நெல்லை: ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி வழக்கு உணர்த்துவது என்ன?

ஜனநாயக சக்திகள் அனைவரும் இணைந்து தங்களது போராட்டத்தின் வழியாக கிருஷ்ணவேணி அவர்களுக்கு இந்த நீதியைப் பெற்றுத் தந்துள்ளனர். கிருஷ்ணவேணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது சாதிய வன்மத்தோடு தலித் மக்களின், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

‘தே**** முண்*, சக்கிலித் தே***’ என்று கத்திக் கொண்டே, கஞ்சா போதை மற்றும் சாதிவெறி தலைக்கேறிய 15 பேர் கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்டு அந்த 35 வயது பெண்ணை 17 இடங்களில் வெட்டிச் சாய்த்தனர்.

விரல்கள் துண்டுபட்டு, வெட்டப்பட்ட கழுத்து ஒருபக்கம் தொங்கிப்போக, உடலில் சதைகள் பிய்ந்து தொங்க, இரத்தம் பெருகி ஓட உட்கார்ந்த நிலையில் அந்த உயிர் துடித்துக் கொண்டிருந்தது.

ஆளரவம் கேட்டு ஓடிய கொலைகார கும்பலிலிருந்து மறுபடியும் திரும்பி வந்த இரண்டு பேர் அவர் ஓடிவிடக்கூடாது என்பதற்காக கால் மூட்டில் உள்ள சிரட்டைப் பகுதியை கையில் வைத்திருந்த அரிவாளை வைத்து வெட்டி, வெட்டி உடைத்தனர். வலி பொறுக்காது அப்படியே மண்ணில் சாய்ந்தார். இரத்தம் வழிந்த முகத்தில் ஒரு கண்ணின் இமை மட்டும் சற்று திறந்திருக்க தூரமாய் ‘காவல் தெய்வம்’ கருப்பசாமி அனைத்தையும் ‘பார்த்த சாட்சியாய்’ அமர்ந்திருந்தார்.

நெல்லை வடக்கு தாழையூத்து பகுதியில் அருந்ததியர் சாதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் (2006-2011) கிருஷ்ணவேணி அவர்களின் மீது இந்த கொலைவெறித் தாக்குதல் 2011-ஆம் ஆண்டு நடந்தது. பலத்த காயங்களுடன் கிருஷ்ணவேணி உயிர் பிழைத்துக் கொண்டார். இருந்த போதும் இன்றும் அவர் அந்த உடல்நல பாதிப்புகளுடனேயே வாழ்ந்து வருகிறார்

கோனார், தேவர், பள்ளர் உள்ளிட்டு பல ‘சாதி’ உழைக்கும் மக்கள் வாழும் வடக்கு தாழையூத்தில் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு அந்த மக்களுக்கு தன்னால் இயன்ற பணிகள் அனைத்தையும் செய்து வந்தார் கிருஷ்ணவேணி.

கோனார் சாதியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் துணைத்தலைவர் சுல்தான் மைதீன் உள்ளிட்ட சிலர் இவரது செயல்பாடுகளைத் தொடர்ந்து எதிர்த்து வன்கொடுமைகளில் ஈடுபட்டனர்

பெண்கள், கர்ப்பிணிகள் ஒதுங்குவதற்கு கழிப்பிடம் இன்றி சிரமப்பட்ட போது அவர்களுக்கான கழிப்பிடம் கட்ட முயற்சி எடுத்தார் கிருஷ்ணவேணி. ஆனால் புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடும் இந்த கும்பல் போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளின் துணையோடு அதைத் தடுத்தது. பெண் என்பதாலும் சாதி வெறியோடும் பல்வேறு தாக்குதலை எதிர்கொண்டு நின்ற கிருஷ்ணவேணி இந்த எதிர்ப்பையும் துணிந்து எதிர்கொண்டார். இதனாலேயே கொலைவெறித் தாக்குதலுக்கும் உள்ளானார்.

ஒரு பேட்டியில் கிருஷ்ணவேணி கூறும்போது தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் கழிப்பறை மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைப்பதற்கான சாதிவெறியர்களின் எதிர்ப்பு என்பது “தங்களுக்குச் சமமான வசதிகளை அவர்கள் பெறுவதா?” என்ற சாதிய வன்மத்தை உள்ளடக்கி கொலைவெறியைத் தூண்டியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒற்றை மனுசியாய் நின்று துணிச்சலுடன் இந்த வழக்கை எதிர் கொண்டார்.

வழக்கு நடந்த 13 ஆண்டுகளில் பலமுறை அவருக்கு மிரட்டல்கள் வந்தன. “பணத்தைப் பெற்றுக்கொண்டு வழக்கை வாபஸ் பெறு” எனப் பேரம் பேசப்பட்டபோதும், “நீதி கிடைக்காமல் விடமாட்டேன்” என்பதில் உறுதியாக இருந்ததாக அவர் தனது பேட்டிகளில் தெரிவித்துள்ளார்

சம்பவம் நடந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2024-ஆம் ஆண்டு திருநெல்வேலி வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் (Special Court for SC/ST Act cases) வழங்கிய தீர்ப்பில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 6 பேருக்கு [சுப்பிரமணியன் (60) – முதன்மை எதிரி, சுல்தான் மைதீன் (59), ஜேக்கப் (33), கார்த்திக் (34), விஜய ராமமூர்த்தி (34), பிரவீன் ராஜ் (32)] தலா இரட்டை ஆயுள் தண்டனைகள் மற்றும் தலா ₹50,000 அபராதம் விதிக்கப்பட்டது.

விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் ₹2.70 லட்சத்தை கிருஷ்ணவேணிக்கு இழப்பீடாக வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

தற்போது இந்த கொலை முயற்சி வழக்கில் சிறையில் உள்ள குற்றவாளிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர். இவர்களின் மனுவைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் கீழமை நீதிமன்றம் வழங்கிய இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

இவ்வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் தொடங்கி, உயர்நீதிமன்றம் வரை வழக்கறிஞர்கள் திருமுருகன், மூத்த வழக்கறிஞர் திரு லஜபதிராய், அரசு வழக்கறிஞர் திரு செந்தில் குமார் அவர்கள் சிறப்பாக வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்தனர். ஜனநாயக சக்திகள் அனைவரும் இணைந்து தங்களது போராட்டத்தின் வழியாக கிருஷ்ணவேணி அவர்களுக்கு இந்த நீதியைப் பெற்றுத் தந்துள்ளனர். கிருஷ்ணவேணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது சாதிய வன்மத்தோடு தலித் மக்களின், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

பா.ஜ.க – இந்துத்துவ கும்பல் அதிகாரத்திற்கு வந்தபின் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் இக்கும்பலின் சாதி – மத முனைவாக்கத்திற்கான குவிமயமாக மாறியுள்ளது. இக்கும்பலுக்கு எதிராக உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து களமிறங்கிப் போராட வேண்டும். அதன் மூலமே, தலித் மக்களின், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட முடியும்.

பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க