பன்முகத் தன்மையினால் இப்படி ஏற்படுவதாக விளக்கம் தரலாம். அவற்றின் சில வடிவங்கள் அதிகமான அளவுக்குப் பொதுவான சமூகத் தன்மையைக் கொண்டிருக்கின்றன, இவை அரசியல் பொருளாதாரத்தின் துறையைச் சேர்ந்தவை. மற்றவை ஸ்தூலமான உற்பத்தி உறவுகள் தொழில்நுட்பத்தோடு, உற்பத்திச் சக்திகளோடு நேரடியான தொடர்பு கொண்டிருக்கின்றன.

வேறுசில பொருளாதார, தொழில் நுட்பப் பிரச்சினைகள் உற்பத்தி உறவுகளோடு மறைமுகமாகவே தொடர்பு கொண்டிருக்கின்றன. ஸ்தூலமான பொருளாதார விஞ்ஞானங்களின் முக்கியத்துவம் அதிகமாக வளர்ச்சியடைவது உறுதியாகும், அவற்றின் வளர்ச்சி பொருளாதார ஆராய்ச்சியோடும் பொருளாதாரத்தின் நடைமுறை நிர்வாகத்தோடும் கணிதத்தையும் மின்கணிதப் பொறி இயலையும் இணைப்பதைப் பொறுத்திருக்கிறது.

முன்காலத்தில் தத்துவஞானம் விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாகத் திகழ்ந்து, அநேகமாக அறிவின் எல்லாத் துறைகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. ஆனால் இன்று அது “பல துறைகளில் ஒன்றாகத்” தாழ்ந்து விட்டது. அது போலவே முன்பு எல்லாப் பொருளாதார நிகழ்வுகளையும் உள்ளடக்கியிருந்த அரசியல் பொருளாதாரம் இன்று பொருளாதார விஞ்ஞானங்கள் என்ற குடும்பத்துக்குத் தலைவனாக மட்டுமே இருக்கிறது. இதுவும் தர்க்கரீதியில் சரியானதே.

ஆனால் விஷயம் இதோடு முடிந்து விடவில்லை. ஸ்மித், ரிக்கார்டோவின் ஆராய்ச்சிகளிலிருந்து உருவான அரசியல் பொருளாதாரம் அடிப்படையில் முதலாளித்துவ சமூகத்தில் மக்களுக்கு இடையே உள்ள வர்க்க உறவுகளின் விஞ்ஞானமாக இருந்தது. அதனுடைய முக்கியமான பிரச்சினை உற்பத்தி விளைவுகளை (அல்லது வருமானங்களை) பகிர்வது எப்படி என்பதே.

இது ஒரு சமூகப் பிரச்சினை. அதிலும் ஆழமான கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துகின்ற பிரச்சினை. ரிக்கார்டோவைப் பின்பற்றியவர்கள் பலரும் அவருடைய அரசியல் பொருளாதாரத்தின் சமூகத் தீவிரத்தின் வலுவைக் குறைப்பதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால் முதலாளி வர்க்கத்துக்கு இது மட்டும் போதுமானதாக இருக்கவில்லை, ஏனென்றால் அதே சமயத்தில் ரிக்கார்டோவின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு மார்க்சின் அரசியல் பொருளாதாரம் தோன்றியது. சமூக உற்பத்தி உறவுகள் இந்த விஞ்ஞானத் துறையைச் சேர்ந்தவை என்றும் முதலாளித்துவத்தின் வீழ்ச்சி தர்க்கரீதியானது என்றும் பகிரங்கமாக அறிவித்தது.

எனவே சென்ற நூற்றாண்டின் எழுத்துக்களில் புதிய பொருளாதாரக் கருதுகோள்கள் தோன்றின; அவை ஒரே சமயத்தில் பல நாடுகளில் வேரூன்றின. இவை உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை நிராகரிப்பதன் மூலம் அரசியல் பொருளாதாரத்தின் புரட்சிகரமான உள்ளடக்கத்தை நீக்குவதற்கு முயற்சி செய்தன. இந்த விஞ்ஞானம் சமூக, வரலாற்று உள்ளடக்கம் இல்லாத சில பொதுவான கோட்பாடுகளைச் சுற்றிச் சுழலுமாறு செய்யப்பட்டது.

பண்டங்களை மென்மேலும் உபயோகிக்கும் பொழுது அவற்றின் அகவய உபயோகத் தன்மை குறைந்து விடுகிறது என்பதும், பொருளாதார சமநிலை என்பதுமே இந்தப் பொதுவான கோட்பாடுகளாகும். உண்மையில் இந்த அரசியல் பொருளாதாரம் உற்பத்தியோடு சம்பந்தப்பட்ட மக்களின் சமூக உறவுகளைத் தனது ஆராய்ச்சிப் பொருளாகக் கொள்ளாமல், பொருள்களோடு மக்களின் உறவுகளை ஆராய்ந்தது.

பொருளாதார விஞ்ஞானத்தின் முக்கியமான பிரச்சினை சமூக உள்ளடக்கம் இல்லாத “தொழில் நுட்பப்” பிரச்சினையாக, ஒரு குறிப்பிட்ட பண்டத்தை உபயோகிப்பதில் இரண்டு வழிகளில் எதைத் தேர்ந்தெடுப்பதென்ற பிரச்சினையாக மாறியது; அல்லது உழைப்பு, மூலதனம், நிலம் என்ற உற்பத்திக் காரணிகளில் எந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பதென்ற பிரச்சினையாக மாறியது. குறைவாக உள்ள செல்வாதாரங்களை மிகவும் உசிதமாகப் பயன்படுத்துவது எப்படி என்ற பிரச்சினை எந்த சமூகத்துக்கும் முக்கியமான ஒன்று என் பதில் சந்தேகமில்லை; அது பொருளாதார விஞ்ஞானங்களின் துறையினுள் வருவதே. ஆனால் அரசியல் பொருளாதாரத்தின் ஒரே நோக்கம் அது மட்டுமே என்று கருத முடியாது.

அரசியல் பொருளாதாரத்தின் “சமூக நடுநிலைமை” அறிவிக்கப்பட்டது. விஞ்ஞானம் எதற்காக வர்க்கங்கள், சுரண்டல், வர்க்கப் போராட்டம் ஆகியவற்றைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்? ஆனால் இது முதலாளித்துவத்தைச் சித்தாந்த ரீதியாக ஆதரிப்பதில் ஒரு புதிய வடிவத்தை மறைத்திருந்தது.

இங்கிலாந்தில் ஜெவோன்ஸ், ஆஸ்திரியாவில் மேங்கர் மற்றும் வெய்ஸெர், ஸ்விட்சர்லாந்தில் வால்ராஸ், அமெரிக்காவில் ஜான் கிளார்க் ஆகிய பொருளாதார நிபுணர்களின் கைகளில் “பழைய” அரசியல் பொருளாதாரம் அடையாளம் காண முடியாத அளவுக்கு மாற்றமடைந்தது. இப்பொழுது அது பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிய அகவய உளவியல் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்ட சூக்குமமான தர்க்கவியல், கணிதவியல் பாடங்களாக மாற்றமடைந்தது. சீக்கிரத்தில் இந்த விஞ்ஞானத்துக்கு ஒரு புதுப் பெயர் தேவைப்பட்டது இயற்கையே. “அரசியல் பொருளாதாரம்” என்ற சொற்றொடர் அதன் நேர்ப் பொருளிலும் மரபுவழியாகவும் ஒரு சமூக உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தது. அது இப்பொழுது ஒரு தொல்லையாக, குழப்பமாக மாறியது.

பி.செலிக்மான் (இடது)

பொருளாதாரச் சிந்தனை வரலாற்றை எழுதியிருக்கும் அமெரிக்கர் பி.செலிக்மான் பின்வருமாறு எழுதுகிறார்: ஜெவோன்ஸ் “அரசியல் பொருளாதாரத்திலிருந்து அரசியல் என்ற வார்த்தையை வெற்றிகரமாக நீக்கினார்; பொருளாதாரம் பரந்து கிடக்கும் சமூகம் இயங்குகின்ற முறைகளை ஆராய்வதற்குப் பதிலாக தனித்தனியாகப் பிரிந்து போயிருக்கின்ற நபர்கள் இயங்கும் முறைகளை ஆராய்கின்ற துறையாக மாற்றினார்.”(1)

எமீல் ஜாம்ஸ் என்ற பிரெஞ்சுப் பொருளாதார நிபுணர் ஒரு பிரபலமான முதலாளித்துவ அறிஞர். பொருளாதார விஞ்ஞானத்தில் ஏற்பட்ட “புரட்சியின்” தன்மையை அவர் இன்னும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார். “எவ்விதமான பொருளாதார அமைப்புகளிலும் இயங்கக் கூடிய முறைகளை எடுத்துக் காட்டுவதுதான் எல்லாவற்றுக்கும் மேலாக பொருளாதார விஞ்ஞானத்தின் நோக்கம் என்று இந்த மாபெரும் தத்துவ போதகர்கள் கருதினார்கள்; அதனால் அவைகளைப் பற்றி எத்தகைய தீர்ப்பும் கூறாதிருக்க முயற்சித்தார்கள். சமூகப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, அவர்களுடைய அடிப்படையான தத்துவங்கள் நடுநிலைமை வகித்தன; அதாவது அப்போதிருக்கின்ற ஆட்சி முறைகளை அவர்கள் பாராட்டுகிறார்களா அல்லது குறை சொல்லுகிறார்களா என்பதை அவர்களுடைய எழுத்துக்களிலிருந்து நாம் முடிவு செய்ய முடியாது. ”(2)

ஆஸ்திரியாவின் புதிய பொருளாதார நிபுணர்கள் “மதிப்புக்கு இறுதி நிலைப் பயன்பாட்டின் மூலம் விளக்கம் கூறிய பொழுது எல்லாவற்றுக்கும் மேலாக மார்க்சியக் கொள்கையான உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தைத் தாக்குவதே அவர்களுடைய நோக்கம்.”(3)

அடுத்த நூற்றாண்டில் முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் இந்தக் கோட்பாடுகளை ஆதாரமாகக் கொண்டு பொருளாதார ஆராய்ச்சி முறைகளை வளர்த்துக் கொண்டார்கள். ”புதிய” முறைகளின் உதவியோடு பொருளாதார விஞ்ஞானத்தின் சமூகக் கூர்முனையைத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ மழுங்கடிக்கக் கூடிய ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டன. பொருளாதார விஞ்ஞானம் பல சுவாரசியமான பிரச்சினைகளைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வந்த போதிலும் அது தொடக்கத்தில் தனக்கு விதித்துக் கொண்ட கடமையையும் உள்ளடக்கத்தையும் மறக்க ஆரம்பித்தது.

எனவே அரசியல் பொருளாதாரமா அல்லது பொருளாதாரமா என்ற கேள்வி வெறும் வார்த்தைகளைப் பற்றிய விவாதமல்ல; அது அடிப்படையான கோட்பாடுகளைப் பற்றிய கருத்துப் போராட்டமே.

(தொடரும்…)

அடிக்குறிப்பு:
(1) B. Seligman, Main Currents in Modern Economics, N.-Y., 1963, p. 499.
(2) E. James, Histoire de la pensée économique an XXe siècle, Paris, 1955, pp. 10-11.
(3) Ibid.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

6 மறுமொழிகள்

    • சென்ற பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கே இன்னும் பதில் வரவில்லை என்பதால்….

      • நீங்க மக்களை ஆர்வத்தோடு பங்கெடுக்க முயற்சி பண்ணுவீங்க என்று நினைச்சேன். இப்படி பதில் வந்தா தான் என்று one to one நிற்பது சரியா?

        • சரி என்றுதான் நினைக்கிறேன். ஒரு இயந்திரம் தான் எந்த பதிலையும் எதிர்பாராமல் ஒரு வேலையை செய்யும். அப்படி ஒரு ப்ரோகிராம் செட் பண்ணியிருப்பாங்க. ஆனால் வினவு இயந்திரம் அல்ல. வாசகர்களின் உற்சாகமான விவாதம் தான் உத்வேகத்தை தரும் என்றே கருதுகிறேன். விவாதத்தில் பங்கெடுக்காதது நமது தவறு இருக்கிறது. அல்லது பொருளாதாரம் குறித்த அறிவு இல்லாமல் இருப்பதே காரணம்.

  1. கேள்விகளை கொடுங்கள் என்று தானே தீபா கேட்டார். பழைய கேள்வியோடு சேர்த்து புதிய கேள்விகளையும் கொடுக்கலாம் அல்லவா.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க