ஜெனரல் டயரின்
வார்த்தைகளில் சொல்கிறோம்…,
“துப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள்”
நாங்கள் நகரச் சொன்னால்
நகர்ந்துவிட வேண்டும்,
இல்லையெனில்…. அவர்களை
சுட்டுக்கொண்டே இருங்கள்…..

நாங்கள் நடந்து செல்ல
இனி சிவப்பு கம்பளம் எல்லாம் வேண்டாம்.
சுடப்பட்ட இந்த நாய்களின் இரத்தம்
இன்னும் சற்று நேரத்தில் உறைந்துவிடும்….
அதன்மீது
இனி எமது பாதங்கள் பயணிக்கும்..,
நொறுங்கிய எலும்புத் துண்டுகள்
ஆங்காங்கே இருக்கக் கூடும்
அதை மட்டும் கவனமாக
பொறுக்கி விடுங்கள்…
ஏனெனில் நாங்கள் நடக்கும்போது
எங்கள் காலணிகளை
அவைகள் காயப்படுத்தக் கூடும்.

“அந்த மாணவிக்கு தூயக் காற்று
வேண்டுமாம் சுவாசிக்க..,”
முதலில் அவள் மூச்சை நிறுத்துங்கள்.
இந்த முழக்கத்தோடு ஊரைக் கூட்டும்
அவள் இதழ்களை
துப்பாக்கி குண்டுகள் கொண்டு
துளைத்திடுங்கள்…
அவள் மரணித்திடும் போது எழுப்பும்
முனகல் சத்தம்….
அடுத்த சந்ததிக்கும்,
இந்த அபாயகரமான தருணங்களை
எடுத்துச் செல்லட்டும்.

ஆலை கழிவுகள்
மண்ணுக்குள் சென்று
நிலம் மலடானால்
எங்களுக்கு யார்
வாழ்வாதாரத்தை வழங்குவது….??
சரியான கேள்விதான்
அந்த வார்த்தைகள்தான்
உலர்ந்து போன மலைமுகடுகளில்
பற்றும் நெருப்பாய்
ஜனங்களிடம் நெருங்குகிறது..,
அதனால்தான்
அந்த வார்த்தைகளை
யார் உதிர்க்கிறார்களோ
அவர்களது மார்புகளின் மீது
புல்லட்டை இறக்குங்கள்…
மார்பின் மத்தியில் இறங்கி
எலும்புகளை உரசிவிட்டு செல்லும்
தோட்டாக்களின் ஓசைதான்…
எங்கள் செவிகளுக்கான
இசையாய் அமைய வேண்டும்…

அங்கே இன்னொருவன்…
நீர் மாசுபடுகிறது
உங்களது ஆலையின்
அடாவடித்தனத்தால்” என்கிறான்
அதை உச்சரிக்கும்போது
அவனின் நரம்புகள் ஒவ்வொன்றும் புடைக்கின்றன…..
சொல்லப்போனால்
அந்த புடைக்கும் நரம்புகள்
எங்களுக்கு கொஞ்சம் பயம் காட்டுகின்றன.
அதனால்.. அவனை
ஒரு தெரு நாயியினை சுடுவது போல
கூட்டத்தில் குறிவைத்து சுடுங்கள்….

“காப்பர் உங்களுக்கு
புற்று நோய் எங்களுக்கா”….? என்று
இன்னும்..இன்னும்..
நிறைய வார்த்தைகள்
நெருப்பாய் எங்கள் மீது விழுகின்றன.

இனி எந்த வார்த்தைகளும் கேட்கக்கூடாது
ஒரு மயான அமைதி நீடிக்கும் வரை
சுட்டுக்கொண்டிருங்கள்….
சுடுவதற்க்கு காரணம் வேண்டுமா?
நீங்களே ஊர்திகளை தீ வைத்துக் கொள்ளுங்கள்
“ஜனநாயக விரும்பிகளுக்கும்
நாம் கொஞ்சம் தீணி போடுவோம்”
“போலீசு சும்மாவா சுடுவாங்க?” என்று
தவளைகள் போல கத்திக்கொண்டிருப்பதும்
நமக்கான பாதுகாப்பு வளையம்தான்.

அதனால் பதட்டமில்லாமல்
நிதானமாக நிறுத்தி…
உயிர் பிரியும் வரை சுடுங்கள்……

பிரேக்கிங் நியூஸ் கூட
நமக்கு பிறந்தவைகள்தான்
நமது விந்தனுக்களே
விளம்பர இடைவேளைகளில் வந்துபோகும்.
“போராட்டக் காரர்களின் வெறியாட்டம்”
“போலீசார் துப்பாக்கி சூடு”
என்று வார்த்தைகளால் விசுவாசம் காட்டுவார்கள் ”
அதனால்….. பதட்டமில்லாமல்
சுடுங்கள் குண்டுகள் தீரும் வரை….

இப்போது உங்கள் பணி செம்மையாக முடிந்ததா?…..
ஒரு பத்து பேராவது பிணங்களாகி
படையலுக்கு தயாரா? …போதும்..
அடுத்து வந்தால் பார்த்துக் கொள்வோம்.
துப்பாக்கிகளில் படிந்திருக்கும்
இரத்தக் கறையை துடைத்துவிட்டு
நிம்மதியாக தூங்குங்கள்
இந்தாண்டுக்கான விருதுகள்
உங்கள் வீடு தேடி வரும்…

நீங்கள் ஆயிரம்…,
லட்சம் பேரோடு வாருங்கள்..,
நீங்கள் வந்து உடனடியாக
எங்கள் தலைகளை கொய்து கொள்ள…
நாங்கள் பழைய பிரெஞ்சு மன்னர்கள் அல்ல.
மூலதனத்தாலும் ஆயுத பலத்தாலும்
பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்க்கும்
நவீன கார்ப்பரேட்டுகள்..

எங்களுக்கு எதிரான சிந்தனை
உங்களிடம் சென்டிமீட்டர் கணக்கில்
இருந்தால் கூட….அந்த மூளையை
லட்சம் துண்டுகளாய் சிதைத்துவிடுவோம்

இனிமேலும்
விளக்கம் வேண்டுமா..?
ஜனநாயகத்தை காப்பற்ற
உங்கள் பிணங்களை கணக்கெடுக்க..,
ஒரு நபர் கமிஷன் அமைப்பார்கள்…
அவர்களும் அப்படியே …
நாங்கள் வாந்தி எடுத்ததை
துளியும் விரயம் இல்லாமல்
உங்கள் மீது துப்புவார்கள் …
முகத்தில் விழுவதை துடைத்துவிட்டு
நாய்களை போல நகர்ந்து செல்லுங்கள்.

  • முகிலன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க