“டிரம்ப் – மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்! நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை – இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மா.ஒ.கு) ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பாக மே 1 அன்று தமிழ்நாடு – புதுச்சேரி தழுவிய பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் எழுச்சிகரமாக நடைபெற்றன.
தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் திரளான மக்கள், ஜனநாயக சக்திகளின் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் கம்யூனிசப் பேராசான்களின் புகைப்படங்கள், கூர்மையான அரசியல் முழக்கங்களைக் கொண்ட பதாகைகளையும் செங்கொடிகளையும் ஏந்தி கம்பீர பேரணிகள் நடைபெற்றன.
மேலும், கோவை, புதுச்சேரியில் தொழிலாளி வர்க்கத் தியாகிகளின் சிலைகளுக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டுத் தோழர்கள் செவ்வணக்கம் செலுத்தினர்; பல பகுதிகளில் வீடுகளிலும் தெருமுனைகளிலும் செங்கொடி ஏற்றி மே தினத்தை வர்க்க உணர்வுடன் கடைப்பிடித்தனர்.
***
சென்னை:
தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி சென்னையின் ஆவடி மாநகர போலீசு மேதின பேரணி – ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்த நிலையில் “மேதின வரலாற்றை பின் தொடர்வோம்!” என்கிற அறைகூவலோடு மேதின தொடர்முழக்க கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) சார்பில் வடக்கு மண்டல தோழர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு ஆவடி மாநகர உழைக்கும் மக்களும், பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் உணர்வுபூர்வமாக பங்கேற்று முழக்கமிட்ட நிகழ்வாக பதிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு வடக்கு மண்டல பொருளாளர் தோழர் ப.சக்திவேல் தலைமையேற்றார். அவரது தலைமை உரையில் பாசிச மோடி அரசு தொழிலாளர்களை நவீன கொத்தடிமையாக்கும் சட்டத்தொகுப்புகளின் தாக்குதல்களை கோடிட்டு காட்டினார்.
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் உரையாற்றிய தோழர் அறிவு தனது உரையில், தற்போதைய சர்வதேச அரசியல் நெருக்கடி, டிரம்ப் – மஸ்க் கும்பல் தலைமையிலான அமெரிக்க மேலாதிக்கம் உலகம் முழுவதும் நடத்துக்கின்ற பேரழிவுகள், அதன் விளைவாக நடக்கும் கொத்துகொத்தான வேலை பறிப்புகள், இவற்றால் கேள்விக்குறியாகும் மாணவர் – இளைஞர்களது எதிர்காலம், தொழிலாளி வர்க்கத்தோடு மாணவர் – இளைஞர் இயக்கம் கைகோர்க்க வேண்டிய அவசியம் ஆகியவற்றை பதிவு செய்தார்.
மக்கள் அதிகாரக்கழகம் அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் சி.வெற்றிவேல் செழியன் தனது உரையில் ஏகாதிபத்திய உலகமயமாக்கல் சதி வலையை விரித்த அமெரிக்கா தானே அதில் சிக்கிக் கொண்டிருப்பதை அம்பலப்படுத்தினார். பின் தங்கிய நாடுகளுக்கு வெட்டிய குழியில் வீழ்ந்து கிடக்கும் அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்தை இழந்து வரும் சூழலில், சீனா ஒரு புதிய, பலமான போட்டியாக உருவெடுத்து வருவதைக் கண்டஞ்சி காப்புவாதம் என்கிற தற்காப்பு நிலையில் பதுங்கிக் கொண்டு,பாலஸ்தீனம், வெனிசூலா துவங்கி ஈரான் வரை தன்னுடைய கொடுங்கரத்தை நீட்டி ஒரு அறிவிக்கப்படாத உலகப்போரை துவக்கி உள்ள நிலையில் சின்னஞ்சிறு நாடுகள் தமது எதிர்ப்பை காட்டுகின்றன. ஆனால், இந்தியாவில் அம்பானி – அதானி கார்ப்பரேட் கும்பலின் ஏஜண்ட்டாக இயங்கும் மோடி அரசோ இந்த நாட்டின் நலன்களை அமெரிக்காவுக்கு அடகு வைக்கும் மறுகாலனியாக்கத்தை தீவிரப்படுத்துகிறது. உலக அரசியல் நிலையும், இந்திய நாட்டின் மறுகாலனியாக்க துயரமும் அரசியல் போராட்டத்தைக் கோருகின்றன. அந்த அரசியல் போராட்டத்தை உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைகள் மூலம் சாத்தியமாக்க அறைகூவல் விடுத்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தோழர் பெ.மோசஸ் தன்னுடைய உரையில் இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை பாசிச மோடி அரசு சிதைத்து வருவதாக குற்றம் சாட்டினார். அரசியலமைப்பு சட்டம் சொல்லுகின்ற “இறையாண்மை” அர்த்தமற்றதாகியுள்ளது எனவும், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளைச் சார்ந்து அவர்களது நலன்களுக்காக இந்திய தொழிலாளி வர்க்கம் போராடிப்பெற்ற சட்ட உரிமைகளை பறித்து அப்பட்டமான கார்ப்பரேட் அரசாக இயங்குவதை முறியடிக்க அரசியல், கட்சி வேறுபாடுகள் கடந்து ஒன்றுபடுவதன் தேவையை வலியுறுத்தினார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநகர செயலாளர் தோழர் ஆவடி நாஜராஜன் தன்னுடைய உரையில் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தொகுதி மறுவரையறை, பெண்கள் இடஒதுக்கீடு என பல வழிகளில் தன்னுடைய இந்துத்துவா நிகழ்ச்சிநிரலைக் முன்னிலைப்படுத்துகிறது. அவற்றை அங்குலம் அங்குலமாக உடைத்தெறிய வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார்.
இறுதியாக, வடக்கு மண்டல பு.ஜ.தொ.மு-வின் பொதுச்செயலாளர் தோழர் ம.சரவணன் சிறப்புரையாற்றினார்.
1886-ஆம் ஆண்டில் மேதினத் தியாகிகள் எந்த முழக்க்கத்தோடு தொழிலாளர்களை ஒன்றுதிரட்டினார்களோ அதே ஒன்றுபடல் தேவை இன்றைக்கும் நீடிக்கிறது என்பதை சமகால நிகழ்வுகளோடு எடுத்துக் காட்டினார். வடமாநிலங்களில், குறிப்பாக உத்தரப்பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மற்றும் NCR தொழிற்பிராந்தியத்தில், கடந்த பிப்ரவரி 2026 முதல் தொடர்ச்சியாக நடந்து வருகின்ற தொழிலாளர் போராட்டங்களையும், சங்கமாக திரட்டப்படாவிட்டாலும், போராடினால் தான் உயிர் பிழைக்க முடியும் என்கிற நெருக்கடியான சூழலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் – குறிப்பாக பெண் தொழிலாளர்கள் – வீதியில் இறங்கிப் போராடுவதையும், போலீசு கார்ப்பரேட்டுகளின் அடியாள் படையாக போராடும் தொழிலாளர்களை தாக்குவது, கைது செய்து கடுமையான சட்டப்பிரிவுகளில் சிறையில் அடைப்பது போன்ற அயோக்கியத்தனத்தையும் திரைகிழித்தார். அரசு எந்திரமானது கார்ப்பரேட் முதலாளிகளின் நிர்வாகக்குழுவாக இயங்கிறது என்பதை முத்தாய்ப்பாகச் சொல்லி அரசு எந்திரத்தின் வர்க்கச் சார்பை அம்பலப்படுத்தினார். இந்திய தொழிலாளி வர்க்கம் ஏனைய ஒடுக்கப்படும் வர்க்கங்கங்களுடன் இணைந்தும், உலகம் முழுவதும் நடக்கும் மக்கள் போராட்டங்களுக்கு தனது ஒருமைப்பாட்டை அறிவித்தும் முன்னணிப்பாத்திரம் ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமையை அழுத்தமாக பதிய வைத்து மேதினத்தின் வரலாற்றுச் சுவடுககின் வழியே பயணிக்க அறைகூவல் விடுத்தார்.
வடக்கு மண்டல பு.ஜ.தொ.மு-வின் இணைச்செயலாளர் தோழர் து.லெட்சுமணன் நன்றியுரையை பதிவு செய்து மேதின முழக்கத்துடன் கூட்டம் முடிவுற்றது.
இந்த மேதின இயக்கத்தில் பு.ஜ.தொ.மு தோழர்களோடு, தோழமை அமைப்புகளான மக்கள் அதிகாரக் கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் செஞ்சட்டை அணிந்து, செங்கொடி ஏந்தி எழுச்சியோடு முழக்கமிட்டனர்.

தகவல்:
வடக்கு மண்டல பு.ஜ தொ.மு (இணைப்பு: பு.ஜ.தொ.மு – மாநில ஒருங்கிணைப்புக்குழு)
***
காஞ்சிபுரம்:
140 வது மே தின பேரணி, ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பு குழு மற்றும் மக்கள் அதிகாரக் கழகம் இணைந்து மே தின வரலாற்றை மே தின தியாகிகளை உயர்த்தி பிடிக்கும் வகையில் செங்கொடி ஏந்தி நடைபெற்றது.
முதல் நிகழ்ச்சியான பேரணியை மக்கள் அதிகாரக் கழகம் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் துவக்கி வைத்தார். பேரணி இளைஞர்களின் பறை இசையுடன் ஆரம்பமானது. தோழர் திலகவதி மே தின தியாகிகளையும் இன்றைய உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை உருவாக்கவும் “டிரம்ப் – மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்! நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்” என்ற தலைப்பில் முழக்கமிட்டார். ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் நடைபெற்ற பேரணியில் தோழர்கள் ஒருவர்பின் ஒருவராக முழக்கமிட்டு வழிநடத்திச் சென்றனர். குழந்தைகள் ஆசான்களின் புகைப்படங்களை முன் வரிசையில் உயர்த்தி பிடித்து இன்றைய இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்மாதிரியாக குழந்தைகள் இருந்தது அனைவரின் பார்வையையும் கவர்ந்தது.
காஞ்சிபுரம் காவலன் கேட் அருகில் நிறைவுற்ற பேரணியைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆக்சிஸ் இந்தியா கிளை சங்கத்தின் தலைவர் தோழர் பழனிவேல் தலைமையேற்று வழிநடத்தினார். தனது தலைமை உரையில் இன்று நவீன கொத்தடிமைகளாக மாற்றப்படும் தொழிலாளருடைய நிலைமை குறித்து உரையாற்றினார். அவரை தொடர்ந்து தோழர் எழில், மக்கள் அதிகாரக் கழகம் தொழிலாளர்களுடைய தற்போதைய நிலைமை குறித்து கவிதை எழுதி அதை மே தின தியாகிகளுக்காக சமர்ப்பித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் தோழர் காஞ்சி அமுதன் அவர்கள் 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் இருக்கும் சட்டத்தை நிலைநிறுத்த செங்கோடியால் மட்டுமே முடியும் என தனது சிற்றுரையை நிறைவு செய்தார். அவரைத் தொடர்ந்து பேசிய பெரியார் ஆதரவாளர் தோழர் ரவி பாரதி சிக்காகோ நகரில் தொடங்கிய போராட்டம் இது. இன்று இந்தியாவில் தமிழ்நாட்டில் செஞ்சட்டையுடன் பேரணியை இன்று மே தினத்தை நடத்திக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு வாழ்த்துக்களையும் உழைப்பு சுரண்டலையும் நெய்டாவில் நடைபெறும் தொழிலாளர் போராட்டத்தையும் சுட்டிக்காட்டி தனது சிற்றுரையை நிறைவு செய்தார். அதை தொடர்ந்து முழக்கம் எழுப்பப்பட்டது.
கண்டன உரை ஆற்றிய தோழர் சௌந்தர்ராஜன் ஆக்சிஸ் இந்தியா கிளை சங்கத்தின் செயலாளர் அவர்கள் உலக மேலாதிக்கத்தில் நான் தான் பேட்டை தாதாவாக இருக்க வேண்டும் என அமெரிக்க டிரம்ப் – மஸ்க்கு பாசிச கும்பலின் கோர முகத்தையும் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர் சூழலை கண்டித்தும் வெனிசுலா அதிபரை கைது செய்தது, காசா இனப்படுகொலை என உலக மக்கள் இன்று கொத்துக்கொத்தாக மரணித்திருக்கும் வேளையில் இந்தியாவில் தொழிலாளருடைய நிலைமை என்பதும் மோசமாகவே உள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்படும் தீ விபத்துகள் விஷவாயு கசிவால் ஏற்படும் தொழிற்சாலை மரணங்கள் ஆகட்டும் என தொடர்ந்து நடைபெற்று வரும் கொத்தடிமைதனத்தை ஒப்பிட்டுப் பேசினார்.
ஜனநாயக உரிமை என்று சொல்லக்கூடிய தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. இரண்டையும் ஒப்பிட்டு இரண்டும் பாசிசத்தின் கோர முகங்கள் எனவும், இதை வீழ்த்த நாம் செங்கொடி ஏந்தி போராடி தீர வேண்டும் என்ற நிலையில் தான் உள்ளோம் என உரையை நிறைவு செய்தார்.
காஞ்சிபுரத்தின் புரட்சிகர பாடகர் தோழர் உலக ஒலி தனது பாடல் மூலம் புரட்சிகர கருத்துகளை பதிவு செய்தார். இறுதியாக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் மக்கள் அதிகாரக் கழக தோழர் சங்கர் நன்றியுடன் நிகழ்ச்சியை முடித்து வைக்கப்பட்டது.

தகவல்
தோழர் சங்கர்,
காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
***
கோவை:
மே நாள் வாழ்க!
உலகத் தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!
டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான
அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்!
நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!
என்னும் முழக்கங்களின் கீழ் மக்கள் அதிகாரக் கழகம் மற்றும் எமது தோழமை அமைப்புகள் சார்பாக தமிழ்நாடு புதுச்சேரி முழுவதும் மே தினத்தை முன்னிட்டு பேரணி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம்.
அதன் ஒரு பகுதியாக மே தினத்தன்று மாலை 5.00 மணிக்கு வள்ளியம்மை பேக்கரி, உக்கடத்தில் கோவை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாவட்டச் செயலாளர் தோழர் ராஜன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். கழக இணைச் செயலாளர் மாறன் சிறப்புரையாற்றினார்.
தோழர் சுசி கலையரசன்,
மாநில கொள்கை பரப்பு செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
தோழர் முகமது ஹனீபா,
மாவட்ட செயலாளர்,
மனிதநேய ஐனநாயக கட்சி.
தோழர் திருமொழி,
தமிழ் தேச இறையாண்மை.
தோழர் பார்த்திபன்,
ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்.
தோழர் மலரவன்,
புரட்சிகர இளைஞர் முன்னணி.
தோழர் ஆனந்தி,
விடுதலை தமிழ் புலிகள் கட்சி.
ஜனநாயக சக்திகள் கலந்து கொண்டு உரையாற்றினார். இறுதியாக தோழர் சங்கர் நன்றியுரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், மக்கள் மற்றும் பிற கட்சிகள் இயக்கங்களின் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர்.

தகவல்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கோவை மாவட்டம்.
9488902202.
***
கிருஷ்ணகிரி:
மே நாள் வாழ்க!
உலகத் தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!
டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான
அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்!
நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!
புதிய ஜனநாயகத் தொழிலாளர்கள் முன்னணி,
KAMAZ VECTRA MOTORS LTD,
பதிவு 24-KRI,
கிளை சிப்காட்,
ஓசூர் -635126
சிறப்பு தலைவர்: தோழர் பரசுராமன்
கிளை சங்கத் தலைவர் தோழர் செந்தில் குமார் தொழிற்சங்க கொடியை ஏற்றி மே நாள் நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.
தோழர் இரஞ்சித், மக்கள் அதிகாரக் கழகம், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கலந்து கொண்டார்; கிளை நிர்வாகிகள், தொழிலாளர்கள் மே நாள் கொடியேற்றும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தகவல்
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
***
புதுச்சேரி:
பிரெஞ்சு காலனி ஆதிக்கத்திற்கு கீழ் புதுச்சேரி அடிமைப்பட்டு கிடந்த போது 1936 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி சவானாமில், ரொடியார் மில், கபெல் மில் ஆகிய மூன்று மில்களிலும் உள்ள 15,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலை, ஊதிய உயர்வு, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலங்களில் விடுமுறை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்திற்கு “புதுச்சேரியின் கடைசி புலி”என்று அழைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி தோழர் வ.சுப்பையா தலைமை தாங்கி நடத்தினார்.
இந்தப் போராட்டத்தை ஒடுக்க பிரெஞ்சு அரசு ஜூலை 30ஆம் தேதி ராணுவத்தை அனுப்பி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான அடக்கு முறையைக் கண்டு நாடு முழுவதும் தொழிலாளர்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினர். அதன் விளைவாக 1937 ஏப்ரல் 6-இல் பிரெஞ்சு-இந்தியா தொழிலாளர் சட்டம் அமலுக்கு வந்தது.
முதல்முறையாக ஆசியா கண்டத்தில் 8 மணிநேர வேலை அமலுக்கு வந்தது.
எட்டு மணிநேர வேலை உரிமைக்கான போராட்டத்திற்கு வித்திட்ட 1936 ஜூலை 30-இல் புதுச்சேரி மில் தொழிலாக நடத்திய போராட்டத்தை ஒடுக்குவதற்காக பிரெஞ்சு ராணுவம் நடத்திய படுகொலை நாளானது “ஜூலை 30 தியாகிகள் தினமாக” கடைப்பிடிக்கப்படுகிறது. புதுச்சேரியில் சுதேசி மில் வாயில் அருகில் இந்த தியாகிகளின் நினைவாக உழைப்பாளர் சிலை உருவாக்கப்பட்டது.
எட்டு மணி நேர வேலை உரிமையை உலகுக்குப் பெற்றுத் தந்த மே தினத்தன்று ஆசியாவில் 8 மணி நேர வேலை உரிமையைப் பெற்றுத் தந்த ஜூலை 30 தியாகிகளை நெஞ்சில் ஏந்தும் வகையில் புதுச்சேரியில் உள்ள உழைப்பாளர் சிலைக்கு மக்கள் அதிகாரக் கழக தோழர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











