எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் அவதியுறும் பொதுமக்கள்!

ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்பு மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்துடன் முறையான ஆலோசனை நடத்தாமல், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ரயில்களைக் குறைத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

0

டந்த சில தினங்களுக்கு முன்பு தெற்கு ரயில்வே ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.734 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தது. இதன் காரணமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5 வரை 45 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 164 புறநகர் மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவித்தது.

இதன்படி, தினசரி இயக்கப்பட்டு வந்த ரயில்களின் எண்ணிக்கை 204-இல் இருந்து 164 ஆகக் குறைக்கப்பட்டது. பிப்ரவரி 20 ஆம் தேதி இரவே எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்களுக்கான நடைமேடைகள் 10 மற்றும் 11 மூடப்பட்டு, எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான நடைமேடைகள் 5 மற்றும் 6-க்கு மாற்றப்பட்டன. அங்கு உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான சிக்னல்கள் புறநகர் ரயில்களுக்குப் பொருந்தாததால், ரயில்கள் நிலையத்திற்குள் நுழையும் போது அதன் வேகம் 55 கி.மீட்டரில் இருந்து 15 கி.மீட்டராகக் குறைக்கப்பட்டது. இந்த வேகக் குறைப்பினாலும் ரயில்களின் எண்ணிக்கை மேலும் பாதிக்கப்பட்டது.

இதனால், எட்டு நிமிடத்திற்கு ஒரு ரயில் என்ற நிலை மாறி, தற்போது 15 முதல் 45 நிமிடங்கள் வரை ரயிலுக்காக மக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் காலை அலுவலகங்களுக்குச் செல்லும் பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், கூடுவாஞ்சேரி, தாம்பரம் உள்ளிட்ட தெற்கு புறநகர்ப் பகுதிகளிலிருந்து வரும் தினக்கூலி தொழிலாளர்கள் என சுமார் 2.5 லட்சம் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அடுத்த மாதம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது.

இதற்கிடையில், பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் 43 சதவீதம் ரயில்கள் குறைக்கப்பட்டு, 115 ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருவது மக்களுக்குப் பொருளாதார நெருக்கடியைத் தீவிரப்படுத்தியுள்ளது. எனவே மக்களின் எதிர்ப்பை சமாளிக்க எழும்பூரிலிருந்து செயிண்ட் தாமஸ் மவுண்ட், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு வரை குறுகிய தூரப் பயணங்களுக்காக காலை 7 மணி முதல் இரவு 11.30 மணி வரை 26 கூடுதல் ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே வழங்கி வருகிறது.

ஆனால் இந்த கூடுதல் சேவைகளும் போதுமானதாக இல்லை. அதிக கூட்டம் காரணமாக பெண்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பலர் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் ரயிலில் பயணித்தவர்கள் தற்போது ரூ.400 வரை செலவழித்து ஆட்டோவில் பயணிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பொருளாதார ரீதியாகவும் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகம் போதுமான பேருந்துகளை இயக்காததால் மக்கள் நெரிசலில் பயணிக்க வேண்டிய நிலை தொடர்கிறது.

எழும்பூர் பராமரிப்பு பணிகளைத் தொடங்குவதற்கு முன்பு வேளச்சேரி – செயிண்ட் தாமஸ் மவுண்ட் இடையிலான 5 கி.மீ. இணைப்புப் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருந்தால் கூட்ட நெரிசலைச் சமாளிக்க முடிந்திருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மக்கள் நேரடியாக எழும்பூர் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது; செயிண்ட் தாமஸ் மவுண்ட் வழியாக சென்ட்ரல் மற்றும் கடற்கரைக்குச் செல்ல முடியும்.

ஆனால் தற்போது எழும்பூர் மறுசீரமைப்பு பணிகள் உச்சத்தில் இருக்கும் நிலையில், வேளச்சேரி – செயிண்ட் தாமஸ் மவுண்ட் இணைப்புப் பாதை மார்ச் 10ஆம் தேதி தான் பயன்பாட்டிற்கு வரும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது நிர்வாகத் தோல்வியை வெளிப்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது.


படிக்க: மக்கள் பயணிப்பதோ முன்பதிவில்லா இரயில் பெட்டிகளில், மோடி விடுவதோ வந்தே பாரத்!


மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்தில் (CSMT) ரூ.2,450 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகளின்போது புறநகர் பாதைகள் தனிமைப்படுத்தப்பட்டதால் சேவைகள் பாதிக்கப்படவில்லை. அதேபோல் கொல்கத்தா சீல்டா ரயில் நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் வார இறுதிகளில் மட்டுமே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. மும்பை போன்ற நகரங்களில் பின்பற்றப்படும் “தனிமைப்படுத்தப்பட்ட நடைமேடை” முறையை எழும்பூரில் ஏன் செயல்படுத்தவில்லை என மாநிலங்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் “தாம்பரம் – கடற்கரை இடையே பீக் நேரங்களில் 15 பெட்டிகள் கொண்ட அதிவேக (fast line) ரயில்கள் இயக்கப்படும். இவை மாம்பலம், கிண்டி, எழும்பூர், கடற்கரை ஆகிய இடங்களில் மட்டுமே நின்று செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கடற்கரை – தாம்பரம் இடையே காலை 6.40 மணி முதல் 9.40 மணி வரை 20 பயணங்களும், மாலை 5 மணி முதல் 8 மணி வரை 20 பயணங்களும் என மொத்தம் 40 சிறப்பு பேருந்து சேவைகள் வழங்கப்படும். ரயில் டிக்கெட் அல்லது மாத/காலாண்டு சீசன் பாஸ் வைத்திருப்போருக்கு இச்சேவை இலவசமாக வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு அறிவிப்புகளும் பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று நடைமுறைக்கு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே, ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்பு மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்துடன் முறையான ஆலோசனை நடத்தாமல், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ரயில்களைக் குறைத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க