privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விஅண்ணன் மாதவராஜின் கோபமும், 'மார்க்சிஸ்ட்டுகளின்' வெட்கமும்!

அண்ணன் மாதவராஜின் கோபமும், ‘மார்க்சிஸ்ட்டுகளின்’ வெட்கமும்!

-

திவர்களோடு விவாதம் நடத்தி எத்தனை நாளாயிற்று! இது நம் குற்றமா, இல்லை வாய்ப்பு தராத சூழலின் சாபமா? முற்றிலும் சூழல் அப்படி இல்லை என்று சொல்ல முடியாது. ஆதீனம் ஜெயமோகன் எழுதும் ஒவ்வொரு கட்டுரையும் மறுவினைக்கான விருப்பத்தை எப்போதும் தோற்றுவிக்கிறது. நேரப்பிரச்சினை காரணமாக அவையெல்லாம் மனவெளிக் குகையின் ஆழங்களில் துள்ளிக் குதித்து தூங்குகின்றன.

இதற்கடுத்த வாய்ப்பை சி.பி.எம் பதிவர்கள்தான் வழங்க முடியும். அவர்களும் மறைந்த தோழர் “சந்திப்பு”  செல்வப்பெருமாள் போல ஊக்கமாக செயல்படுவதில்லை. செயல்படும் மாதவராஜ் போன்றவர்களும் எழுதுவதை குறைத்திருக்கிறார்கள். காவல் கோட்டம் – சாகித்ய அகாடமி விருது சர்ச்சை வந்த போது அண்ணன் மாதவராஜ் எழுதிய தொடர் கட்டுரைகள், அதன் மீது ஜெயமோகனது பதில் தொடர்பாகவெல்லாம் எழுதவே முடிவு செய்திருந்தோம். விவாதித்து ஒரு தோழர் எழுதியும் அது சரியாக வராததால் வெளியிடவில்லை. திருத்தி எழுதவும் நேரமில்லை. அப்போது விட்ட வாய்ப்பை இப்போதும் விட்டுவிடக்கூடாது என்பதால் இந்தப் பதிவு.

____________________________________

ண்ணன் மாதவராஜ் எழுதிய, “விமர்சனங்கள்: வார்த்தைகளைக் கொட்டாதீர்கள் “, எனும் கட்டுரையின் இணைப்பை தோழர் ஒருவர் அனுப்பியிருந்தார். பிறகு இந்தக் கட்டுரையை ஏன் எழுதினாரென்று விளங்கிக் கொள்ள மாதவராஜ் எழுதிய முந்தைய இரு கட்டுரைகளையும் படிக்க வேண்டியிருந்தது. முக்கியமாக பின்னூட்டங்கள். நீங்களும் ஒரு முறை படித்து விடுங்கள்.

1) அந்த பொறுக்கி டிஎஸ்பியை மக்கள் செருப்பால் அடிக்கலாமா வேண்டாமா?

2) “ஜெயலலிதாக்களும், கருணாநிதிகளும் நாசமாய்ப் போகட்டும்”

ஒரு டி.எஸ்.பி நடுச்சாலையில் நிற்கும் ஒரு தம்பதியனரை, ஆசிரியர் தேர்வுக்கான விண்ண்ப்பங்கள் வரவில்லை என்று போராடியதற்காக தாக்கியிருக்கிறார். இங்கு “அர்” விகுதி போட்டு நாம் எழுதியதை அவர் “இன்” விகுதி போட்டே எழுதியிருக்கிறார். போலீசு என்பது ஒரு வெறிநாய்க் கூட்டம்தான் என்பதற்கு மற்றுமொரு சான்றாக இருக்கும் இதனை மாதவராஜ் உழைக்கும் மக்களுக்கே உரிய ஆவேசத்துடன் கண்டிக்கிறார். பதிலுக்கு அந்த டி.எஸ்.பியை மக்கள் செருப்பால் அடிக்க வேண்டாமா என்றும் கேட்கிறார்.

இதற்கும் முந்தைய பதிவில் மின்கட்டண உயர்வை அறிவித்திருக்கும் ஜெயாவை அதே ஆவேசத்தோடும் விமரிசிக்கிறார். கருணாநிதி, ஜெயா என்று மாறி மாறி ஓட்டுப் போட்டு ஏமாறும் மக்கள் இனியாவது இரு கட்சியும் நாசமாக போகட்டும் என்று பேசுவார்களா என்றும் அத்தகைய எழுச்சி காரணமாக இந்த ‘ஜனநாயகம்’ நிலநடுக்கத்தை சந்திக்கும் என்று அவர் ஆதங்கத்துடன் எழுதுகிறார்.

இவற்றில் என்ன பிரச்சினை? குறிப்பிட்ட சம்பவங்கள், அரசு அறிவிப்புகள் மீது மக்கள் நலனிலிருந்து யதார்த்தமாக எழுதுபவர்கள் இப்படித்தான் எழுதுவார்கள். எழுதத் தெரியாத பாமர மக்களும் இப்படித்தான் பேசுவார்கள். எனினும் இவை நமது ‘மார்க்சிஸ்டு’ பெருந்தலைகளுக்கு பிடிக்கவில்லை. பின்னூட்டத்தில் அவர்கள் அனைவரும் அண்ணன் மாதவராஜை சாந்தப்படுத்தி, நேர்வழிப்படுத்தி, தணியவைக்க முயல்கிறார்கள். அவற்றில் சிலவற்றைப் படியுங்கள்:

“இல்லாத கரண்டுக்கு இரண்டு பங்கு கட்டணம் செலுத்தச் சொல்லும் குரல் ஜெயாவினுடையது அல்ல, முன்பு கருணாநிதியுடையதும் அல்ல. உலக வங்கியினுடையது. பன்னாட்டு நிதி மூலதனத்தினுடையது. வெற்று கோபத்தைவிடவும் சாபத்தைவிடவும் மேலும் தீவிரமான விழிப்புணர்வு வேலையைத் தான் காலம் நம்மிடம் கோருகிறது. இன்னும் தேர்ச்சியான வேலையை.” (எஸ் வி வேணுகோபாலன்)

“தற்பொழுது வரும் கட்டுரைகள் உங்களது கோபத்தை அதிகமாக காட்டுகிறது. தீர்வை சற்று நிதானமாக ஆழ யோசித்து இடுகையில் வெளியிட்டால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.” (தஞ்சை ரமேஷ்)

“வேண்டாம் நண்பரே! நாய்கடித்தால் திருப்பியா கடிக்க முடியும்..? (புலவர் இராமாநுசம்)

“அந்த டிஎஸ்பியை செருப்பால் அடித்தால் இனி இந்த மாதிரி நடக்காது என்று நினைத்தால் அது சரியல்ல. (பழனி கந்தசாமி)

“வணக்கம் தோழர் தங்களின் ஆவேசம் புரிகிறது அப்படி ஒருமுறை நடந்தால் நன்றாகவே இருக்கும் ஆனாலும் …நிறைய யோசிக்க வேண்டி உள்ளது ..தோழர்..என்ன செய்ய இந்த தேசத்தை ….? (தாமிரபரணி)

“இது தவறான அணுகுமுறை மாதவ். லட்சக்கணக்கான அதிகாரிகள் பதவியில் அவர்களின் கடமையைச் செய்யும் போது பத்து, இருபது அதிகாரிகள் இப்படி நடந்து கொள்வது சகஜம்தான்.உணர்ச்சிவசப்பட்டு சிந்தும் வார்த்தையும் செயலும் எந்தப் பலனையும் தராது. உங்கள் இடுகையின் தலைப்பும் உங்களின் முதிர்ச்சிக்குப் பொறுத்தமானதல்ல.” (சுந்தர்ஜி)

” மாதவ்! நான் அவருக்குரிய தண்டனை குறித்து எதுவும் பேசவில்லை.அதை மக்கள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால் நேரும் விபரீதங்களை மட்டுமே எழுதினேன். இப்போதும் சொல்கிறேன்.உங்களின் பக்குவமும் வாசிப்பும் நிச்சயமாகத் துணை நிற்கும். தவறு செய்பவர்களை ஆயிரம் ஆயிரம் முறை மன்னியுங்கள் என்று சொன்ன வேரிலிருந்து துவங்குகிறது நமது பயணம்.” (சுந்தர்ஜி)

இவர்களனைவரும் சி.பி.எம்மைச் சார்ந்தவர்களா என்பதறியோம். என்றாலும் இதுதான் சி.பி.எம்மின் அரசியல் பார்வை என்பதால் அது பிரச்சினையுமில்லை. அதே நேரம் இந்தப் பார்வை சி.பி.எம்மிற்கு மட்டும் உரியது அல்ல. அது பல விதங்களில் அரசியல் குறித்த நடுத்தர வர்க்கத்தின் பார்வையாகவும் இருக்கிறது. இந்த பின்னூட்டங்கள் போக பலரும் தனி மின்னஞ்சல், தொலைபேசி மூலம் மாதவராஜிடம், “உங்கள் கோபம் நியாயம் என்றாலும் வார்த்தைகள் பக்குவமாக, நிதானமாக இருக்க வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு அண்ணன் மாதவராஜ் அளித்திருக்கும் பதில் முதலில் சொன்ன தனி பதிவாகவே இருக்கிறது. சாரத்தில், ” தனிப்பட்ட மனிதனின் கோபம் இல்லை இது. ஒரு சமூக மனிதனின் குரலும், அடையாளமும் ஆகும். அடிப்பவர்களுக்கு எதிராக அடிவாங்குகிறவர்களின் சிந்தனை. அதிலிருக்கும் தார்மீக கோபத்தை புரிந்துகொள்ளுங்கள் என வேண்டுகிறேன். இருந்தபோதிலும், அந்த நண்பர்கள் சுட்டிக்காட்டும் பிரக்ஞையோடு இருக்க முயற்சிக்கிறேன் இனி. ” என்று அவர் குறிப்பிடுகிறார்.

இது தொடர்பாக முந்தைய பதிவின் பின்னூட்டமொன்றில் இப்படி ஆவேசமாக கண்டிப்பது குறித்து, “அதற்காக நான் என் முதிர்ச்சி, பக்குவத்தை இழந்து போவது ஒன்றும் தப்பில்லை.” என்று தைரியமாகப் பேசும் மாதவராஜ் இனி ‘நண்பர்கள்’ சுட்டிக் காட்டும் பிரக்ஞையோடு இருக்க முயற்சித்திருப்பதாக கூறும் தயக்க, மயக்க, குழப்ப நிலைக்கு சென்றிருப்பதன் காரணம் என்ன?


டைட்டானிக் படத்தில் சீமான்களது உப்புச் சப்பில்லாத வாழ்வோடு பிணைக்கப்பட்ட ரோஸ் பிறகு இயல்பாக ஜாக்கை காதலிப்பாள். டேபிள் மேனர்சோடு சாப்பிடுவது போல, சபை மேனர்சோடு உடம்புக்கு வலிக்காமல் ஆடும் அவளை இழுத்துக் கொண்டு கீழ் தளத்தில் உழைக்கும் மக்களோடு பட்டையைக் கிளப்பும் குத்தாட்டத்தை ஆடுவான் ஜாக். மேல் தளத்தில் இருந்த நமது சி.பி.எம் தோழர்கள் கீழே மாதவராஜ் ஆடுவதைப் பார்த்து அதிர்ச்சி பொங்க கேட்கிறார்கள்: ஏன் தோழர் இப்படி?

அண்ணன் மாதவராஜ் அவர்களே, நீங்கள் கோபமடையக் கூடாது என்று உங்கள் தோழர்கள் கேட்கிறார்கள். நீங்களும் கோபமடைவதில் தவறில்லை, ஆனாலும் இனி எச்சரிக்கையாகக் கோபம் அடைவேன் என்று சுய விமரிசனம் செய்கிறீர்கள். தோழர்களை விமரிசனம் செய்ய வேண்டிய தருணத்தில் எதற்காக உங்களது சுய விமரிசனம்? ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு கோபம் வரக்கூடாது என்றால் நாம் என்ன சிவாய நமஹா என்று கோவிலைச் சுற்றி வரும் செக்குமாடுகளா?

விடுதலைக்கான தத்துவம் என்ற முறையில் மார்க்சியத்தை அறிவுப்பூர்வமாகவும், உழைக்கும் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் உணர்ச்சிப் பூர்வமாகவும் இருக்க வேண்டிய ஒரு கம்யூனிஸ்ட்டிடம் கோபம் கொள்ளக் கூடாது என்று யார் சொல்வார்கள்?

புரட்சி என்பதே மக்களின் அமைப்பாக்கப்பட்ட கோபம்தான். அந்த மாபெரும் ‘கோபத்தை’ மக்களிடம் உருவாக்குவதே ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் மையப் பணி. சுரணை, மானம், ரோஷம், பழிவாங்குவது, கோபம் முதலியவற்றை மக்களிடம் நினைவுபடுத்தினால்தான் நம் நினைவில் இருக்கும் புரட்சி என்பது வெளியே உருத்திரண்டு பௌதீக சக்தியாக மாறும். அந்த வகையில் மக்களை கோபம் கொள்ள வைப்பதன்றி நமது பணி ஏது?

ஒரு டி.எஸ்.பியை செருப்பால் அடிக்க வேண்டும் என்று கூறுவதினாலாயே புரட்சி வந்து விடாதுதான். ஆனால் அது அரசு, போலீசு, அதிகார வர்க்கம் முதலியவற்றை உள்ளது உள்ளபடி மக்களிடம் புரியவைப்பதற்கு ஒரு அரிய வாய்ப்பு. மக்கள் தமது சொந்த உணர்வில் இந்த அரசு அமைப்பு அநீதியானது என்று புரிந்து கொள்வதற்கு ஒரு ஆரம்பம். ஆனால் உங்கள் தோழர்களோ இந்த ஆரம்பத்திற்கே சமாதி கட்டி ஜனகனமன பாடி முடிக்க நினைக்கிறார்கள். நூறு நல்ல போலீசில் ஓரிரு கெட்ட போலீசு இருப்பார்கள் என்று ஒட்டு மொத்த போலீசுத் துறைக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்கள்.

அப்படி என்றால் ஓரிரு கெட்ட அரசியல்வாதிகள், ஓரிரு கெட்ட அதிகாரிகள், ஓரிரு கெட்ட முதலாளிகள், ஓரிரு கெட்ட வல்லரசு நாடுகள் என்று அடுக்கினால் என்ன வரும்? ஓரிரு பிரச்சினைகள் தவிர நிலவுகின்ற இந்த சமூக அமைப்பே சாலச்சிறந்தது என்று முதலாளித்துவத்திற்கு வால் பிடிப்பதாய் அமையும். இதையேதான் பாராளுமன்ற ஜனநாயகம் ஒவ்வொரு முறையும் பல்லிளிக்கும் போதும் உங்கள் தோழர்கள்,“நமது மாண்பு என்ன, மரபு என்ன, சிறப்பு என்ன, சிங்காரம் என்ன” என்று பன்றிகள் புரளும் பாராளுமன்றத்திற்கு புனித வட்டம் பேசுகிறார்கள். ஆதாரம் வேண்டுமென்றால் முன்னாள் சபாநாயகர் சோமநாத் சட்டர்ஜி துவங்கி, சீதாராம் எச்சூரி வரை உச்சாடனம் செய்த மந்திரங்களை கேளுங்கள். பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்தான் என்று பன்றிகளே ஒத்துக்கொள்ளும் நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள மக்கள் போராட்டங்களுக்கும் இது பொருந்தும். மக்களே தமது சொந்த அனுபவத்தினூடாக இந்த அமைப்பை உணரும் போது நாம் ஒரு படி மேலே ஏறி பேசுவதற்கு பதில் மக்களையே ஒரு படி கீழிறங்கும்படி கோரினால் அவன் கம்யூனிஸ்ட்டா, இல்லை சிரிப்பு போலிசா?

கோபத்தில் வார்த்தைகளை விடக்கூடாது என்று ஓதுகிறார்கள் உங்கள் தோழர்கள். ஒரு சம்பவத்தை பார்த்து வரும் கோபம் அதற்குரிய வார்த்தைகளை சரியாகவே எடுத்துக் கொள்ளும். இதற்கு தணிக்கை போட்டால் அது கோபமா இல்லை சந்தானம் காமடியா? மக்கள் மீது நாம் கொண்டிருக்கும் நேசத்தின் அடிப்படையில்தான் நடந்து விட்ட சம்பவத்தின் பால் கோபம் கொள்கிறோம். அது செயற்கையானது அல்ல. அதே நேரம் அந்த புறநிலை நிகழ்வை வைத்து மக்களை அரசியல்படுத்தும் ஆற்றல் இருந்தால் அந்த கோபம் இன்னும் வலிமையாக வரும். ஆனால் உங்கள் தோழர்கள் அப்படி சொல்லவில்லை. கோபத்தை கம்மியாக்குங்கள் என்கிறார்கள். கோபத்தை குறைத்து நாம் என்ன சாதிக்கப் போகிறோம்? ரத்த அழுத்தத்தை தணிப்பதற்கா?

யோசித்துப் பாருங்கள், குஜராத்தில் முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த நரவேட்டை மோடியை, ஜென்டில் மேன் மோடி என்றா அழைக்க முடியும்? கலவரத்தில் உற்றார் உறவினரை இழந்த முசுலீம் மக்கள் கூட்டத்தில் கொலைகார மோடி என்று பேசுவதற்கு பதில் முதலமைச்சர் மோடி சில தவறுகள் செய்திருக்கிறார் என்று பேசினால் அந்த மக்களின் கண்ணீரே உங்களை சாகடித்து விடாது?

ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், விடுதலையான முன்தாஜர் அல் ஜய்தி, ” என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது:

நான் வீசியெறிந்த காலணி,
உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று
உங்களுக்குத் தெரியுமா?
பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று
உங்களுக்குத் தெரியுமா?
எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது
செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.

என்று பேசினான். அல் ஜய்தியை நாம் கொண்டாடினோமா இல்லையா? அதே செருப்பு இங்கே ஒரு வெறிநாய் டி.எஸ்.பியை அடிக்க பயன்படுவதில் என்ன தவறு?

ஒரு வேளை உங்கள் தோழர்கள் இப்படியும் சொல்லலாம்: “தோழர் எகாதிபத்தியம் என்பது பெரிய விசயம். அதை இது போன்ற சில்லறைத்தனங்களால் வீழ்த்திவிட முடியாது, ஆகையால் இதையெல்லாம் நாம் ஊக்குவிக்க கூடாது”. சரி, ஏகாதிபத்தியத்தை எப்படி வீழ்த்துவார்களாம்? இந்தியாவில் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்தை கைப்பற்றி பின்னர் அமெரிக்காவின் மேல் படையெடுப்பார்களா? அப்படி எனில் சீனா இன்னும் அப்படி படையெடுக்கவில்லையே? படையெடுக்க வேண்டாம். ஏகாதிபத்திய அமெரிக்காவோடு பொருளாதார உறவு கிடையாது என்று கூட சொல்லவில்லையே?  பரஸ்பர சமாதான சகவாழ்வு என ஏகாதிபத்தியங்களோடு சமரசமாக வாழ்வதை ஆரம்பித்து வைத்த குருசேவ் தொடங்கி, இன்றைய சீனா, இந்தியாவில் போலிக் கம்யூனிஸ்டுகள் வரை அப்படி முடிவெடுத்த பிறகு ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது வெறும் வெங்காயம்தானே?

ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு செருப்பும் ஒரு ஆயுதம், ஒரு செருப்பு வீச்சு கூட பரந்து பட்ட மக்களை எகாதிபத்திய எதிர்ப்புக்கு அணி சேர்க்கும் என்பதால்தான் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகள் அந்த செருப்பு வீச்சை கொண்டாடினார்கள். செருப்பு ஒரு குறியீடு. அந்தக் குறியீட்டின் மூலம் நாம் பெறும் அரசியல் ஆதாயம் என்ன என்று பார்க்க வேண்டுமே ஒழிய, கனவான்களது காந்திய அரசியலில் நின்று பிதற்றுவது அறியாமை.

கயர்லாஞ்சியிலோ, இல்லை நமது மேலவளவில் வெட்டிக் கொல்லப்பட்ட முருகேசனையே எடுத்துக் கொள்வோம். இதை தலித் மக்களிடம் மட்டுமல்ல, எல்லாப் பிரிவு மக்களிடம் பேசுவதாக இருந்தால் எப்படிப் பேச வேண்டும்? ஆதிக்கசாதி வெறியின் பால் நடத்தப்பட்டிருக்கும் இந்த கொலை பாதகத்தை கொஞ்சும் தமிழிலா கதைக்க முடியும்? தீப்பிடிக்கும் தமிழில் பொறிந்தால்தானே மற்ற பிரிவு மக்களிடம் கொஞ்சம் குற்ற உணர்வையும், தலித் மக்களிடம் நீதி கிடைக்க போராடுவோம் என்ற உத்வேகத்தையும் அளிக்க முடியும்? ஒருவேளை மாதவராஜுக்கு அட்வைசு செய்த அம்பிகள் பேசினால் எப்படி இருக்கும்? ” நடந்தது நடந்து விட்டது. நடப்பது நல்லனவாயிருக்கட்டும், மறப்போம், மன்னிப்போம் ” இப்படி உங்களால் பேசமுடியுமா மாதவராஜ்?

பாபர் மசூதி இடிப்பின் போது ” கடவுளின் பெயரால் கலவரம் வேண்டாம்” என்று உங்கள் தோழர்கள் ஏற்னவே இப்படித்தான் பேசியிருக்கிறார்கள். ‘இந்துக்களை’ புண்படுத்தாமல் இந்துத்வத்தை வீழ்த்த முடியுமா? 50களில் ராமாயணம் நாடகம் போட்ட எம்.ஆர்.ராதா தனது நாடகம் இந்துக்களை புண்படுத்தும் என்பதால் அப்படி நினைப்பவர்கள் வரவேண்டாம், அவர்களது காசும் வேண்டாம் என்று விளம்பர சுவரொட்டியிலேயே முழங்கியது குறித்து அறிவீர்களா? அந்த மண்தான் இன்றும் கொஞ்சமாவது பார்ப்பனிய எதிர்ப்பின் மரபை கொண்டிருக்கிறது. உங்கள் தோழர்களோ அதை நீர்த்துப் போகச் செய்யும் அரசியலை செய்து வருகிறார்கள்.

கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினத்தில் முதலாளிகளைப் பழிவாங்க தொழிலாளிகள் அணி திரளட்டும் என்று பேசுவோமா, இல்லை எல்லாம் சட்டம், நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என்று பேசுவோமா? இதற்கும் அருட்செல்வர் பொள்ளாட்சி மகாலிங்கம் நடத்தும் ஆன்மீகக் கூட்டத்திற்கும் என்ன வித்தியாசம்? வெண்மணி கொலைகாரர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது. முதன்மைக் குற்றவாளி கோபால கிருஷ்ண நாயுடுவை வெட்டிக் கொன்றது ஒரு மா.லெ இயக்கத் தோழன். கம்யூனிஸ்டு என்ற முறையில் இங்கு நாம் சட்டத்தின் பக்கமா? இல்லை புரட்சியின் பக்கமா?

புரட்சியின் பக்கம் இருப்பவர்கள் கோபமடைய வேண்டும். நடைபிணங்களைப் போல வாழும் மக்களை கிளர்ந்தெழுச் செய்யும் வலிமை படைத்த பெருங்கோபத்தை பயின்று கொள்ள வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் உண்மையில் கோபமடைபவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் தூற்றினால் அவர்களை என்னவென்று அழைப்பது?


தி.மு.க, அ.தி.மு.கவை புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் பேசமாட்டார்களா எனும் மாதவராஜின் இரண்டாவது கோபத்தை எடுத்துக் கொள்வோம். உண்மையில் இது கோபம் என்பதை விட ஒரு ஆதங்கம் என்றும் சொல்லலாம். தன் சொந்த அரசியலிலேயே நம்பிக்கை கொள்ளாத போது வேறு வழியின்றி வந்தடைந்திருக்கும் ஒரு முட்டுச் சந்து. ஆனால் இதில் ஒரு நேர்மை இருக்கிறது. தனது அரசியல் சரிதான் என்று கூற முடியாத போது வேறு வழியின்றி மக்களே அந்த இரு கட்சிகளையும் புறக்கணிக்க மாட்டார்களா என்று ஏங்கும் ஒரு மனநிலையை உணர முடிகிறது.

அதற்கும் சி.பி.எம் பெருந்தலைகள் பொங்கி எழுந்திருக்கிறார்கள். மின் கட்டண உயர்வுக்கு கருணாநிதியோ, இல்லை ஜெயலலிதாவோ காரணமில்லை உலக வங்கிதான் மூலம் என்று ஒருவர் அருள்வாக்கு பாடியிருக்கிறார். இதில் அரசியல் பிழை இல்லை. ஆனால் இதன் மூலம் அவர் என்ன சொல்கிறார்? அதாவது தி.மு.க, அ.தி.மு.கவை புறக்கணிப்பதில் பயனில்லை, நாம் உலக வங்கியை புறக்கணிக்க வேண்டும் என்கிறார். இதில் ஒரு உள் குத்தும் இருக்கிறது.

மக்கள் நாசமாகப் போக காரணமாக இருக்கும் ஜெயலலிதாவோடும், கருணாநிதியோடும் மாறி மாறி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டணி வைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியும் நாசமாகப் போவதுதான் நியாயம் சார். ” என்று லக்கிலுக் யுவகிருஷ்ணா அதை சரியாக பிடித்திருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கட்சியினர் ஒவ்வொரு தேர்தலின் போதும் மாறி மாறி இரண்டு கட்சிகளின் தயவில் ஏதோ ஐந்து, ஐந்தரை சீட்டுக்கள் வாங்கி பரப்பிரம்மத்தை தரிசித்த போதையையே பாதையாக நினைத்து செட்டிலாகிவிட்டார்கள். இப்போது மக்கள் இரண்டு கட்சிகளையும் நாசமாக போகட்டும் என்று எண்ண வேண்டுமென்றால் அதில் அந்த கட்சிகளோடு கூட்டணி சேருபவர்களையும் நாசமாக போங்கள் என்று சொல்லக் கோருவதுதான் சரியாக இருக்கும். அதுதான் அந்த பெரிசு உலக வங்கியை இழுத்து வந்து கூட்டணி தருமத்தை பாதுகாக்கிறார். பாவம் அண்ணன் மாதவராஜ்! சுதந்திரமாகக் கோபம் அடைய முடியாத படி ஒரு அவலச் சூழல்.

சரி, விசயத்திற்கு வருவோம். மின்கட்டண உயர்வின் மூல காரணம் உலக வங்கி என்றே வைப்போம். அதை எப்படி எதிர்கொள்வது? யாரெல்லாம் உலக வங்கிக்கு அடியாள் வேலை பார்க்கிறார்களோ அவர்களை எதிர்ப்பதின் மூலம்தான் உலகவங்கிக்கான எதிர்ப்பை ஆரம்பிக்க முடியும். மக்களுக்கும் அடையாளம் காட்ட முடியும். அந்தப்படிக்கும் மாதவராஜ் சொன்னது போல இரு கட்சிகளும் நாசமாக போகட்டும் அல்லது இரு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

ஆனால் சி.பி.எம்மின் அணுகுமுறைப்படி, கூட்டணி அவசியம். அதனால் இரு கட்சிகளையும் புறக்கணிக்க கூற முடியாது. அதனால் உலக வங்கியையும் எதிர்க்க முடியாதபடி போகிறது. இறுதியில் ஐந்தரை சீட்டுக்களே கதி மோட்சம் என்று காலம் தள்ள வேண்டியதுதான். போதாக்குறைக்கு இன்னொரு ஜெயலலிதாவான, தே.மு.தி.க கேப்டனை சி.பி.எம்மினர் கொஞ்சிக் குலாவ ஆரம்பித்திருக்கின்றனர். சரி, வாழ்க்கையில்தான் புரட்சி வராது, கூட்டணியிலாவது புரட்சி இருக்கட்டுமே என்று அவர்கள் நினைத்திருக்கலாமோ?

இந்த விசயத்தில் அண்ணன் மாதவராஜிடம் கொஞ்சம் நேர்மை இருப்பதை பார்க்கிறோம். அதனால்தான் அவர் சென்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை. கிட்டத்தட்ட தேர்தல் புறக்கணிப்புதான். ஆனாலும் அந்த நேர்மை விரைவில் முடிவெடுக்க வேண்டும். இல்லையேல் அது நீர்த்துபோய் கரைந்து மறைந்து விடும். தமிழகத்தின் இரண்டு கட்சிகளும் நாசமாக போகட்டும் என்று மக்கள் நினைக்க மாட்டார்களா என்ற அவரது ஆதங்கம், சொந்த முறையில் தனது அரசியல் மீது நம்பிக்கை இல்லாததால் வருகிறது. இல்லையேல் புறக்கணிக்கச் சொன்ன கையோடு மாற்று என்ன என்று அவர் கூறியிருக்க வேண்டும். அப்படி அவர் கூறவில்லை என்பதால்தான்,

அவர் “கோபம்” அடைவதை வரவேற்கிறோம். சரியான கோபம் சரியான செயலையும் காட்டும். அந்த வகையில் நியாயமான கோபத்திற்கு எதிர்காலம் உண்டு. இந்த கோபம் கண்டு வெட்கமடையும் சி.பி.எம் தோழர்களைப் பற்றி அண்ணன் மாதவராஜ் கவலைப்படத் தேவையில்லை. உண்மையில் அவரது கோபத்தை பாராட்டித்தான் பலரும் பின்னூட்டங்கள் இட்டிருக்கிறார்கள். அந்த வகையில் இது பெரும்பான்மைக் கருத்தும் கூட.

மாறாக அவரது தோழர்கள் கூறுவது போல இனி கோபமடைவதில் சற்று எச்சரிக்கையாக இருப்பேன் என்று அவர் முடிவெடுத்தால் ஒரு போதும் கோபமே வராது. மக்கள் நலன், புரட்சி முதலானவையெல்லாம் நமது ஈகோ சார்ந்த வறட்டு கௌரவங்கள் அல்ல. பிழைகளை ஒப்புக் கொண்டு சரியானதை நோக்கி நகருவதும் கோழைத்தனமல்ல. அப்படி முடிவெடுக்கும் தைரியம் உள்ளவர்களே கம்யூனிசத்தின் உரத்தை பெற்று காரியம் சாதிக்க முடியும்.

அண்ணன் மாதவராஜ் முடிவெடுக்க காத்திருக்கிறோம்.