“தாய்கிழவி”: ஆளுமையா? சாதி ஆதிக்கமா? | திரைவிமர்சனம்

இது தமிழ்ச் சமூகம் கொண்டாட வேண்டிய சினிமாவா என்பது பிறகு இருக்கட்டும், முதலில் இது தேவர் சாதியினரே கொண்டாடத் தகுதியான சினிமாதானா என்பதுதான் நம் கேள்வி.

தென்மாவட்டத்தில் வட்டிக்கு விடும் தேவர் சாதிப் பெண் ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி சில முற்போக்கு மசாலாவை கலந்து எடுக்கப்பட்டு தற்போது திரையரங்கில் வெற்றியும் பெற்றிருக்கிறது தாய்கிழவி திரைப்படம். அரசியலோ அல்லது கலையோ, வெற்றி பெற்றதாலேயே அவை கொண்டாடத் தகுதியுடையவையாக ஆகிவிடாது.

அண்ணாமலை, சீமான் போன்றோர் ‘இக்காவியத்தை’ புகழ்ந்து வருகின்றனர். பல தேவர் சாதிவெறி முகநூல் பக்கங்கள், இப்படத்தின் இயக்குநரான சிவக்குமார் முருகேசன் பாரதிராஜாவின் இடத்தை பிடித்துவிட்டார் என சிலாகித்தும், படத்தில் உள்ள தங்கள் சாதி ‘குறியீடு’களை கொண்டாடியும் வருகின்றன.

ரஞ்சித், மாரி செல்வராஜ் வருகைக்குப் பின் தமிழ் திரைத்துறையில் தலித் மக்களின் வாழ்வியலைக் காட்சிப்படுத்துகின்ற, சமத்துவ உணர்வை உயர்த்திப்பிடிக்கின்ற திரைப்படங்கள் வெளிவருவது அதிகரித்துவரும் இச்சூழலில், “கிடைச்சதுடா நம்ம சாதிக்கான அடுத்த சினிமான்னு” தேவர் சாதிவெறியர்கள் குதூகலிக்கின்றனர்.

இது தமிழ்ச் சமூகம் கொண்டாட வேண்டிய சினிமாவா என்பது பிறகு இருக்கட்டும், முதலில் இது தேவர் சாதியினரே கொண்டாடத் தகுதியான சினிமாதானா என்பதுதான் நம் கேள்வி.

ஒரு ரூபாய்க்கு 2 பைசா, 4 பைசா எனத் தொடங்கி 10 பைசா வட்டி வரை கந்து வட்டி, மீட்டர் வட்டி, மகளிர் குழு கடன், மாதத் தவணை என்று கோடிக்கணக்கான பெண்களும் குடும்பங்களும் கடன் கொடுமையால் துயரப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

குழுவில் கடன் எடுத்த இடத்தில் சரியான நேரத்திற்குத் தவணைத் தொகையைக் கட்ட முடியாமல் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் பெண்கள் படும் பாடு பல கண்ணீர்க் கதைகளைக் கொண்டிருக்கிறது.

வட்டிக்குக் கடன் வாங்கிவிட்டு வட்டி கட்டவும் முடியாமல், அசலை செலுத்தவும் முடியாமல், வட்டி கட்டுவதற்காகவே மீண்டும் வட்டிக்குக் கடன் வாங்குவோர் படும் துன்பங்களும், வாங்கும் வசவுச் சொற்களும் மானக்கேடான வார்த்தைகளும் எத்தனை குடும்பங்களைத் தற்கொலைக்கும் அரசு அலுவலகங்கள் முன் நெருப்புக்கும் பலி கொடுத்திருக்கிறது.

வீட்டு வாசலில் நின்று கேவலப்படுத்துவது, கெட்டவார்த்தையில் திட்டுவது, மிரட்டுவது, அடிப்பது, தொடர்ந்து போன் செய்து தொல்லை தருவது என பாதிப்பும் பலியின் எண்ணிக்கையும் உயர உயர, அரசே கந்துவட்டி தடை சட்டம் (2025) போட்டு கட்டுப்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டது.


படிக்க: கவுண்டம்பாளையம் போன்ற சாதிவெறி திரைப்படங்களைத் தடை செய்!


நாடே இந்த நிலைமையில் இருக்கையில், இதில் தேவர் சாதியினர் மட்டும் என்ன விதிவிலக்கா? வட்டியை உரிய நேரத்தில் தராதது தனது சொந்த தேவர் சாதிக்காரர்கள் என்றால் வட்டிக்கு விடும், பைனான்ஸ் செய்யும் ‘பெரிய தேவர்களும்’, ‘தாய்கிழவிகளும்’ பெரிய மனதோடு விட்டிருக்கிறார்களா? அவகாசம் கொடுத்திருக்கிறார்களா? அதே அவமரியாதையும் அசிங்கப்படுத்தலும்தான். நாயிலும் கேவலமான பேச்சுதான்‌. ஒரே சாதியாக இருந்தாலும், கூடவே பிறந்திருந்தாலும் பணம் இல்லாதவர்களை மதித்திருக்கிறார்களா?

திரைப்படம் தொடங்கும் போதே, “கலெக்சனுக்கு” கிளம்பும் தாய் கிழவியின் வருகையைப் பார்த்து ஊரே கதிகலங்கி தெரித்து ஓடும். கண்ணில் காண்பவர்களை எல்லாம் கெட்டவார்த்தையில் திட்டி, அடிக்கும் கிழவியின் செயல் பார்வையாளர்களுக்கு ‘நகைச்சுவை’யாக் சித்தரிக்கப்படுகிறது. ஆனால், தாய்கிழவியின் வருகையை நிஜத்தில் எதிர்நோக்கிக் காத்திருந்தவர்களுக்கு அந்த ‘நகைச்சுவை’ காட்சியும் பிறரின் ‘சிரிப்பு’ சத்தமும் நிச்சயம் அருவருப்பையே ஏற்படுத்திருக்கும்.

“பெண் விடுதலை, பெண் பொருளாதார சுதந்திரம், பணம் சந்தோஷத்தைக் கொடுக்குமானு தெரியாது. ஆனா மரியாதையைக் கொடுக்கும்” என சில ‘முற்போக்கு’ பஞ்ச் டயலாக்குகளை படத்தில் வைத்திருக்கிறார்கள். அதற்காகவெல்லாம் இத்திரைப்படம் கொண்டாடத் தகுதியானதா என்றால் நிச்சயமாக இல்லை.

எண்ணிலடங்கா பெண்களின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் நாசம் செய்து கொண்டிருக்கும் இந்த தாய்கிழவிகளை வைத்து ‘முற்போக்கு’, பெண் சுயமரியாதை, பெண்ணியம், பெண் பொருளாதாரம் என்றெல்லாம் இயக்குநர் பேச வைப்பதை, சீமான், அண்ணாமலை போன்றவர்கள் வேண்டுமானால் வெட்கமில்லாமல் புகழலாம்.

ஆனால், பாதிக்கப்படும் பெண்கள், ஏழை-எளிய குடும்பத்தினருக்கும், வீடு வாசல்களை இழந்தவர்களுக்கும், நிலங்களையும் தொழில்களையும் இழந்து ஊரைவிட்டு ‘சேரி’யை விட்டு வெளியேறியவர்களுக்கும், திருநெல்வேலியில் கந்துவட்டி கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி, இரு குழந்தைகளுடன் தீயிட்டுக் கொளுத்திக்கொண்டு செத்துப்போன இசக்கிமுத்துவின் குடும்பத்தைக் கண்டு கண்ணீர் வடித்த மனிதாபிமானம் உள்ளவர்களுக்கும் இத்திரைப்படம் நிச்சயம் கொண்டாட்டத்தை ஏற்படுத்தாது, அருவருப்பையே ஏற்படுத்தும்.

இப்படியிருக்கையில், இதே தென்மாவட்டங்களில் ஆதிக்கச் சாதி கந்துவட்டிக்காரர்களால் அடக்கி ஒடுக்கி சாதிய ரீதியாக இழிவுபடுத்தப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையிலிருந்து பார்த்தால்தான் இத்திரைப்படத்தை ரசிக்கும் மனநிலை எத்துணை இழிவானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

எத்தனையோ உழைக்கும் வர்க்க பெண்கள் அரசுப் பணியாளர்களாகவும், வியாபாரம் செய்தும், உணவகங்கள் நடத்தியும், கல் உடைத்தும், சித்தாள் வேலை செய்தும், பல ஆண்களே செய்யத் தயங்கும் பல உடல் உழைப்பு வேலைகளைக் கூடச் செய்தும் நேர்மையாக தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி வருகின்றார்கள். அப்படிப்பட்ட பெண்கள்தான் பாராட்டத்தக்கவர்கள், போற்றத்தக்கவர்கள்‌, முன்னுதாராங்களாக காட்டப்பட வேண்டியவர்கள். தமிழ் திரைத்துறை படமாக்கப்பட வேண்டியது அவர்களுடைய வாழ்வும் வலியும்தான். தாய்கிழவிகள் போன்ற வக்கிரங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் – திருக்குறள்.

உழைத்து வாழவேண்டும், பிறரிடம் கையேந்தக்கூடாது. அப்படி கையேந்திதான் வாழ முடியும் என்ற நிலையில் உலகைப் படைத்தவன் எவனோ அவன் அழிந்து போகட்டும் என்கிறார் வள்ளுவர்.

குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் உழைத்தும், வாழ்க்கையின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட வட்டிக்குக் கடன் வாங்கித்தான் வாழ வேண்டும் என்பது தற்போது எழுதப்படாத சமூக விதியாக இருக்கிறது. அவ்விதியை அழித்து மாற்றி எழுதும் அரசியல் பணிக்காகத்தான் கம்யூனிஸ்ட்கள் போராடி வருகின்றனர். அப்போராட்டத்தில், தேவர் சாதியினர் உட்பட உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.


முகிலன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads