கூனிக் கிடந்த
தொழிலாளி வர்க்கம்
முதுகெலும்பின் கூர்முனையால்,
முதலாளித்துவத்தின் மார்பில்
செங்குருதி கொண்டு செதுக்கிய
மாபெரும் விடுதலை வரலாறு,
இன்னும் முற்றுப் பெறவில்லை!

இரத்தத்தை,
வியர்வையை
காலங்காலமாய் உறிஞ்சிக் கொழுத்து, கார்ப்பரேட் காட்டேறியாய் வளர்ந்து,
முழு உலகும் போதாதென
பாசிச வெறியேறிச் சுற்றித் திரிகிறது,
முதலாளித்துவம்!

பறிக்கப்பட்ட
நம் உரிமைகளைப்
பச்சை மாமிசமென மென்று தின்ன,
மிச்சமிருக்கும்
சட்ட வேலிகளை உடைத்து,
வழி சமைத்துக் கொடுக்கின்றன
‘காவல்’ எந்திரங்கள்!

மின்னல்களைத் தரிக்கும்
மாபெரும் போராட்டத்தின் இடிமுழக்கமாய்,
நம் முன்னே எஞ்சி நிற்கிறது,
சுரண்டலின் இருள் வானத்தை
சுடர் விட்டெரிக்கும் செங்கொடி!

உழைப்பின் உதிரம் குடித்து
உண்டு கொழுக்கும்
இராட்சசப் பிடாரிகளை வீழ்த்தாமல்,
உழைப்பின் ஊன் தின்னும்
உயிர்க்கொல்லி கிருமிகளை ஒழிக்காமல்,
உழைப்பின் வடு உடலெல்லாம்
வியர்வையாய் படிந்திட்ட
உழைக்கும் வர்க்கத்துக்கு,
ஒவ்வொரு
மே நாளும்
ஓய்வெடுக்கும் நாளல்ல…

அடக்குமுறையின் விலங்குகளை அறுத்தெறிய
செங்கொடி ஏந்தும்
போர் நாள்!


இஸ்க்ரா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க