பல்கலை தன்னாட்சி : ஏழை மாணவர்களை விரட்டும் சதித்திட்டம் !

மோடி அரசின் பல்கலைக்கழகங்களுக்கான தன்னாட்சி வழங்கும் இந்த திட்டம் மறைமுகமாக கல்வியில் தனியார்மயத்தை தீவிரப்படுத்துகிறது.

0

வஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகம் உள்பட ஐந்து மத்திய பல்கலைக்கழகங்கள், சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 21 மாநில பல்கலைக்கழகங்கள், 24 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 8 கல்லூரிகள் என 60 உயர்கல்வி நிறுவனங்களுக்கு முழு தன்னாட்சி அங்கீகாரம் வழங்குவதாக அறிவித்திருக்கிறது, மோடி அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்.

மோடி அரசினுடைய இத்திட்டத்தினை எதிர்த்து டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், மத்திய பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் கூட்டமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

‘’தன்னாட்சி அங்கீகாரம் வழங்குவதன் மூலம் பல்கலைக் கழகத்தின் அந்தஸ்தையல்லவா, உயர்த்துகிறது மோடி அரசின் அறிவிப்பு. இதை ஏன் எதிர்க்க வேண்டும்?’’ என்ற கேள்வியோடு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் அவர்களைச் சந்தித்தோம்.

எடுத்த எடுப்பிலேயே, ‘’இது ஏழை மாணவர்களின் உயர்கல்வியை பறிக்கும் சதித் திட்டம்.’’ – எனச் சாடிய அவர், இதன் அபாயங்களை பட்டியலிட்டு விளக்கத் தொடங்கினார்.

தோழர் த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு., தமிழ்நாடு.

‘’இப்படி தன்னாட்சி வழங்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் இனி அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது. பங்குச் சந்தையின் கட்டுப்பாட்டில்தான் இயங்கும். இப்பல்கலைக்கழகங்கள் புதிய பாடத்திட்டங்கள், பாடப்பிரிவுகள், துறைகளை தொடங்குவதற்கும் புதிய பட்டயப்படிப்புகளை வழங்குவதற்கும் பேராசிரியர்களை தேர்வுசெய்வது, மாணவர் சேர்க்கை போன்றவற்றிற்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதியைப்பெற வேண்டியதில்லை. மேலும் வெளிநாட்டு பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை அனுமதித்துக் கொள்ளலாம். தாங்கள் வழங்கும் படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை பல்கலைக்கழக நிர்வாகம் தாங்களாகவேத் தீர்மானித்துக் கொள்ளலாம். மேலும் இப்பல்கலைக் கழகங்கள் சந்தையின் தேவையையொட்டி புதிய படிப்புகளையும், திறன் படிப்புகளையும் சுயநிதி முறையில் வழங்கிக்கொள்ளலாம். இதற்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை.

மிகமுக்கியமாக, இனி பல்கலைக்கழகங்களுக்கு அரசின் நிதியதவி கிடைக்காது. உயர்கல்விக்கான நிதிமுகமை (Higher education financial Agency) என்ற அமைப்பை உருவாக்கி அதன் வாயிலாக ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் தங்களுக்கான நிதியை கடனாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது, அரசு. மாணவர்களிடம் வசூலிக்கும் கல்விக் கட்டணத்திலிருந்து இக்கடனைத் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் ஆலோசனை கூறுகிறது. இதன் பொருள் துணைவேந்தருக்குத் தேவையான பேனா பென்சில் முதற்கொண்டு பல்கலைக் கழக வளாகத்தில் வைக்கப்படும் குப்பைத்தொட்டி வரையில் அனைத்துக்கும் மாணவர்கள்தான் பொறுப்பு. விளைவு, கல்விக்கட்டணம் பலமடங்கு உயரும். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களில் பணம் உள்ளவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை உருவாகும்.

இவ்வாறு, இந்தியாவிலுள்ள 20 முன்னணி உயர்கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அதனை அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, உலக கல்விச் சந்தையில் தள்ளுகிறது. இந்தியாவில் தரமான உயர்கல்வியை  பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் நிர்வகிக்கின்ற உயர்கல்வி நிறுவனங்களே வழங்குகின்றன. ஆனால் மோடி அரசின் இத்திட்டத்தால் அரசு உயர்கல்வி நிறுவனங்களை அதன் சந்தை மதிப்பிற்கேற்றார் போல பிரித்து தனியார்மயப்படுத்துகிறது. இக்கல்வி நிறுவனங்கள் கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் நிதியாதிக்கக் கும்பல்களின் வழிகாட்டுதல்படி நடத்தப்படும். அரசின் நிதி ஒதுக்கீடு மட்டுமல்ல; இவ்வாறு தனியார்மயமாக்கப்படும் உயர்கல்வி நிறுவனங்களில் விரைவில் அரசின் இடஒதுக்கீடு கொள்கையும் செல்லுபடியாகாது போகும். மேலும், இங்கு பயிலும் மாணவர்களுக்கு அரசின் கல்வி உதவித்தொகை படிப்படியாகக் குறைக்கப்பட்டு இறுதியில் முற்றாக ஒழித்துக்கட்டப்படும் அபாயம் இருக்கிறது. இதன் விளைவாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களும், கிராமப்புற ஏழைமாணவர்களும் உயர்கல்வியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே உயர்கல்வி என்ற நச்சுச் சூழல் உருவாகும்.

ஏற்கனவே, உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் கல்வி உதவித்தொகைகளை மத்திய மாநில அரசுகள் குறைத்துகொண்டே வருகின்றன. இதனால் பல்கலைக்கழகங்கள் பெரும் நிதிச்சுமையில் சிக்கியுள்ளன. தாழ்த்தப்பட்ட மட்டும் ஆதிதிராவிடர்  மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவி தொகை பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனை எதிர்த்து டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் கடந்த இரண்டு வாரகாலமாக போராடி வருகின்றனர். நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி தாழ்த்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு வழங்கி வந்த உதவித் தொகையை தமிழக அரசு சமீபத்தில்  குறைத்தது. மேலும் தரமான மருத்துவர்களை உருவாக்குகிறோம் என்ற பெயரில் நீட் தேர்வை திணித்து பணம் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவம் பயில முடியும் என்ற நிலையை மோடி அரசு உருவாக்கியுள்ளது. தற்போது  தன்னாட்சி  என்ற பெயரில் சென்னை பல்க்லைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்களில் கிராமப்புற ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளையும் பறிக்கிறது.

எனவே, பெரும்பான்மை மக்களுக்கு உயர்கல்வியை மறுக்கின்ற, உயர்கல்வியை முற்றிலுமாக தனியார்மயப்படுத்துவதை தீவிரப்படுத்துகின்ற மோடி அரசின் பல்கலைக்கழகங்களுக்கான தன்னாட்சி வழங்கும் இந்த நாசகர திட்டத்தை எதிர்ப்பது நமது கடமையாகும். இல்லையென்றால், இன்று உயர்கல்வி, நாளை பள்ளிக் கல்வியும் பறிபோய் ஒரு தற்குறி சமூகம் உருவாகிவிடும். மோடி அரசின் பல்கலைக்கழகங்களுக்கான தன்னாட்சி வழங்கும் இந்த நாசகர திட்டத்தை எதிர்க்கும் போராட்டத்தில் மாணவர்களோடு ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் என அறைகூவல் விடுக்கிறோம்.’’ என்கிறார், அவர்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

வினவு செய்தியாளர்.

சந்தா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க