Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 486

கமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்

5

யா, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணிபுரிகிறார் ஒருவர். திடீரென்று ஒரு நாள் தனது தொழிலை மாற்றிக் கொண்டு தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கப் போகிறேன் என்று அவர் அறிவிப்பதாக வைப்போம். உடனே தொலைக்காட்சி விவாத நெறியாளர்கள் அனைவரும், அவர் பிரபலமான ஆளாக இருப்பதால், மரம் ஏறும் தொழிலுக்கு வருபவர் என்ன செய்வார் என பயங்கரமான விவாதங்களை நடத்துகிறார்கள். சூட்டு கோட்டு போட்டுக் கொண்டு கணினியில் விரல் பிடித்து டேட்டாக்களோடு உறவாடும் ஒருவர் எப்படி தென்னை மரம் ஏறுவார் என்று சிலர் கேட்டால், நமது நெறியாளர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

படங்களில் நடித்து அலுத்துப் போன காலத்தில் கமலின் அரசியல் அவதாரம்

அவர் இன்னும் தென்னை மரமே ஏறவில்லை, அதற்குள் ஏன் கருத்து சொல்கிறீர்கள், அதற்குள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்று பொங்குகிறார்கள், மடக்குகிறார்கள். ஒரு சிஇஓ எப்படி ஐயா நெஞ்சைத் தேய்த்து தினமும் ஐம்பது தென்னை மரங்கள் ஏற முடியும், இதெல்லாம் சாத்தியமில்லையே என்று கேட்டால், மரமேறுவது அவரது உரிமை, மறுப்பது ஜனநாயகமின்மை என்று படுத்தி எடுக்கிறார்கள் நமது பத்திரிகையாளர்கள்.

அப்படித்தான் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கமல்ஹாசன் அறிவித்த போதும் சரி, இன்று அவர் அப்துல் கலாம் சமாதியிலிருந்து தனது அரசியல் பிரவேச நிகழ்ச்சிகளை மார்க்கெட் செய்யும் போதும் சரி, அவருடைய கட்சி, கொள்கை, கொடி எல்லாம் வரப் போகிறது அதன் பிறகு அவருடைய கருத்துக்கள், அரசியல் சரியா என்று விவாதிக்கலாம் என்று உபதேசிக்கிறார்கள்.

களத்தூர் கண்ணம்மாவிலிருந்து, சபாஷ் நாயுடு வரை  கமல்ஹாசனது படங்களும் சரி, படங்களுக்கு வெளியே அவர் பேசியவைகளும் சரி, நடந்து கொண்டவைகளும் சரி அவரது கொள்கைகள் இன்னதுதான் என ஃப்ளூபிரிண்ட் போட்டு காட்டிக் கொண்டிருப்பதை இவர்கள் எவரும் பார்க்கவில்லை. அல்லது உணரவில்லை, கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு திரைப்பட நட்சத்திரமானவர், தன்னைச் சுற்றி மின்னும் ஒளிவட்டத்திலேயே வாழ்வதால், அவருக்கு அந்த ஒளி வட்டத்தைத் தாண்டி இருக்கும் உலகம் பற்றி எதுவும் தெரியாது. அதாவது உலகமே அவரது ஒளிவட்டத்தின் முன் மண்டியிடுவதால் அவர் சொல்வதுதான் உலகம், அவர் விளக்குவதுதான் உலகம். இதை யாராவது மறுக்க முனைந்தால் அவரது தர்பாரில் சாத்தியமே இல்லை. ஏனெனில் கமல்ஹாசனைச் சுற்றியிருக்கும் கிச்சன் கேபினட்டோ இல்லை ரசிகர் மன்ற நிர்வாகிகளோ அனைவரிடத்திலும் அவர்தான் பேசுவார், அவர்தான் கேட்பார், அவர்தான் முடிவெடுப்பார், அவர்தான் தீர்மானிப்பார்.

ஒரு மனிதன் என்ன மாதிரியான சூழலில், வர்க்கப் பின்னணியில் உருவாக்கப்படுகிறான் என்பதை பொறுத்தே அவனது வாழ்க்கை குறித்த கண்ணோட்டமோ இல்லை அரசியல் புரிதலோ, அரசியல் நிலைப்பாடோ இருக்கும். இருந்தே தீரும். அந்த வகையில் பார்த்தாலும் கமல்ஹாசனின் அரசியல் என்ன என்பதை அணுஅணுவாக விளக்க முடியும். இங்கே நாம் கமல்ஹாசனிடம் கொள்கை இல்லை என்று பேசவில்லை. அவர் கொள்கையை இனிமேல் புதிதாக விளக்க வேண்டியதில்லை என்றே கூறுகிறோம்.

வருவாயோடு, அரசியல் விளம்பரத்தையும் தேடிய கமலின் “Big Boss” அவதாரம்

ஒரு திரைப்பட நட்சத்திரமாக, ஒட்டி வரும் மேட்டுக்குடி வாழ்க்கை, தனது பிரபலத்தை வைத்து தயாரிப்பு, திரைப்பட உருவாக்கம், வணிகம் அனைத்தையும் தீர்மானிக்கும் கமல், அரசியல் என்று வரும்போது என்ன நிலைப்பாடு எடுப்பார் என்பது அவர் கட்சி அறிவித்துத்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

“நான் வலதுசாரி, இடதுசாரி என எல்லா சாரிகளையும் பார்ப்பேன், பேசுவேன், எந்த சாரியும் எனக்கு அன்னியமில்லை, So, நான் எந்த சாரி என்று கேட்காதீர்கள்  Sorry” என்று உலகநாயகன் பல இடங்களில் சலிப்பூட்டும்படி கூறிவிட்டார். இந்த ஸ்டேட்மெண்டிலேயே அவரது நிலைப்பாடு தெளிவாக இருப்பினும், அரசியல் தெரியாத அம்மாஞ்சிகள் அவர் நடுநிலை இடத்தில் இருப்பதாகவும், புதிய இடம் ஒன்றை உருவாக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.

ஆங்கில சேனல்களில் அவர் அளித்த பேட்டியிலும் தான் கம்யூனிசத் தலைவர்களை மட்டுமல்ல, பிரதமர் மோடியையும் பார்ப்பேன் என தெளிவாக கூறியிருக்கிறார்.

ஐயா, உடன்கட்டை ஏறுதல் எனும் ஒரு பிரச்சினையைப் பார்ப்போம். இதில் இடதுசாரிகள் இன்னபிற ஜனநாயக சக்திகள், உடன்கட்டை ஏறுவதை பார்ப்பனியம் உருவாக்கிய கொடூரமான ஆணாதிக்கம் என்று எதிர்க்கிறார்கள். இன்றும் பாஜகவில் இருக்கும் தீவிர பார்ப்பனிய இந்துத்துவவாதிகள் உடன்கட்டை ஏறுவதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரிக்கின்றனர்.

இன்று ராஜஸ்தான் மாநில முதல்வராக இருக்கும் வசுந்தரா ராஜேவின் தாயார் விஜயராஜே சிந்தியா 2001-ம் ஆண்டில் இறந்தார். ராஜ வம்சத்து குடும்ப மாதாவான இந்த சிந்தியா, அதே ராஜஸ்தானில் ரூப்கன்வர் எனும் பெண் உடன்கட்டை ஏற்றிக் கொல்லப்பட்டபோது பகிரங்மாக ஆதரித்தார். சதிமாதா என்று வழிபடவும் செய்தார்

இப்போது கமல்ஹாசனின் எல்லா சாரிகளோடும் கொஞ்சிக் குலாவும் நிலையை ஒப்பிட்டுப் பாருங்கள். இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இஸ்லாமிய எதிர்ப்பு, முஸ்லீம் நாடுகளின் விசாக்களை ரத்து செய்தல், ராஜபக்ஷேவின் சிங்கள இனவெறி – தமிழினப் படுகொலை, தருமபுரி இளவரசன் தற்கொலையை மறைமுகமாக ஆதரிக்கும் பா.ம.க, மாட்டுக்கறியின் பெயரில் முஸ்லீம்களைக் கொல்லும் இன்றைய பாஜகவினர், என பல விடயங்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். அதன் படி கமல்ஹாசன் எடுக்கவேண்டிய நிலையில் நடுநிலை என்ற வெங்காயம் எங்கேயாவது ஒளிந்து கொண்டிருக்கிறதா?

ஊழல் முதலாளி லைக்காவின் தயாரிப்பில் கமலின் சபாஷ் நாயுடு திரைப்படம்

ஊழல் எதிர்ப்பில் அப்பாடக்கராக காட்டிக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் இலங்கை, காஷ்மீர் பிரச்சினைகளில் இந்திய அரசு – காங்கிரசு – பாஜகவின் நிலைப்பாடுகளைத்தான் எடுத்தார். கங்கை, இந்து என தன்னையும் ஒரு புனித இந்துவாக காட்டிக் கொண்டார். இவரோடு ஆரம்பத்தில் இருந்த யோகந்திர யாதவ், ஒரு கட்சி துவங்கும் போது அதற்கு தெளிவான இடதுசாரி, வலது சாரி என்று கொள்கைகளை தேடவேண்டியதில்லை. அவை காலப்போக்கில் உருவாகும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய தேவையன்றி கொள்கை இன்னதுதான் என வரையறுக்கத் தேவையில்லை. இப்போது அவரே கேஜ்ரிவாலோடு குடும்பம் நடத்த முடியவில்லை, விலகிவிட்டார். ஆம் ஆத்மியின் கொள்கையும் நாகரீகமான காங்கிரசு கொள்கை, நாகரீகமான இந்துத்துவம் என்பதாக வெளிப்பட்டுவிட்டது. இவை ஆரம்பத்தலேயே ஆம் ஆத்மி எனும் என்ஜிவோ பின்னணியிலேயே தெரிந்து போன விசயம் என்பதே முக்கியம்.

ஆகவே கமலைப் போன்ற பெருந்தன மேட்டுக்குடிக்காரர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின் பெரும்பாலான பொருளாதார, சமூக, அரசியல் நிலைப்பாடுகளைத்தான் கொண்டிருக்கிறார்கள். அதில் குறிப்பாக கேட்டால் விளக்கெண்ணெயில் நழுவிப் பேசுவார்கள். ஏனெனினில் ஆளும் வர்க்கத்தின் பழைய முகங்களிலிருநது தம்மை பிரித்துக் காட்ட நினைக்கிறார்கள். அதற்குத்தான் இத்தகைய கொள்கை கோட்பாடு போன்ற மேக்கப் சமாச்சாரம்.

ராமேஸ்வரம் சென்ற திரு கமல்ஹாசனிடம், அங்கேயிருக்கும் மீனவர்கள், இலங்கை – இந்தியக் கடற்படைகள் செய்யும் அட்டூழியம் குறித்து சொன்னால் அவரது பதில் என்ன? அவர்கள் சொல்வதற்கு முன்பேயே இந்தப் பிரச்சினை தீவிரமாக இருக்கும் போது அவரது நிலை என்ன? இதனால் தேசபக்தரான அவர் இந்திய அரசையோ, இல்லை கடற்படையையோ எதிர்ப்பாரா? இல்லை தமிழக அரசுகள் எழுதும் கடிதம் போல மத்திய அரசுகளுக்கு ஐந்து காசு பெறாத கோரிக்கைகளை வைப்பாரா? இதில் என்னய்யா கமலின் ஸ்பெஷல் வந்துவிடப் போகிறது?

ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதும் சரி, இன்றளவும் அவர் மோடியையோ இல்லை அவரது கொடுங்கோன்மைக் கொள்கைகளையோ இல்லை சங்க பரிவாரத்தின் கொடூரக் கொலைகளையோ கமல் எதிர்க்காததன் மர்மம் என்ன? இல்லை  எதிர்ப்பதாக இருந்தால் அக்லக் கொலைக்கு நீதி வேண்டும் என அவர் போராடுவாரா? ஜூனைத் கானின் கொலைக்காக ஆர்ப்பாட்டம் செய்வாரா?

எல்லா சாரிகளையும் பார்த்த கமல் அவர்கள், அதிமுக தலைவர்களை மட்டும் பார்க்கமாட்டேன் என கறாராக கூறிவிட்டாராம். கைப்பிள்ளைகளை இப்படி வீரத்துடன் எதிர்க்கும் திருவாளர் கமல் அவர்கள், கையில் தடியுடன் இருக்கும் பாஜக மத்திய அரசை மட்டும் எதிர்க்கவில்லை என்பதோடு போய் பிரதமரை சந்திக்கிறார், சந்திப்பேன் என்று கூறினால் அது அயோக்கியத்தனம் இல்லையா? அந்தப்படிக்கு கமலை விட எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் மோசமில்லை என்பதில் என்னய்யா தவறு?  ஏனெனில் இந்த இரட்டையர் ஜெயா காலந்தொட்டு விசுவாமான அடிமை என்பதை வெளிப்படையாக காட்டிக் கொண்டவர்கள். என்ன இவர்களுக்கு கமலைப் போல ஒரு உடைந்த ஆங்கிலத்தில் பேசத் தெரியாது. அவ்வளவே! கமலைப் போன்றவர்கள் ஆங்கில பீட்டர் பாணியில் ஜெயா, மோடி நாட்டாமைகளின் அடிமையாக கொஞ்சம் ஃபேஷனாக காட்டிக் கொள்கிறார்கள். மற்றபடி சிவப்பாக இருப்பவுனும் அடிமையாக இருக்கமாட்டான் என்று  இந்தநாடு நம்புகிறது என்றால் அது நாசமாகப் போகட்டும்!

அம்பானி உழைத்து முன்னேறியதாக நம்பும் இந்த காரியவாதியின் பொருளாதாரக் கொள்கை எப்படி இருக்கும்? நீரவ் மோடியுடன் பிரதமர் மோடி மட்டுமல்ல, கமல்ஹாசனும் போஸ் கொடுக்காமல் போவாரா என்ன?. இன்னும் விவசாயிகள் தற்கொலை, கல்வி – சுகாதாரம் தனியார் மயம், உலகமயம் என்று இந்தியாவின் அடிப்படையான பிரச்சினைகளில் இவர் அவற்றை எதிர்க்கின்ற பக்கத்தில் நிச்சயமாக இல்லை. வளர்ச்சிக் கொள்கை என்று மோடி பேசி நாட்டை ஏமாற்றியது போல பேசுவது அன்றி வேறு என்ன எதிர்ப்போ, மாற்றோ இருக்க முடியும்?

போத்தீஸ் விளம்பரத்தில் நடித்த கமல் கோ ஆப்டெக்ஸ் மூலம் கைத்தறியை வளர்ப்பாராம்!

நீட் பிரச்சினையில் தமிழகம் நீட்டைத் துரத்த வேண்டும் என்பது போய் இப்போது நீட் தேர்வில் அரசே பயிற்சி கொடுக்க வேண்டும் என்று பல ஓட்டுக் கட்சிகளும் ஒதுங்கிவிட்ட நிலையில் கமல்ஹாசன் என்ன கூற முடியும்? தான் ஆட்சி வந்தால் ஊழல் அற்ற, நல்ல முறையில் பயிற்சி மையங்கள் கொடுக்க முடியும் என்பதுதானே அவரது நிலை?

அப்பல்லோ போன்ற கார்ப்பரேட் மருத்துவமனைகளின் வளர்ச்சியும், அரசு மருத்துவமனைகள் திட்டமிட்டே அழிக்கப்டுவதுமான நாட்டில் திரு கமல் அவர்கள் என்ன செய்வார்? இல்லை ஆண்டுக்காண்டு பச்சமுத்து அல்லது விஸ்வநாதன் பல்கலைகளில் போய் பட்டங்களை கொடுத்தோ, பெற்றோ மகிழும் கமல் அவர்கள், கல்வி தனியார் மயம் எனும் புற்று நோய் குறித்து என்ன சொல்வார்? நல்ல முறையில் தனியார் கல்வியை உயர்த்துவேன் என்று சொல்வார்! அதாவது ஏழைகள் நல்ல முறையில் கல்வியின்றி, வேலையின்றி வாழ்வதற்கு ஆவன செய்வார்!

ஐ.டி, உள்ளிட்டு உற்பத்தி சார்ந்த தொழில்துறைகளில் கூட இன்று தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்பட்டு, தொழிற்சங்கங்கள் முடக்கப்பட்டு, நிரந்தர தொழிலாளர்கள் நீக்கப்பட்டு, மலிவு விலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் அமர்த்தப்படும் நிலையில் கமலின் நிலை என்ன? ஏதாவது ஹூண்டாய் காரின் புதிய மாடல் வந்தால் அதற்கு போய் போஸ் கொடுத்து விழாவில் சிறப்பிப்பாரே ஒழிய, ஹூண்டாய் தொழிற்சாலையில் தொழிலாளர் சங்கம் கட்டுவதற்கோ இல்லை போராடுவதற்கோ போய் முன்னே நிற்பாரா?

ஆக எப்படிப் பார்த்தாலும் திரு  கமல் அவர்கள் சற்றே மேம்போக்கான தம்மாத்துண்டு முற்போக்கு வேடத்தில் இந்திய ஆளும் வர்க்கம் கொண்டிருக்கும் அத்தனை பிற்போக்கு கொள்கைகளையும் வழிபடுபவரே அன்றி வேறு அல்ல.

அரசியல்படுத்தப்படாத நடுத்தர வர்க்கமோ இல்லை அதன் பார்வையோ சமூகத்தின் பொதுப்புத்தியை தீர்மானிக்கும் காலத்தில் கமலைப் போன்ற புதிய ஆளும் வர்க்க பிரதிநிதிகளின் செல்வாக்கு இல்லை என்று நாம் சொல்லவில்லை. ஆனால் தெரிந்த அந்த கொள்கைகளின் படி அவரை மதிப்பிடவதும், கேள்வி கேட்பதையும் விடுத்து அவர் ஏதோ புதிய நிலை, கொள்கை எடுப்பார் என்று ஆய்வு செய்தால் அது காலையில் சிரமத்துடன் போகும் ஆய்-ஐ இழிவு படுத்துவதாகும்.

இன்று இராமநாதபுரம், மதுரையில் கமல் போகும் இடங்களில் அவரது சினிமா பாடல்கள் ஒலிக்கின்றன. அவரது கிச்சன் கேபினட் கூட்டம் எல்லா இடங்களிலும் போற்றிப் புராணம் பாடுகிறது. கமலோ கை காட்டுகிறார். ஓரிரு வார்த்தைகளில் பேசுகிறார். இனி நான் நடிகன் இல்லை, உங்கள் வீட்டு குத்து விளக்கு, அந்த விளக்கை காப்பாற்றுவது உங்கள் பொறுப்பு என்கிறார். அல்பத்தனமான சென்டிமெண்டை தவிர இந்த உளறில் ஏதாவது பொருள் இருக்கிறதா?

அப்துல்கலாம் சமாதியை அவர் தேர்ந்தெடுத்திருப்பதே ஒரு நல்ல சான்று. பார்ப்பனியமயத்தை ஏற்றுக் கொண்ட ஆளும் வர்க்க ஊது குழலான அப்துல் கலாமை இந்துத்துவவாதிகள், இடதுசாரிகள், நடுத்தர வர்க்கம், கலெக்டர் ஆபிஸ் சிப்பந்திகளின் ஊழலை எதிர்க்கும் பார்த்தசாரதிககள் என அனைவரையும் கவர் செய்வதே அவரது நோக்கம். அப்துல் கலாம் படித்த பள்ளியில் அவரை விடவில்லையாம். உடனே தான் கலாமிடம் பாடம் கற்பதை யாரும் தடுத்த நிறுத்த முடியாது என்கிறார். இராமநாதபுரத்தில் இல்லாத அரசு பள்ளிகளா? அங்கே வாத்தியார் முதல் கழிப்பறைகள வரை இல்லாத நிலையை தமிழகத்தில் எங்கேயும் பார்க்கலாமே?

இவரது கட்சி ஆரம்பிககும் வைபவத்தை பாராட்டிய சந்திரபாபு நாயுடு, கொள்கைகள் முக்கியமில்லை, மக்களுக்கு சேவை செய்வதே முக்கியம் என்று சொன்னதாக கமல் கூறியிருக்கிறார். கவனியுங்கள், கொள்கைகள் முக்கியமில்லை என்று அவர் ஒத்துக் கொள்கிறார். இந்த இலட்சணத்தில் இந்த கைப்பிள்ளையிடம் கொள்களை கோட்பாடு என்று கும்மியடிக்கும் கூட்டத்தை கொட்டுவது எப்படி?

அதிகபட்சம் அடுத்த தேர்தலில் இவர் யார் ஓட்டுக்களை பிரிப்பார், பாஜகவிற்கு எந்த விதத்தில் பயன்படுவார், போராடும் தமிழக மக்களின் அரசியலை எப்படி நீர்த்துப் போகச் செய்வார் என்பதைத் தாண்டி திரு கமல்ஹாசனுக்கு எந்த முக்கியத்துவமும், எப்படி முக்கி யோசித்தாலும் இல்லை. ஒரு ஓட்டுக் கட்சி தேர்தலில் எவ்வளவு வாக்குகளை பிரிப்பார் எனும் அற்ப விசயத்தற்கு இத்தனை விவாதம், தலைப்புச் செய்திகள், நேரலை காட்சிகள் போன்ற எழவுகள் தேவையா?

லைக்கா கம்பெனியின் தயாரிப்பில் சாபாஷ் நாய்டுவும், எந்திரன் 2.0 படமும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும் போது கமல், ரஜினி இருவரும் ஒரே நேரத்தில் கட்சி ஆரம்பிப்பதும் தற்செயலான நிகழ்வுகளல்ல. ஐரோப்பிய நாடுகளில் ஊழல், கருப்புப் பணம், முறைகேடான வர்த்தக நடவடிக்கைள் மூலம் செல்பேசி சாம்ராஜ்ஜியத்தை அமைத்தருக்கும் ஒரு திருட்டு முதலாளியிடம் ஊதியம் என்ற பெயரில் கோடிகளைச் சுருட்டும் இந்த இரட்டையர்களிடம் போய் அரசியல் பேசுவதும், எதிர்பார்ப்பதும் அதை ஒட்டி நமது ஊடகங்களில் பெரும்பான்மை நேரங்கள் திருடப்படுவதும் தமிழ்நாட்டின் சாபக்கேடு அன்றி வேறென்ன?

 

பஞ்சாப் தேசிய வங்கி : நீரவ் மோடியின் கொள்ளை நடந்தது எப்படி?

2

பஞ்சாப் தேசிய வங்கி – கொள்ளை நடந்தது எப்படி?

பஞ்சாப் தேசிய வங்கியில் நடந்த ஊழலை அப்படியே மூடி மறைக்கவும், பழியை காங்கிரசின் மீதோ அல்லது முடிந்தால் வங்கி ஏ.டி.எம்மின் காவலாளி மீதோ சுமத்தி விடும் முனைப்பில் உள்ளது பாரதிய ஜனதா. பாரதிய ஜனதா மற்றும் அதன் அல்லக்கை ஊடகங்களின் மேற்படி முயற்சிகள் எல்லாம் சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதை மறக்கடிக்கச் செய்யும் வகையில் இதை விட பெரிய “செய்திகளுக்காக” பாரதிய ஜனதாவும் அதன் ஊதுகுழல்களும் தவமிருந்து வருகின்றனர். வழக்கமான இருகோடுகள் தத்துவம் தான்.

எப்படியாயினும், இந்த ஊழல் எப்படி நடந்தது என்பதையும், யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதையும், பலனடைந்தவர்களைக் குறித்தும் நாம் விளக்கமாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. பீரோ புல்லிங் உள்ளிட்ட திருடர்களின் “திறமைகளை” அறிந்து கொள்வது திருட்டுக் கொடுக்காமல் இருப்பதற்கு முன் நிபந்தனை அல்லவா?

குற்றம் நடந்தது எப்படி?

நீரவ் மோடி தன் மனைவியுடன், அவர் தம்பி நீஷல் மோடி தன் மனைவியுடன்

நீரவ் மோடி ஒரு வைர வியாபாரி. நீரவ் மோடி, அவரது மனைவி ஏமி, சகோதரர் நீஷல் மோடி மற்றும் இவர்களது மாமா மேகூல் சோக்சி ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து டையமண்ட் ஆர் யு.எஸ், சோலார் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்டெல்லார் டையமண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களை நடத்தி வந்தனர்.

இவை தவிற பையர்ஸ்டார் டையமன்ஸ் எனும் நிறுவனம் ஒன்றைச் சொந்த முறையில் துவங்கி நடத்தி வந்த நீரவ் மோடி, தில்லி, மும்பை, நியூயார்க், ஹாங்காங் உள்ளிட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 16 பெரு நகரங்களில் வைரக் கடைகளை நடத்தி வருகிறார். நீரவ் மோடியின் மாமா மெகூல் சோக்சி கீதாஞ்சலி குழுமம் எனும் பெயரில் வைர வியாபாரம் செய்து வருகிறார். நீரவ் மோடியின் இளைய சகோதரர் நீஷல் மோடி அம்பானி சகோதரர்களின் மருமகளைத் திருமணம் முடித்துள்ளார் (அம்பானிகளின் சகோதரி மகள்).

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் 85-வது இடத்தில் உள்ள நீரவ் மோடியின் சொத்து மதிப்பு 11,245 கோடிகள் (இம்மாதம் 15ம் தேதிக் கணக்குப் படி). 48 வயதாகும் நீரவ் மோடி வளர்ந்ததும் படித்ததும் பெல்ஜியத்தில். 2008ம் ஆண்டு வைர நகை வடிவமைப்புத் தொழிலைச் சிறிய அளவில் துவங்கும் நீரவ் மோடி, 2010ம் ஆண்டு வங்கி வலைப்பின்னல்களிலும் அவற்றின் விதிமுறைகளிலும் உள்ள ஓட்டைகளைக் குறித்து அறிந்து கொள்கிறார்; இதன் பின்னர் தான் இவரது அபரிமிதமான வளர்ச்சியை அடைகிறார்.

நீரவ் மோடி கண்டுபிடித்த வங்கி விதிமுறைகளில் உள்ள ஓட்டைகள் என்ன?

முதலில் வங்கி உத்திரவாதப் பத்திரம் (Letter of Undertaking) என்பது ஒரு வங்கி தனது வாடிக்கையாளருக்காக இன்னொரு வங்கிக்கு அளிக்கும் உத்திரவாதம். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள், வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய வங்கி உத்திரவாதப் பத்திரங்களையே அதிகம் நாடுகின்றனர். உதாரணமாக நீங்கள் வெளிநாட்டில் இருந்து ஒரு பொருளை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் உங்களது வங்கி அந்தப் பொருளின் மதிப்புக்கு இணையான உத்திரவாதப் பத்திரத்தை வழங்கும். அந்த பத்திரத்தை நீங்கள் வெளிநாட்டில் யாரிடம் இருந்து பொருள் வங்குகின்றீர்களோ அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு அனுப்புவீர்கள்.

அந்த நாட்டில் உள்ள உங்களின் வங்கிக் கிளைக்கு அந்த உத்திரவாதப் பத்திரம் (உங்களுக்குப் பொருள் விற்பவரின் வங்கி) அனுப்ப்பட்டு பணமாக மாற்றிக் கொள்ளப்படும். இப்போது உங்களுக்குப் பொருள் விற்பவரின் வங்கிக் கணக்குக்கு பணம் வந்த பின் உங்களது பொருளை அவர் ஏற்றுமதி செய்வார் – நீங்கள் இறக்குமதி செய்து கொள்வீர்கள். கச்சாப் பொருளைப் பெற்றுக் கொண்ட நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அதைக் கொண்டு பிற பொருட்களை உற்பத்தி செய்து மறுவிற்பனை செய்து விட வேண்டும் (வைரம், மற்றும் அபூர்வ கற்களுக்கு 90 நாட்கள் வரை கால அவகாசம் உண்டு). விற்பனை செய்து கிடைக்கும் பணத்தில் உங்களது லாபத்தை எடுத்துக் கொண்டு கச்சாப் பொருளை இறக்குமதி செய்வதற்கு உத்திரவாதப் பத்திரம் வழங்கிய வங்கிக்கு உரிய பணத்தைச் செலுத்தி விடவேண்டும். இந்த இடைப்பட்ட 90 நாட்களுக்கு உங்களுக்கு வழங்கப்பட்ட உத்திரவாதப் பத்திரத்தின் மதிப்புக்கு இணையான தொகையை நீங்கள் அதே வங்கியில் பிக்சட் டெப்பாசிட்டாக இருப்பு வைத்திருக்க வேண்டும்.

இப்படி உத்திரவாதப் பத்திரங்களுக்கு இணையான தொகையை பிக்சட் டெப்பாசிட்டாக வைத்திருப்பதில் வர்த்தகருக்கு என்ன லாபம்? முதலில் குறைந்த வட்டிக்கு அந்நிய செலாவாணி கிடைக்கிறது. இரண்டாவது பிக்சட் டெப்பாசிட்டில் உள்ள பிணைத் தொகை பின்னர் வட்டியுடன் திரும்ப வந்து விடும். அடுத்து இம்முறையில் இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடுவதில் பாதுகாப்பும் உள்ளது – தனது வாடிக்கையாளர் ஏமாந்து விடாமல் இருப்பதில் வங்கிகளுக்கும் அக்கறை இருக்குமல்லவா? எனவே சட்டரீதியான பாதுகாப்பை வங்கியின் தரப்பில் இருந்து உறுதி செய்து கொடுப்பார்கள்.

அடுத்து வங்கிகளுக்குள் உத்திரவாதப் பத்திரங்கள் பரிமாற்றம் நடப்பது தொடர்பான விவரங்கள் SWIFT (Society for worldwide Interbank financial telecommunications) என்கிற முறையில் மேற்கொள்ளப்படும். வங்கியின் பொதுவான பணப்பரிவர்த்தனைகள் மைய வங்கிப் பரிவர்த்தனை முறையின் (Core Banking system) கீழ் மென்பொருட்களாலும் இணையத்தின் வழி இணைக்கப்பட்ட கணிணிகளாலும் செயல்படுத்தப்படுகின்றது. பெரும்பாலான வங்கிகள் ஸ்விப்ட் முறையிலான பணப்பரிவர்த்தனைகளை மைய வங்கிப் பரிவர்த்தனை முறையோடு இணைத்துள்ளனர் – பஞ்சாப் தேசிய வங்கியில் அவ்வாறு இணைக்கப்படவில்லை.

இதை அறிந்து கொண்ட நீரவ் மோடி கும்பல், பஞ்சாப் தேசிய வங்கியின் நடைமுறைகளில் இருந்த ஓட்டைகளை திறமையாகப் பயன்படுத்திக் கொண்டது. பொதுவாக சிவிப்ட் முறையில் நடக்கும் பரிவர்த்தனைகள் நான்கு அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறும்.

பரிவர்த்தனையைத் துவங்கி வைப்பவர் (Maker) : ஒரு பரிவர்த்தனை நடப்பதற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் கோரிக்கை மனுவைப் பெற்று அதனைத் துவங்குபவர்.

பரிவர்த்தனையை சோதிப்பவர் (Checker) : இவர் ஸ்விப்ட் முறையிலான பரிவர்த்தனைக்கு வந்துள்ள கோரிக்கையை சோதித்து அனுமதிப்பவர்.

பரிவர்த்தனையை அங்கீகரிப்பவர் (Authorizer) : இவர் ஸ்விப்ட் முறையில் நடக்கும் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிப்பவர்

தகவல் பெறுபவர் (receiver) : வெளிநாட்டில் உள்ள வங்கிகள் தமக்கு வந்து சேர்ந்த கோரிக்கைகள் குறித்தும் அவற்றின் பண மதிப்பு குறித்தும் ஸ்விப்ட் முறையில் (ஸ்விப்டுக்கான பிரத்யேக இணையத் தொடர்பின் வழியாக) அனுப்பும் தகவல்களைப் பெறுகிறவர். பொதுவாக இவ்வாறு தகவல் பெறுபவரின் கணினி உயர் பாதுகாப்பு வளையத்தினுள் (High Security Zone) இருக்கும். ஸ்விப்ட் வலைப்பின்னல் தவிர பிற இணைய இணைப்புகள் இந்த கணினிக்கு மறுக்கப்பட்டிருக்கும்.

நீரவ் மோடி, இந்த பரிவர்த்தனையைக் கையாளும் அதிகாரிகளை லஞ்சம் கொடுத்து வளைத்துள்ளார். மேலும், வங்கிகள் வழங்கும் உத்திரவாதப் பத்திரங்களுக்கு இணையான வைப்புத் தொகையையும் அவர் செலுத்தாமல் ஏமாற்றியுள்ளார். அடுத்து ஒவ்வொரு குறிப்பிட்ட கெடு காலத்திற்குப் பின்னும் முந்தைய தொகையை அடைப்பதற்கு பதில் அதை விட அதிக மதிப்பு கொண்ட உத்திரவாதப் பத்திரங்களை வாங்கி அவற்றைப் பணமாக மாற்றியுள்ளார். இந்த வகையில் நீரவ் மோடி வாங்கிய உத்திரவாதப் பத்திரங்களின் எண்ணிக்கை – 293.

இப்போது சில கேள்விகள் எழுகின்றன.

நீரவ் மோடி என்கிற தனிநபர், ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வேலை பார்த்த சில அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு கொள்ளையடித்துள்ளார். இதில் அரசாங்கத்தின் பங்கு எங்கே வருகின்றது? மோடியை ஏன் குற்றம் சாட்ட வேண்டும்?

நீமோ(நீரவ் மோடி) ”நமோ”வுடன்

கொள்ளையின் மதிப்பு சுமார் இருபதாயிரம் கோடிக்கும் அதிகம் என்பதால் இதைச் சாதாரண திருட்டாக சுருக்கி விடமுடியாது. வெறும் பத்து அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இருபதாயிரம் கோடிக்கும் அதிகமாக சுருட்டியிருக்கவும் முடியாது. ஒவ்வொரு நாளின் இறுதியிலும்(EOD Process), ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும், ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் வங்கிகள் உள்ளிட்டு எல்லா நிதிநிறுவனங்களிலும் வரவு செலவுகள் தணிக்கை செய்யப்படும். மிக கறாராக செய்யப்படும் இந்த தணிக்கை நடைமுறையில் இருந்து பத்து ரூபாய் கூட தப்பிக்க முடியாது எனும் போது கடந்த பல மாதங்களாக ஆயிரக்கணக்கான கோடிகளை யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் ஒருவரால் திருட முடியாது.

எல்லா வங்கிகளின் பரிவர்த்தனைகளும் மத்திய ரிசர்வ் வங்கியின் கவனத்தின் கீழும், பெருமளவில் நடக்கும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் மத்திய நிதியமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் தான் நடக்க முடியும். இத்தனை துறைகள் மற்றும் அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஆட்டையைப் போடுவதற்கு இது பேருந்தில் ஐந்து பத்துக்கு நடக்கும் ஜேப்படி திருட்டல்ல. பிரதமரே கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் இவ்வளவு பெரிய திருட்டைச் செய்தவர் அத்தனை சுலபத்தில் கலந்து கொள்ளவும் முடியாது. பிரதமரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரின் மொத்த ஜாதகத்தையும் தோண்டித் துருவிய பின்னரே பிரதமர் அலுவலகம் அனுமதிக் கடிதமே வழங்கும் – நீரவ் மோடிக்கு அப்படி ஒரு அழைப்பு கிடைத்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் பஞ்சாப் தேசிய வங்கி ஹெச் ராஜா நடத்தி ஊத்தி மூடிய சீட்டுக் கம்பெனி அல்ல. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் ஸ்விப்ட் முறையிலான பரிவர்த்தனையும் மைய வங்கிப் பரிவர்த்தனை முறையையும் இணைக்காமல் விட்டது ஏன் என்பதற்கும், அவ்வாறு விட்டதால் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக கொள்ளைப் புற கதவுகளைத் திறந்து வைத்தது ஏன் என்பதையும் மத்திய நிதியமைச்சகம் விளக்க வேண்டும்.

எனவே இது இன்னும் ஒரு சாதாரண திருட்டல்ல. இந்திய வங்கித்துறையின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மாபெரும் கொள்ளை. இந்தக் கொள்ளைக்கு பொறுப்பேற்க வேண்டியது மத்திய பாரதிய ஜனதா அரசு தான்.

 

ஒக்கி புயல் : இயற்கையின் பெயரால் இனப்படுகொலை

1

க்கிப் புயல் பாதிப்பின் தீவிரத்தை; அரசின் அலட்சியமும், பாராமுகமும் ஏற்படுத்திய பேரழிவின் ஆழத்தைப் பேசும், ‘கண்ணீர்க் கடல்’ என்ற திரைச் சித்திரத்தை ‘வினவு’ தயாரித்து உள்ளது. இது, சென்னை, வடபழனி, ஆர்.கே.வி. ப்ரிவியூ அரங்கில் டிசம்பர் 25 -ம் தேதி திரையிடப்பட்டது. 250 -க்கும் அதிகமானோர் அரங்கு முழுவதும் நிறைந்திருந்த நிலையில், ஆவணப்படம் ஏற்படுத்திய பாதிப்பை ஒவ்வொருவரின் முகத்திலும் உணர முடிந்தது.

சோகம், ஏமாற்றம், கையறு நிலை, கோபம்… என ஒவ்வொருவரும் ஓர் உணர்ச்சிநிலையில் இருந்தனர். திரையிடல் நடைபெறும்போதே அரங்கின் உள்ளே அழுகை ஒலிகளும், கண்ணீர்த் துளிகளும் நிறைந்திருந்தன. அதனைத் தொடர்ந்து, மீனவ இளைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்ற உரையாடல் நடைபெற்றது.

குமரிக் கரையில் அரபிக் கடலோரத்தில் உள்ள வள்ளவிளை, சின்னத்துறை, தூத்தூர், நீரோடி உள்ளிட்ட எட்டு கிராமங்கள் பாரம்பரிய ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் பெயர்பெற்றவை. ஒக்கி புயலால் நூற்றுக்கணக்கான மீனவர்களை இழந்திருப்பதும் இந்த கிராமங்கள்தான். இதில் வள்ளவிளையில் இருந்து ஆல்பர்ட், டிக்சன் என்ற இரண்டு இளைஞர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் பத்திரிகையாளர் ரகுமான், ம.க.இ.க. பொதுச் செயலாளர் மருதையன் ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். புயல் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று வந்த பத்திரிகையாளர் பாரதி தம்பி இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

*****

ன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று வகையான மீன்பிடி முறைகள் இருக்கின்றன. ஒன்று, பகல் 3 மணிக்கு கிளம்பிச் சென்று காலை 3 மணிக்குத் திரும்பி வருவது. அடுத்தது, காலை 3 மணிக்கு கிளம்பி அதே நாள் மாலைக்குள் திரும்பி வருவது. மூன்றாவது பிரிவினர் ஆழ்கடல் மீன்பிடிப்பவர்கள். இவர்கள் இன்றைக்கு கிளம்பினால் எப்போது திரும்பி வருவார்கள் என்பதே தெரியாது. நான்கு நாட்கள் முதல் அதிகபட்சம் 50 நாட்கள் கூட ஆகலாம்.

நவம்பர் 29 -ம் தேதி இரவு புயல் அடித்தது. அன்று மாலை 3 மணிக்கு கிளம்பியவர்கள் கடலுக்குள் சென்றுவிட்டார்கள். வானிலை ஆய்வு மையம் புயல் அறிவிப்புக் கொடுத்தது நவம்பர் 30 -ம் தேதிதான். ஒரு நாள் முன்பாக சொல்லியிருந்தால், குறைந்தபட்சம் அன்றைய பகலில் கடலுக்குச் சென்றவர்களையேனும் காப்பாற்றியிருக்க முடியும்.

இவற்றை விளக்கிய ஆல்பர்ட், “முன்னெச்சரிக்கை கொடுக்கவில்லை என்பது மட்டுமல்ல… அதன்பிறகும் என்ன செய்வது என்று இவர்களுக்குத் தெரியவே இல்லை. அந்த சமயத்தில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எங்கள் ஊருக்கு வந்திருந்தார். அவரிடம் நாங்கள் மீனவர்கள் சிக்கியிருக்க வாய்ப்புள்ள சில ஜி.பி.எஸ். பொசிசன்களை கொடுத்தோம். அது அதிகபட்சம் 720 நாட்டிகல் மைல் தூரம் இருந்தது. இது நிச்சயம் ஹெலிகாப்டரால் சென்று வரக்கூடிய தூரம்தான். ஒரு ஹெலிகாப்டரின் அதிகபட்ச வேகம் 200 நாட்டிக்கல் மைல். நான்கு மணி நேரத்தில் போகக்கூடிய தூரம். ஆனால், இவர்கள் ஹெலிகாப்டரை வைத்துக்கொண்டு, எங்கள் பார்வையில் படும்படி கடலின் ஓரப்பகுதியையே சுற்றிச்சுற்றி வந்தார்கள்.

இரண்டாவதாக, அமைச்சர் எங்கள் ஊரில் இருந்த சமயத்தில் புயலின் மையப்பகுதி (epicentre) லட்சத்தீவுக்கும், கொச்சினுக்கும் இடையே 13 டிகிரி அட்சரேகை பகுதியில் நிலைகொண்டிருந்தது. கரையை கடந்திருக்கவில்லை. மீனவர்களை மீட்க கப்பல் அனுப்புவதாக சொன்ன அமைச்சரிடம், ‘அந்தக் கப்பலை மகாராஷ்டிராவில் இருந்தோ, கோவாவில் இருந்தோ அனுப்புங்கள். ஏனெனில் மீனவர்கள் சிக்கியுள்ள பகுதி அங்கிருந்து 500 நாட்டிக்கல் மைல் தூரம்தான். மாறாக, கொச்சினில் இருந்து கப்பல் அனுப்பினால், அது 1000 நாட்டிக்கல் மைல் தொலைவு வரும். சரிபாதி தூரமும், நேரமும் குறையும்’ என்று சொன்னோம். ஆனால் அமைச்சரோ, ‘மீட்புப் பணிக்கு கப்பல் அனுப்ப வேண்டும். அதை எங்கிருந்து அனுப்பினால் உங்களுக்கு என்ன?’ என்று கேட்டார்.

ஆல்பர்ட்

நாங்கள் சொன்ன பகுதியில் இருந்து கப்பல்களை அனுப்பி இருந்தால், புயல் அவர்களை நெருங்கும் முன்பே மீட்டிருக்க முடியும். அதைத்தான் செய்யவில்லை என்றால், புயல் சென்ற பாதையிலேயே பின் தொடர்ந்து செல்லுங்கள் என்று சொன்னோம். ஒன்று புயலுக்கு முன்னே செல்ல வேண்டும். இல்லை என்றால் பின்னே வேண்டும். இதுதான் மீனவர்களை மீட்பதற்கு வழி. ஆனால் நிர்மலா சீதாராமன் நாங்கள் சொன்ன எதையும் காதுகொடுத்தும் கேட்கவில்லை’’ என்று ஆல்பர்ட் விவரித்தபோது அரசின் அலட்சியமும், திமிர்த்தனமும் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டன.

“சாலையில் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவரை யாரோ சிலர் காப்பாற்றாமல் போனால், அது அவர்களின் சுயநலம். அதுவே, ஒரு ஆம்புலன்ஸுக்கு போன் செய்து சொல்லி, ‘போக்குவரத்து நெரிசல். வர முடியாது’ என்று ஏதோவொரு நொண்டிச்சாக்கு சொல்லி மறுத்து, அதன் காரணமாக உயிர் போகிறது என்றால், அதை விபத்து என்று சொல்வதா, கொலை என்பதா? ஒக்கி புயலில் நடந்ததும் இதுதான். எங்கள் மீனவ மக்களை இந்த அரசு இயற்கை சீற்றம் என்ற பெயரால் இனப்படுகொலை செய்திருக்கிறது” என்கிறார் ஆல்பர்ட்.

புயல் முடிந்து 10 நாட்கள் கழித்து, கரைக்குத் திரும்ப வருமாறு மீனவர்களுக்கு அறிவிப்பு விதமாக ஒரு ஆடியோ அறிவிப்பை ஹெலிகாப்டர் மூலம் கடலுக்குள் சென்று ஒலிபரப்பியது கடலோர காவல்படை. கரையிலிருந்து வயர்லெஸ் கிடைக்காது என்பதால் இப்படிச் செய்தார்கள். இதை நவம்பர் 29 -ஆம் தேதியே செய்திருந்தால், கிட்டத்தட்ட அனைத்து மீனவர்களையுமே காப்பாற்றியிருக்க முடியும் என்கிறார்கள் ஆல்பர்ட்டும், டிக்சனும்.

“பொதுவாக ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள், பத்து பதினைந்து படகுகள் சேர்ந்து ஒரு கூட்டாகத்தான் கடலுக்குள் செல்வார்கள். ஒரு படகின் வயர்லஸ் வரம்புக்குள்தான் இன்னொரு படகு இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். ஒரே ஒரு படகுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால், அடுத்தடுத்த படகுகளுக்கு உடனடியாகத் தகவல் சென்று சேர்ந்திருக்கும். அவர்கள் அருகில் உள்ள கரை பகுதியை நோக்கி விரைந்திருப்பார்கள். மிக அதிகபட்சமான மீனவ உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்’’ என அவர்கள் விவரிக்க, விவரிக்க… இது இயற்கை பேரழிவு அல்ல; அரசே செய்த படுகொலைகள் என்பதை அரங்கில் இருந்த ஒவ்வொருவரும் உணர்ந்தனர்.

“கோஸ்ட் கார்டு எங்களில் சிலரையும் மீட்புப் பணிக்கு அழைத்துச் சென்றது. நானும் அதில் சென்றேன். ஆனால், அதிகபட்சம் 50 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு மேல் அவர்கள் போக மறுத்துவிட்டார்கள். எங்கள் மீனவர்கள் தொழில் செய்வதோ குறைந்தது 200 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு அப்பால். அப்படியிருக்க 50 நாட்டிக்கலில் தேடி என்ன கிடைக்கும்? அதில் ஒரு கோஸ்ட் கார்டு அதிகாரி சொன்னார், ‘நாங்கள் இப்போதுதான் இவ்வளவு தொலைவுக்கே வந்திருக்கிறோம். இதுவரை இங்கெல்லாம் வந்ததே இல்லை’ என்றார். அப்போதுதான் இவர்களால் உடைந்த ஒரு வள்ளத்தின் பலகையை கூட மீட்க முடியாது என்பதை தெரிந்துகொண்டோம்’’ என்று கோஸ்ட் கார்டின் லட்சணத்தை விளக்கினார் மீட்புப் பணிக்குச் சென்றுவந்த டிக்சன். “ஐம்பது நாட்டிகல் என்பது எங்கள் மீனவர்கள் சாதாரணமாக ஃபைபர் படகில் சென்று வரும் தூரம்தான்” என்று அவர் சொன்னவுடன் அரங்கமே கைகொட்டிச் சிரித்தது.

டிக்சன்

ஆனால், அரசோ தாங்கள் துரிதமாகவும், சிறப்பாகவும் மீட்புப் பணிகளைச் செய்து வருவதாகப் பச்சைப் பொய்களை முதல் நாளில் இருந்து சொல்லிவந்தது. “எல்லா கப்பல்களிலும் voyage data recorder என்றொரு கருவி இருக்கும். ஒருவேளை அரசு சொல்வதைப் போல அவர்கள் மீனவர்களைக் காப்பாற்றியது உண்மையாக இருந்தால், எந்த அட்சரேகை, தீர்க்கை ரேகைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அவர்கள் மீனவர்களை மீட்டார்கள் என்ற “பொசிசன்” அந்த கருவியில் நிச்சயம் பதிவாகி இருக்கும். அந்தப் பதிவுகளை வெளியிட அரசு தயாரா? நாங்கள், எத்தனை மீனவர்களை, எந்த இடத்தில் காப்பாற்றினோம் என்பதற்குத் துல்லியமான பொசிசன்களை தருகிறோம். அரசு தருமா?’’ என்று கோபத்துடன் கேட்டார் ஆல்பர்ட்.

இன்னமும் வள்ளவிளையில் இருந்து மட்டும் 67 பேர் கரை திரும்பவில்லை. அதில் தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம் வரை பல மாநிலங்களிலிருந்து வந்த மீனவர்கள் உண்டு. குமரி மீனவர்களின் படகுகளில், ஒரு படகுக்கு ஓரிருவராக ஏராளமான வட இந்தியத் தொழிலாளர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை; பெயர் விவரம் எதுவும் யாரிடமும் இல்லை.

“எங்க ஊர் படகுகள் சிலவற்றுக்கு அரசு distress alert transmitter எனப்படும் கருவியை வழங்கியது. ஆபத்து காலங்களில் அந்த கருவியை அழுத்தினால் அதில் இருந்து மீன்வளத்துறைக்கு சிக்னல் போகும். அவர்கள் ஹெலிகாப்டரை அனுப்பி வைக்க வேண்டும். ஒக்கி புயலில் சிக்கிய 123 படகுகள் அந்தக் கருவியை அழுத்தியிருக்கிறார்கள். ஒரு சிக்னல் கூடவா மீன்வளத் துறைக்கு வரவில்லை? யாரேனும் அதைத் தவறுதலாக அழுத்திக் கடற்படையை அலையவிட்டால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று விதியெல்லாம் வைத்திருக்கிறார்கள்’’ என்று நமது அரசின் அணுகுமுறையில் உள்ள அலட்சியத்தையும், புறக்கணிப்பையும், திமிரையும் சுட்டிக்காட்டினார் ஆல்பர்ட்.

இலங்கைக்கும்,கன்னியாகுமரிக்கும் இடையில் மீன்வளம் நிறைந்த wedge bank பகுதியில் முன்பு குமரி மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இப்போது அங்கு மீன்பிடிக்கும் உரிமையை வெளிநாட்டு கப்பல்களுக்கு நம் அரசு தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது. இப்போது நம் படகுகள் அங்கு போக முடியாது. ஆகவே, வேறுவழி இல்லாமல் மீனவர்கள் ஆழ்கடலை நோக்கி விரட்டப்படுகின்றனர்.

மேலும், இலங்கையில் மீனவர்களுக்கு சாட்டிலைட் போன் பயன்படுத்த அனுமதி உள்ளது. ஆனால், இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களை சொல்லி அது மறுக்கப்படுகிறது. “நாங்கள் கேட்பது இருவழித் தகவல் தொடர்பு அல்ல. ஒரு வழி தகவல் தொடர்புள்ள சாட்டிலைட் போன் பயன்படுத்த அனுமதி வழங்கினால் போதும். அதை வழங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்னை?” என்று கேட்கிறார் ஆல்பர்ட்.

பத்திரிக்கையாளர் பாரதி தம்பி

மீனவர்களின் இத்தகைய பிரச்னைகளைப் பேச வேண்டிய ஊடகங்களும், அரசும் இழிவான முறையில் அவற்றை இருட்டடிப்பு செய்ததுடன் ஆபாசமான முறையில் அரசுக்கு விளம்பரம் செய்தன. சென்னை மழை வெள்ளத்தில் மக்கள் கொடுத்த நிவாரணப் பொருட்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்ட ‘ஜெயலலிதா லெகசி’யில் வந்தவர்கள், ஒக்கி புயலில் தாங்களாகவே நீந்திக் கரை சேர்ந்த மீனவர்களை அரசுதான் மீட்டது என்று வெட்கமே இல்லாமல் சொன்னார்கள். அதை அப்படியே ஊடகங்கள் வாந்தி எடுத்தன.

“ஒரு ஹெலிகாப்டரில் நான்கு மீனவர்கள் மீட்கப்படும் ஒரே ஒரு வீடியோ காட்சியை 10 நாட்கள் மீண்டும், மீண்டும் ஊடகங்கள் ஒளிபரப்பின. ராபிட்சன் என்பவர் மூன்று இரவு, மூன்று பகல்கள் நீந்தி லட்சத்தீவில் கரையேறினார். மருத்துவமனையில் கண்விழித்துப் பார்த்தபோது அவரையும், அவருடன் நீந்தி கரை சேர்ந்தவர்களையும் கடலோர காவல்படை மீட்டு சிகிச்சை அளித்து வருவதாக செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது’’ என்கிறார் ஆல்பர்ட்.

ஆழக்கடலில் நிராதரவாக கைவிடப்பட்ட அந்த இளைஞர்களுக்கு மரணத்தை விடக் கொடிய வலி அந்தப் பொய்தான். ராபிட்சன், தான் மட்டும் நீந்தி வரவில்லை. தன்னுடன் ஓர் உடலையும் இணைத்துக் கட்டிக்கொண்டு மூன்று நாட்கள் நீந்தி வந்திருக்கிறார். உணவில்லை; நீர் இல்லை; துளி உறக்கம் இல்லை; பகல் எல்லாம் உப்புக்கத்தியாய் குத்தும் கொடும்வெயில்; இரவெல்லாம் கடுங்குளிர்; இரவும், பகலும் முகத்தில் அடிக்கும் அலைகடல். ஒரு நொடி கூட இடைவெளி விடாமல் நீந்திக்கொண்டே இருக்க வேண்டும். கண்காணா தூரத்தில் இருக்கும் கரையை நோக்கி நீந்தும் பொழுதில், ‘யாரேனும் ஒருவர் மீட்க வந்துவிட மாட்டாரா?’ என ஒவ்வொரு கணமும் எவ்வளவு எதிர்பார்த்திருப்பார்கள்? கரையில் தவிக்கும் மனைவி, பிள்ளைகளை எண்ணி எவ்வளவு மனம் கலங்கியிருப்பார்கள்? உடன் நீந்தி வந்தவர்கள் ஒவ்வொருவராய் கண் முன்னே மடிந்து வீழும்போது மனதைச் சூழும் அச்சத்தையும், அவலத்தையும் என்னவென்று அழைப்பது?

இத்தகைய நிலையிலும், தன் உடன் வந்த ஒரு மீனவனின் உடலைச் சுமந்துகொண்டு மூன்று இரவும், மூன்று பகலும் நீந்தி ஒரு மீனவர் கரை சேர்ந்திருக்கிறார் என்றால்…. அந்த மன உறுதியும், உடல் வலுவும், சக தொழிலாளி மீதான நேசமும், ஆழ்கடல் மீன் பிடிப்பு எனும் கூட்டு உழைப்பு அளித்த பரிசுகள். “வைராக்கியமா கரையில வந்து நின்னு, அரசாங்கத்தை வெட்கப்பட வைக்கனும்னு நினைச்சேன்” என்று ஒரு மீனவர் சொன்னார். ஆனால் அரசோ, வெட்கம், மானம் எதுவுமின்றி பேரிடர் காலங்களை ஆதாயத்துக்கான வாய்ப்பாகப் பார்க்கிறது.

பத்திரிக்கையாளர் ரகுமான்

“இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ‘சாகர் மாலா’ப் ‘பாரத் மாலா’ ஆகிய இரண்டு திட்டங்களின் மூலம், தனியார் துறைமுகங்கள், சரக்கு பெட்டக முனையங்கள் (container terminals), அனல் மின் நிலையங்கள், அனு மின் நிலையங்கள்… போன்றவற்றைக் கொண்டு வருவது அரசின் திட்டம். இவை எல்லாம் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்கள். இவை போக, கடற்கரையோரப் பகுதிகளை, குறிப்பாக குமரி மற்றும் கேரள கடலோரப் பகுதிகளை சுற்றுலாவுக்காக திறந்துவிட வேண்டும் என்பது அரசின் திட்டம். தாஜ் உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் சொகுசு நட்சத்திர விடுதிகளைக் கட்டுவதற்காகக் காத்திருக்கிறார்கள். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, ஒக்கி புயலில் மீனவர்கள் மீதான அலட்சியமும், புறக்கணிப்பும் தற்செயல் நிகழ்வு என்று கருத இடமில்லை. இது திட்டமிட்டுதான் நடந்திருக்கிறது. மீனவர்களைக் கடற்புறத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கம் இதன் பின்னே இருக்கிறது” என்கிறார் ம.க.இ.க. பொதுச் செயலாளர் மருதையன்.

இந்த கருத்தை ஆமோதித்துப் பேசிய பத்திரிகையாளர் ரகுமான், “மீனவர்களை வெளியேற்றிவிட்டு கடல்வளம் முழுவதையும் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்குத் திறந்து விடுவதுதான் இவர்கள் நோக்கம். மீனவர்களின் துயரம் அரசின் மனசாட்சியை உலுக்கவில்லை. மீனவர் துயரம் மட்டுமல்ல… கந்துவட்டி கொடுமையில் நெல்லையில் 4 பேர் உடல் கருகிச் செத்துப்போனார்களே.. அது இரக்கம் உள்ள யாருடைய மனதையும் உலுக்கிவிடும். ஆனால், அதுவும் இந்த அரசின் மனசாட்சியை உலுக்கவில்லை.’’ என்றார்.

தென்முனை கடலோரத்தின் சோகம் இன்னும் தீரவில்லை. அவர்கள், தங்கள் அன்புக்குரியவர்கள் என்றேனும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் அரபிக்கடலை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அது ஏக்கமாகவும், ஆற்றாமையாகவும் மட்டும் இல்லை. அதன் அடியாழத்தில், தங்களை மரணத்தை நோக்கித் தள்ளிய அரசுக்கு எதிரான கோபம் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது.

அந்த கொந்தளிப்பு விவசாயிகளின் கோபத்துடன்; தொழிலாளர்களின் எதிர்ப்புடன் இணையும்போது, அவர்கள் ஒக்கியை விடவும் வேகமாக இந்த அரசை திருப்பித் தாக்குவார்கள்.

-வினவு செய்தியாளர்.

புதிய ஜனநாயகம், ஜனவரி 2018.

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

 

திருவாரூர் கடம்பங்குடி ஓ.என்.ஜி.சி. காண்ட்ராக்டரை விரட்டிய பொதுமக்கள் !

திருவாரூர் கடம்பங்குடி கிராமத்தில் தொடங்கவிருக்கும் ONGC பணிகளுக்கு எதிராக போராடிய தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது அரசு.

அவர்களுக்கு பிணை மனுவில் ஆஜராக தஞ்சாவூர் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் 4 பேரும் கும்பகோணம் வழக்கறிஞர்கள் 3 பேரும் நாகையிலிருந்து ஒரு வழக்கறிஞரும் ஆஜராகிவிட்டு பின்னர் ஊர் மக்களை சந்திக்கலாம் என்று கடம்பங்குடி கிராமத்திற்கு சென்றோம்.

அதே நேரத்தில் முன்னணி தோழர்கள் கைது செய்யப்பட்டிருந்ததால் எளிதாக பணிகளை தொடங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் ஜே.சி.பி. எந்திரத்துடன் கான்ட்ராக்டர் ஊருக்குள் வந்து பணிகளை தொடங்கியிருந்தார். இதனை அறிந்த ஊர்மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அவர்களை முற்றுகையிட்டு போராடிக் கொண்டிருந்தனர்.

சரியாக அந்த நேரத்தில் நாங்கள் அங்கு சென்றதும் ஊர் மக்கள் மேலும் உற்சாகத்துடன் அவர்களை வெளியேற சொல்லி கெடு விதித்தனர். அந்த ஒப்பந்தக்காரர் தான் மாபெரும் யோக்கியன் என்றும் அரசு ஆணைபடி செயல்படுவதாகவும் பசப்பலாக பேசினார். மக்கள் சார்பில் நாங்கள் (வழக்கறிஞர்கள்) அவர்களிடம் பேசி இதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக்கூறி உடனே வெளியேறும்படி கூறினோம். அவர்களும்  வேலையை நிறுத்திவிட்டு வெளியேறினர்.

அதன் பின்னர் அங்கிருந்த ஊர் மக்களிடம் அவர்களுக்கு ஆதரவாக ம.உ.பா.மையம் துணை நிற்கும் என்றும் அஞ்சாமல் போராடும் படியும் போராட்டம் ஒன்றே தீர்வு என்றும் எடுத்துக் கூறினோம்.

ஏற்கனவே வீரமிக்க போராட்டத்திற்கு தயாராக இருந்த மக்கள் உங்கள் உதவியிருந்தால் போதும் இந்த போராட்டத்தில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கூறினர்.

( படங்களைப்  பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் 2000 நோயாளிகள் 2 மருத்துவர்கள் !

0

வேதாரண்யம் அரசு மருத்துவமனையைக் கண்டித்தும், செயல்படாத டெட்பாடி அரசை எதிர்த்தும் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காலை 11 மணிக்கு (03.02.18) ஆர்ப்பாட்டம் நடத்து திட்டமிட்டோம். அனைத்து வேலைகளும் முடித்த நேரத்தில் 02.02.2018 அன்று மாலையில் வழக்கம்போல் கா(ஏ)வல் துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தனர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வது என 140 க்கும் மேற்பட்டோர்  ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தனர். எதிர்பாராத விதமாகவே பொதுமக்கள் அணி திரண்டு வந்திருந்தது உற்சாகம் அளித்தது. மக்கள் அதிகார கொடிகளுடனும், பிளக்ஸ் உடனும் பேரணியாக செல்ல திடீர் முடிவு செய்து பேரணியை வேதாரண்யம் மேலவீதி பெரியார் சிலை அருகிலிருந்து தொடங்கினோம். காவல் துறைக்கே வியப்பூட்டும் வகையில் பொதுமக்கள் அணி திரண்டு இருந்தனர்.

அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், இப்பகுதியின் தலைமை மருத்துவமனையில் 2000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இரு மருத்துவர்களே உள்ளனர். ஆகவே மருத்துவர்களை நியமிக்க வேண்டும் எனவும், நோயாளிகளாக வரும் ஏழை எளிய உழைக்கும் மக்களை திருவாரூர், நாகை என அலைய செய்து சிகிச்சை செய்ய மறுப்பது ஆகியவற்றை கண்டித்தும், இறந்தவர்களை கொண்டு செல்ல அமரர் ஊர்தி கூட இல்லாமல் சமீபத்தில் 9 கிலோமீட்டர் உடலை கைப்பாடையில் தூக்கி சென்ற அவலத்தை நீக்கி உடனடியாக ஆம்புலன்ஸ் (அமரர் ஊர்தி) ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், உரிய மருந்து மாத்திரைகளை மருத்துவமனை நிர்வாகம் வெளியில் வாங்க சொல்லி எழுதி கொடுப்பதும் என்ன கேவலம், இது அரசு மருத்துவமனையா இல்லை தனியார்  கிளினிக்கா என பல்வேறு முழக்கங்களுடன் பேரணி நடத்தப்பட்டது.

வட்டாட்சியர் அலுவலகம் வந்தடைந்ததும் காவல் துறை அதிகாரிகள் பேரணிக்கு தலைமை வகித்த தோழர் தனியரசை வலுக்கட்டாயமாக கைது செய்ய முற்பட்டனர். மக்களும் தோழர்களும் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு மெகாபோனை பிடுங்கி வைத்துக் கொண்டது காவல்துறை. இதை பல பயணிகளும் அருகிலுள்ள பொது மக்களும் கவனித்தனர். தோழர் கிருஷ்ணமூர்த்தி காவல்துறையை எதிர்த்து ” எதுக்கு எங்கள மறைக்கிற? நாங்க பொதுவான விஷயத்துக்கு போராடுகிறோம். உங்களுக்கும் சேர்த்துதான் போராடுகிறோம்” என கேள்வி கேட்டதும் போலீஸ் கண்டுகொள்ளாமல் நின்றது.

95 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். தோழர் கிருஷ்ணமூர்த்தியை காவல் துறையினர் அதிகப்படியாய் பேசியபோது, மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது போலீஸ் பின் வாங்கியது.

கைது செய்து புஷ்பவனம் பெரியகுத்தகை பேரிடர் பாதுகாப்பு மையக்கட்டிடத்தில் தங்க வைத்தனர். 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் 70-க்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டனர். தோழர் காளியப்பன் பொது மக்களிடம் மருத்துவமனை மற்றும் டெட்பாடி அரசின் கையாலாகாததனத்தையும், விமர்சித்து இந்த செத்த அரசை சுமக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கான உரிமைகளை பெற நாம்தான் போராட வேண்டும் என பேசினார்.

தோழர் வெங்கடேசன் மற்றும் வேதாரண்யம் வட்டார அமைப்பாளர், தோழர் தனியரசும் மக்களிடம் போராட்டத்தின்  அவசியம் அதன் நோக்கம் அமைப்பாக இருந்தால் மட்டுமே உரிமையை பெற முடியும். மக்களின் வாழ்வை செழுமையாக்க வேண்டிய அரசு பஸ் கட்டணத்தை அவர்கள் தலையில் சுமத்தி உள்ளது. இதுவா மக்களுக்கான அரசு என பேசினார்.

போலீஸ் பறித்து வைத்திருந்த மெகாபோனை திருப்பி ஒப்படைத்தால் மட்டுமே நாங்கள் பெயர் (ம) முகவரிகளை தருவோம் இல்லையேல் நாங்கள் பெயர் முகவரி கொடுக்க மாட்டோம் என தோழர்கள் காவல் துறைக்கு தெரிவிக்கவும் வேறு வழியின்றி  நம்மிடம் மெகாபோனை ஒப்படைத்தனர். அதிகாரம் மக்கள் கையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் என்னவெல்லாம் நாம் செய்ய முடியும் என மக்களுக்கு வெளிப்படுத்தியது இந்நிகழ்வு. மாலை 6 மணிக்கு தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

மக்கள் அதிகாரம்
வேதாரண்யம் பகுதி

 

தன்னுரிமை காக்க தமிழகமே திரண்டெழு ! பிப். 27 சென்னையில் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

2

தன்னுரிமைக்காக தமிழகமே திரண்டெழு ! – ஆர்ப்பாட்டம்

  • பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் தமிழைப் பயிற்று மொழியாக்கு !
  • அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு !
  • அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழை நிலைநாட்டு !

நாள் : பிப் 27, 2018, காலை 11 மணி
இடம் : வள்ளுவர்கோட்டம், சென்னை.

*****

அன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே!

காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை பறித்து, தமிழகத்தை கார்ப்பரேட்டுகள், பனியா – சேட்டுகள் சுரண்டும் வகையில் வஞ்சகமான தீர்ப்பை, உச்சநீதிமன்றத்தின் மூலம் திணித்திருக்கிறது மோடி அரசு.

காவிரியில் மட்டுமல்ல, தமிழக மருத்துவக் கல்லூரி களை ஆக்கிரமிக்க நீட் தேர்வு; விவசாயத்தை அழிக்க, இயற்கை வளங்களை சூறை யாட – மீத்தேன், ஹைட்ரோகார்பன், கெயில் குழாய் பதிப்பு, சாகர்மாலா உள்ளிட்ட நாசா காரத்திட்டங்கள்; தமிழ்மொழி – பண்பாட்டை அழிக்க இந்தி – சமஸ்கிருதம் திணிப்பு. ஆரிய – பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு பாரம்பரியம் கொண்ட தமிழகத்தை பணிய வைக்க மோடி அரசு தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் மொழியை அழிக்க சமஸ்கிருதவாரக் கொண்டாட்டத்திற்கு ஆணையிட்ட மோடி, இப்போது சமஸ்கிருதத்தைவிட தமிழ்மொழி பழமையானது என்று கபட நாடகமாடுகிறார். பல தேசிய இனங்களின், மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அழிப்பதும், பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநாட்டும் இந்தி – இந்து – இந்தியா எனும் ஒற்றை கலாச்சார நாட்டை கட்டியமைப்பதும்தான் ஆர். எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் உண்மையான நோக்கம். அதைத்தான் மோடி அரசின் வழியாக செய்து வருகிறது.

தமிழகத்தில் மத்திய அரசின் கேந்திர வித்யாலய பள்ளிகளில் இந்தி – சமஸ்கிருதம் கட்டாயம்; இந்தியை திணிக்கும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் மீண்டும் கொண்டுவர திட்டம்; அரசு அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டுவர முயற்சி, தமிழர்களின் தொன்மை வரலாற்றை நிரூபிக்கும் கீழடி அகழ்வாராய்ச்சிப் பணியை ஊத்தி மூடுவது. கீழமை நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு வழங்கத் தடை.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்காமல் தமிழை நீச பாசை என இழிவுபடுத்துகிறான் சங்கராச்சாரி. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் பெயரைக்கூட சகித்துக் கொள்ளாமல் மாற்றிவிட்டது ஆர்.எஸ்.எஸ் – பார்ப்பனக் கும்பல்,

காவிரியில் தமிழகத்திற்கு நியாயமாக வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை குறைத்து தீர்ப்பெழுதுகிறது உச்சநீதிமன்றம்.

கொள்ளையடித்த சொத்துக்களை பாதுகாக்க, ஆட்சியதிகாரத்தை தக்க வைத் துக்கொள்ள பல்லிளித்துக் கொண்டு தமிழகத்தின் உரிமையை பி.ஜே.பி யிடம் அடகு வைத்துவிட்டது இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் கிரிமினல் குற்றக் கும்பல்.

கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் அம்மாநில மொழியை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கி சட்டமியற்றப்பட்டிருக்கிறது. தமிழகத்திலோ, தாய்மொழித் தமிழை அழிக்க வரும் சமஸ்கிருதத்திற்கும் – இந்திக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது எடுபிடி எடப்பாடி அரசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நாடு முழுவதும் வேலையின்மை வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை போல் அச்சுறுத்துகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 1 கோடி பேர் வேலையின்றி தெருவில் நிற்கிறார்கள். ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்று வாய்ச் சவடால் அடித்த மோடியோ இன்று பக்கோடா விற்கச் சொல்கிறார். ஒருபக்கம் சொந்த மாநிலத்தில் பிழைப்புக்கு வழியில்லாத வடமாநில இளைஞர்கள் தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை குவிந்து வருகிறார்கள்.

மறுபக்கம், வி.ஏ.ஓ, டி.என்.பி.எஸ்.சி போன்ற தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளிலும் அகில இந்திய கோட்டா என்ற பெயரில் இந்தி பேசுபவர்கள் திட்டமிட்டே நுழைக்கப்படுகிறார்கள். இதைத்தான் அனைத்து மாநிலங்களிலும் செய்கிறார்கள். இப்படி, தேசிய இனங்களின் உரிமையை – மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து அனைத்தையும் மையப்படுத்துவது கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளைக்காகவே என்றாலும், இதன்மூலம் தனது பார்ப்பன மேலாதிக்கத்தையும் நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறது ஆரிய – பார்ப்பன கும்பல்.

இதை நாம் ஏன் சகித்துக் கொண்டு வாழ வேண்டும்?

இந்தியா என்பது தனி ஒரு தேசம் அல்ல, இந்து என்பது ஒரு மதமும் அல்ல. ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்களால் இந்த மக்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும் பலவந்தமாக உருவாக்கப்பட்டதுதான் இந்தியா என்ற நாடு. அவன் வைத்த பெயர்தான் இந்து மதம்.

அதற்கு முன்பு பல தேசிய இனங்கள், கலாச்சாரப் பிரிவுகள், பல்வேறு சமயப்பிரிவுகள், பல்வேறு பழங்குடி மக்கள் என பன்முகத்தன்மை கொண்ட தனித்தனி பிரிவுகளாகத்தான் இந்த பிராந்தியம் இருந்தது. ஏகாதிபத்தியங்கள் டாடா, அம்பானி, அதானி, பிர்லா போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் (சேட்டுகளின்) ஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டலுக்கும் இந்தி – இந்து – இந்தியா எனும் பூணூலால் கட்டப்பட்டிருப்பதுதான் இன்றைய இந்தியா.

இது தேசிய இனங்களின் சிறைக்கூடம்; ஒடுக்கப்பட்ட மக்களின் வதைக்கூடம். அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய வல்லரசுகள் – பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் வேட்டைக்காக இந்த நாட்டை மறுகாலனியாக்குபவர்கள்தான் ‘தேசபக்த ஆர். எஸ்.எஸ் – பிஜேபி கும்பல்.

இந்த சேட்டுகள் – ஆரிய பார்ப்பனர்களின் கொடுங்கோன்மை ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு எல்லா தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தேசிய சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த தேசிய இனத்தின் மொழியே ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, வழிபாட்டு மொழியாக, நீதிமன்ற அலுவல் மொழியாக நிலைநாட்டப்பட வேண்டும். விரும்புகின்ற தேசிய இனங்கள் சமத்துவ அடிப்படையில் சேர்ந்து உருவாக்கப்பட வேண்டும் நாடு – இதுதான் சரி!

இந்த அடிப்படையில், நம்மை அடிமைத்தளையில் பிணைத்திருக்கும் இந்தி – இந்து – இந்தியா எனும் பூணூல் அறுத்தெறியப்பட வேண்டும். பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை தமிழகம் பெற வேண்டும்; இது ஒன்றுதான் ஒரே தீர்வு; நிரந்தரத் தீர்வு; பிற தீர்வுகள் எல்லாம் சமரசமும், சந்தர்ப்பவாதமும் ஆகும்.

அன்று இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய போதே ஆரிய – பார்ப்பன நச்சுப் பாம்பை நசுக்கி எறிந்திருக்க வேண்டும். தவறினோம், அடிவாங்கி தப்பித்த ஆரிய நச்சுப்பாம்பு பழிவாங்கும் வெறியோடு மீண்டும் படமெடுத்து ஆடுகிறது. இது நீண்ட காலம் நடந்து வரும் வரலாற்று ரீதியான போர். இம்முறையும் தவறினால் தமிழ்நாடு ஆரிய – பார்ப்பன கும்பலின் அடிமை நாடாக மாறிவிடும். எச்சரிக்கிறோம்.

எழுந்து வா! மாணவர், இளைஞர் பட்டாளமே! தன்னுரிமை பெற்ற தமிழகத்தை உயிரைக்கொடுத்தும் அடைவோம்!

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

தொடர்புக்கு :
நெ.41, பிள்ளையார் கோவில் தெரு,
மதுரவாயல், சென்னை-95, தொலைபேசி : 94451 12675
மின்னஞ்சல்: rsyfchennai@gmail.com, முகநூல் பக்கம் : rsyf

 

திருச்சி : போலீசின் ரவுடித்தனத்திற்கு எதிராக போராட்டம் !

1

திருச்சி : லஞ்சம் – வழிபறி -ரவுடித்தனம் போலீசின் ராஜ்யத்திற்கெதிராக தட்டிக்கேட்ட பெண்கள் – இளைஞர்கள்!

டந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் காவல்துறை, வாகன சோதனை நடத்தி, ஸ்பாட்ஃபைன் போடுவது நடந்து வருகிறது. திருச்சியில் “ஜல்லிக்கட்டு எதிர்ப்பு புகழ்” கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், இது நடக்கிறது.

உத்தரவிட்ட மூன்றே நாளில் 36,000 வழக்குகள். 36 லட்சம் வசூல் சாதனை. வருடப்பிறப்பு, பொங்கல் நாளிலும் வசூல்வேட்டை. புத்தாண்டு தினத்தன்று, விடிய, விடிய இரு சக்கர வாகன ஓட்டிகளை மறித்து, வாழ்த்து சொல்லி, இனிப்பு வழங்கிய காவல்துறை, விடிந்ததும் வழக்கம் போல ஹெல்மெட் வழக்குகளை போட்டு வசூல் வேட்டையைத் தொடர்ந்துள்ளது.

கொடுத்த இனிப்புகளுக்கும் சேர்த்தே வசூல் செய்திருப்பார்கள் போல. “காவலர்களுக்கு சம்பளமே இந்த வசூல் மூலம்தான்” என்கிறார் ஒரு காவல் ஆய்வாளர். “8 மணி நேரத்தில் 4 மணி நேரம் இந்த வேலை தான்” என ஒரு SI-யே புலம்பும் அளவுக்கு வசூல் வேட்டை தொடர்கிறது.

ஏற்கனவே பஸ் கட்டண உயர்வு, கேஸ், பெட்ரோல் விலை உயர்வு என பல்வேறு சோதனைகளில் சிக்கி வாழ வழியற்று விழி பிதுங்கும் மக்களை ‘வாகன சோதனை’ என்ற பேரில் வழிப்பறி செய்கிறது போலீசு. திருச்சி மாநகர் எல்லைக்குள் 14 காவல் நிலையங்கள். ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும் 4, 5 இடங்களில் வசூல். ஒரு இடத்தில் 100 கேஸ் கட்டாயம். எனவே ஒரு நாள் வசூல் திருச்சி மாநகரில் மட்டும் 7 லட்சம். மாத வசூல் 2 கோடியே 10 லட்சம். புறநகர் காவல் நிலையங்கள் தனி. தமிழ்நாடு முழுவதும் கணக்கு போட்டுப் பாருங்கள். இந்த வசூல் வேட்டை வழிப்பறிக் கொள்ளைதான் என்பது தெளிவாகப் புரியும்.

இளைஞர்களை தாக்கிய எஸ்.ஐ. கோபால்

திருச்சி உய்யகொண்டான் திருமலை பகுதியில் ஒரு செக்போஸ்ட் உள்ளது. சுற்று வட்டார விவசாயிகள் காந்தி மார்க்கெட்டுக்கும், இளைஞர்கள் கூலி வேலைகளுக்கும் இந்த செக்போஸ்ட்-ஐ கடந்து செல்லும் போதெல்லாம், அவர்களிடம் வசூல்வேட்டை நடத்தியுள்ளது போலீசு.

கடந்த 11.02.2018 இரவு செக்போஸ்ட்டில் பணியில் இருந்த எஸ்.ஐ. கோபால் உய்யகொண்டான் பகுதியைச் சேர்ந்த 2 பட்டதாரி மாணவர்கள், அனைத்து ஆவணங்களைக் காட்டியும், 500 ரூபாய் வாங்கிக் கொண்டு, 100 ரூபாய்க்கு ரசீது கொடுத்துள்ளார். இதைக் கேட்டதற்காக, கன்னத்தில் அறைந்தும், 10 காவலர்களுடன் சேர்ந்து லத்தியால் அடித்தும், உதைத்தும், நடு ரோட்டில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். அடி தாங்காத 2 இளைஞர்களும் அருகாமை தெருவிற்கு ஓடியுள்ளனர். விரட்டி சென்று அடித்து, இழுத்து வந்து செக்போஸ்ட்டில் வைத்து மீண்டும் அடித்து, உதைத்துள்ளனர்.

இதனைக் கேள்விப்பட்டு வந்த அந்த இளைஞர்களின் பெற்றோர்கள், சுற்று வட்டார பகுதி மக்கள் காவலர்களின் தாக்குதலை கண்டித்தனர். மீண்டும் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக பொதுமக்கள் இளைஞர்கள் சாலை மறியல் செய்தனர். ஏற்கனவே பலமுறை இந்த செக்போஸ்ட்போலீசால் பாதிக்கப்பட்ட ஆத்திரத்தில் இருந்த சோழிங்கநல்லூர், செங்கற் சோலை மற்றும் மேலத்தெரு, கோப்பு, சோமரசம் பேட்டையை சேர்ந்த விவசாயிகள், இளைஞர்கள் இச்செய்தியறிந்து வாகனங்களில் 300 -க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். “தங்களின் உழைத்த பணத்தை இந்த காவல்துறைக்கு லஞ்சமாக ஏன் கொடுக்க வேண்டும், என கேள்வி எழுப்பினர். காவல்துறையினருக்கெதிராக இரவு8.30 மணி துவங்கி நள்ளிரவு 12 மணிவரை மாபெரும் மறியல் போராட்டமாக நீடித்தது.

  • லஞ்சம் – வழிபறி- தாக்குதல் என குற்றச்செயல்களில் ஈடுபட்ட எஸ்.ஐ.கோபாலை பணி நீக்கம் செய்!
  • இரண்டு மாணவர்களையும் விடுதலை செய்!
  • அவர்களின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்!
  • பாலுவாங்ககூட போகமுடியல இந்த செக்போஸ்ட் டை அப்புறப்படுத்து! ….என கோரினர்.


தன் அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்படுவதையறிந்த ஏசி பெரியய்யா பெட்டிசன் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் என நைசியமாக பேசி முன்னின்ற சில இளைஞர்களிடம் கையெழுத்து கடிதம் பெற்ற மறுகணமே கலைந்துசெல்லு! ஓடு என திமிருடன் மறியலில் ஈடுபட்ட பெண்கள், இளைஞர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

தடியடியால் 10 -ஆம் வகுப்பு மாணவியின் கால் ரணமாகி பள்ளி செல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பல பெண்கள், இளைஞர்கள் பாதிக்கப்பட்டனர். ஆத்திம் தீராத காவல்துறை அருகாமை கிராம இளைஞர்களை தேடிப்பிடித்து இரண்டு வேன்களில் கடத்திச் சென்று வழி நெடுக “எங்களை எதிர்க்க இவ்வளவு துணிச்சல் எப்படிடா வந்தது?” என கேட்டு கேட்டு வண்டியில் அடித்துள்ளனர்.

கடும் தாக்குதலுக்கு உள்ளான நிரோசன்

இறுதியாக உறையூர் காவல் நிலையத்தில் அவர்களை சட்டவிரோதமாக இரவு முழுவதும் அடைத்துவைத்ததுடன் கேமராக்களை அனைத்து விட்டு சீருடையில் இல்லாத காவலர்களும் இணைந்து, இரண்டு இரண்டு பேராக இழுத்துச்சென்று கொடுரமாகதாக்கியதில் 10 -க்கு மேற்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தேவேந்திரன் வயது(34) என்பவரது கால் மூட்டு நொறுக்கப்பட்டுள்ளது. பூட்ஸ் காலால் எட்டி உதைத்து மிதிக்கப்பட்டதில் கல்லூரி. மாணவர் நீரேஷ் கண், காது, பாதிக்கப்பட்ட வேதனையுடனேயே கல்லூரி தேர்வை எழுதியுள்ளார். பொது மக்கள், பெண்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலை, தனது செல்போனில் படம் பிடித்த இளைஞரை மிக கடுமையாக இடுப்பு மீது ஏறி மிதித்துள்ளனர்.

மறுநாள் காலை இரக்கமற்ற காக்கி மிருகங்கள் பாதிக்கப்பட்டவர்களிடமே “மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன்” எந்த பிரச்சனைக்கும் என எழுதி வாங்கி கொண்டு விரட்டியடித்துள்ளனர். (சிகிச்சைக்கு சென்றால் தாங்கள் சிக்கி விட நேரிடும் என்பதால்.) இச்செய்தியறிந்து மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

எஸ்.ஐ. கோபால் ஏற்கனவே இது போன்று பொதுமக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்திருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு இளைஞனை ஹெல்மெட் கொண்டு தாக்கியிருக்கிறார். தன்னை ஐயா எனக் கூப்பிடாமல் சார் என்று கூப்பிட்ட குற்றத்திற்காக சமீபத்தில் திருச்சியில் ஒரு இசுலாமியரைக் கடுமையாக தாக்கியிருக்கிறார். கோபாலின் இந்தக் குற்றங்கள் அனைத்திலும் அவரது மேலதிகாரிகள், மனித உரிமை ஆணையம், அரசு அதிகாரிகள் என அனைவரும் கோபாலுக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

கால் உடைந்த நிலையில் “இது போலீசு கேசு சேர்க்கமுடியாது என மருத்துவ சிகிச்சையின்றி விரட்டப்பட்டு, வேதனைப்பட்ட இளைஞர் தேவேந்திரனுக்கு வழக்கறிஞர்கள் முன்னிலையில் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உடைந்த காலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஏற்கனவே போலீசு மீது கொதிப்புடன் இருந்த நூற்றுக்கும் அதிகமான பெண்கள், இளைஞர்கள் மக்கள் அதிகாரம் அமைப்புடன் இணைந்து ஊர்வலமாக சென்று ஆட்சியர் அலுவலக வாசலிலேயே முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் மக்கள் அதிகாரம் தோழர்கள்

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பெண்களில் சிலர் “போலீசுக்கு மக்களின் உயிர் மேல் என்னடா இவ்வளவு அக்கறை? ஆக்சிடண்ட்ல செத்தத விட நீ அடிச்சுக் கொன்ன ஆளுங்க தான் அதிகம். வரண்டபயலுக மாதிரி சந்துக்கு சந்து மறஞ்சு நின்னு ஏன் பிடிக்கிற? டீ வாங்கக் கூட போக முடியல. அன்றாடம் இவனுங்களுக்கு அழுக வேண்டியதாயிருக்கு, போலீசு மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதயும் இப்ப இல்ல, இனி எங்க ஏரியாக்குள்ள போலிசே வரக்கூடாது” என்று பேசினர்.

போலீசால் கால் உடைக்கப்பட்ட தேவேந்திரன்

கால் முறிக்கப்பட்ட இளைஞரின் தாய் “என் மவன் என்ன தப்பு செஞ்சான். கள்ளக்கடத்தல் பண்ணானா?, இல்ல உன் பொண்டாட்டி புள்ளங்கள கையப்புடிச்சி இழுத்தானா? எதுக்கு இப்புடி மிருகத்தனமா அடிச்சிருக்க?” என்று பேசினார்.

இறுதியாக ‘SI கோபால் உள்ளிட்ட போலீசாரை பணிநீக்கம் செய்ய வேண்டும்! உய்யகொண்டான் திருமலை செக்போஸ்ட்டை அகற்ற வேண்டும்: நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட இளைஞர்கள், பொதுமக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், இழப்பீடும் வழங்க வேண்டும்!

திருச்சி முழுவதும் ‘வாகன சோதனை’ என்ற பேரில் போலீசு நடத்தும் வழிப்பறிக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்! என கோரிய மனுவை, திருச்சி மாவட்ட ஆட்சியரின் (பொ) உதவியாளர் வெளியே வந்து மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இதனைதொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதியிடமும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.’

அரசும், ஆளும்வர்க்கமும் மக்களை வதைக்க-அதிகாரம் செலுத்த கட்டியமைத்த போலீசின் ராஜ்யத்திற்கெதிராக கெஞ்சுவது, புலம்புவதால் பயனில்லை, மக்கள் அதிகார கமிட்டிகளைகட்டுவதே மக்களுக்கு பாதுகாப்பு! என்பதை உணர்த்தியுள்ளது இந்த மக்கள் போராட்டம்!

( படங்களைப்  பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

 

மோஷி மோஷி மேட்டுக்குடி உணவகத்தின் இலாபவெறிக்கு 3 தொழிலாளிகள் பலி !

0

முதலாளித்துவ  பயங்கரவாதத்திற்கு மூன்று தொழிலாளர்கள் பலி !

மோஷி மோஷி  ரெஸ்டாரான்ட்

திருபெரும்புதுரில் இருந்து ஒரகடம் செல்லும்  தேசிய  நெடுஞ்சாலையில்  போந்துர் கிராமம் அருகே  உள்ளது ” மோஷி மோஷி “ என்ற ரெஸ்டாரான்ட். இந்த பகுதியில் பல பன்னாட்டு நிறுவனங்களில்  பணி புரியும் உயர் அதிகாரிகள்,  HR – கள் மற்றும் கொரிய சீன  ஜப்பான்  நாட்டை  சேர்ந்தவர்கள்  வேலை நிமித்தமாக வந்தால், தங்குவதற்கும்  தின்பதற்குமான  இடமாக  இந்த ஒட்டல் செயல்படுகின்றது.

ஒட்டல் அமைந்துள்ள இடத்தை  யாராவது பார்த்தால் இங்கு என்ன வியாபாரம் ஆகும் எனத் தோன்றும். ஏனெனில் ஆள் ஆரவமற்ற தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பொட்டல் காடான விளைநிலங்கள்,  கண்ணுக்கு எட்டிய துரத்தில் சில அடக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.  உழைப்பை சுரண்டும் கும்பல் கூடி கும்மாளம் அடிப்பதும் இது போன்ற  ஒட்டலில்தான்.  இப்படிப்பட்ட ஒட்டல் முதலாளியின்  இலாப வெறி  மூன்று தொழிலாளர்களின் உயிரை பறித்திருக்கின்றது.

மேற்படி  ஒட்டலில்  கழிவு நீர் தொட்டியை  கடந்த புதன் (14.02.180)  அன்று  சுத்தப்படுத்துவதற்கான  வேலையை துவங்கியுள்ளனர். 28 வயதான மாரி மற்றும் 36 வயதான முருகேசன்  இருவரும் தொட்டிற்குள்ளே இருக்கும் படிகள் வழியாக உள்ளே  இறங்கும்போது இருவரும்  அடுத்தடுத்து  மயக்கம் அடைந்து  தொட்டிற்குள்ளேயே விழுகின்றனர். இதனை பார்க்கும்  ரவி  (எலக்ட்ரிசியனாக பணி புரிபவர்) என்பவர்  தொழிலாளர்களை  காப்பாற்ற போய் அவரும்  பலியாகின்றார்.  இதன் பிறகே  தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மூன்று பேரையும் மீட்டு திருபெரும்புதுர் அரசு மருத்துவமனையில் சேர்க்கும் போது அவர்கள்  இறந்து விட்டனர்.

இதன் பிறகு  RDO, DSP, சிலம்பரசன்,  திருபெரும்புதுர் தொகுதி  MLA  ஆகியோர்  பேச்சு வார்த்தை என்ற பெயரில் நடத்திய  கட்ட பஞ்சாயத்தில்  இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா பத்து லட்சம் பேரம் பேசப்பட்டு பெயரளவிற்கு வழக்கு பதியப்பட்டு வேலையை முடித்துக் கொண்டுள்ளனர்.

இது போன்ற  கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்துவது என்றால், அதற்குறிய சாதனங்களை கொண்டும், சுத்தப்படுத்துவதற்கு முன்பாக குறிப்பிட்ட தொட்டிற்குள் இருக்கும் விஷ வாயுவின்  வீரியத்தை குறைக்கும் கெமிக்கல் மருந்துகளை தொட்டிற்குள்ளே போட்டு பிறகு பாதுகாப்பு கவசங்களை அணிந்த பிறகே  கழிவு நீர் தொட்டிற்குள் இறங்க வேண்டும். இதில் எந்த பாதுகாப்பு விதிமுறையையும் பின்பற்றப்படவில்லை. எனவே இது படுகொலைதான்.

தலைகவசம் உயிர் காக்கும் என்ற பெயரில் வண்டியின் பின்னால் அமர்ந்து போகின்றவரும் ஹெல்மட் அணிய வேண்டும் என பாதுகாப்பை உத்தரவாதப் படுத்துவதாக  சொல்லிக் கொண்டு, அதை கண்டு கொள்ளாமலும் அல்லது கலக்சனுக்காக போலீசு நடந்து கொள்வதைப் போலத்தான்  அரசின் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமும், முதலாளியின் இலாப வெறியும் தொழிலாளர்களின் உயிரை பறித்திருக்கின்றது.

இறந்து போன முருகேசன் என்ற தொழிலாளியின் மூன்று  வயது  பெண்  குழந்தை அப்பா இறந்து போனது தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தது, மாலை நேரம் ஆக ஆக குழந்தை அப்பாவை கேட்டபோது முருகேசனின் மனைவி  கதறி அழுதது, இறந்த மற்ற தொழிலாளர்களின்  உடன் பிறந்தோரும்  உறவினர்களும் கதறி கண்ணீர் மல்க  அழுது கொண்டிருந்தது  நெஞ்சை உலுக்குவதாக  இருந்தது.

இறந்த தொழிலாளர்களின் உறவினர்களிடத்தில்  பேசுகையில்  எங்கும் நிலையான வேலை இல்லை கிடைக்கிற வேலைக்கு போன போதுதான் இந்த நிலைமை என்றார். காண்டிராக்ட் வேலை என்ற பெயரில் கொத்தடிமையான வாழ்க்கை முறை பணியிடத்தில் பாதுகாப்பு இல்லாதது என்பது எங்கும் நிறைந்திருக்கின்றது. இந்த நிச்சயமற்ற வாழ்க்கையில் மரணமும் நிழலாக பின் தொடர்கின்றது. தொழிலாளி வர்க்கம் எதிர் கொண்டிருக்கின்ற வாழ்நிலைமை இதுதான். இதைத்தான் வளர்ச்சி என்கிறார் மோடி ! அ.தி.மு.க கும்பலோ அமைதி, வளம், வளர்ச்சி என்கிறது.

சொல்லிக் கொள்ளப்படும் வளர்ச்சிக்கு பின்னால் முதலாளிகளின் இலாப வெறிதான் அரசின் கொள்கையாக இருக்கின்றது. இதுவே நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உரிமை – உயிர் பறிப்பிற்கும் அடிப்படையாக இருக்கின்றது என்பதை தொழிலாளி வர்க்கம் உணர்ந்து கொள்ளும் காலத்தில் கலகம் வெடிக்கும். தற்போது இருக்கின்ற அரசு கட்டமைப்பு தகர்க்கப்படும், மக்களை – தொழிலாளர்களை கொல்லும் சுரண்டலும் ஒழிக்கப்படும். சமூக மாற்றத்திற்கு தொழிலாளி வர்க்கம் தயாராக வேண்டும் என்பதுதான் இது போன்ற படுகொலைகள் நமக்கு உணர்த்தும் செய்தியாகும் !

தகவல்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம்,
தொடர்புக்கு: 8807532859

 

உயர்கல்வித் துறை சீரழிவிற்கு யார் காரணம் ? மதுரையில் ஆர்ப்பாட்டம்

0

உயர்கல்வித் துறையின் லட்சணம் இவ்வாறு இருப்பதற்கு யார் காரணம்?

”கொள்ளை வேந்தர் கணபதியின் சொத்துக்களை பறிமுதல் செய்!
கூட்டுக் களவானிகளான அதிகாரிகள்-அமைச்சர்களையும் சிறையிலடை!
கிரிமினல் மாஃபியாக்களிடமிருந்து கல்வித்துறையை மீட்டு
பெற்றோர்கள்- பேராசிரியர்கள்- மாணவர்களே நடத்துவோம்! “

என்கிற முழக்கத்தை முன்வைத்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் 13.02.2018 அன்று மதுரை தெற்குவாசலில் உள்ள பள்ளிவாசல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை பு.மா.இ.மு-வைச் சேர்ந்த தோழர் இரவி தலைமை ஏற்று நடத்தினார்.

அவர் தனது தலைமையுரையில், பேராசிரியர் நியமனத்தில் ரூ.30 லட்சத்திலிருந்து 60 இலட்சம் வரை இலஞ்சம் பெற்றதன் அடிப்படையில் பாரதியார் பல்கலையின் துணைவேந்தர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆளும் கட்சிக்கும் கணபதிக்கும் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகத்தான் இந்த ஊழல் முறைகேடு வெளியே வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் இதுதான் நிலைமை. கடந்தாண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடு வெளிவந்தது. கிட்டத்தட்ட ஐயாயிரத்திற்கும் மேலான பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களை முறைகேடாக நியமித்து ரூபாய் பத்தாயிரம் கோடிக்கும் மேல் சுருட்டியவர் இராமசாமி செட்டியார்.

நியாயப்படி அரசு, செட்டியாரையும் இலஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்த பேராசிரியர்களையும் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. மாறாக மற்ற கல்லூரிகளில் நடக்கவிருந்த பேராசிரியர் நியமனங்களை நிறுத்தி வைத்து இந்த ஊழல் ஆசிரியர்களை பணியில் சேர்த்தனர். இப்படி கேடுகெட்ட ஆசிரியர்களைப் பணியில் சேர்த்தால் இவர்களிடம் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.

இதற்கு எதிராக நேர்மையான பேராசிரியர்கள், பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் ஆற்றிய கண்டன உரையில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்திவிட்டு உழைக்கக் கூடிய மக்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது அரசு.  அதற்கெதிரான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு பிரச்சினை தலை தூக்கியிருக்கிறது.

தற்போது புதியதாக மதுரை மீனாட்சிக்கு ஆபத்து எனப் புதிய பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறார்கள் இந்துத்துவவாதிகள். மீனாட்சி மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கே இந்த இந்துத்துவ பாசிஸ்டுகளாலதான் ஆபத்து.

மற்ற நகரங்கள விட மதுரையில்தான் பேருந்து கட்டணம் அதிகம். ஏழு கிலோ மீட்டர் போவதற்கு இருபது ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கு.

இந்த சூழ்நிலையில்தான் துணைவேந்தர் பிரச்சினை. மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. பல்வேறு சுமைகளுக்கு இடையிலதான் மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த சூழலில் கல்வித்தரம் எப்படி இருக்க வேண்டும்? ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்? கணபதி போன்ற ஆட்களை நாம் விட்டு வைக்கலாமா? மாணவர்களிடம் சுயநலமும் காரியவாதமும் மேலோங்கி இருப்பதற்கு காரணமே இவர்கள்தான்.

ஒரு அம்மாவிடம் செயினைப் பறித்து தரதரவென்று இழுத்துச்செல்லும் இளைஞனின் மனநிலை எப்படி குரூரமாக மாறியிருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தாலே நமக்கு உள்ளம் கூசுகிறது. இது போன்ற சம்பவங்கள் இனி தொடர்ச்சியாக நடக்கும் அபாயம் உள்ளது. செயினைப் பறித்த இளைஞனைப் பிடித்தால் பொதுமக்கள் என்ன செய்வார்களோ அதே போலத்தான் இந்த இலஞ்ச ஊழல் பேர்வழிகளை நடுத்தெருவில் கட்டிவைத்து தோலுறிக்க வேண்டும் என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர். இரா.முரளி அவர்கள் தனது கண்டன உரையில், கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தை கொஞ்சம் கொஞ்சமாக பீடித்துக் கொண்டிருந்த ஒரு நோய் தற்போது முற்றிலுமாக பரவியிருக்கிறது. படிக்க நினைக்கும் அனைவரும் பணம் கொடுக்காமல் படிக்க முடியாது என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

படித்து ஆசிரியராக வேண்டுமென்றால் அதன் விலைப்பட்டியல் ஏற்கனவே போடப்பட்டிருக்கும். நான் மதுரை கல்லூரியில் ஐந்தாண்டுகள் முதல்வராக இருந்தவன். எங்கே போனாலும் வெட்கப்படாமல் இதைக் கூறுவேன். ஒரு சீட்டு வேணும்னா என் ரூமில் வந்து நிக்கனும். அங்கு அதிகாரத்தின் உச்சக் கட்டத்தில் உட்கார்ந்திருப்போம். அப்போது சொல்லுவார்கள் பத்தாயிரம் இருபதாயிரம் கொடுக்கிறேன் பி.காம் சீட் கொடு என்று.

இன்று ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டமிட்ட ஊழல் என்றால் அது உயர்கல்வித் துறையில் தமிழகத்தில் நடந்த ஊழல்தான். காசு கொடுக்கலைனா வேலை எப்படிக் கிடைக்கும் என்று மக்களையே பேச வச்சுட்டாங்க. சொத்தை வித்து நாற்பது ஐம்பது இலட்சம் கொடுத்துவிட்டுத்தான் பேராசிரியர்களாக இருக்கிறார்கள். இதை யாரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

நான் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் அப்போதிருந்த கல்வி அமைச்சர் எல்லாக் கல்லூரி முதல்வர்களையும் கூப்பிட்டு ‘ஒரு பேராசிரியருக்கு ஏழு இலட்ச ரூபாய் கொடுத்திருங்க மீதி எவ்வளவுனாலும் நீங்க வித்துருங்க” என்று கூறினார். நான் கோபமாகி ”உங்களுக்கு வெட்கமில்லையா?”னு கேட்டேன் ”இதுக்குப் போயி எதுக்கய்யா வெட்கப்படனும்?. இது கட்சி வளர்ச்சி நிதி. நானா எடுத்திட்டுப் போகப் போறேன். எனக்கு அரை சதவீதம் தான் கிடைக்கும்” என்று கூறினார்.

கடந்த இரண்டாண்டுகளாக நிம்மதி இல்லாத வாழ்நிலை. கமலும் ரஜினியும் சிஸ்டம் சரியில்லைனு சொல்லுறாங்க. உண்மையிலே சிஸ்டம்னா என்ன? அது எப்படி சரியில்லாமப் போச்சுனு தெரியுமான்னு தெரியல. அமெரிக்கன் கல்லூரி, மதுரைக் கல்லூரி, மன்னர் கல்லூரி, சரசுவதி நாராயணன் கல்லூரி என அனைத்துக் கல்லூரியிலும் பேராசிரியர் பதவிக்கு இலஞ்சம் வாங்கப்படுகிறது. இதை அவர்களால் மறுக்க முடியுமா? இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் என்ன செய்ய முடியும்? இவர்களை மக்கள் விரட்டி விரட்டி அடிக்கிற வரைக்கும் போராட்டம் பண்ண வேண்டியிருக்கு.

இன்று ஆளுநர் புரோகித் தமிழகத்தையே சுத்தி வந்து “ஸ்வச் பாரத்”- திற்கு வேலை செய்கிறார். ஆனால் அவர் அதிகாரத்தின் கீழ் இருக்கும் துணைவேந்தர் ஊழலை கவனிக்க மறுக்கிறார். அவர்தான் பல்கலை வேந்தர். தூத்துக்குடியில் குழந்தைகள் உட்பட விவசாயிகள், பொதுமக்கள் என ஆயிரம் பேருக்கு மேல் கைது செய்கிறார்கள். எத்தனை பேரைத்தான் இவர்களால் கைது செய்ய முடியும்?

எத்தனை கோடி ரூபாய் உயர்கல்வித் துறையில் அதிமுக அரசு ஊழல் செய்து குவித்துள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதே நேரத்தில் சில பத்துபேர் நடத்தும் இந்தப் போராட்டத்தை பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் போராட்டமாக மாற்ற வேண்டும் என்று கூறி தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

அடுத்து பேசிய மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆசிரியர் பேரவையின் முன்னாள் தலைவர் பேராசிரியர். அ. சீனிவாசன் அவர்கள் தனது கண்டன உரையில், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முப்பதாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவன். அந்தப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக இருந்த கல்யாணி மதிவாணனின் ஊழலை எதிர்த்துக் கேட்டதற்காக ஒரு பேராசிரியரை அடித்து அவரது கையை முறித்தார்கள். ஊழலை எதிர்த்தால் கை முறிக்கப்படும் என்கிறார்கள் ஊழல்வாதிகள்.

இதுவரை துணைவேந்தர் பதவிகள் சாதிரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் வலுவான பணக்காரர்கள்தான் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். தற்போது கணபதி மாட்டிக் கொண்டார். அவரை நியமித்தவர்கள் யார்? அவரை இந்தப் பதவிக்கு பரிந்துரை செய்தொர்கள் யார்?. தற்போது நிர்வாகக் குழுவில் இருக்கும் மூன்று பேரில் ஒருவர் தானே அவரைப் பரிந்துரைத்திருப்பார். பணம் கொடுத்துத்தான் பதவியில் சேர்ந்தேன் அதனால்தான் பணம் வாங்கினேன் என்கிறார் கணபதி. அப்படியானால் நேர்மையானவர்கள் இப்பதவிக்கு வர முடியாது என்பதே உண்மை.

இதனால் பாதிப்பு யாருக்கு என்பதைப் பார்ப்பதுதான் முக்கியம். ஒன்றுமே தெரியாத ஒரு மாணவன் கல்வி கற்க வந்தால் அவனுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால் இலஞ்சம் கொடுத்து பதவியில் சேர்ந்த ஆசிரியரின் தரம் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியும். மாணவர்களுக்கு பாடம் நடத்த இவர்களுக்கு அருகதை இருக்கிறதா?

நம்முடைய வரிப் பணத்தில் தான் பல்கலைக் கழகங்கள் நடைபெறுகின்றன. ஆனால் நமது சந்ததியினருக்கு தரமான கல்வி தரும் தகுதி இவர்களுக்கு இல்லை. மக்களாகிய நாம் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு பேசாமல் இருந்தால் நம்முடைய எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை பாழாகிவிடும் என்பதில் எள் முனை அளவுகூட சந்தேகம் இல்லை என்று பேசினார்

அடுத்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்டச் செயலர் தோழர் லயனல் அந்தோணி ராஜ் பேசினார். கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மட்டும் தான் ஏதோ லஞ்சம், ஊழல் செய்து பிடிபட்டுவிட்டார் என்று இல்லை. தமிழ் நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களும் கணபதியைப் போன்றவர்கள் தான்.

கோடிகோடியாக லஞ்சம் கொடுத்துப் பதவிக்கு வந்தார்கள். இப்போது கொடுத்ததை வசூல் செய்கிறார்கள். அவர்களுக்கு உயர்கல்வியைப் பற்றியோ தரத்தைப் பற்றியோ நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியோ எந்தக் கவலையும் கிடையாது. போட்ட பணத்தை பல மடங்கு லாபத்துடன் எப்படி சம்பாதிப்பது என்பதுதான் அவர்களது ஒரே நோக்கம்.

இந்த நிலை எதனால் வந்தது? பல்கலைக் கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பல்கலை வேந்தராகிய ஆளுநரிடமும் உயர்கல்வித்துறை அமைச்சகத்திடமும் இருக்கிறது. இவர்கள்தான் லஞ்சம் வாங்கிக்கொண்டு தகுதி இல்லாத நபர்களை நியமிக்கின்றனர். தகுதி இல்லாதவர்கள் மட்டும் இல்லை. அவர்கள் கிரிமினல் பேர்வழிகளாகவும் இருக்கிறார்கள்.

ஏற்கனவே அமைச்சர்களும் அதிகாரிகளும் அப்படிப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். எனவே இனம் இனத்தோடு சேர்கிறது. மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பி.பி. செல்லத்துரை துணைவேந்தர் பொறுப்புக்கு உரிய தகுதி இல்லாதவர். எப்படி நியமிக்கப்பட்டார்? எப்படி பதவியில் நீடிக்கிறார்? அவரது நியமனத்தை எதிர்த்து நான் உயர்நீதி மன்றத்திலே வழக்குப் போட்டுள்ளேன். ஆனால் அவர் பதவியில் இருப்பது மட்டுமல்லாமல் பல லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவரைப் போன்ற கிரிமினல்களை உயர் பதவிகளில் நியமிக்கிறார்.வழக்கு நீதிமன்றத்திலே தூங்கிக்கொண்டிருக்கிறது.

இன்றைக்கு இதேபோல முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ள தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பாஸ்கரனை எதிர்த்துப் போராட்டம் நடக்கிறது. கணபதி மீது மட்டும் நடவடிக்கை பாய்ந்தது எதனால்? ஆளுநர் புரோகித்துக்கு மற்ற பல்கலைக் கழகங்களின் நிலைமை தெரியாதா? வாங்கிய கொள்ளையில் உரிய பங்கு போய்ச் சேரவில்லை என்பது தான் பிரச்சினை என்று சொல்லப்படுகிறது.

மேலும் சசிகலாவிடம் லஞ்சம் கொடுத்து பதவியைப் பெற்றவர்களை மட்டும் குறிவைத்து நடவடிக்கை பாய்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆளுநர் புரோகித் சாட்டையைச் சுழற்றுகிறார் என்றெல்லாம் சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பங்கு போகாததுதான்.

அதற்கு மேல் அது ஒரு கண்துடைப்பு நாடகமே. தமிழ் நாட்டின் அனைத்துக் கனிம வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டு பங்கு போய்க்கொண்டிருந்த நிலையில் கிரானைட் பி.ஆர்.பி.மீது தனிப்பட்ட காரணங்களால் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்ததுபோலத்தான் இதுவும். பஸ் கட்டண உயர்வு போன்ற பல பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் முயற்சிதான் இது.

கணபதி மீது நடவடிக்கை எடுத்துள்ள ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை அவரிடம் லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கவர்னரும் ஏன் மவுனம் காக்கிறார்?

உயர்கல்வித்துறையின் இந்த சீரழிவிற்குக் காரணம் எது? கல்வி தனியார் மயம் ஆக்கப்பட்டு, வியாபாரம் ஆனதுதான். தனியார் வசம் கல்வியை ஒப்படைப்பதுதான் மத்திய மாநில அரசுகளின் நோக்கம். பல்லாயிரம் கோடி புரளும் இந்தத் துறையில் பல அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்துள்ளனர். காசு உள்ளவனுக்கு மட்டும் தான் கல்வி என்பது இன்று பா.ஜ.க. ஆட்சியில் எழுதப்பட்ட விதியாகிவிட்டது.

இந்த நிலையை யார் மாற்றுவார்கள்? மக்கள்தான் இந்த நிலையை மாற்ற வேண்டும். தகுதியற்ற இந்தக் கொள்ளையர்களை விரட்டிவிட்டு மக்கள் அனைத்துக் கல்வி நிலையங்களையும் கைப்பற்றி தாங்களே நடத்த வேண்டும்.

பு.மா.இ.மு. தோழர் சேகரன் நன்றி சொல்ல ஆர்ப்பாட்டம் முடிந்தது.

தகவல்:
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
மதுரை.

 

காவிரிக்காகப் போராடிய மக்கள் அதிகாரம் தோழர்களை விடுதலை செய் !

0

 

பத்திரிக்கைச் செய்தி

18-2-2018

காவிரி நீர் பங்கீட்டில் தற்போது வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்தின் உரிமையை மறுத்து வெந்த புண்ணில் வேலை பாய்ச்சி இருக்கிறது. கர்நாடக தேர்தல் அரசியல் ஆதாயம், டெல்டாவில் மீத்தேன், ஓ.என்.ஜி.சி எரிவாயு திட்டம், ஆகிய நோக்கங்களை நிறைவேற்றும் பா.ஜ.க அரசின் அரசியல் முடிவாகவே இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

இரு மாநிலங்களை சேர்ந்த துறை சார் வல்லுநர்கள் மூலம் களத்தில் ஆய்வு செய்து பல ஆண்டுகள் விசாரித்து வழங்கப்பட்ட, காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை இருமாநிலங்களுக்கிடையில் முறையாக அமுல்படுத்துவதில் பொறுப்போடு கவனம் செலுத்தாமல் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பின் மூலம் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.

கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீரை உரிய பருவத்தில் தருவதில்லை. தரவேண்டிய அளவையும் தராமல் பாக்கி வைத்துள்ளது. தமிழக விவசாயிகள் பயிர் கருகி தற்கொலைக்கு தள்ளப்படும் நிலையில் போராடும் போதெல்லாம், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக கலவரம் தூண்டப்படுகிறது. இதில் பா.ஜ.க சங்பரிவார் அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கர்நாடக அரசு எந்த உத்தரவையும் அமுல்படுத்தாமல் அடாவடி செய்வதை உச்சநீதிமன்றம் கண்டு கொண்டதே இல்லை.

அது போல் மத்திய அரசும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் ஆறு ஆண்டுகள் வெளியிடாமல் காலம் தாழ்த்தியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது. இவ்வாறு மத்திய அரசு கர்நாடகாவிற்கு சாதகமாக தேர்தல் அரசியல் ஆதாயம் கருதி செயல்பட்டு வருகிறது.
காவிரி டெல்டாவை எதிர்காலத்தில் பாலைவனமாக மாற்றி, மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டமும் இந்த தீர்ப்பின் பின் உள்ள டெல்லியின் சூழ்ச்சியாகும்.

தமிழகத்தில் நிலத்தடி நீர் இருக்கிறது என ஒருதலைப்பட்சமாக காரணம் காட்டி 192 டி.எம்.சி. அளவிலிருந்து 177.25 டி.எம்.சியாக குறைத்து அதை கர்நாடகாவிற்கு உயர்த்தி வழங்கியது, தமிழகத்தை திட்டமிட்டு டெல்லி வஞ்சிக்கும் செயலாகும்.

காவிரி உரிமைக்காக தமிழகம் தழுவிய அளவில் 17-2-18 அன்று மக்கள் அதிகாரத் தோழர்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மதுரையில் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் போராடியவர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதுடன் பொய் வழக்கு பதிவு செய்து மத்திய சிறையலடைத்துள்ளார். இதன்மூலம் மோடிக்கு தனது விசுவாசத்தை எடப்பாடி அரசு காட்டியுள்ளது.

அதுபோல் திருவாரூர் கடமங்குடியில் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் மக்கள் அதிகார தோழர்கள் ஏழு பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

தமிழகத்தில் எடப்பாடி அரசு பா.ஜ.க.வின் கிளை அமைப்பாக செயல்பட்டு தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுத்து வருகிறது. பிரசுரம் கொடுத்தால் போஸ்டர் ஒட்டினால்கூட போலீசு வழக்கு போடுகிறது. மக்கள் பிரச்சினைகளுக்காக பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கிறது. மத்திய மாநில அரசுகள் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை பரவலாக தமிழகத்தில் அமுல்படுத்தி வருகின்றன. இத்தகைய ஜனநாயக விரோத போக்கை கண்டித்து அனைவரும் போராட வேண்டும்.

  • தமிழகத்தின் உரிமையை பறிக்கும் டெல்லிக்கு ஆதரவாக செயல்படும் முதல்வர் எடப்பாடி உடனே பதவி விலக வேண்டும்.
  • டெல்லிக்கு எதிரான போராட்டத்தில் தமிழக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்.
  • திருவாரூரில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடி சிறையில் உள்ள மக்கள் அதிகார தோழர்கள் ஏழுபேரை விடுதலை செய்யவும்
  • காவிரி நீர் உரிமைக்காக போராடி மதுரை சிறையில் உள்ள மக்கள் அதிகார தோழர்கள் இருபது பேரை விடுதலை செய்யவும் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்..

இப்படிக்கு
காளியப்பன்
மாநில பொருளாளர்
மக்கள் அதிகாரம்

 

காவிரி : மீண்டும் வஞ்சிக்கப்பட்டது தமிழகம் ! ஆர்ப்பாட்டங்கள்

1

பத்திரிகை  செய்தி

16.02.2018

காவிரி நீர்மீண்டும் வஞ்சிக்கப்பட்டது தமிழகம்

காவிரி நீர்ப்பங்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தீர்ப்பு வழக்கம்போல தமிழகத்தை வஞ்சிப்பதாகவே வந்துள்ளது. 27 ஆண்டுகால நெடிய,சலிப்பும் களைப்பும் ஊட்டக்கூடிய இழுத்தடிப்புக்குப்பிறகும் தமிழகத்தின் நலனையும், நியாயத்தையும் புறக்கணித்துவிட்டு மோடி அரசின் விருப்பத்தை தீர்ப்பாக அறிவித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

நீண்ட விசாரணை, ஏராளமான புள்ளிவிவரங்கள், வல்லுனர் கருத்துகள் யாவற்றையும் ஆய்ந்து 2007 -ல் வழங்கப்பட்ட 192 டிஎம்சி நீர்  பதினோறாண்டுகளுக்குப்பிறகு 177.25 டிஎம்சி என குறைக்கப்பட்டிருக்கிறது. மருமகளால் இல்லை என விரட்டப்பட்ட பிச்சைக்காரரை மாமியார் அழைத்து அவள் என்ன சொல்வது, நான் சொல்கிறேன் ‘இல்லை போ’ என விரட்டியது போல் உச்சநீதிமன்றம் தமிழகத்தை விரட்டியிருக்கிறது.

கர்நாடகத்தின் தேவையை, பெங்களூர் நகரின் குடிநீர்த்தேவையை அங்கீகரித்து அவர்களுக்கு பரிவு காட்டிய உச்சநீதிமன்றம் தமிழக மக்கள் அத்தகைய பரிவுக்கு தகுதியற்றவர்கள் எனக்கருதுகிறது போலும். தமிழ்நாட்டில் நிலவும் கடும் குடிநீர்ப்பற்றாக்குறை, தொடர்ந்து குறைந்துவரும் பருவமழை இவற்றை சற்றும் கவனத்தில் கொள்ளாது நிலத்தடி நீர் பொங்கி வழிவதைப்போல் எண்ணி தமிழகத்தில் நிலத்தடி நீர்வளம் இருப்பதால் 14.75 டிஎம்சி நீரைப் பறிப்பதாகத் தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனக்கூறியிருப்பதையும் காவிரி எந்த மாநிலத்திற்கும் தனி உரிமை அல்ல எனக்கூறியிருப்பதையும் கண்டு சிலர் ஆறுதல் அடையக்கூடும். காவிரி நீர் தொடர்பான எந்த உத்தரவையும் கர்நாடக அரசு கடுகளவும் மதித்ததில்லை. மத்திய அரசுகளோ தமிழகத்தின் நியாயத்தை சற்றும் கண்டுகொண்டததில்லை.

கடந்த ஐந்தாண்டுகளில் உச்சநீதிமன்றம் போட்ட எல்லா உத்தரவுகளையும் காலில் போட்டு மிதித்ததை உச்சநீதிமன்றத்தால் கைகட்டி வேடிக்கைதானே பார்க்க முடிந்தது. மோடி அரசும், ஆர்எஸ்எஸ் பார்ப்பன இந்துமதவெறிக்கும்பலும் அனைத்து அரசு நிறுவனங்களையும் தமிழக மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்கும், ஒடுக்கவதற்குமே பயன்படுத்தும் நேரத்தில் உச்சநீதிமன்றமும் அதேவேலையைச் செய்திருக்கிறது.

தமிழகத்தை குறிப்பாக காவிரி டெல்டாவை பாலைவனமாக்கி நிலக்கரி,பெட்ரோல், எரிவாயு இவற்றைக் கொள்ளையடிக்கத்துடிக்கும் மோடியின் எஜமானர்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் கைகோர்த்து  நிற்கிறது. பத்து நாட்களுக்கு முன்பு சுப்ரமணியசாமி காவிரி நீர் கிடைக்காது எனத் தீர்ப்பெழுதினார். இப்போது உச்சநீதிமன்றம் அதை வழிமொழிந்திருக்கிறது.

வஞ்சகத்தில் வீழ்வதா இல்லை எதிர்த்து நின்று வீழ்த்துவதா என்பதை தமிழக மக்கள் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.

தங்கள்
காளியப்பன்
மாநிலப்பொருளாளர்,
மக்கள் அதிகாரம்

*****

காவிரித் தீர்ப்பில் வஞ்சகம் ! மீண்டும் தமிழகத்தின் மீதான டெல்லி தாக்குதல் !

தமிழக அரசே, சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களே உடனே ராஜினாமா செய்யுங்கள் ! தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை !

நாள் : பிப்ரவரி 17,
நேரம் : காலை 11.30 மணி

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருதை – கடலூர் மண்டலம்.

*****

காவிரியில் தமிழகத்தின் உரிமை பறிப்பு!
காவிரி நீரில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி யாக குறைத்தும், கர்நாடகத்திற்கு 284.75 டி.எம்.சி யாக அதிகரித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
“உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அயோக்கியத்தனமானது ! தன்னுரிமையை நிலைநாட்ட தமிழகமே திரண்டெழு!” என்ற ழுழக்கங்களை முன்வைத்து இன்று 16.2.2018 மாலை 3.00 மணியளவில், மத்திய அரசு நிறுவனமான நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு  பு.மா.இ.மு தலைமையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களையும், பு.மா.இ.மு தோழர்களையும் உடனே கைதுசெய்து மண்டபத்தில் அடைத்தது போலிசு.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு. 9445112675

*****

காவிரி : பொது அறிவு வினாடி வினா 10

ந்த வினாடி வினாவில் காவிரி குறித்த கேள்விகள். முயன்று பாருங்கள்!

  1. காவிரி ஆற்றின் நீரை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்கள் எவை?
  2. காவிரி நீர் பிணக்கில் மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் இடையே எந்த ஆண்டு முதல் ஒப்பந்தம் போடப்பட்டது?
  3. மைசூர் அரசு கண்ணாம்பாடியில் கட்டிய அணையை மேற்கண்ட ஒப்பந்தத்தின் படி 11 டிஎம்சி கொள்ளளவில் கட்டமால் 41.5 டி.எம்.சி கொள்ளளவிற்கு கட்டியது. அந்த அணை இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  4. மைசூர் அரசிற்கும், சென்னை மாகாண அரசிற்கும் இடையே இரண்டாவது ஒப்பந்தம் எந்த ஆண்டில் போடப்பட்டது?
  5. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு 1956-ஆம் ஆண்டில் ஒரு பிரிவு (262) இயற்றப்பட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது? அதன் விளக்கம் என்ன?
  6. காவரி நதிநீர் சிக்கலை தீர்க்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட “காவிரி நடுவர் மன்றம்” எந்த ஆண்டில் அமைக்கப்பட்டது?
  7. 1991-இல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பின் படி தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீரின் அளவு என்ன? இந்த தீர்ப்பை ஒட்டித்தால் கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான பெரும் கலவரம் நடந்தது.
  8. 2007-ம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பு (ஆயிர்த்திற்கும் அதிகமான பக்கங்கள்) தமிழகம் – கர்நாடகாவிற்கு ஒதுக்கிய நீரின் அளவு என்ன?
  9. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு இந்திய அரசின் அரசாணையாக (கெசட்டில்) எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
  10. தமிழ்நாட்டில் பாயும் காவிரி நதி கீழ்க்கண்ட மாவட்டங்களில் எதில் ஓடவில்லை?

 

காதலர் தினத்துக்கு எதிராக காவி பயங்கரவாதிகள் !

3

பிப்ரவரி 14 வந்தாலே காவி வானரங்களின் கத்தல் அதிகமாகி விடுகிறது! தொலைக்காட்சிகளும் ஒருபக்கம் காதலர் தின சிறப்பு நிகழ்வுகளை காட்டிக் கொண்டே மறு பக்கம், அர்ஜுன் சம்பதையும், ‘பல அவதாரம்’ ராம சுப்புரமணியன் ஆகியவர்களைக் கொண்டு காது அலறும் வண்ணம் விவாதங்களை நடத்துகிறது.

நாய்க்கும் ஆட்டுக்கும் திருமணம் செய்து வைத்தல், பல இடங்களில் கையில் தாலியுடன் வில்லன்களாக வலம்வருதல், பொது இடங்களில் இருக்கும் காதலர்களை மிரட்டுதல், அடித்தல், விரட்டுதல், படம் எடுத்தல் என எல்லா அநாகரீகங்களையும், அத்துமீறல்களையும் செயகின்றனர், இந்துமதவெறி கூட்டத்தினர்.

காதலர் தின எதிர்ப்பு: நாய்களுக்கு திருமணம் செய்த சக்தி சேனா!

காதலர் தினத்தை எதிர்க்கும் ஆர்எஸ்எஸ்!
பிரியா வாரியரின் வைரல் வீடியோவை பதிலாக சொன்ன ஜிக்னேஷ்

காதலர் தினத்தை எதிர்த்து இந்து மஹா சபை, ஸ்ரீராம் சேனா, பாரத் சேனா, சக்தி சேனா, பஜ்ரங்க தல் உள்ளிட்டவை இளம் ஜோடிகளைக் கண்டால் அவர்களை இப்போதே தாலி கட்டுங்கள் என்று கூறி அட்டூழியம் செய்து வருகின்றனர்.

காதலர் தின எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் சில இடங்களில் பொது சொத்துகளுக்கும் அவர்கள் சேதம் ஏற்படுத்தி வருகின்றனர். ஏன் எதிர்க்கிறார்கள்? காதலர் தினம் குறித்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் ஆர்எஸ்எஸ், பலாத்காரம் போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு மேற்கத்திய கலாச்சாரமான காதலர் தினம் கொண்டாடுவதும் ஒரு காரணம் என்று சொல்லி வருகிறது.

இதற்காகவே கலாச்சார பாதுகாவலர்களான தாங்கள் ஒவ்வோர் ஆண்டும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டி வருவதாக கூறி வருகின்றனர். இந்நிலையில் குஜராத் எம்எல்ஏவும் இளம் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி தனது டுவிட்டர் பக்கத்தில் காதலர் தினத்தை ஒட்டி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியான “மணிக்யா மலரயா பூவி” பாடல் வைரலாகியுள்ளதே காதலர் தினத்தை எதிர்க்கும் ஆர்எஸ்எஸ்க்கான பதிலடி என்றும் அவர் கூறியுள்ளார். வெறுக்கக்கூடாது ஒருவரை வெறுப்பதை விட அவரை அதிகமாக நேசிக்க வேண்டும் என்பதை இந்தியர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் என்றும் ஜிக்னேஷ் தெரிவித்துள்ளார். இதோடு பிரியா பிரகாஷ் வாரியரின் வீடியோவையும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஜிக்னேஷ் இணைத்துள்ளார்.

*****

மண் குதிரைக்கு திருமணம் செய்து வைக்கும் போராட்டம்! – தினமணி பத்திரிக்கை செய்தி

காதலர் தின எதிர்ப்பு: நாய்க்குத் திருமணம்!

உலகமெங்கும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் வேளையில், தமிழ்நாட்டிலும் காதலர்கள் பலரும் இந்த நாளை சிறப்பித்து வரும் நேரத்தில், குமரி மாவட்டத்தில் காதலை எதிர்த்து இந்து மகாசபா கட்சியினர் காதலர் தினத்தன்று நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில் கடற்கரை சாலை சந்திப்பில் இன்று 2 நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியை இந்து மகாசபா கட்சியினர் நடத்தினர். அவர்கள் 2 நாய்களை நாற்காலியில் அமர வைத்து அவற்றிற்கு மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர்.

இதுகுறித்து இந்து மகாசபா தலைவர் சுரேஷ் கூறும் போது, காதலர் தினம் கலாச்சார சீரழிவின் அடையாளம். இது போன்ற தினங்களை கொண்டாடுவதால் டெல்லியில் மாணவி கற்பழிப்பு, காரைக்காலில் மாணவி மீது ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதைத் தடுக்கத்தான் காதலர் தினத்தை எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.

ஒரு அறிவார்ந்த சமூகம் என்பது ஜாதி, மத, இனம், ஏன் தேச எல்லை கடந்த ஒற்றுமையயும், உறவு மேம்பாட்டையும் விரும்பும். மனிதர்கள் ஒன்றுபடுதலை விரும்பாதவர்கள், அதாவது ஜாதியாக, மதமாக, குலமாக பிரிந்து பிரிந்து வேற்றுமை பாராட்ட விரும்புகிறவர்கள் காதலையும், அதன் வினை ஊக்கியான காதலர்தினத்தையும் எதிர்க்கிறார்கள்.

மனிதநேயம் படைத்தவர்கள் காதலையும், காதலர்தினத்தையும் வரவேற்கலாம்!

நன்றி : வெப்துனியா

காதலர் தின எதிர்ப்பு: மொய் விருந்துடன் நடந்தேறிய நாய்- கழுதை திருமணம்!

இந்து முன்னணி போன்ற மத அமைப்புகள்  காதலர் தினம் கலாச்சார சீரழிவு என்றும், இது இந்தியா போன்ற பாரம்பரியமிக்க நாட்டிற்கு உகந்ததல்ல என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் இன்று காலை 11 மணியளவில் நாய் – கழுதைக்குத்  திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி நாய் மற்றும் கழுதை அழைத்துவரப்பட்டன. இந்து முன்னணி மாநில நிர்வாகக்  குழு உறுப்பினர் தாமு வெங்கடேஷ்வரன், கோவை கோட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர், நாய்  – கழுதைக்கு  திருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் முடிந்ததும் உணவு மற்றும்  குளிர்பானம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் மொய் எழுதப்பட்டது. இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசுக்கு தகவல் தெரிந்ததும்  திருமணத்தை நடத்தி வைத்த மற்றும் கலந்து கொண்ட 63 இந்து முன்னணியினரைக்  கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல கோவை கவுண்டம்பாளையம் பேருந்து  நிலையத்தில் இந்து மக்கள் கட்சி வடக்கு மாவட்டம் சார்பாக பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினமாகக்  கொண்டாடப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நன்றி : விகடன்

மகாராஷ்டிராவில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு!

https://twitter.com/ANI/status/963634809514885123/photo/1

இந்நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் என்ற பகுதியில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு குழுவாக பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அவர்கள், தெருவில் நாங்கள் எந்த ஒரு தம்பதியையும் கண்டால் அவர்களை வன்மையாக கண்டிப்போம் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

நன்றி : ஜீ நியூஸ் தமிழ்

காதலர் தினத்துக்கு மாணவர்கள் வளாகத்துக்குள் வரக்கூடாது: லக்னோ பல்கலை உத்தரவால் சர்ச்சை!

லக்னோ பல்கலைக் கழகம் அளித்துள்ள சுற்றறிக்கை

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற லக்னோ பல்கலைக்கழகம், காதலர் தினத்தன்று மாணவ, மாணவிகள் வரக்கூடாது, கல்லூரி வளாகத்துக்குள் சுற்றித்திரியக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 10-ம் தேதி பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி வினோத் சிங் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது: கடந்த சில ஆண்டுகளாக மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள் பிப்ரவரி 14-ம் தேதிவரும் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால், வரும் 14-ம் தேதி மஹா சிவராத்திரி பண்டிகை வருவதால், அன்றைய தினம் பல்கலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்படும்.

அன்றைய தினம் மாணவர்கள் யாரும் எந்தவிதமான கலாச்சார நிகழ்ச்சிகள், சிறப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யக்கூடாது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பல்கலைக்கழகத்துக்குள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 14-ம் தேதி எந்தவிதமான வகுப்புகளும், செய்முறைத் தேர்வுகளும், கலாச்சார நிகழ்ச்சிகளும் நடக்காது. ஆதலால், மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் வரக்கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெற்றோர்களும் பல்லைகழகத்துக்கு பிள்ளைகளை அனுப்பவேண்டாம். இந்த உத்தரவை மீறி பல்கலைகழகத்துக்குள் சுற்றித் திரியும் மாணவ, மாணவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைகழகத்தின் இந்த உத்தரவுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்கலையின் உத்தரவை மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். “ பல்கலைக்கு விடுமுறைவிடப்பட்ட நிலையில், மாணவர்களை பல்கலைக்கு உள்ளே நுழையக்கூடாது எனக் கூறுவது சரியில்லை. பல்கலைக்கு செல்லாமல் மாணவர்கள் எங்கு செல்வார்கள். அற்பத்தனமான சிந்தனை ” என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காதலர் தினத்துக்கு லக்னோ பல்கலைக்கழகம் எதிர்ப்புத் தெரிவிப்பது தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவில், மாணவர்கள் யாரும் காதலர் தினத்தன்று பூக்கள், பரிசுகள், ஆகியவற்றை கொண்டு வரக்கூடாது இது மாணவிகளின் நலனுக்காக செய்யும் நடவடிக்கை எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தி இந்து

ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்… காதலர் தினத்துக்கு எதிர்ப்பு!

உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்திற்கு இந்துமுன்னணிஅமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நூதன போராட்டங்களில் ஈடுபடுவதுடன் இந்நாளில் பொது இடங்களில் சந்தித்து காதலர் தினக்கொண்டாட்டத்தில் ஈடுபடும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி காதல் ஜோடிகள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்துள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடி வேரியில் ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் செல்வக்குமார் தலைமையில் நாய் மற்றும் ஆட்டுக்கு திருமணம் செய்து வைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும், ஆட்டிற்கும், நாய்க்கும் மாலைகள் அணிவித்து திருமணத்தை இந்து முறைப்படி நடத்தினர். முன்னதாக நாய்க்கும் ஆட்டுக்கும் அலங்காரம் செய்து கொடிவேரி அணைப் பகுதியிலிருந்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

காதலர் தினக்கொண்டாட்டம் என்பது வெளிநாட்டுக் கலாச்சாரம் மட்டுமல்ல நமது கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் அதனால் தான் காதலர் தினக்கொண்டாட்டத்திற்கு ஆண்டு தோறும் எதிர்ப்பு  தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.

______________________

இப்படி  இந்தியாவெஙகும் பார்ப்பனிய இந்துமதவெறி அமைப்புக்கள் காதலர் தினத்தன்று காட்டுமிராண்டித்தனமாக வேலைகளை செய்தனர். இவர்கள் காதலர் தினத்தை எதிர்ப்பதற்கு சீரழிவுதான் காரணமென்று குறிப்பிடுகிறார்கள். உண்மையில் இவர்கள் கருதும் அந்தச் சீரழிவு ஆதிக்க சாதி, மதவாத சிந்தனைகளுக்கு காதல் இடையூறாக இருக்கிறது என்பதே. சாதி மறுப்பு – தீண்டாமை மறுப்பு திருமணங்கள் சமூகத்தில் நடப்பதை பொறுக்க முடியாத இந்த சாதி-மதவெறியர்கள் தடியின் துணைகொண்டு காதலை முறிக்க நினைக்கிறார்கள். அதே தடியை இளைய தலைமுறை கையெலெடுக்கும் போது இந்துமதவெறி இந்தியாவில் இருந்து துடைத்தெறியப்படும்.


காதலர் தினத்திற்கு எதிராக அட்டூழியம் செய்யும் சங்கப்பரிவார கும்பலை விரட்ட வேண்டியதன் அவசியத்தை காட்டுகிறது நக்கலைட்ஸ் நண்பர்களின் இந்த வீடியோ…

*****

 

மொங்கோலியா : எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான் !

1

மொங்கோலியா: எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான் !

ருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த மொங்கோலியா, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. பெருமளவில் நாடோடி இடையர்களை கொண்ட மக்கள் சமூகத்தில் இருந்து சோஷலிசப் புரட்சி வெடிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

(மார்க்சிய – லெனினிய பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள். தகவல்: Mongolia Today, January 1963)

முதலில், மொங்கோலிய சோஷலிசப் புரட்சிக்கு காரணமாக இருந்த, டம்டின் சுக்பதார் பற்றி சில குறிப்புகள். டம்டின் சுக்பதார் ஒரு சாதாரண ஏழை இடையர் குடும்பத்தில் பிறந்தவர். இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய காலத்தில், முகாமில் நிலவிய ஊழல், வசதிக் குறைபாடுகளுக்கு எதிரான சிப்பாய்க் கலகத்தில் பங்கெடுத்தவர். பிற்காலத்தில் பௌத்த மத நூல்களை அச்சிடும் அரசு அச்சகத்தில் வேலை செய்த பொழுது மார்க்சியத்தை அறிந்து கொண்டார்.

அப்போது தலைநகர் உலான் பட்டாரில் தங்கியிருந்த ரஷ்ய மார்க்சிஸ்டுகள் மூலம் மார்க்ஸிய நூல்கள் படிக்கக் கிடைத்திருக்கலாம். டம்டின் சுக்பதார் பிற மார்க்ஸிய புரட்சியாளர்களுடன் சேர்ந்து, மக்கள் புரட்சிகர கட்சியை உருவாக்கினார். மொங்கோலிய நாடோடி இன மக்களை அணிதிரட்டி, கெரில்லாப் படை ஒன்றை அமைத்தார்.

இதே நேரம், ரஷ்யப் புரட்சியின் தாக்கம் மொங்கோலியாவில் எதிரொலித்தது. போல்ஷெவிக் செம்படைகளால் தோற்கடிக்கப் பட்ட ஸார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படைகள், மொங்கோலியாவுக்குள் நுழைந்து பாசிச சர்வாதிகார ஆட்சி நடத்தினர். அதற்கெதிராக மொங்கோலிய மக்கள் கிளர்ச்சி செய்தனர். டம்டின் சுக்பதார் தலைமை தாங்கிய மொங்கோலிய நாடோடிகளின் கெரில்லா இராணுவம், ரஷ்ய செம்படை உதவியுடன் போராடி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

மொங்கோலியாவில், 1924 ம் ஆண்டு நடந்த புரட்சியின் விளைவாக, அந்த நாடு கம்யூனிசப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. உலகில் சோவியத் யூனியனுக்கு அடுத்ததாக தோன்றிய, இரண்டாவது சோஷலிசக் குடியரசு அதுவாகும்.

அதுவரை காலமும், திபெத்திய பௌத்த மதத்தை பின்பற்றும் மதத் தலைவர்களாலும், சீன மன்னர்களாலும் ஆளப்பட்டு வந்த மொங்கோலியா நாட்டில், எழுத்தறிவு பெற்ற மக்கள் தொகை மிகக் குறைவாக இருந்தது. பெரும்பாலான மொங்கோலிய மக்கள், நாடோடி கூட்டங்களாக வாழ்ந்ததால், பாடசாலைகளும் கட்டப் படவில்லை. பௌத்த துறவிகளும், மேட்டுக்குடியினரும் மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றிருந்தனர்.

மொங்கோலியா ஒரு சோஷலிச நாடாக இருந்த காலத்தில், மாலை நேர பாடசாலைகள் அமைக்கப் பட்டன. பகலில் வேலை செய்து விட்டு வரும், தொழிலாளர்கள், விவசாயிகள், இடையர்கள் அந்த மாலை நேரப் பாடசாலைகளில் சேர்ந்து கல்வி கற்றனர். உழைக்கும் மக்களுக்கு கல்வியளிக்கும் திட்டம் அமோக வெற்றி பெற்றதால், தலைநகர் உலான் பட்டாரில் “மார்க்சிய-லெனினிய பல்கலைக்கழகம்” அமைக்கப் பட்டது.

இது பிற பல்கலைக்கழகங்களில் இருந்து வேறுபட்டது. கல்வி கற்கும் வயதில் உள்ள சாதாரண மாணவர்களுக்காக அமைக்கப் படவில்லை. வறுமை காரணமாக இளம் வயதில் வேலைக்கு போக வேண்டியிருந்த இளம் வயதினர் முதல், முதுமையிலும் அறிவைத் தேடுபவர்கள் வரையிலான பலதரப் பட்டோர் அங்கே கல்வி கற்றனர். மாலை நேர பாடசாலைகளில் சித்தி பெற்ற தொழிலாளர்களும் மேற்படிப்புக்காக வந்தனர்.

மார்க்சிய – லெனினிய பல்கலைக்கழகத்தில், வெறும் கம்யூனிச சித்தாந்தம் மட்டுமே போதிப்பார்கள் என்று, தவறாக நினைத்து விடக் கூடாது. சாதாரண பல்கலைக் கழகத்தில் போதிக்கப் படும் அனைத்து பாடங்களையும் அங்கே பயில முடியும். அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பலர், பொறியியலாளர்களாக, பொருளியல் நிபுணர்களாக, விவசாய நிபுணர்களாக, பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றனர். 1953 ம் ஆண்டு, உலான் பட்டார் நகரில் தொடங்கப்பட்ட நாளில் இருந்து, பத்து வருடங்களுக்குள் 900 பேர் பட்டதாரிகளாக வெளியேறினார்கள்.

-கலையரசன்

நன்றி : கலையகம்

 

ஓ.என்.ஜி.சி.-க்கு எதிராக போராடியவர்களை விடுதலை செய் ! மாணவர், வழக்கறிஞர் போராட்டம் !

0

திருவாரூரில் 14.02.2018 அன்று ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிராக போராடி கைதாகியுள்ள மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் வழக்கறிஞர் ஜெயபாண்டியன் உள்ளிட்ட 6 பேர்களையும் விடுதலை செய்ய கோரி 15.02.2018 அன்று குடந்தை அரசு கலைக்கல்லூரியில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
குடந்தை.

*****

ஓ.என்.ஜி.சி. -க்கு எதிராக போராடிய தோழர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை விடுதலை செய்யக்கோரி குடந்தை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வழக்கறிஞர் ஜெயபாண்டியன் உள்ளிட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை செய் !
டெல்டா மாவட்டத்தை பாதுகாக்காபட்ட வேளாண் மண்டலமாக அறிவி !
ONGC -யே வெளியேறு ! என ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

தகவல்
மக்கள் அதிகாரம்
குடந்தை, தொடர்புக்கு : 97892 61624.