காசி தெலுங்கு சங்கமம் – தென்னிந்தியாவை சுற்றிவளைக்கும் பாசிசப்படை!

வட மாநிலங்களில் பெரும்பாலானவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள காவிக்கும்பல், தங்களுக்கு கட்டுப்பட மறுக்கும் தென்மாநிலங்களை (தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா) எப்படியாவது கைப்பற்ற வேண்டும் எனத் திட்டமிட்டு வேலை செய்கிறது.

0

டந்த ஏப்ரல் 29ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கங்கை நதியின் மானசரோவர் படித்துறையில் காசி தெலுங்கு சங்கமம் நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை ஸ்ரீகாசி தெலுங்கு சமிதி ஒரு நாள் மட்டும் நடத்தியுள்ளது. வாரணாசிக்கு தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிக எண்ணிக்கையில் வரும், 12 நாட்கள் நடைபெறும் கங்கா புஷ்கரலு திருவிழாவின் போது நடத்தப்பட்டுள்ளது.

இது, காசிக்கும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு இடையே உள்ள பண்டைய நாகரிக சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை எடுத்துக்காட்டும் விதத்தில் நடத்தப்படுவதாக சங்கிக் கும்பலால் கூறப்பட்டது. இது ஆந்திரா, தெலுங்கானா மாநில மக்களின் மீது பார்ப்பனிய ஆதிக்கத்தை நிறுவுகின்ற சதியாகும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இத்தகைய பன்முகத்தன்மைகளின் சங்கமம், நாட்டின் எதிர்காலத்துக்கான முழு ஆற்றலையும் உறுதி செய்யும்; தேசியவாத உணர்வையும் மேலோங்க செய்யும்” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் தெலுங்குமொழி, தெலுங்கு இன மக்கள், ஆந்திரா, தெலுங்கானா என்ற மாநில உணர்வுகளை மட்டுப்படுத்தி ‘இந்து இந்தி இந்தியா’ என்ற இந்துராஷ்டிர நீரோட்டத்தில் கலக்கச் செய்வதே இதன் நோக்கம் என்பதை அவரே உறுதிபடுத்தியுள்ளார்.

படிக்க : காசி முதல் கர்நாடகா வரை: தொடங்கியது இந்துராஷ்டிரத்திற்கான கரசேவை!

இதே யுக்தியைதான் தமிழ்நாட்டிலும் கையாண்டது காவிக் கும்பல். காசி தமிழ் சங்கமம் மற்றும் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் ஆகிய பெயர்களில் நிகழ்ச்சியை நடத்தியது. தற்போது காசி தெலுங்கு சங்கமம் மூலம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில மக்களை குறிவைத்துள்ளது. இவையெல்லாம் காவிக்கும்பலின் தென்னிந்தியாவை சுற்றிவளைக்கும் நயவஞ்சகத் திட்டமான ‘மிஷன் சவுத்’ திட்டத்தின் ஒரு அங்கமாகும்.

வடமாநிலங்களில் பெரும்பாலானவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள காவிக்கும்பல், தங்களுக்கு கட்டுப்பட மறுக்கும் தென்மாநிலங்களை (தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா) எப்படியாவது கைப்பற்ற வேண்டும் எனத் திட்டமிட்டு வேலை செய்கிறது. மிஷன் சவுத் அமித்ஷாவால் உருவாக்கப்பட்டது. மோடி, அமித்ஷா, நட்டா ஆகிய மூவரின் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் நோக்கம் கட்சிக் கட்டமைப்பை பலப்படுத்துவது ஆகும்.

பா.ஜ.க தலைவர்களை பிற மாநிலங்களில் இருந்து தென்னிந்திய மாநிலங்களில் வேலை செய்ய இறக்குவது; பிற அரசியல் கட்சி பிரமுகர்களை பேரத்தின் மூலம் தன் கட்சிக்குள் இழுத்துக்கொள்வது; சினிமா பிரபலங்களை முன்னிறுத்துவது போன்ற பல வழிமுறைகளில் செயல்பட்டு வருகிறது காவிக் கும்பல்.

கர்நாடகாவில் போலீசு அதிகாரியாக இருந்த அண்ணாமலை தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டதும், அ.தி.மு.க கட்சியானது பா.ஜ.க-வின் ஒரு பிரிவாகவே மாறியிருப்பதும், ரஜினிகாந்தை பா.ஜ.க கட்சிக்குள் இழுக்க முயன்றதும், இளையராஜா போன்ற பல சினிமா பிரபலங்கள் சங்கிகளாக தங்களை வெளிக்காட்டிக் கொள்வதும் இத்திட்டத்தின் அடிப்படையில்தான்.

மேலும், காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான ஏ.கே ஆண்டனியின் மகனான அனில் ஆண்டனி கேரள பா.ஜ.க-வில் இணைத்துக் கொள்ளப்பட்டதும், பிரிக்கப்படாத ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான கிரண் குமார் ரெட்டி மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவரான சி.கேசவன் பா.ஜ.க-வில் இணைத்துக் கொள்ளப்பட்டதும் இத்திட்டத்தின் அங்கங்களாகும்.

மேற்கூறிய வழிமுறைகளைத் தாண்டி, கலாச்சார, பண்பாட்டு ரீதியாகவும் செயல்பட்டு வருகிறது காவிக் கும்பல். “ஒரே பாரதம்; உன்னத பாரதம்” என்ற பெயரில் நடத்தப்படும் காசி, சௌராஷ்டிரா சங்கம நிகழ்ச்சிகள் அதன் வெளிப்பாடுதான். ஆனால் தமிழ்நாட்டில் காசி மற்றும் சௌராஷ்டிரா தமிழ் சங்கமங்கள் தமிழக மக்கள்  மத்தியில் எடுபடவில்லை.

காசி தமிழ் சங்கமத்தை ஓட்டி பா.ஜ.க ஆதரவு ஊடகங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பிரச்சாரம் செய்தன. ஆனால், அவை மக்கள் மத்தியில் பேசுபொருளாக கூட ஆகவில்லை.

சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி என்றும், மதப்பிரச்சார நிகழ்ச்சியை போன்று இருப்பதாகவும் பலர் விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும், தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான கருத்தரங்கமோ, தமிழ் அறிஞர்களோ அங்கு யாரும் கலந்து கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.

படிக்க : வாரணாசியில் தமிழ் சங்கம்: ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் சதித் திட்டம்!

வரவேற்பு பதாகைகளில் தமிழ் பிழையாக அச்சடிக்கப்பட்டிருந்ததை பலரும் விமர்சித்ததோடு, இதுதான் இவர்கள் தமிழை வளர்க்கும் இலட்சணமா என்று பலரும் கலாய்த்து தள்ளினர்.

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம், தமிழ்நாட்டில் உள்ள 24 இலட்சம் சௌராஷ்டிரா மக்களை கவர்வதற்காக நடத்தப்பட்டது. காசி தமிழ் சங்கமம் அளவுக்கு கூட, இது மக்கள் மத்தியில் பேசப்படவில்லை. இந்நிகழ்ச்சிகள் மூலம் தமிழர் நலனுக்காக பாடுபடுகின்ற கட்சி பா.ஜ.க என்ற போலிப்பிம்பத்தை ஏற்படுத்த முயன்றது காவிக்கும்பல்.

மேற்கூறியவை மட்டுமல்ல, தமிழ்நாட்டை கைப்பற்றுவதற்காக பாசிசக் கும்பல் மேற்கொள்ளும் முயற்சிகளையும் தமிழ்நாட்டு மக்கள் முறியடித்து வருகின்றனர். தமிழ்நாட்டு மக்களைப் போல, தென்னிந்தியாவை கைப்பற்ற பாசிசக் கும்பல் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியையும் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மக்களும் விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும்.

பிரவீன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க