கருத்துக் கணிப்பு : கவர்னர் டீ பார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகள்

'பொறுப்பற்ற' கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் அடிப்பது போன்றே சமூகத்தின் ’பொறுப்பு மிக்க’ மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகளே ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருக்கிறார்களே? உங்கள் கருத்தென்ன?

வ்வொரு ஆண்டும் ’சுதந்திர’ தின விழா முடிந்த பிறகு உயர்நீதிமன்ற நீதிபதிகள், போலீசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டும் நேற்று  நடைபெற்ற சுதந்திர விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடியாரும், துணை முதல்வர் தர்மயுத்தம் ‘புகழ்’ ஓ.பி.எஸ்-ஆரும் கலந்து கொண்டு  நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் கவர்னர் மாளிகையின் தோட்டத்திலே ரோஜா மலர்ச் செடிகளை நட்டு மைய அரசின் தாமரை தோட்டத்து சேவகர்கள் தாங்கள் என்பதை பணிவன்புடன் நிரூபித்தனர். நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்தில் போடப்பட்டிருந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான இருக்கைகள் மட்டும் காலியாக இருந்தன.

கவர்னருக்கு மட்டுமல்ல, புதியதாக பணியிலமர்ந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணிக்கும் கூட  இந்த வெற்றிருக்கைகள் அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். ‘பொறுப்பற்ற’ கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் அடிப்பது போன்றே சமூகத்தின் ’பொறுப்பு மிக்க’ மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகளே ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றால் அதிர்ச்சி இருக்காதா என்ன?

’முன்னெச்சரிக்கை நோட்டீசு’ எதுவும் கொடுக்காமல், ’முன் அனுமதி’ எதுவும் வாங்காமல் திடீரென ஸ்டிரைக் அடிக்கும் அளவிற்கு அப்படி என்னதான் நிகழ்ந்துவிட்டதாம்? கடந்த ஆகஸ்ட் 12, 2018 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தஹில்ரமணி அவர்கள் ஆளுநர் மாளிகையில் வைத்துப் பதவியேற்றார்.

அங்கே அமைச்சர்கள், போலீசு அதிகாரிகள் ஆகியோருக்கான இருக்கைகள் பின்னால்தான் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இருக்கைகளைப் போட்டிருக்கின்றனர், கவர்னர் மாளிகை ஆபிசர்ஸ். இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் தகவல்படி, மேடையில் கவர்னரின் செயலாளர் ராஜகோபால் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனுடன் அருகில் இருந்திருக்கிறார். ராஜகோபாலுடன் நெருங்கிய பிணைப்பு கொண்ட டி.ஜி.பி. தர போலீசு அதிகாரியான ஜாங்கிட்-க்கு நீதிபதிகளின் இருக்கைக்கு முன் வரிசையில் இடம் தரப்பட்டிருக்கிறது.

அது கவர்னரின் ஆவலின்படி நடந்ததா அல்லது குளறுபடியால் நடந்ததா என்ற கேள்வி இந்த இடத்தில் தேவையில்லை என்பதால் அதனை விட்டுவிட்டு நமது நீதிபதிகளின் வருத்தத்திற்குள் செல்லலாம்.

நீதிபதி எம்.எஸ். ரமேஷ் இதுகுறித்து பத்திரிகைகளிடம் கூறுகையில், “அரசியல் சாசன ஆளுகையாளர்களுக்கும், போலீசு அதிகாரிகளுக்கும் இடையிலான படிநிலை குறித்து கவர்னர் மாளிகைக்குத் தெரியாதா? அல்லது, மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் போலீசு அதிகாரிகளுக்கும் கீழான மட்டத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருப்பதாக அவர்களின் புரிதல் இருக்கிறதா?” என பொங்கியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் தஹில்ரமணி.

மேலும், ‘தி இந்து’ பத்திரிகையைச் சேர்ந்த இம்ரானுல்லாவிடம் கூறுகையில், “நான் ஒரு தனிநபராக எந்தப் பகுதியில் இருக்கை கொடுத்திருந்தாலும் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியாக, இன்று (12.08.2018) அக்கறையின்றி பின்பற்றப்பட்ட நடைமுறை கண்டிப்பாக பிரச்சினையே. இதற்குப் பொறுப்பானவர்கள் யாராகினும் அவர்களிடமிருந்து நீதிபதிகள் விளக்கம் கோரமுடியும்.” என்று கூறியிருக்கிறார்.

சினிமா தியேட்டரில் முன்னிருப்பவரின் தலை மறைத்தால் ”கொஞ்சம் கீழே இறங்கி உக்காருங்க” என்று சொல்லிவிடலாம். இங்கு நீதிபதிகளுக்கு தலை மறைப்பது பிரச்சினையில்லை. யாரு ’பெரிய தலை’ என்பதுதான் பிரச்சினையாகிப் போய்விட்டது. அதற்கு கவர்னர் மாளிகையிலிருந்து உரிய பதில் வரவில்லை என்ற பிறகுதான் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு ஸ்டிரைக்கை அடித்துள்ளனர்.

ஸ்டிரைக் என்றவுடன் ஒரு கொசுவர்த்திச் சுருள் நம் மூளையில் புகைகிறது. கடந்த 2017 நவம்பரில் செவிலியர்கள் ஊதியம் போதாது என்று போராட்டம் நடத்தியதற்கு அப்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வெகுண்டெழுந்து கொட்டிய வார்த்தைகள் காதில் வந்து மோதுகின்றன. ”ஊதியம் போதவில்லை என்றால் வேறு வேலை பார்த்துக் கொள்ளுங்கள். ஸ்டிரைக் நடத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது” என்று பொரிந்து தள்ளினார்.

மாதம் தொடங்குகையில் சுளையாக ரூ. 2,25,000 சம்பளம் வாங்கும் மாண்புமிகு நீதிபதிகள்தான் ’உழைப்பிற்கான கூலி கிடைக்கவில்லை’ என போராட்டத்தில் ஈடுபட்ட – மாதம் ரூ.7000 சம்பளம்பெறும் செவிலியர்களிடம் அந்த வார்த்தைகளை உதிர்த்தனர்.

இன்று “தங்களுக்கான ’மரியாதை’ கிடைக்கவில்லை” என ’மானமிகு’ ஆளுனர் அவர்களின் மனம் புண்படும்படி, திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருக்கும் நீதிபதிகளை முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், இன்னாள் உச்சநீதிமன்ற ’இளம்’ நீதிபதியுமான இந்திரா பானர்ஜிக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தினால், என்ன வாசகங்களை உதிர்த்திருப்பார்?

“உங்களுக்குத்தான் மாதம் பிறந்தால் ரூ.2,25,000 சம்பளம், அரசு வீடு, அரசு கார், ஒரு டவாலி, தனி மரியாதை என எக்கச்சக்கமான மரியாதை கொடுக்கப்பட்டு வருகிறதே. ’ஆஃப்ட்ரால்’ ரெண்டு ’ரோ’ பின்னாடி தள்ளி உக்கார வச்சதால இப்போ மரியாதை பத்தலைன்னு சொல்றீங்களே. உங்களுக்கு மரியாதை பத்தலைன்னா வேற வேலை பாத்துட்டு போக வேண்டியதுதானே?” என்று கேட்டிருப்பாரா? எப்படிச் சொல்வார்? தனக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு தக்காளிச் சட்னி எனும் கைப்பிள்ளையின் நீதிதானே இது?

இனி, கேள்வி:

தங்களுக்கு மரியாதை கொடுக்கப்படவில்லை என கவர்னரின் டீபார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகளின் செயல் எத்தகையது? உங்கள் கருத்து என்ன?

  • அவமதித்த கவர்னருக்கு சரியான பதிலடி
  • நீதிபதிக்கு வந்தால் ரத்தம், மக்களுக்கு வந்தால் தக்காளி சட்னி
  • இவங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்
  • ஐயோ, பாவம் நீதிபதிகள்

இரண்டு பதில்கள் தெரிவு செய்யலாம்

ட்விட்டரில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க:

  • வினவு செய்திப் பிரிவு