Friday, October 2, 2020
முகப்பு உலகம் ஐரோப்பா இலண்டன் கலகம்: 1800 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இலண்டன் கலகம்: 1800 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

-

லண்டன்-கலவரம்ங்கிலாந்தின் தலைநகர் இலண்டன் நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் மார்க் டக்கன் என்ற கருப்பின இளைஞர் போலீசாரால் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட பின் அங்கு வெடித்த கலகம், அந்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் பரவியது.  இக்கலகம் போலீசின் அத்துமீறலுக்கு எதிரான பொதுமக்களின் எதிர்வினையாக மட்டுமில்லாமல், தனியார்மயம் உருவாக்கிய சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான போராட்டமாகவும் உருவெடுத்தது.

அமெரிக்காவின் மிகப்பெரும் கோடீசுவரனும் பங்குச் சந்தை சூதாடியுமான வாரன் பஃபெட், “இங்கிலாந்தில் நடந்ததைப் போன்றதொரு கலகம் அமெரிக்காவிலும் நடக்க வாய்ப்புள்ளது” என இக்கலகத்தின் தன்மையை உணர்ந்து எச்சரிக்கும் அளவிற்கு, அதாவது ஆளும் கும்பலுக்கு உறைக்கும் அளவிற்கு, இக்கலகம் தனியார்மயத்தைக் குறி வைத்துத் தாக்கியது. இக்கலகத்தின்பொழுது பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான சூப்பர் ஸ்டோர்கள் தாக்கப்பட்டதைக் கண்டு பீதியடைந்த இங்கிலாந்து அரசு,  இது சாதாரண தெருப் போராட்டம் அல்ல, வர்க்கப் போரின் தொடக்கம் என்பதை உணர்ந்து,  இதனை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடும் நோக்கத்தோடு, “கலகக்காரர்களை விரைவாகவும் கடுமையாகவும் தண்டிப்பதன் மூலம்தான் சமூகத்தின் அமைதியை, ஒழுங்கைப் பாதுகாக்க முடியும்” என்ற பாசிச பிரச்சாரத்தை நடத்தி வந்தது.  இங்கிலாந்தின் நீதித்துறையும் இந்த அரசு பயங்கரவாதத்திற்கு ஒத்து ஊதியது.

கலகத்தில் இறங்கிய பெரும்பாலோர் மீது அதற்கு முன்னதாக எவ்வித கிரிமினல் குற்றமும் இல்லாதபோதும்; கலகத்தில் இறங்கியவர்கள் தாமே போலீசு நிலையங்களுக்கு வந்து சரண் அடைந்தபோதும்; அவர்கள் நீதிபதியின் முன் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டபோதும்; குற்றம் சுமத்தப்பட்டவர்களுள் பலர் கல்லூரிக்குச் செல்ல வேண்டிய பருவத்தில் உள்ள இளம் பருவத்தினர் என்றபோதும் கலகக்காரர்களுக்கு மன்னிப்பு அளிப்பதோ, குறைந்த தண்டனை அளிப்பதோ நிராகரிக்கப்பட்டது.

  • 25 பவுண்டு பெறுமானமுள்ள செண்ட் பாட்டிலைத் ‘திருடிய குற்றத்திற்காக’ டேவிட் ஸ்வார்பிரிக் என்ற 25 வயது இளைஞனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை;
  • ஒரு சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைந்து 10 பாக்கெட் சுயிங்கத்தை எடுத்த ‘குற்றத்திற்காக’ ஷனோலா ஸ்மித் என்ற இளம் பெண்ணுக்கு ஆறு மாத சிறை தண்டனை  என நீதித்துறையால் சட்டபூர்வ பாசிச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டது.

சாதாரண காலங்களில் நடைபெறும் திருட்டுக் குற்றத்திற்கு 2 மாதங்கள் மட்டுமே தண்டனை அளிக்கும் இங்கிலாந்து நீதிமன்றம், கலகத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றச்சாட்டுக்கு 7 மாதங்கள் எனத் தண்டனையை அதிகரித்து அளித்தது; கடையை உடைத்துக் கொள்ளையிடும் குற்றச்சாட்டுக்கு வழக்கமாக அளிக்கப்படும் தண்டனைக்குப் பதிலாக (8 மாதங்கள்), 14 மாதங்கள் தண்டனை அளிக்கப்பட்டது; பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவிக்கும் குற்றச்சாட்டுக்கு வழக்கமாக அளிக்கப்படும் 5 மாத தண்டனைக்குப் பதிலாக இரண்டு மடங்கு தண்டனை (10 மாதங்கள்) வழங்கப்பட்டது.

இக்கலகத்திற்காக இலண்டன் நகரில் மட்டும் 1292 பேர் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மொத்த சிறைத் தண்டனைக் காலம் ஏறத்தாழ 1,800 ஆண்டுகள் ஆகும்.  இத்தண்டனைக் காலத்தின் சராசரியைக் கணக்கிட்டால், தண்டிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாகக் கொள்ள வேண்டும்.

தனியார்மயம்  தாராளமயம் உருவாக்கியுள்ள மாபெரும் பொருளாதார மந்தத்திலும், கட்டமைப்பு நெருக்கடியிலும் சிக்கிக் கொண்டுள்ள ஐரோப்பா கண்டத்தின் பல்வேறு நாடுகளில் தொழிலாளர்களின், மாணவர்களின், இளைஞர்களின் கலகங்கள் காட்டுத் தீ போலப் பரவி, முதலாளித்துவ சமூகத்தின் இருப்பையே அச்சுறுத்தி வருகின்றன.  கடுமையான தண்டனை அளிப்பதன் மூலம், உழைக்கும் மக்கள் மத்தியில் அரசு பயங்கரவாத அச்சத்தை உருவாக்குதன் மூலம் அத்தீ தன் நாட்டுக்குள் பரவுவதைத் தடுத்துவிட முடியும் என மனப்பால் குடிக்கிறது, இங்கிலாந்தின் ஆளுங்கும்பல்.

_______________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. அப்படியே வளைகுடா நாடுகளில் கிடைக்கும் தண்டனைகளையும் சேர்த்து வெளியிடலாமே.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க