Monday, June 21, 2021
முகப்பு பார்வை கேள்வி-பதில் கேரள சி.பி.எம்: அடி, குத்து, கொல்லு! கம்யூனிசம்!!

கேரள சி.பி.எம்: அடி, குத்து, கொல்லு! கம்யூனிசம்!!

-

 வே.தினகரன்

கேள்வி 1:
திரு. மணி அவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சு எதனை நோக்காக கொண்டிருக்கிறது..?

மணி
சி.பி.எம் இடுக்கி மாவட்ட செயலர் மணி

கேராளவின் இடுக்கி மாவட்ட சி.பி.எம் கட்சி செயலாளர் எம்.எம்.மணி கடந்த சனிக்கிழமையன்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, ” 1980களில் நமது கட்சி எதிரிகளை பட்டியல் போட்டு அழித்தது. இந்தக் கொலைகளெல்லாம் சி.பி.எம்முக்கு புதிததல்ல, ஏறக்குறைய 13 காங்கிரஸ் ஊழியர்களை 1980களின் ஆரம்பத்தில் முடித்திருக்கிறோம். முதல் கொலை சுட்டு நடத்தப்பட்டது, இரண்டாவது சாகும் வரை அடித்து முடிக்கப்பட்டது, மூன்றாவது குத்திக் கொன்றது. இதன் பிறகு எஞ்சிய காங்கிரசு ஊழியர்கள் பயந்து ஓடி விட்டார்கள். பின்னர் திரும்பினாலும் நமது கட்சி தலைவர்களிடம் அனுமதி வாங்கித்தான் இருந்தார்கள் “.

இந்த பேச்சு ஊடகங்களில் வெளியான பிறகு பரவலான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் நர வேட்டை புகழ் மோடியும் உண்டு. தற்போது மணியின் பேச்சை வைத்து கேரள போலீஸ் கொலை வழக்குகளை பதிவு செய்திருக்கிறது. மணி குறிப்பிட்ட கொலைகளுக்காக அப்போது நடந்த வழக்குகளில் போதிய சாட்சிகளில்லை என்று சி.பி.எம் கட்சியினர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

மணி இப்படி பேசவில்லை என்றாலும் சி.பி.எம் கட்சியின் அரசியல் வழி முறை என்பது இத்தகைய ரவுடித்தனத்தைத்தான் மையமாக கொண்டு இயங்குகிறது. காங்கிரஸ்காரர்களை மட்டும் இவர்கள் கொல்லவில்லை, தங்கள் அரசியலை எதிர்க்கும் எவரையும் இப்படித்தான் எதிர்கொள்கிறார்கள். கேரள சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த டி.வி சந்திரசேகரன் அங்கிருக்கும் கோஷ்டி பூசலின் நியதிப்படி அச்சுதானந்தனின் ஆதரவாளர். இவர் சமீபத்தில் அக்கட்சியிலிருந்து விலகி “புரட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி” யை ஆரம்பிக்கிறார். சில நாட்களிலேயே கோழிக்கோடு நகரில் மே 4ஆம் தேதி சி.பி.எம் குண்டர்களால் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்.

1967இல் வங்கத்தில் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த கூட்டணி அரசில் சி.பி.எம்மின் ஜோதிபாசுதான் போலிசுத்துறை அமைச்சர். அப்போது சி.பி.எம்மின் திருத்தல்வாதத்தை எதிர்த்து உழுபவனுக்கே நிலம் சொந்தம், உழைப்பவனுக்கே அதிகாரம் என்ற முழக்கத்துடன் இடிமுழக்கமாய் எழுந்த நக்சல்பாரி எழுச்சி பல மாநிலங்களில் சி.பி.எம் கட்சியை உடைத்தது. எனினும் மார்க்சிய லெனினிய கட்சியின் முன்னணியாளர்களைக் கொன்றும் கைது செய்தும் ஒழித்ததில் சி.பி.எம் அமைச்சர்களுக்குத்தான் முக்கியப் பங்குண்டு.

சிங்கூர், நந்திகிராம் போராட்டங்களில் கூட ஆயுதமேந்திய சி.பி.எம் குண்டர் படைதான் மக்களை தாக்கியதோடு பலரை கொன்றுமிருக்கிறது. வங்கத்தில் இவர்கள் ஆட்சி செய்த ஆண்டுகள் முழுவதும் இத்தகைய ரவுடியிச வழிமுறையின் மூலம்தான் ஆட்சியைத் தக்க வைத்ததோடு பல தேர்தல்களில் வென்றும் தொடர்ந்தனர். நிறுவனமயமாக்கப்பட்ட இந்த குண்டராட்சி மீதான மக்களின் வெறுப்புதான் மம்தா பானர்ஜியை ஆட்சிக்கு கொண்டு வந்தது. இன்று மம்தா பானர்ஜி கூட சி.பி.எம்மின் குண்டர் வழிமுறையினைத்தான் தமது கட்சிக்கும் அமல்படுத்துகிறார்.

சி.பி.எம் கட்சி செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் இவர்கள் ஜனநாயகக் காவலர்கள் போல குரல் கொடுப்பார்கள். அதிகாரம் இருக்கும் கேரள, வங்க மாநிலங்களில் ஒரு கார்ப்பரேட் குண்டர் படை போல செயல்படுவார்கள். புரட்சியை தூக்கி எறிந்து விட்டு ஓட்டு பொறுக்கும் அரசியலில் சரணாகதி அடைந்து விட்ட சி.பி.எம்மின் இத்தகைய வழிமுறை ஒரு முரண் போலத் தோன்றலாம். அதாவது புரட்சியே இல்லை என்றான பிறகு இந்த வன்முறை எதற்கு என்று நீங்கள் கேட்கலாம்.

அதற்கான பதிலும் அவர்கள் போலிக் கம்யூனிஸ்ட்டுகள் என்பதிலேயே அடங்கியிருக்கிறது. இந்தியாவில் புரட்சியை நடத்த வேண்டும் என்ற திட்டமோ, கொள்கையோ, அரசியலோ, நடைமுறையோ அவர்களிடத்தில் இல்லை. இதனாலேயே தங்கள் அரசியல் கொள்கையினை மக்களிடத்தில் கொண்டு போய் சொந்த முறையில் அவர்களை அரசியல் படுத்தும் பணி தேவையற்றதாகி விடுகிறது. இப்படித்தான் இவர்கள் மக்களுக்கு பொறுப்பற்றவர்களாக மாறிவிடுகிறார்கள். ஆக தங்களது செல்வாக்கு, பலத்தை காட்டுவதற்கு பிற ஓட்டுக்கட்சிகள் கையாளும் குறுக்கு வழிகளையே நாடுகிறார்கள்.

ஆனால் மற்ற கட்சிகளுக்கு இல்லாத படி சி.பி.எம் கட்சியினருக்கு ஒரு வலுவான தொண்டர் படை இருக்கிறது. இதன் போக்கில் உள்ளூர் அளவில் தங்களது அரசியலை எதிர்ப்போரை இத்தகைய குண்டர் படையினை வைத்து மிரட்டும் வழிமுறைகளை அவர்கள் இயல்பாக கையாளுகிறார்கள். அந்த வகையில் ஒரு வகையான ‘குழு பலமே’ தொண்டர்களது அரசியலாக இருக்கிறது. இதற்கு கைமாறாக ஆட்சியிலிருக்கும் போது தொண்டர்கள் பிழைத்துக் கொள்ளும் ஏற்பாடுகள் அரசு மூலமாகவோ, அரசு சாரா நிறுவனங்கள் மூலமாகவோ செய்யப்படுகின்றன. இறுதியில் ஒரு சி.பி.எம் தொண்டன் அங்கே அரசியல் உணர்வைப் பெறுவதற்குப் பதில் வயிற்றுப் பிழைப்புக்கான நிறுவன உணர்வை பெறுகிறான். இப்படித்தான் இவர்களது வன்முறை அரசியல் வேர் கொள்கிறது.

ஒரு வேளை தமிழகத்தில் சி.பி.எம் ஆட்சி நிலவுமென்றால் ம.க.இ.க தோழர்கள் நிறையே பேர் கொல்லப்பட்டிருப்பார்கள். இவர்களது அணிகளோடு அரசியல் பேசச் சென்றால் அதை தவிர்ப்பதற்கு அரசியலற்ற அவதூறுகளையே அணிகளுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். அதாவது ம.க.இ.க தோழரின் பையில் துப்பாக்கி இருக்கும், அவர்களோடு சேர்ந்தால் போலீசு கைது செய்யும், இப்படித்தான் அவர்கள் பயிற்றுவிக்கப்டுகிறார்கள். புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இரண்டையும் படிக்கக் கூடாது என்று இவர்கள் தங்களது அணிகளுக்கு அறிவிக்கப்படாத விதியையே வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் மீது எழுப்பப்பட்ட அரசியல் விமர்சனங்களுக்கு என்றைக்குமே பதில் சொன்னது கிடையாது. சொன்னதெல்லாம் அவதூறுகள்தான். நக்சல்பாரி கட்சி முன்வைத்த அரசியல் விமரிசனங்களுக்கு சி.பி.எம் முன்வைத்த பதில் இவர்களெல்லாம் சி.ஐ.ஏ கைக்கூலிகள் என்பதுதான். எனவே அரசியலும் இல்லாமல், குண்டர் படை வன்முறையும் இணையும் வேதியில் இப்படித்தான் சி.பி.எம் கட்சியில் இயங்கி வருகிறது.

இத்தகைய பாதை உலகமெங்கும் உள்ள போலிக் கம்யூனிஸ்டுகளுக்கே உரியவை. இவர்கள் வியந்தோடும் போலீக் கம்யூனிசம்தான் 1950 பிந்தைய ரசியாவிலும், மாவோவுக்கு பிந்தைய சீனாவிலும் ஆட்சியில் இருந்தது. தற்போது சீனாவில் மட்டும் தொடர்கிறது.

எதிரிகளிடமிருந்து கட்சியை காப்பாற்றிக் கொள்ளும் அளவுக்கு ஒரு போலிக் கம்யூனிஸ்ட்டு கட்சிக்குக் கூட வன்முறை என்பது தற்காப்பிற்காக தேவைதான். இந்து மதவெறியர்களை எதிர்த்து குஜராத்தில் ஒரு கம்யூனிசக் கட்சியை அதுவும் போலிக் கம்யூனிசக் கட்சியை கட்ட வேண்டுமென்றால் கூட அது இரத்தம் சிந்தாமல் நடக்காது. ஆனால் சி.பி.எம் கொண்டிருப்பது தற்காப்பிற்கான வன்முறை அல்ல. தங்களது சமரச அரசியலை, சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைக்கும் வழிமுறையாக இந்த வன்முறையினை அவர்கள் கட்சி ரீதியாகவே கையாளுகிறார்கள். இந்த வன்முறைதான் அவர்களது கட்சியில் பலத்தை, செல்வாக்கை நிர்ணயிக்கும் அளவு கோலாக உள்ளது.

வினவு கேள்வி பதில் அந்த வகையில் மக்கள் பயந்து கொண்டுதான் இவர்களை ஆதரித்தாக வேண்டும். வங்கத்தில் பல ஆண்டுகளாக இதுதான் நடந்தது. இனியும் நடக்கும். மக்களிடமிருந்து அன்னியப்பட்டிருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகள் இந்த கும்பல் வன்முறை மூலம் மேலும் மக்களிடமிருந்து அன்னியப்படுகிறார்கள். அதன் விளைவை நாடு முழுவதும் பார்க்கிறோம். தமிழகத்தில் கூட இவர்களது கூடாரம் பல தளங்களில் காலியாகி வருகிறது. ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளில் புரட்சியை நேசிக்கும் பல சி.பி.எம் தோழர்கள் இணைந்து வருகின்றனர்.

இணையத்தில் இருக்கும் சி.பி.எம் தோழர்களும் அப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டுமென இந்த பதிலை முடித்துக் கொள்கிறோம்.

___________________________________________

தொடர்புடைய பதிவுகள்

 ________________________________________________

 ________________________________________________

 ________________________________________________

 ________________________________________________

 ________________________________________________

 1. மாவேயிஸ்ட் செய்தால் மண்குடம் மார்க்சிஸ்ட் செய்தால் பொன்குடமா… அவங்கன்னா அது அழித்தொழிப்பு..இவுகன்னா ரவுடியா.. அதுக்கு ஒரு வியாக்யானம்… விளக்கம்.. அட போங்கப்பா… உங்க எல்லாரையும் காட்டிலும் நம்ம இந்திய அரசேயே நம்பலாம்… என்ன….. கொஞ்சம் நீதிய தாமதமா தருவாங்க… ஆனா நல்லா திட்டலாம் விமர்சனம் பண்ணலாம்… ஆக எல்லாத்தையும் பாத்தா, இந்திய அரசே மேல்

  • பாலும் கள்ளும் வெள்ளைதானேனு எப்படி பாஸ் இப்படி “வெள்ளந்தியா” கேக்குறீங்க…

 2. நேற்றைய 29.05.2012 பி.பி.சி தமிழோசையில் சி.பி.எம் கட்சியின் அம்பி வரதராஜன் அளித்த பேட்டியில் இந்தியாவில் எங்கும் அரசியல் கொலைகள் நடக்கவில்லை. நாங்கள் எந்தக் கட்சியினரையும் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் உள்பட யாரையும் அரசியல் கொலை செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டியதே இல்லை. அப்படியொரு சம்பவங்களே இநத நாட்டில் எந்தக் கட்சியினராலும் நடத்தப்படவில்லை என்று சொல்கிறார்.
  அனேகமாக கட்சியை பி.ஜே.பி யில் சேர்த்துவிட்டு சித்பவனத்திற்கு அதன் தலைவர்களை அனுப்பும் ஏற்பாடு நடக்கும் போலிருக்கிறது.

  மணி தெரிவித்தது ஒரு செய்திதானே தவிர அது கருத்து அல்ல. கருத்துக்கும் செய்திக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு என்று நாம் புரிந்து
  கொள்ள வேண்டும் என்று வரதராஜன் வாசகர்களுக்கு வகுப்பு எடுக்கிறார்.

  இந்தியாவில் மாவோயிஸ்டுகள், முஸ்லிம் தீவிரவாதிகள் மட்டுமே வன்முறையில் ஈடுபட்டு அரசியல் கொலை செய்கிறர்ர்கள் என்று சொல்கிறார்.

  வினவு இந்த விஷயத்தை பி.பி.சி.யில் கேட்டு நமக்கு விளக்கினால் நல்லது.

 3. சந்திரசேகரன் கொல்லப்பட்ட இடம் கோழிக்கோடு நகரமல்ல..கோழிக்கோடு அருகே உள்ள வடகரை எனும் இடமாகும்..திருத்தி விடவும்.

 4. “ஒரு வேளை தமிழகத்தில் சி.பி.எம் ஆட்சி நிலவுமென்றால் ம.க.இ.க தோழர்கள் நிறையே பேர் கொல்லப்பட்டிருப்பார்கள்”.

  ஆட்சி எதற்கு? குழு பலம் இருந்தாலே இவர்கள் ரவுடிகளாக மாறி ம.க.இ.க தோழர்களை கொரடூரமாகத் தாக்கி இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி பொன்மலையில் ம.க.இ.க தோழர்களைத் தாக்கியவர்கள்தானே இவர்கள். மற்ற கட்சியினர் செய்யும் தவறுகளை சமரசமின்றி சுட்டிக்காட்டுவதற்கு ம.க.இ.க என்றுமே தயங்கியதில்லை. விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் அதை மூடி மறைக்க வன்முறையைத்தான் கையில் எடுக்கிறார்கள். இதில் முன்னோடிகளாக இருப்பவர்கள் CPM கட்சியனர்தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க