அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 08

பெற்றோர்களுக்கான கலை நிகழ்ச்சி

ன்று அரிச்சுவடி விழா!

குழந்தைகளே ஒரு கெட்டியான காகிதத்தில் எழுதிய இந்த அறிக்கையை முன் மண்டபத்தில் மாட்டுகிறோம். அங்கு இதை எல்லோரும் பார்ப்பார்கள்.

அரிச்சுவடி விழா! கவிதைகள், விடுகதைகள், பழமொழிகள்.

பாடல்கள், நடனம்.

தாள இசைக் குழு. பெற்றோர்களுக்கு ரகசியம்.

இவையெல்லாம் உண்டு! எல்லாக் குழந்தைகளும் பங்கேற்கின்றனர்.

இது தான் எங்கள் சுவரொட்டி. இதைத் தாழ்வாரத்தில் உள்ள சுவரில் மாட்டுகிறோம். அருகே எழுத்துகளைப் பெரிதாக ஒட்டுகிறோம். உழைப்புப் பாடத்தில் குழந்தைகளே இவற்றை உருவாக்கினார்கள். வகுப்பறையில் மேசைகளை ஓரமாகப் போடுகிறோம். அவற்றிற்குப் பின் விருந்தினர்கள் அமர்வார்கள். எல்லாம் தயார்.

வலேரி மாமா இப்போது வர வேண்டும். அவர் எஞ்சிய 40 நிமிடங்களில் குழந்தைகளுடன் சேர்ந்து இசை நாடக ஒத்திகையை நடத்துவார்.

“ஏன் வலேரி மாமா வரத் தாமதமாகிறது? மணி என்ன?” என்று லேலா கவலைப்படுகிறாள்.

“அவர் ஒன்றும் தாமதிக்கவில்லை. இதோ கடிகாரம், நீயே பார்!” என்று நான் கைப்பையில் உள்ள கடிகாரத்தை எடுத்துக் காட்டுகிறேன். அவள் யோசித்தபடியே இதைப் பார்க்கிறாள்.

“கடிகாரத்தில் மணி பார்க்கவே எனக்கு முடிய மாட்டேன் என்கிறது. என்ன பண்ணுவதென தெரியவில்லை! எனக்குக் குழந்தை பிறந்து, ‘மணி என்ன?’ என்று கேட்டால் எனக்குப் பதில் சொல்லத் தெரியாது, வெட்கமாக அல்லவா இருக்கும்?”

“ஏன் வெட்கமாயிருக்கும்? நான் தான் உங்களுக்கு இதைச் சொல்லித் தரவில்லையே!”.

வலேரி மாமா வருகிறார். குழந்தைகள் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு அவரைச் சூழ்ந்து கொள்கின்றனர்.

“நான் வரமாட்டேன் என்றா நினைத்தீர்கள்? எங்கே தயாராகுங்கள்!”

குழந்தைகள் விரைவாக இரண்டு வரிசைகளில் அரை வட்டமாக நிற்கின்றனர். முதல் வரிசையில் நிற்பவர்கள் சிறு நாற்காலிகளில் அமருகின்றனர், அவர்கள் முன் உள்ள மேசைகளில் கிசிலாஃபான்களும் பேரிகைகளும் உள்ளன. மற்றவர்களின் கரங்களில் மற்ற இசைக் கருவிகள் உள்ளன.

“எதிலிருந்து துவங்குவோம்?” என்று வலேரி மாமா கேட்கிறார்.

“விருந்தினர்கள் உள்ளே வந்ததும் வால்ட்ஸ் இசையோடு அவர்களை வரவேற்போம்.”

“எல்லாம் தயாரா…”

ஒத்திகை விரைவாக நடந்தது. இதனிடையே எங்கள் வகுப்பறை அருகே தாழ்வாரத்தில் நிறைய பெற்றோர்கள், தாத்தா, பாட்டிகள், பள்ளி ஆசிரியர்கள், பயனீர்கள் குழுமினர். வால்ட்ஸ் இசை ஒலிக்க, அவர்கள் வகுப்பறையினுள் நுழைந்து மேசைகளுக்குப் பின் உட்கார்ந்த போது எல்லோருக்கும் இடம் போதாதது தெரிய வந்தது. சிலர் வகுப்பறையின் உள்ளும் சிலர் தாழ்வாரத்திலும் கூட நிற்க வேண்டியிருக்கும். வகுப்பறையில் நடப்பது வெளியில் உள்ளவர்களுக்கும் கேட்பதற்காகக் கதவை அகலத் திறந்தோம்.

“அன்புள்ள அப்பாக்களே, அம்மாக்களே, தாத்தா, பாட்டிகளே! அன்புள்ள விருந்தினர்களே! எங்களை நீங்கள் பாராட்டலாம். இன்று எழுத்துகளைப் படிப்பதை முடித்தோம், எங்களால் இப்போது புத்தகங்களைப் படிக்க முடியும்!” என்று நாத்தோ முன் வந்து கம்பீரமாக இப்படிச் சொன்னாள். கர ஒலி!.

லேரியும் சாஷாவும் கவிதைகளைப் படிக்கின்றனர்.

குழந்தைகள் வரிசையாக விடுகதைகளைச் சொல்லி தாமே உடனே விடைகளையும் சொல்கின்றனர்.

வாத்திய இசைக்குழு இசைக்கிறது, குழந்தைகள் பாட்டுப் பாடுகின்றனர். ஒருவர் பின் ஒருவராகப் பழமொழிகள், வசனங்களைச் சொல்கின்றனர்.

சோம்பேறி விவசாயியைப் பற்றி இலிக்கோ கதை சொல்கிறான். மீண்டும் இசைக்குழு வாசிக்கிறது.

“அன்புள்ள அப்பாக்களே, அம்மாக்களே, தாத்தா, பாட்டிகளே! அன்புள்ள விருந்தினர்களே! எங்களை நீங்கள் பாராட்டலாம். இன்று எழுத்துகளைப் படிப்பதை முடித்தோம், எங்களால் இப்போது புத்தகங்களைப் படிக்க முடியும்!”

சில குழந்தைகள் நடனமாடுகின்றனர், வேறு சிலர் நகைச்சுவைக் காட்சிகளை நடித்துக் காட்டுகின்றனர், சிரிப்புக் கதைகளைப் படித்துக் காட்டுகின்றனர்.

“இப்போது நம் ரகசியம்! அன்புள்ள பெற்றோர்களே! உங்களுக்காக நாங்கள் பரிசுகளைத் தயாரித்துள்ளோம். இந்த பாக்கெட்டுகளில் உங்களுக்காக நாங்கள் தயாரித்த பொருட்கள் உள்ளன. நாங்கள் எப்படி எழுதுகிறோம் என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? நாங்கள் எப்படிப்பட்ட சிக்கலான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறோம் தெரியுமா? நாங்கள் எப்படி வரைகிறோம் தெரியுமா? எல்லாம் இந்த பாக்கெட்டுகளில் உள்ளன” என்கிறாள் தேயா. கடைசி வாக்கியத்தை எல்லா குழந்தைகளும் சேர்ந்து சொல்கின்றனர். விருந்தினர்கள் கை தட்டுகின்றனர்.

படிக்க:
குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை உண்டாக்குவது எப்படி ?
சிந்துச் சமவெளி நாகரீகத்தின் குடிகள் யார் ? புதிய ஆதாரங்கள் !

குழந்தைகள் “அன்பு அம்மா, அப்பாவிற்கு” என்று எழுதப்பட்ட அழகிய பாக்கெட்டுகளைப் பெற்றோர்களுக்குத் தருகின்றனர்.

“விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழியுங்கள்!” என்று நான் வாழ்த்துச் சொல்கிறேன்.

ஒவ்வொருவராக என்னருகே வந்து முத்தமிட்டு விடை பெறுகின்றனர்.

அம்மா, அப்பாக்களின் முகங்களில் திருப்திகரமான புன்னகை. வளர்ந்து விட்ட, படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்ட தம் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவர்கள் மெதுவாக வகுப்பறையிலிருந்து வெளியேறுகின்றனர்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க