29.05.2026

பக்ரீத் பண்டிகை மற்ற எந்தவொரு நாளிலோ அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மாடு, கன்று பலியிடக் கூடாது:
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

இஸ்லாமியர் மற்றும் பெரும்பான்மை மக்களின் உணவு உரிமையைப் பறிக்கும் நடவடிக்கை!

பத்திரிகைச் செய்தி

பொது இடங்களில் மாடுகள் வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோயம்புத்தூரைச் சேர்ந்த ஹிந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி பொதுச் செயலர் சூர்ய பிரசாந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

அவ்வழக்கை 27.05.2026 அன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வானது, பக்ரீத் பண்டிகையின் போதோ அல்லது எந்தவொரு நாளிலோ அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மாடு, கன்று பலியிடக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளனர். இத்தகைய உத்தரவு பெரும்பான்மை மக்களின் உணவு உரிமையைப் பறிக்கிறது.

மனுதாரரின் கோரிக்கை குறித்து எதிர் தரப்பினர் மற்றும் தமிழ்நாடு அரசிடம் எவ்விதமான கருத்துகளும் கேட்கப்படவில்லை. பக்ரீத் பண்டிகைக்கு முதல் தினம் இந்த உத்தரவு வெளியாகிறது என்பதிலிருந்து திட்டமிட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு பெறப்பட்டிருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இந்திய அரசியலமைப்புக்கு எதிராகச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் – இந்து மத வெறி பாசிஸ்டுளுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகளையும் தீர்ப்புகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றதைப் போல இந்தத் தீர்ப்பையும் உள்நோக்கத்துடன் வழங்கியிருக்கிறார்.

திருப்பரங்குன்றம் முதல் இந்த உத்தரவு வரை இஸ்லாமியர்களுக்கு எதிரான, தமிழ் பண்பாட்டுக்கு எதிரான, சிறு தெய்வ வழிபாடுகளுக்கு எதிரான பல்வேறு வழக்குகளை ஆர்எஸ்எஸ், பி.ஜே.பி, பார்ப்பன பாசிச கும்பல் நீதிமன்றங்களில் தொடுத்து தங்களுக்கு தேவையான தீர்ப்புகளைப் பெற்றுக் கொள்கின்றன என்பதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

தமிழர்கள் தங்களுடைய குல தெய்வங்கள் நாட்டுப்புற தெய்வங்களை வழிபடும் முறை என்பதில் ஆடு, மாடு, கோழி, பன்றி ஆகியவை பலி கொடுப்பது முதன்மையானது ஆகும். கோயில் அல்லது ஏற்கெனவே எங்கே வழக்கமாக பலி கொடுக்கப்படுகிறதோ அங்கேதான் விலங்குகளை பலி கொடுக்க வேண்டுமே தவிர, ஆடு மாடு அறுக்கும் கூடங்களில் அல்ல.  மேற்கண்ட உத்தரவின்படி பார்த்தால், கோயில்களும் கூட அனுமதிக்கப்பட்ட இடங்களில் வராது.

மேலும் இத்தீர்ப்பில், தன்னுடைய வாதங்களைக் குறிப்பிட்டு “மேலே உள்ள விதிமுறைகளையெல்லாம் கணக்கில் கொண்டால் அனுமதி பெற்றுள்ள இடங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் எந்த விலங்கையும் பலியிடக் கூடாது என்ற முடிவிற்கே வர வேண்டியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி-யின் இந்தராஷ்டிர நலன்களுக்கு ஏற்ப உள்நோக்கத்துடன் பிறப்பித்துள்ள இந்தத் தீர்ப்பை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒரு மைனாரிட்டி ஆட்சி, கொள்கை கோட்பாடு எதுவும் இல்லாத ஒரு கட்சியின் தலைவரை முதலமைச்சராகக் கொண்டிருக்கிற ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சூழலில் தான் மேற்கண்ட வழக்கின் உத்தரவும் வந்துள்ளது.

திருப்பரங்குன்றத்தில் உள்ள சர்வே கல் மீது தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் அவர்களின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று அன்றைய தமிழ்நாடு அரசு உறுதியாக இருந்தது.

ஆகவே தமிழ்நாடு அரசு, இஸ்லாமியர்களுக்கு எதிரான  ஒருதலை பட்சமாக வெளியாகி உள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து பெரும்பான்மை மக்களின் உணவு உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads