கோவை சட்டக்கல்லூரி: நிர்வாகத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம்!

கோவை சட்டக்கல்லூரி நிர்வாகத்தில் மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை கண்டித்தும், போராடும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டின் அனைத்துக்கல்லூரி மாணவர்களும் குரல் கொடுக்கவேண்டியது அவசியம்.

கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர் மீது பொய் வழக்கு!
அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து மாணவர்கள் போராட்டம்!

கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எல்.எல்.எம் படிக்கும் மாணவி ஹரிதா அதே கல்லூரியில் கடந்த மே மாதம் எல்.எல்.பி படிப்பை முடித்தார். எல்.எல்.பி முடித்ததற்கான மாற்றுச் சான்றிதழைக் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். கல்லூரி நிர்வாகம் மாணவியின் மாற்றுச் சான்றிதழை தொலைத்துவிட்டு “மாற்றுச் சான்றிதழ் எங்களிடம் இல்லை உங்களிடம்தான் இருக்கிறது” என்று கூறியிருக்கிறது.

ஹரிதாவின் கணவர் சேக் முகமது இதே கல்லூரியில் எல்.எல்.பி படித்து வருகிறார். அவர் தன் மனைவியின் சான்றிதழை நிர்வாகத்திடம் கேட்டதற்கு அவர் மீதும் அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை வெறி தாக்குதல் நடத்துதல் (இ.பி.கோ பிரிவு 353, 506(1), 109) உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது கல்லூரி நிர்வாகம். அதுமட்டுமில்லாமல் ஷேக் முகமது, ஹரிதா தம்பதியைக் கல்லூரி முதல்வர் மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்துள்ளது.

தங்கள்மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாகக் கூறும் இவர்கள் சி.சி.டி.வி ஆதாரங்களைக் கேட்டதற்கு சி.சி.டி.வி செயல்படவில்லை எனக் கல்லூரி நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. ஏற்கனவே ஷேக் முகமது இக்கல்லூரியின் மீது பல ஆர்.டி.ஐ-களை பதிவு செய்துள்ளார்.


படிக்க: கேரளா: திரைப்பட கல்லூரி மாணவர்கள் போராட்டம்!


ஷேக்-ஹரிதா ஆகிய இருவரையும் தனிப்பட்ட முறையில் பலி வாங்கும் நோக்கத்தோடு கல்லூரி நிர்வாகம் அவர்கள் மீது அராஜக போக்கைச் செயல்படுத்தி வருகிறது என்று குற்றம்சாட்டி இக்கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி 21.02.2023 அன்று மதியம் 2 மணியிலிருந்து விடிய விடிய நான்கு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவர் மீது போட்ட பொய் வழக்கைத் திரும்பப் பெறுதல், இரண்டாம் ஆண்டு எல்.எல்.பி படிக்கும் தரணிஷ் உட்பட மூன்று பேரின் இடைநீக்கம் ரத்து செய்ய வேண்டும், மாணவர்கள் மீது குற்றசாட்டு வந்தால் விசாரணைக் குழுவில் கூற வேண்டும், இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாணவர்கள் மீது பிற்காலத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் கல்லூரி நிர்வாகம் எடுக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் கோவை டி.எஸ்.பி-யுடன் மாணவர்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை.

இரவு நடந்த போராட்டத்தில் மாணவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராமல் மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறையை மூடிவிட்டது கல்லூரி நிர்வாகம். கோவை சட்டக்கல்லூரி நிர்வாகத்தில் மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை கண்டித்தும், போராடும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டின் அனைத்துக்கல்லூரி மாணவர்களும் குரல் கொடுக்கவேண்டியது அவசியம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க