மெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியிருக்கிறது ஃபெடரல் நீதிமன்றம். அதிபர் தேர்தலில்போது டிரம்பின், ‘அழுக்கு பக்கத்தை’ வெள்ளையடிக்க பல பொய்களைச் சொல்லி, திருட்டு வேலைகளைச் செய்ததே தண்டனைக்கான காரணம் !

மோடிக்கு ஒரு அமித்ஷா போல் ட்ரம்பின் ’கொல்லைப்புற’ வேலைகளை செய்து வந்த கோஹன்

கடந்த புதன்கிழமை, (12.12.2018) அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் கோஹன், தனது முன்னாள் முதலாளி டொனால்டு ட்ரம்புக்காக, பிரச்சார நிதி சேகரிப்பு விதிமுறைகளில் முறைகேடுகள் உள்ளிட்டு பல தகிடுதத்தங்கள் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.  டிரம்பின் ஒத்துழைப்போடு, டிரம்ப் செய்யச் சொன்னதற்காக இந்த முறைகேடுகளை கோஹன் செய்ததாகவும், நீதிமன்ற ஆவணங்களில் டிரம்ப் ‘தனிநபர் -1’ என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்னும் பல முறைகேடு வழக்கு விசாரணை உள்ளதால் அவற்றில் முழு ஒத்துழைப்பு தருவதாக நீதிமன்றத்தில் கோஹன் கேட்டுக் கொண்டார். அதனால் தண்டனை மூன்று ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதோடு கோஹனுக்கு 2 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பு செய்தது, நிதி அமைப்புகளை தவறாக வழிநடத்தியது, தேர்தல் நிதி விதிகளை மீறியது, மக்கள் பிரதிநிதிகள் அவையில் பொய் சொன்னது உள்ளிட்ட ஒன்பது குற்றச்சாட்டுகள் கோஹன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. டொனால்டு டிரம்புடன் தொடர்பில் இருந்ததாக தெரிவித்த போர்ன் நடிகைகளின் வாயை மூட பணம் தரப்பட்டதாக தேர்தல் விதி மீறல் வழக்கு கோஹன் மீது போடப்பட்டது.

படிக்க:
♦ டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது ஏன் ? சிறப்புக் கட்டுரை
♦ டொனால்ட் டிரம்ப் : என்ன மாதிரியான டிசைன் இது ?

“என் மீது சுமத்தப்பட்ட முழு குற்றத்துக்கும் நான் பொறுப்பேற்கிறேன்; அவமானம் கொள்கிறேன்” என நியூயார்க், மன்ஹாட்டன் ஃபெடரல் நீதிமன்றத்தில் தெரிவித்த கோஹன், “டொனால்டு டிரம்பிடம் கண்மூடித்தனமான விசுவாசத்துடன் இருந்து விட்டேன், அதுதான் எனது பலவீனம். சமீபத்தில் டிரம்ப் என்னை பலவீனமானவர் என சொல்லியிருந்தார். அது சரிதான்; ஆனால், அவர் குறிப்பிடும் காரணத்துக்காக அல்ல. அவருடைய கேவலமான செயல்களை மறைப்பதுதான் என்னுடைய வேலை என திரும்பத் திரும்ப நான் நினைத்தேன்” என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தியாவின் ட்ரம்பும் (இடது) அமெரிக்காவின் மோடியும் (வலது) சந்தித்த போது. இது பிழையல்ல. மிகையுமல்ல.

”சிறை தண்டனை வேண்டாம், முழுமையான விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன்” என்ற கோஹன் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

போர்ன் நடிகைகளுடன் தனக்கிருந்த உறவு குறித்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்த டிரம்ப், தேர்தல் நிதியை முறைகேடாக இந்தப் பெண்களுக்கு வழங்கியது கோஹன் என முழு பழியையும் அவர் மீது போட்டுவிட்டார்.  இந்த தீர்ப்பு குறித்து வெள்ளை மாளிகை இதுவரை வாயைத் திறக்கவில்லை.

வெள்ளை மாளிகையில் அதிபராக இருப்பவர்களிடமே இத்தகைய கறை படிந்த பக்கங்கள் இருப்பது ஆச்சரியமல்ல. அமெரிக்க பேரரசு கூட இந்தக் கறை படிந்த சதித்தனங்கள் மூலம்தான் தனது சாம்ராஜ்ஜியத்தை பரப்பியிருக்கிறது. ஒன்றொக்கொன்று பொருத்தம்தான்!

கலைமதி
செய்தி ஆதாரம் : ஹிந்துஸ்தான் டைம்ஸ்