கேரளாவின் 39 அணைகளில் 35 அணைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. அதன் 44 நதிகளில் 41 நதிகள் அபாயக் குறியீட்டிற்கு மேலே நீர் நிரம்பி வழிகின்றன. பெருமளவிலான உயிர்ச்சேதம், நிலச்சரிவு, வாழ்வாதார இழப்பு, இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்ச்சி என சர்வ நிச்சயமாக இது அவர்களின் வாழ்நாள் பேரழிவுதான்

ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவசர உதவி மையத்திற்கு தொடர்ச்சியாக அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

ஒரு தன்னார்வலராக நான் அங்கு தொலைபேசி அழைப்புகளை ஏற்று பதிலளித்துக் கொண்டிருந்தேன். அப்போது பெங்களூருவிலிருந்து ஒரு இளைஞர், தனது மாமா ஒருவர் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள அரண்முலாவிலுள்ள தமது வீட்டில் தனது மனைவியின் இறந்த உடலோடு முதல்மாடியில் நின்று கொண்டிருப்பதாகவும், கற்பனை செய்து பார்க்கமுடியாத அச்சூழலில் இருக்கும் அவரைக் காப்பாற்றுமாறும் கேட்டுக் கொண்டார்.

”ஆலப்புழா மாவட்டம், செங்கனூரைச் சேர்ந்த மற்றொரு குடும்பமும் ஒரு இறந்த உடலை தங்களோடு கொண்டுள்ளனர்” என போலீசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த உடல் தண்ணீரில் அடித்துச் செல்லப்படாமல் இருக்க அதனை படிக்கட்டின் கைபிடியோடு சேர்த்துக் கட்டியுள்ளனர். பெருமழை துவங்கியதிலிருந்து மக்களின் வாழ்க்கை அசாதாரணமானவையாக மாறிவிட்டது.

”இங்கே, வெள்ளம் சூழ்ந்த ஒரு வீட்டில் பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். விரைவாக உதவி அனுப்பவும்”, கம்பியில்லா தகவல் தொடர்புச்சாதனம் மூலம் தன்னார்வலர் ஒருவர் தகவல் தருகிறார்.

” தரைத்தளம் முழுவதும் தண்ணீரில் மூழ்கிய ஒரு மருத்துவமனையில் இன்றோ நாளையோ பிரசவிக்கக் காத்திருக்கும் பெண்கள் 8 பேர் மாட்டியிருக்கிறார்கள்” எனப் பதறுகிறது அவசர உதவி மையத்தின் மற்றுமொரு செய்தி.

நூற்றுக்கணக்கான உள்நோயாளிகளைக் கொண்ட பல மருத்துவமனைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதை எழுதிக் கொண்டிருக்கும் போது நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தால் சூழப்பட்ட தமது வீடுகளில் தங்களது விதிக்காக காத்திருக்கிறார்கள். ஆக்ரோஷமாகப் பாயும் இரு பெரும் நதிகளான பெரியாறு மற்றும் சாலக்குடிக்கு இடையில் வளாகத்தைக் கொண்ட கலாடி, ஸ்ரீ சங்கராச்சார்யா சன்ஸ்கிருதி பல்கலைக்கழகத்தினுள் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளனர். கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் என அனைத்து வழிபாட்டுத் தலங்களும், நூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சம் புகும் அகதிகள் முகாம்களாக மாறியிருக்கின்றன. அவற்றில் பலவும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் இருக்கின்றன. இரண்டாம் கட்ட மழைகளில் பத்தனம்திட்டா மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

மழை வெள்ளத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்கள்:

சில வாரங்களுக்கு முன்னால் மழை பொழிய ஆரம்பித்தது. கடந்த வாரத்தில் மழை தீவிரமடையத் தொடங்கியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொழிந்த கனமழை காரணமாக ஆறுகள் கரையைப் பெயர்த்துக் கொண்டோடின. இதன் காரணமாக பெருமளவிலான வெள்ளமும் நிலச்சரிவும் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டது. பெரும்பான்மையான மரணங்களுக்கு நிலச்சரிவுகளே காரணமாக அமைந்தன. கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவுகளில் உயிருடன் புதைபட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள் அழிந்தன.

நிலச்சரிவு

முதல்கட்ட மழைகள் துவங்கியபோது அரசு இயந்திரம், எச்சரிக்கையாகவும் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. சீரான இயக்கமுள்ள இயந்திரத்தைப் போல நதிக்கரைகளில் உள்ள மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றினர். முக்கிய அணைகளின் மதகுகளும் முறைப்படி திறக்கப்பட்டன. எனினும் எதிர்பாராத நிலச்சரிவுகளிலும் ஓரிரு இடங்களில் நீரில் மூழ்கிய சம்பவங்களிலும் சிலர் பலியாகினர். தண்ணீரின் அளவு 2,401 அடியைத் தொட்டதன் காரணமாக, இடுக்கி அணையின் 5 மதகுகள் முதன்முறையாக திறந்துவிடப்பட்டன. மலைப்பாங்கான பகுதிகளான வயநாடு, நிலம்பூர் மற்றும் கிழக்கு கோழிக்கோடு ஆகியவற்றை உள்ளடக்கிய மலபார் பகுதிதான் இந்த முதல்கட்ட மழைகளில் அதிகமான நிலச்சரிவுகளால் மோசமான பாதிப்புக்குள்ளானது. முதலமைச்சர் பிணராயி விஜயன் பாதிப்படைந்த பகுதிகளை வான்வழியே பார்வையிட தன்னுடன் வருமாறு எதிர்கட்சித் தலைவர் சென்னிதாலாவுக்கு அழைப்பு விடுத்தார். இயற்கையின் உண்மையான ஆட்டம் இன்னும் அரங்கேறத் தொடங்கவில்லை.

பூர்வாங்க மதிப்பீட்டின்படி முதல்கட்ட வெள்ளத்திற்குப் பின்னான மதிப்பிடப்பட்ட இழப்பு ரூ. 8316 கோடி (தற்போது 20,000 கோடிக்கும் மேல்). பிணராயி விஜயன் உடனடி உதவியாக ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 820 கோடி உள்ளிட்டு ரூ.1220 கோடியை (தற்போது 2,000 கோடி) மைய அரசிடமிருந்து கோரினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட ராஜ்நாத் சிங் கோரிக்கை வைக்கப்பட்ட ரூ.1220 கோடியில் வெறும் 10%-க்கும் குறைவான தொகையான ரூ.100 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்தார் (பின்னர் மோடி வந்த போது 500 கோடி ஒதுக்கினார்). முதலமைச்சர் பிணராயி விஜயன் மத்திய அரசுக்கு எதிராக பகிரங்கமாக எதுவும் கூறவில்லையெனினும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தரப்பிலிருந்து இச்செயல் கடும் விமர்சனத்தைப் பெற்றது. தொழில்நுட்ப அடிப்படையில் இந்த பெருவெள்ளத்தை மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவிக்க மறுத்தது பாஜக அல்லாத பிற எல்லா தரப்பினரையும் வெறுப்புறச் செய்தது.

”இந்த பெருவெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவித்திருக்கலாம். விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்து அறிவித்திருக்க வேண்டும். கடந்த ஐம்பதாண்டுகளில் இதுவே மிகப்பெரும் வெள்ளமாகும்” என்றார் கேரள எதிர்கட்சித் தலைவர் சென்னிதாலா. இவையெல்லாம் பிரச்சினைக்குரிய முல்லைப் பெரியாறு அணை அதன் கொள்ளளவை எட்டுவதற்கு அருகாமையில் இருக்கையில் ஏற்பட்ட இரண்டாம் கட்ட வெள்ளப் பெருக்கிற்கு முன்னர் நடந்த விசயங்கள்.

வெள்ளப்பெருக்கு

ஓயாத மழை நிலைமையை இன்னும் மோசமாக்கியது. மாநிலம் முழுவதுமுள்ள அணை மதகுகள் அனைத்தும் உயர்த்தப்பட்டதன் காரணமாக கடந்த திங்கள் கிழமையிலிருந்து (13-08-2018) இதற்குமுன் அம்மாநிலம் கண்டிராத வெள்ளத்தில் சிக்கியது கேரளம். இந்தமுறை அது அரசு இயந்திரத்தின் ஆற்றலுக்கு மீறியதாக இருந்தது. நிலைமை கையைமீறிப் போனது. தெற்கிலிருந்து வடக்கு வரை அனைத்து மாவட்டங்களும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன. பத்தனம்திட்டா, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன. பெரியாறு, சாலக்குடி, பம்பா, அச்சன்கோவில் மற்றும் பாரதபுழா ஆறுகள் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடின. ஆற்றங்கரையோர வீடுகள் அனைத்தும் இரண்டு மாடி உயரத்திற்கு தண்ணீர் உயர்ந்ததன் காரணமாக மூழ்கின.

தமிழக – கேரள அரசுகளின் முரண் போக்கு:

முல்லைப் பெரியாறின் மதகுகளைத் திறந்து விடுவதற்கு தமிழகம் காட்டிய தயக்கம், கவலையை அதிகரிக்கச் செய்வதாக இருந்தது. மேலும் தென்னகத்தின் இரு அண்டை மாநிலங்களுக்கிடையிலான கொஞ்சநஞ்ச உறவுகளையும் அது சிக்கலுக்குள்ளாக்கியது. எனினும், கேரள முதலமைச்சர் தமது மாநிலத்தின் இடர்பாடுகள் குறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதுகிறார். அதற்கு அவருக்குக் கிடைத்த பதிலும் திருப்தியடையச் செய்வதாக இல்லை.

கேரள முதல்வர் பிணராயி விஜயன் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் ”தமிழகத்தின் களப் பொறியாளர்கள், தண்ணீர் அளவைப் பதியும் மின்னணு சாதனங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று தகவல் தெரிவித்ததாகவும், அதன் காரணமாக தண்ணீர் மட்டத்தை துல்லியமாக அளக்க முடியாமல், அதை ஆற்றில் நடப்பட்டிருக்கும் சாதாரண அளவீட்டுக் கம்பங்களின் குறியீடுகளின் அடிப்படையிலேயே அளப்பதாகவும் அறியப் பெற்றேன். அணையிருக்குமிடத்தில் தற்போது நிலவும் பருவநிலை மற்றும் காற்றின் நிலையைக் கணக்கில் கொண்டு பார்க்கையில் அளவீட்டுக் கம்பங்களின் மூலம் நீர் மட்டத்தை அளவிடுவதில் தவறுகள் நிகழ்வதற்கான வாய்ப்பிருப்பதால், இந்த நிலைப்பாடு பொருத்தமானதாக இருக்காது” என குறிப்பிட்டிருக்கிறார்.

பிணராயி விஜயன் – எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமது பதில் கடிதத்தில் “நீரியல், நிலவியல் மற்றும் கட்டிடவியல் அடிப்படையில் அணை பாதுகாப்பாகத்தான் உள்ளது” என்ற தமது பழைய நிலைப்பாட்டையே மீண்டும் எழுதினார். இறுதியில் இதில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது.

”நாங்கள் நிலவும் உச்சபட்ச பருவநிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, தொடக்கம் முதலே வெவ்வேறு கட்டங்களில் எங்கள் அணைகளிலிருந்து நீரை வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர் 142 அடியைத் தொட்டபிறகே திறந்துவிடப்பட்டது. அதுவே அதிவேகமாக நீர் வெளியேறியதற்கும் அதன் தாக்கம் அதிகரித்ததற்கும் காரணம்” என்று கூறியிருக்கிறார் பிணராயி விஜயன்.

பெரு வெள்ளத்தின் முதல் கட்டத்தில் தனது கணிசமான ஆதரவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது அண்டை மாநிலத்துக்கு அளித்தது தமிழகம். வெள்ள நிவாரண பணிக்காக ரூ. 5 கோடி உதவித் தொகை வழங்கியது (தற்போது மொத்தம் 1 கோடி). கடிதம் எழுதி, அதற்கு ஆறுதலற்ற பதில் கிடைத்த பிறகும் பிணராயி விஜயன் அமைதி காத்து, இரண்டு மாநிலங்களும் அணைப் பராமரிப்பில் ஒருங்கிணைந்து செயல்படுவதாகத் தெரிவித்தார்.

தேசிய ஊடகங்களின் அக்கறையற்ற போக்கு:

தென்னகத்தில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக பேரிடர் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கையில், இந்தி மற்றும் ஆங்கில ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சிகள் எவையும் இது குறித்து தமது கணிசமான கவிப்பெல்லையை (Coverage) விரிவாக்க ஆர்வத்தோடு இல்லை. சில விதிவிலக்குகளைத் தவிர்த்துப் பார்த்தால் அவர்களது கவிப்பெல்லைகள் உணர்சியற்றனவாகவே இருந்தன. ஊடக சகோதரத்துவத்திலிருந்து செய்யப்படவேண்டிய வலுவான செயல்வினையின் தேவையை இது காட்டியது.

”உங்களுக்கு (தேசிய ஊடகங்கள் என அவர்கள் கூறிக் கொள்ளும்) பெரிய தொலைக்காட்சி ஊடகங்களில் பணிபுரிபவர்கள் யாரேனும் தெரிந்திருந்தால், உங்களுக்கு டில்லியில் அதிகார மட்டத்தில் காரியங்கள் சாதித்துக் கொடுக்கக் கூடியவர் – அவர்களை நாங்கள் அதிகாரிகள் என அழைப்போம் – யாரேனும் தெரிந்திருந்தால், மத்திய அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள் யாரேனும் உங்களுக்குத் தெரிந்திருந்தால், சர்வதேச சமூகத்தினரை தென்னிந்திய மாநிலமான கேரளாவிற்கு உதவி செய்ய தமது நாட்டு அரசாங்கங்களை வலியுறுத்தச் செய்யக் கூடிய யாரையேனும் உங்களுக்குத் தெரிந்திருந்தால், தயவு செய்து அவர்களிடம் கூறுங்கள், ‘எங்களுக்கு உதவி தேவை’ நெருக்கடியான நேரம் இது” என மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீஜித் திவாகரன் தமது முகநூல் பதிவில் எழுதினார்.

பேரிழப்பை பார்வையிட்ட ராஜ்நாத் சிங் கொடுப்பதாகக் கூறியது வெறும் 100 கோடி

மத்தியிலிருந்து போதுமான உதவி கிடைக்காமலிருப்பதற்கு மோடி அரசாங்கம்தான் காரணம் என்ற பரப்புரை சமூக வலைத்தளங்களில் பரவலாகச் சென்று கொண்டிருக்கிறது. கேரளாவைச் சாராத சங்கபரிவாரத்தினரின் சமூக வலைத்தள கணக்குகளின் எதிர்மறை பரப்புரைகளும் எண்ணிலடங்காதவை. சில முகமறியாத சங்கிகளின் சமூக வலைத்தளங்களிலிருந்து, பிணராயி விஜயன் அரசாங்கத்திற்கு நிதி உதவி செய்ய வேண்டாம் என ’இந்து சமூகத்தை’ வற்புறுத்தும் விசப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு முரணாக கேரள பாஜகவின் ஒரே எம்.எல்.ஏ-வான ஓ.ராஜகோபாலும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும் இந்நாள் மிசோராம் கவர்னருமான கும்மணம் ராஜசேகரும் முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு குறிப்பிடத்தக்க தொகையை வழங்கி அதற்கு நல்லதொரு ஆதரவையும் பெற்றுள்ளனர். இதற்கு இடதுசாரி இணையவாசிகளின் பதில் பரப்புரைக்குதான் நன்றி தெரிவிக்கவேண்டும்.

தற்போது தோராயமான மதிப்பீடு போட்டால்கூட இழப்புத் தொகை சுமார் ரூ.20,000 – 30,000 கோடியைத் தொடும். லட்சக்கணக்கான மக்கள் 6000 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாநிலம் சந்தித்திருக்கும் மிகப்பெரிய மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகையில், இவ்விவகாரம் வெறுமனே மாநில அரசினால் மட்டும் கையாளத்தக்கது அல்ல என்பது மிகத் தெளிவாக புரியவருகிறது. இது தேசியப் ’பேரிடராக’ எடுத்துக் கொள்ளப்படாவிட்டாலும் தேசியப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஏற்பட்டிருக்கும் பேரிடரின் அளவு கட்டுக்கடங்காத வகையில் இருப்பதால் தேசிய மற்றும் சர்வதேச முகமைகளையும் இந்தப் பணியில் இறக்கிவிட வேண்டும்.

தண்ணீர் வடிந்த பின்னர், இந்த சேறு படிந்த நிலத்திலிருந்து மக்களின் வாழ்க்கையை மறுகட்டமைப்புச் செய்வதுதான் இங்கு நம் அனைவரின் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்.

  • ராஜீவ் ராமச்சந்திரன் (கொச்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர்)

தி வயர் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்.