சாத்தான்குளம் கொட்டடிப் படுகொலை தீர்ப்பு: போலீசு பயங்கரவாதம் தடுக்கப்படுமா?

சமூகத்தில் குற்றமிழைக்கும் குற்றவாளிகளைப் பிடித்து விசாரிக்கும் பொறுப்பை குற்றங்களையே முழு நேரம் பணியாகச் செய்யும் குற்றக் கும்பலான போலீசிடமே ஒப்படைத்து அதைக் காத்துக் கொண்டிருக்கின்றன அரசின் உறுப்புகள் அனைத்தும். இந்த கட்டமைப்பின் வழியாகக் குற்றங்களைத் தடுக்க முடியாது என்பது மட்டுமல்ல, அப்பாவிகள் பலியாவதும் தொடர்வது தவிர்க்க முடியாதது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 59) வியாபாரி. இவரது மகன் பென்னிக்ஸ் (வயது 31). தந்தை மகன் இருவரும் கொட்டடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 ஆண்டுகள் கழித்து, குற்றம் சாட்டப்பட்ட போலீசார் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் 23.03.2026 அன்று தீர்ப்பளித்துள்ளது.

கைது பின்னணி (ஜூன் 19, 2020)

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளம் பஜாரில் செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை வைத்திருந்தனர்.

கொரோனா ஊரடங்கு அமலிலிருந்தபோது, அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி, ஜெயராஜ், பென்னிக்ஸை சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

போலீசு சித்திரவதை (ஜூன் 19 இரவு)

அன்று இரவு முழுவதும் சாத்தான்குளம் போலீசு நிலையத்தில் வைத்து தந்தை மற்றும் மகன் இருவருமே கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.

சி.பி.ஐ விசாரணையில், அவர்கள் விடிய விடிய லத்திகளால் தாக்கப்பட்டதும், அவர்களின் உடலில் கடுமையான காயங்கள் ஏற்படுத்தப்பட்டதும் உறுதியானது.

போலீசு நிலையத்தின் சுவர்கள் மற்றும் தரைகளில் அவர்களின் ரத்தக் கறைகள் படிந்திருந்ததாக நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற ‘காவல்’ (ஜூன் 20)

மறுநாள் காலை, அவர்கள் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தகுதியற்ற நிலையில் இருந்தபோதிலும், போலீசார் அழுத்தம் கொடுத்து “உடல்நிலை சீராக உள்ளது” எனச் சான்றிதழ் பெற்றனர்.

பின்னர், மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது காயங்களை மறைக்க, அவர்கள் மீது வேறு ஆடைகள் அணிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாஜிஸ்திரேட் அவர்களைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

படுகாயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் மறுநாள் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

மரணம் (ஜூன் 22 & 23)

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைத்து 5 மணி நேர இடைவெளியில் தந்தை, மகன் இருவரும் உயிர் இழந்தனர்.

ஜூன் 22: மகன் பென்னிக்ஸ் கடுமையான நெஞ்சு வலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அன்று இரவே உயிரிழந்தார்.

ஜூன் 23: மறுநாள் காலை தந்தை ஜெயராஜும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

தீர்ப்பு:

வழக்கில் கைதானவர்கள் ஜாமீன் கோரி, மதுரை மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்றனர். ஆனால் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த வழக்கில் நீதிபதி ஜி. முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். இதற்காக சிறையில் உள்ள 9 பேரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். சுமார் 265 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை சுமார் ஒன்றரை மணி நேரம் நீதிபதி வாசித்தார்.

அதில் “ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் உடலிலிருந்த காயங்கள் இயற்கைக்கு மாறானது. மரணங்களை விளைவிக்கக் கூடிய வகையில் காயங்கள் இருந்தது. அதனால் தந்தை, மகன் ஆகிய இருவரின் உயிரிழப்பும் கொலை என சி.பி.ஐ தனது குற்றப் பத்திரிகையில் பதிவு செய்துள்ளது. உட்புறம் இருந்த காயங்கள் பலமுறை தாக்கியதால் ஏற்பட்ட காயம் என்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் உடலிலிருந்த காயங்கள் அவர்களாக ஏற்படுத்திய காயங்கள் என கூறமுடியாது. உயிரிழந்த பென்னிக்ஸ் “தன்னை இரவு முழுவதும் பத்து நிமிடம் இடைவெளி விட்டுவிட்டு தொடர்ந்து தாக்கினர்; 200 முறைக்கு மேல் தாக்கினார்” என அவரது உறவினரிடம் கூறியதாகக் குற்றப்பத்திரிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அடிக்கச் சொன்னதால் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் மற்ற போலீசாரும் தாக்கியுள்ளனர். கைகளைக் கயிற்றால் கட்டி, மேலிருந்து தொங்கவிட்டுத் தாக்கியுள்ளனர் என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. டேபிளில் படுக்க வைத்தும் தாக்கியுள்ளனர்.

இந்த வழக்கினுடைய அனைத்து தரப்பு விசாரணைகளையும் பார்க்கும்போது, 9 பேரின் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே 9 பேரும் கொலைக் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்படுகிறது.

போலீசை சேர்ந்த 9 பேருக்கும் இவர்கள் செய்த குற்றத்திற்காக என்ன தண்டனை வழங்கலாம், இவர்களின் முந்தைய நடத்தை என்ன என்பது குறித்து ஒன்றிய மாநில, மாநில அரசுகளின் தொடர்புடைய அதிகாரிகள் வரும் 30ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 9 பேரின் சொத்து ஆவணங்களையும், சம்பள விவரங்களையும் எஸ்.பி-க்கள் தாக்கல் செய்ய வேண்டும். தண்டனை விவரங்கள், இழப்பீடு அந்த ஆவணங்களின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்” எனக் கூறி வரும் 30ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தீர்ப்பை அடுத்து, ஜெயராஜின் மகள் பெர்ஷி கூறியதாவது, “எனது அப்பா மற்றும் தம்பி இருவரையும் விசாரணை என்ற பெயரில் அடித்துத் துன்புறுத்தியதாகவும், அனைவரும் அடித்ததால் தான் மரணம் ஏற்பட்டிருக்கிறது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக இந்த ஒரு நாளுக்காகத் தான் அலைந்தோம். இதற்கான நீதி கிடைத்திருக்கிறது. 30-ஆம் தேதி என்ன தண்டனை கிடைக்கிறது என காத்திருக்கிறோம். நீதிபதியையும், நீதிமன்றங்களையும் நம்புகிறோம். இவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என நம்புகிறோம். இந்த தண்டனைகளின் மூலம், இனிமேல் இது போன்ற யாரும் பாதிக்கப்படக்கூடாது. இனிமேல் இதுபோன்று செய்பவர்கள் பயப்படுவார்கள். 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். என் தம்பிக்கு 31 வயது, அவரை அடித்துக் கொன்றிருக்கிறார்கள். அப்போதுதான் வாழ்க்கையைத் தொடங்கினான். அதிகாரத்தினால் அவனுடைய வாழ்க்கையை மொத்தமாக அழித்துவிட்டார்கள். அதனை நினைக்கும் போது உயிரோடு இருக்கிற வரை எங்களுக்கு வேதனையாகத்தான் இருக்கும். அப்பா முன்பு தம்பியையும், தம்பி முன்பு அப்பாவையும் தாக்கியுள்ளனர். அடிப்பதை ரசித்திருக்கிறார்கள். ஒரு ஃப்ரஸ் பீஸ் கிடைத்திருக்கிறது, அடித்துப் பழகலாம் என கூறிய இவர்களுடைய மனநிலை கொடூரமானது. எங்களுக்காகப் போராடிய குரல் கொடுத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

(குறிப்பு: தந்தை, மகன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் 10 போலீசாரில், உடல்நலக்குறைவால் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரையின் மகனுக்கு, கருணை அடிப்படையில் போலீசு துறையில் பணி வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.)

தொடரும் கொட்டடி மரணங்கள்!

ஆனால் சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகு (ஜூன் 2020 முதல் இன்று வரை) தமிழ்நாட்டில் நிகழ்ந்த லாக்கப் மரணங்கள் மட்டும் தோராயமாக 32 ஆகும்.

2021 – 2025 (ஆகஸ்ட் வரை): மனித உரிமை அமைப்பான ‘பீப்பிள்ஸ் வாட்ச்’ (People’s Watch) தகவல்படி 27 மரணங்கள். 2025 – 2026 வரை அஜித் குமார், ஆகாஷ் டெலிசன் சேர்த்து மொத்தம் 32-ஐ நெருங்குகிறது.

மனித உரிமை அமைப்பான People’s Watch மற்றும் ஊடக ஆய்வுகளின்படி, தென் மண்டலத்தில்தான் (South Zone) அதிகப்படியான லாக்-அப் மரணங்கள் பதிவாகியுள்ளன.

மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த மண்டலத்தில் மட்டும் 8 மரணங்கள் பதிவாகியுள்ளன.

சென்னை மாநகர எல்லைக்குள் 3 மரணங்கள் பதிவாகியுள்ளன.

பலியானவர்களில் பெரும்பாலானோர் ஏழை, எளிய மக்கள் மற்றும் விளிம்புநிலைச் சமூகத்தை (SC/ST) சேர்ந்தவர்கள் என நியூஸ்லாண்டரி (Newslaundry) ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

ஒருங்கிணைக்கப்பட்ட கொலைகார கும்பல்!

ஒருசில போலீசுகாரர்கள் தான் தவறு செய்கிறார்கள். நீதிமன்றத்தின் வாயிலாக நீதியைப் பெற்று விடலாம் என்பது வெறுங்கனவே. உதாரணமாக சாத்தான்குளம் கொட்டடி கொலையில் போலீசு மற்றும் அரசு உறுப்புகள் அனைவரும் கூட்டாக இணைந்து ஒருங்கிணைக்கப்பட்ட கொலைகார கும்பலைப் போல் செயல்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் எதிரியான ஸ்ரீதர் அடிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். அடிப்பதை யாரும் பார்க்கிறார்களா என்பதைக் கண்காணிக்க போலீசு நிலையத்தில் வெளியே இருந்த தாமஸ் பிரான்சிஸ் என்ற போலீசு கண்காணித்து வந்துள்ளார் என குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையின் மருத்துவர் வெண்ணிலா, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவருக்கும் பலத்த காயங்கள் இருந்தும், அவர்கள் “உடல்நலம் சீராக உள்ளது” எனச் சான்றிதழ் அளித்தார்.

சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் சரவணன், காயங்களுடன் இருந்த தந்தை – மகனைச் சட்டப்படி முறையாக நேரில் பார்த்து விசாரிக்காமல், தனது வீட்டின் மாடியிலிருந்தே அவர்களைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்த இருவரையும் கொலைக் குற்றவாளிகளாகச் சேர்க்காமல் துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. இதில் நீதிபதி சரவணன் மீது கடுமையான கண்டனங்களை நீதிமன்றங்கள் தெரிவித்த போதும், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இன்றும் வேறொரு நீதிமன்றத்தில் நீதிபதியாக அமர்ந்து தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் இன்னும் கொடுமையானது.

மாஜிஸ்திரேட் பாரதிதாசன் போலீசு நிலையத்தில் விசாரணைக்குச் சென்றபோது, அவருக்கு ஒத்துழைக்காமல் மிரட்டும் தொனியில் பேசியது, சி.சி.டி.வி பதிவுகள் மற்றும் லாக்-அப் ரத்தக் கறைகளை அழிக்க உடந்தையாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான உயர் போலீசு அதிகாரிகள் ஏ.எஸ்.பி குமார் மற்றும் டி.எஸ்.பி பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டனர்.

ஆனால் இவர்கள் நேரடியாகக் கொலை வழக்கில் சேர்க்கப்படவில்லை. ‘கடமை’ தவறியதற்காக பணியிட மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளனர்.

உயிர்ப்பலியும், தண்டனையும்!

இந்த கொட்டடி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட போலீசார் மீது, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) என்பதன் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பொதுவாகக் கொட்டடி மரணங்களில் ‘கவனக்குறைவால் மரணம்’ (304A) அல்லது ‘கொலைக்கு நிகரற்ற மரணம்’ (304-II) போன்ற பிரிவுகளே பயன்படுத்தப்படும். குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க, மீண்டும் குற்றங்களை நிகழ்த்த இது ஒன்றே போதுமானது.

இந்த வழக்கில் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள், எந்தவித அழுத்தங்களுக்கும் பலியாகாமல் தைரியமாக சாட்சி சொன்ன பெண் போலீசு ரேவதி மற்றும் இதர போலீசாரின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இது நேரடிப் படுகொலை (Murder) என நீதிமன்றம் உறுதி செய்தது. இது போன்று அனைத்து கொட்டடிக் கொலைக்கும் நடக்குமா என்பது மிகப் பெரிய கேள்விதான்.

போலீசில் இந்துத்துவ கும்பல்கள்!

சாத்தான்குளம் போலீசு நிலையத்தில் பணியாற்றிய தன்னார்வலர்களில் சிலர், சேவா பாரதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீசு (FOP) என்ற பெயரில் போலீசாருடன் சேர்ந்து தாக்கியதாகப் புகார்கள் கூறப்பட்டன. ஆனால் சேவா பாரதி அமைப்பைச் சேர்ந்த யாரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படவில்லை.

சேவா பாரதி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசு அமைப்பின் செயல்பாடுகளுக்குத் தமிழ்நாடு அரசு முழுமையான தடை விதித்தது.

திருப்பரங்குன்றத்தில் ஆடு பலியிடக் கூடாது என தடுத்தது மதுரைவீரன் என்கிற சங்கி இன்ஸ்பெக்டர் தான். இவரைப் போல பலர், இந்துத்துவ கும்பல்களால் ஊட்டி வளர்க்கப்பட்டு போலீசினுள் புகுத்தப்பட்டுள்ளனர்.

6 ஆண்டுகள் நீண்ட இழுபறிக்கு பின்னால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை கொட்டடி கொலைக்கு எதிரான முன்னுதாரணமான தீர்ப்பாக நாம் எடுத்துக் கொள்ள இயலாது. இதையே வாச்சாத்தி முதல் எண்ணற்ற போலீசு அராஜகங்கள், கொலைவெறித் தாக்குதல்கள் நமக்கு நிரூபிக்கின்றன. சாத்தான்குளம் கொலைக் குற்றவாளிகள் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த போதுதான், ‘திராவிட மாடல் ஆட்சியில்’ அஜித்குமார், ஆகாஷ் உள்ளிட்ட கொட்டடி கொலைகள் தமிழ்நாட்டில் அரங்கேறின.

சமூகத்தில் குற்றமிழைக்கும் குற்றவாளிகளைப் பிடித்து விசாரிக்கும் பொறுப்பை குற்றங்களையே முழு நேரம் பணியாகச் செய்யும் குற்றக் கும்பலான போலீசிடமே ஒப்படைத்து அதைக் காத்துக் கொண்டிருக்கின்றன அரசின் உறுப்புகள் அனைத்தும். இந்த கட்டமைப்பின் வழியாகக் குற்றங்களைத் தடுக்க முடியாது என்பது மட்டுமல்ல, அப்பாவிகள் பலியாவதும் தொடர்வது தவிர்க்க முடியாதது.

போலீசின் கேள்விக்கிடமற்ற வானளாவிய அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். போலீசு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் மக்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறான ஒரு கட்டமைப்பின் மூலமாகவே இப்படியான குற்றங்கள் தடுத்து நிறுத்தப்படும். அதை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து அதற்கான களப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.


ராஜன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க