கவுரி லங்கேஷ்
கல்புர்கி படுகொலையைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் பங்கேற்ற கவுரி லங்கேஷ், கிரிஷ் கர்னாட்

வுரி லங்கேஷ் கொலையில் முக்கிய குற்றவாளியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் 34 பேரின் பெயர்களைக் கொண்ட தாக்குதலுக்கான பெயர் பட்டியல்கள் (ஹிட் லிஸ்ட்) இரண்டை கர்நாடக சிறப்பு புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.

பத்திரிகையாளரும், இந்து மதவெறி எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் கடந்த செப்டம்பர் 5, 2017 அன்று இந்து மதவெறியர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

கவுரி லங்கேஷ் படுகொலையில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான புனேயைச் சேர்ந்த அமோல் காலேவை கர்நாடகாவின் தாவனகரே பகுதியில் கடந்த மே 21 அன்று சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தது.

காலே, ’சனாதன் சன்ஸ்தா’ என்ற இரகசிய இந்து மதவெறி தீவிரவாத அமைப்பிலும், அதன் துணை அமைப்பான ஹிந்து ஜனஜக்ருதி சமிதியிலும் முக்கிய நபராக இருந்துள்ளான். கவுரி படுகொலையை தலைமையேற்று செயல்படுத்திய நபராக காலேவை சிறப்பு புலனாய்வுக்குழு அடையாளம் கண்டுள்ளது.

கிரிஷ் கர்னாட்
கிரிஷ் கர்னாட்

காலேவின் டைரியைக் கைப்பற்றிய போலீசார், அதில் இரண்டு தாக்குதல் பட்டியல்கள் (Hit List) இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். எட்டு பேர் கொண்ட முதல் பெயர் பட்டியலில் கவுரியின் பெயர் இரண்டாமிடத்திலும், நடிகரும் பிரபல நாடகக் கலைஞருமான கிரிஷ் கர்னாட்டின் பெயர் முதலிடத்திலும் இருந்துள்ளன. எட்டாவது இடத்தில் பிரபல ஆன்மீகவாதியும் மூடநம்பிக்கை எதிர்ப்பாளருமான நிடுமாமிடி சுவாமிகளின் (Nidumamidi Swamiji) பெயரும் இருந்துள்ளது. இதையடுத்து பட்டியலில் உள்ள அனைவருக்கும் கர்நாடக அரசு போலீசு பாதுகாப்பளித்துள்ளது.

அதே டைரியில் உள்ள இரண்டாம் பட்டியலில் 26 பேர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. கவுரி லங்கேசைப் போலவே மற்ற 33 பேரும் இந்து மதவெறியை தீவிரமாக எதிர்ப்பவர்கள் அல்லது விமரிசித்து அம்பலப்படுத்துபவர்கள்.

சனாதன் சன்ஸ்தா
நிடுமாமிடி சுவாமிகள்

”இந்தப் பட்டியல்கள் ஒரு சிறிய குழுவினரால் விவாதங்களின் முடிவில் தொகுக்கப்பட்ட சில உத்தேச நபர்களின் பெயர் தொகுப்பாகும். இவை மாற்றங்களுட்பட்ட சீரற்ற பட்டியல்களாக இருக்கக்கூடும். அதனால்தான் இரண்டாம் இடத்தில் வைக்கப்பட்டிருந்த கவுரி முதல் இலக்காக கொல்லப்பட்டிருக்கிறார்” என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கவுரியைக் கொலை செய்வதற்காக 26 வயதான பரசுராம் வாக்மரேயை அமோல் காலே நியமித்ததாக புலனாய்வுக் குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அமோல் காலே வட கர்நாடகத்தை சேர்ந்த பரசுராமிற்கு சனாதன் சன்ஸ்தாவின் வலைப் பின்னல்களைக் கொண்டு கர்நாடகா மற்றும் மராட்டியத்தில் வைத்து பயிற்சியளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கவுரி கொல்லப்பட்டதற்கு எட்டு மாதங்களுக்கு முன்னரே அவரைக் கொலை செய்ய சதித்திட்டம் போடப்பட்டு, செயல்படுத்தப்படத் தொடங்கியதாகவும், அது ஜூன் 2017-ல் உச்சத்தை அடைந்ததாகவும் புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை தெரிவிக்கிறது.

அமோல் காலேவும் கவுரி கொலையில் கைது செய்யப்பட்ட மற்ற நால்வரும் சேர்ந்து அடுத்ததாக, கன்னட எழுத்தாளரும் கல்வியாளருமான கே.எஸ்.பகவானை கொலை செய்ய திட்டமிட்டதாக புலனாய்வுக் குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கே.எஸ்.பகவானுடைய பெயரும் காலேவின் டைரியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பகவானுடன் அப்பட்டியலில் கன்னட எழுத்தாளர்கள் யோகேஷ் மாஸ்டர், சந்திரசேகர் பாட்டில், பானஜாக்ரே ஜெயப்பிரகாஷ், கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் சி.எஸ். துவாகர்நாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களோடு பரகூர் ராமச்சந்திரப்பா, பாட்டில் புட்டப்பா, சென்னவீர கானாவி, நடராஜ் ஹுலியார் ஆகியோரும், பகுத்தறிவாளர் நரேந்திர நாயக் ஆகியோரும் பட்டியலில் உள்ளனர். இவர்கள் மட்டுமின்றி முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், தனி மதமாக அங்கீகாரம் பெற லிங்காயத்து மக்கள் நடத்திய போராட்டங்களில் முக்கிய பங்காற்றியவருமான எஸ்.எம்.ஜாம்தாரின் பெயரும் பட்டியலில் உள்ளது. அனைவருமே இந்து மதவெறி எதிர்ப்பாளர்கள் அல்லது விமரிசிப்பவர்கள் என்பதுதான் இவர்களுக்குள்ள ஒற்றுமை.

மாநிலத்தில் சதிவேலைகளில் ஈடுபட சுமார் 30 இந்துத் தீவிரவாதிகள்  களமிறங்கியிருப்பதாகவும் காலேவின் டைரியிலிருந்து புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது. தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுறுவிட்டதாக பொன்னார் முதல் எச்ச ராஜா வரை எல்லா இடங்களிலும் கூவிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையான  பயங்கரவாதிகளும், கொலைகாரர்களும் இவர்கள்தான் என்பதை இந்தச் செய்தி உறுதிபடுத்துகிறது.

  • வினவு செய்திப் பிரிவு

செய்தி ஆதாரம்:

2 மறுமொழிகள்

  1. உண்மையான பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள்,மகாபொய்யர்கள்….ரத்தகாட்டேரிகள்… இந்த RSS பார்ப்பன பாசிஸ்ட்கள்தான். இன்னும் எத்தனை முறை அம்பலப்பட்டாலும் ஊடகங்களில் பொதுவான செய்தியாகக்கூட வெளியிடுவதில்லை.ஊடகங்கள் இந்த பாசிச பயங்கரத்தினால் செருப்படி பட்டால் திருந்துவார்களா?

  2. சீப்பை ஒளித்துவைத்தல் கல்யாணம் நின்றுவிடும் என்று கருதுபவர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க