உயர்கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள் : பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு, திருச்சி – அரங்கக் கூட்டம்

நாள் : 04-12-2018 – செவ்வாய்க்கிழமை
நேரம் : மாலை 5.30 மணி
இடம் : மேக்ஸி அரங்கம், அருண் ஹோட்டல், திருச்சி (ஜங்சன் அருகில்)

தலைமை : பேரா. பீ. மு. மன்சூர்,
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி,
ஒருங்கிணைப்பாளர், CCCE – திருச்சி

வரவேற்புரை : பேரா. ச. அய்யம்பிள்ளை,
முன்னாள் பொருளியல் துறைத்தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
செயற்குழு உறுப்பினர், CCCE – திருச்சி

அறிமுகவுரை : முனைவர் க.ரமேஷ்,
துணை ஒருங்கிணைப்பாளர், CCCE- சென்னை

சிறப்புரை :
தமிழகச் சூழலில் பெருகிவரும் தனியார் கல்வி வணிகம்,
பேரா. வீ. அரசு,
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், சென்னை பல்கலைக்கழகம்
ஒருங்கிணைப்பாளர், CCCE- சென்னை

உயர்கல்வித்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
பேரா. ந. மணிமேகலை,

இயக்குநர் – மகளிரியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

காவி மயமாக்கப்படும் உயர்கல்வி
பேரா. பா. மதிவாணன்,
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
துணை ஒருங்கிணைப்பாளர், CCCE – திருச்சி

நன்றியுரை : பேரா. மு. மருதை,
முன்னாள் கணிதவியல் துறைத்தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
பொருளாளர், CCCE – திருச்சி

தோழமை மிக்க பேராசிரியர்களே, மாணவ நண்பர்களே!

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்வியில் மத்திய, மாநில அரசுகள் புகுத்தி வரும் தனியார் மயக் கொள்கைகளின் விளைவாக, பொது நலனுக்கான கல்வி என்பது விற்பனைச் சரக்காக, வெற்றுப் பண்டமாக, கொள்ளைக்கான வழிமுறையாக மாற்றப்பட்டுள்ளது. நல்ல மாணவர்களை, சமுதாயத்தை உருவாக்க வேண்டிய கல்வி கிரிமினல்மயமானதன் விளைவாகச் சமூகமும் கிரிமினல்மயமாகி வருகிறது.

கல்வித்துறையில் மத்திய மாநில அரசுகள் செய்து வரும் மாற்றங்கள், இதுவரை எதையெல்லாம் சட்டவிரோதம், விதி மீறல் என்று மனம் குமுறி வந்தோமோ அதையெல்லாம் சட்டபூர்வமாக்கி விட்டது. அண்மைக்காலமாக,  உயர்கல்வித்துறையில் முறைகேடுகளும் ஊழல்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு ஊழலும் முறைகேடும் அதற்கு முந்தையதைவிட மிகப் பெரியதாகவும் பெருமளவு கிரிமினல் மயமாகவும் மாறியுள்ளது. மேலும் பல்கலைக் கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க ஆதரவாளர்களை மோடி அரசு தொடர்ந்து தலைமைப் பொறுப்புகளில் பணியமர்த்தி வருகிறது.

பாடநூல்களில் மதவெறிக் கருத்துகளை விதைப்பது, புராண கட்டுக்கதைகளை அறிவியல் உண்மைகளாகத் திரித்துக் கூறுவது, வட்டார மற்றும் தேசிய இனங்களின் பண்பாடு, மரபு, மொழி அடையாளங்களை அழித்து அவற்றை ஒற்றை மேலாதிக்கக் கலாச்சாரத்தின் கீழ் கொண்டு வருவது என நச்சு ஆக்டோபஸ் கரங்கள் கொண்டு பெரும்பான்மை மக்களை நசுக்கி வருகிறது இந்த மத்திய அரசு. இதற்குத் தமிழக அரசும் முழுவதுமாக துணை போகிறது.

படிக்க:
♦ ஊழல் – வணிகம் – காவிமயமான கல்வி – நெல்லை கருத்தரங்க செய்தி
♦ கல்வித்துறையின் நடவடிக்கை சமூக நீதிக்கு எதிரானது | கல்வியாளர்களின் கூட்டறிக்கை

கடந்த நான்காண்டு மோடி ஆட்சியில் உயர்கல்விக்கான நிதி பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டது. அது மட்டுமன்றி ஒட்டு மொத்த உயர்கல்வியையும் சந்தையின் நேரடிக் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்படுகின்றன. இல்லாத அம்பானியின் ஜியோ கல்வி நிறுவனத்திற்கு உன்னத உயர்கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கியுள்ளது இந்த அரசு. கல்வி முதலாளிகளின் கொள்ளைக்காக இந்திய மருத்துவக்குழு (MCI), பல்கலைக்கழக நிதி நல்கை ஆணையம் (UGC) ஆகியவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது.

திறமையானவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம் என்று சொல்லி, நீட் தேர்வைத் திணித்து செல்வந்தர்களுக்கே மருத்துவக்கல்வி என்ற நிலையை மோடி அரசு உருவாக்கி விட்டது. சில மேல்தட்டுக் கல்வி நிறுவனங்களில் சிலருக்கு மட்டும் மிதமிஞ்சிய கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இவையெல்லாம் படிப்படியே ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மத, இன மற்றும் ஒட்டுமொத்த பெண்களின் உயர்கல்வி வாய்ப்பைத் தட்டிப் பறித்து விடும். இவை உயர்கல்வியில் பணமுள்ளவர்களுக்கு மட்டுமே என்கிற புதிய வருணாசிரமத்தைப் புகுத்துவதாகும்.

இச்சூழலில் கிரிமினல் மாஃபியாக்களிடமிருந்தும் கல்விக் கொள்ளையர்களிடம் இருந்தும் மதவெறிச் சக்திகளிடமிருந்தும் பொதுக்கல்வியை மீட்டெடுக்க வேண்டும். அனைவருக்கும் தரமான பொதுக்கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும். இவைதான் நமது இன்றைய மிக முக்கியமான கடமை. இதற்காகப் பேராசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் கல்வியின் மீது அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களும் ஒன்று சேர்வோம்.

இது குறித்து விவாதிப்பதற்கான ஒரு மேடைதான் இந்த அரங்கக் கூட்டம்

வாருங்கள் விவாதிக்கலாம்..

இவண்:
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு – திருச்சி (Coordination Committee for Common Education CCCE – Trichy)
தொடர்புக்கு : 96005 82228 , 94438 46945, 94865 84463

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க